{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/gqpkjguk/", "data": {"id": "gqpkjguk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gqpkjguk/", "kind": "article", "headword": "இன்சுலின் மயக்க மருத்துவம்", "romanization": "iṉculiṉ mayakka maruttuvam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.071359+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இன்சுலின் மயக்க மருத்துவம் என்பது உளப்பிணிகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த முறைகளுள் ஒன்றாகும்.", "body_ta": "இன்சுலின் மயக்க மருத்துவம் என்பது உளப்பிணிகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த முறைகளுள் ஒன்றாகும். இக்காலத்தில் மின் அதிர்ச்சி மருத்துவம், மின் மூளை கிளர் மருத்துவம், வலிப்பு மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவ முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மின் வலிப்பு மருத்துவம் (Electro Convulsive Theraphy) கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் இன்சுலின் மயக்க மருத்துவம் (Insulin Coma Therapy) பயன்படுத்தப்பட்டது. இது இன்சுலின் அதிர்ச்சி மருத்துவம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இம்மருத்துவ முறையை 1930–ஆம் ஆண்டு சாகெல் (Sakel) என்னும் போலந்து நாட்டு உள மருத்துவர் கண்டுபிடித்தார். இவர் உளப்பிணியாளர்களின் மைய நரம்பு மண்டலத்தில் மிகுதியான மாங்காய்ச் சுரப்பிநீர் (Adrenal) காணப்படுவதால் அவர்களிடம் நடத்தை மாறுபாடுகள் ஏற்படுகின்றன என்று கருதினார்.\n\nமார்பைன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தை நிறுத்தும் பொழுது அவர்களிடம் தோன்றும் மிகைச்செயல் நோயை இன்சுலின் மருந்தை மிகுதியாகக் கொடுத்துக் குணப்படுத்தலாம் என்று சாகேல் கருதினார். கிளர் நிலையில் (Agitated) இருக்கும் உளச்சிதைவு நோயாளிகளையும் இன்சுலின் மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தலாம் என்று சாகேல் கூறினார். மூளை பழச் சர்க்கரை உற்பத்திப் பொருள்களை மெதுவாக உயிரகத்துடன் (Oxidise) இணைவுறச் செய்கிறது. புரதம் கொழுப்புப் பொருள்களை விரைவில் உயிரகத்துடன் இணைவுறச் செய்கிறது. குருதியில் இன்சுலின் மிகுதியானால் சர்க்கரைப்பொருள் குறைகிறது. மூளையில் இயல்பு நிலைக்குக் கீழாக (Hypoglycemin) குருதிச் சர்க்கரையின் மட்டம் வருகின்றது. இதனால் நோயாளி மயக்க நிலையை அடைகிறான். மூளையின் திசுக்களுக்கு உயிரகம் (Oxygen) கிடைப்பதில்லை. இதன் விளைவாக மூளையில் உயிர்ப்பொருள் ஆக்கத் திறன் (Metabolic Process) குறைகிறது.\n\nநோயாளியின் உடலில் ஒவ்வொரு நாளும் 15–இலிருந்து 25 அலகு வரையில் தசைவழி மருந்தேற்றப்படும் (Intra muscular Injection). அவருக்கு மயக்க நிலை வாராவிட்டால் தொடர்ந்து மருந்தேற்றப்படும். மயக்க நிலை விரைவில் வந்துவிட்டால் மருந்தின் அளவு குறைக்கப்பட்டு நிறுத்தப்படும். மயக்க நிலையில் நோயாளி அதிக அளவு 50 மணி நேரம் வரையில் இருக்கலாம். அவரை அந்நிலையிலிருந்து நனவு நிலைக்குக் கொண்டு வருவதற்கு பழச் சர்க்கரை உற்பத்திப் பொருள்கள் அவருக்குக் குடிப்பதற்கோ ஊசி மூலமாகவோ கொடுக்கப்படுகிறது. இம்முறையில் நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் இரத்தச் சர்க்கரைக் குறைவு மாறுகிறது. பழச்சர்க்கரைப் பொருள் உணவு சில நாள்கள் தொடர்ந்து கொடுப்பதனால் அவருக்கு ஏற்படக் கூடிய வைட்டமின் உயிர்ச்சத்து பி, சி ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன. இன்சுலின் மயக்க மருத்துவமுறை இதய நோய், சிறுநீரகநோய், சர்க்கரை நோய், நாளமிலாச் சுரப்பி நோய் (Endocrinal Disorders), மண்டையோட்டுக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட 16 வயதுக்குட்பட்டவர், 45 வயதுக்கு மேற்பட்டவர் ஆகியவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். இம்முறையைத் திறமைமிக்க மருத்துவரே பயன்படுத்த முடியும். பொதுவாக இன்சுலின் மயக்கமருத்துவ முறை மிகுந்த ஆபத்தானது. இம்மருத்துவ முறையினால் நோயாளியின் உடல்நிலை பெருமளவு பாதிக்கப்படுகிறது. மயக்க நிலையில் வலிப்பு வந்த பொழுது பல நோயாளிகள் இறந்து விட்டனர். இந்த ஆபத்தைக் தடுக்க மெட்ரசால் (Metrazol) என்னும் மருந்தைப் பயன்படுத்தினர். ஆயினும் வலிப்பு வருவது குறையவில்லை. ஆதலின் இன்சுலின் மயக்க மருத்துவம் பல ஆண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டுவிட்டது. இதற்கு மாறாக மின் மூளை வலிப்பு மருத்துவ முறை (ECT) பயன்படுத்தப்படுகிறது. மேலும், அதிர்ச்சி மருத்துவ முறைகளினால் உள நோய் குணமடையப் பெற்றவரைக் காட்டிலும், மற்ற மருத்துவ முறைகளினால் உளநோய் குணமடையப் பெற்றவர் நீண்டகாலம் நோயின் மறு தாக்குதல் (Relapse) இன்றி இருக்கின்றவர் என்பது உள மருத்துவ ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது. என்.மா."}}