{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ftasbdmh/", "data": {"id": "ftasbdmh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ftasbdmh/", "kind": "article", "headword": "நோய்க் குறியியல்", "romanization": "nōyk kuṟiyiyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.353059+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய நோய்க் குறியியல், நோயினால் திசுக்களிலும், உறுப்புகளிலும் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிந்து, நோயினை அறிய உதவுகிறது.", "body_ta": "மருத்துவத்தின் ஒரு பிரிவாகிய நோய்க் குறியியல், நோயினால் திசுக்களிலும், உறுப்புகளிலும் ஏற்படும் மாறுதல்களைக் கண்டறிந்து, நோயினை அறிய உதவுகிறது. நோய்க் குறியியலைப் பற்றிக் காண்பதற்கு முன்பு, நலமான நிலையில் உறுப்புகளும், திசுக்களும் அமைந்திருக்கும் விதத்தைப் பற்றி அறிய வேண்டும். அதாவது, உறுப்புகள் திசுக்களின் அமைப்பு, செயல் முறை, வேதி நிலை ஆகியவற்றை நன்கு ஆராய வேண்டும். இதனால், நோய் வாய்ப் பட்ட நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய முடியும். ஏனெனில், நோய் எனப் படும் நிலை இயல்பான நிலையின்றும் மாறு பட்டதாகும். நோய்க் குறியினைப் பின் வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.\n\nபொது நோய்க் குறியியல். இப்பிரிவு, பல்வேறு வித நோய்களினால் திசுக்களிலும், உறுப்புகளிலும் ஏற்படும் பொதுவான மாற்றங்களைக் கொண்டுள்ளது.\n\nசிறப்பு நோய்க் குறியியல். இவ்வகையில், ஒரு குறிப்பிட்ட உறுப்பையோ, திசுவையோ தாக்கும் நோய்களினால் ஏற்படும் மாற்றங்களைப் பற்றிக் கூறப்படும். அதாவது, குருதி ஒட்ட உறுப்புகளைத் தாக்கும் நோய், சிறுநீரக உறுப்புகளில் ஏற்படும் நோய் ஆகியவற்றினால் ஏற்படும் மாற்றங்களால், ஏற்படும் மாற்றங்கள் இப்பிரிவில் விளக்கப் படும்.\n\nநோயறியும் நோய்க் குறியியல். இது எந்நோய் ஏற்பட்டுள்ளது எனக் கண்டறிய மருத்துவ நிலைகளில் உதவுகிறது.\n\nஆய்வு நோய்க் குறியியல். இது செயற்கையாக ஆய்வக விலங்கினங்களில் ஏற்படுத்தப் படும் நோயினால் உண்டாகும் மாற்றங்களைக் கண்டறிய உதவுகிறது.\n\nஒப்பீட்டு நோய்க் குறியியல். இப்பிரிவில் விலங்கினங்களில் ஏற்படும் நோய்களும், மனிதர்களில் ஏற்படும் நோய்களும் ஒப்பீடு செய்யப்படுகின்றன.\n\nகாரண நோய்க் குறியியல். இப்பிரிவில் நோய்க் குறியியலை, நோயுண்டாக்கும் காரணங்களைக் கொண்டு ஆய்வு செய்யலாம். இதனால், நோயினைத் தடுக்கப் பல்வேறு வழி முறைகளைக் கையாள முடிகிறது. நோயுண்டாக்கும் காரணங்கள் உடலின் உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ உண்டாகின்றன. இவ்வகைக் காரணங்களை இயற்பிய, வேதியிய, உயிரியல் அடிப்படையில் வகைப்படுத்தலாம். உயிரியல் காரணங்களை நுண்ணுயிரியல், நச்சுயிரியல், பூசணக் காளான்களால் ஏற்படும் நோய்க்குறியியல் என மேலும் வகைப் படுத்தலாம்.\n\nநோயுண்டாக்கக் காரணங்கள். விலங்கினங்கள் சோதித்து அறியப் படும் இவ்வகைக் காரணங்கள் உடனடிக் காரணங்களாகவோ, மறைமுகக் காரணங்களாகவோ, அடிப்படைக் காரணங்களாகவோ இருக்கலாம். நோய் உற்பத்திக் குறியியல் என்பது நோய் உண்டாகக் காரணமாக உள்ள அடிப்படைச் செயல்களைப் பற்றி விளக்குகிறது. காட்டாகப் புற ஊதாக் கதிர், வெண்ணிறத் தோல் உடைய விலங்கினங்களில் ஏற்படுத்தும் நோயினைப் பற்றிக் கூறலாம். வெண்ணிறத் தோலில், வடி கட்டும் நிறப் பொருள்கள் இல்லாமையால், இக்கதிர்கள் ஊடுருவி, குருதி நாளங்களில் குருதி கசியும் நிலை அதிகரித்து, சிவப்பு நிற வீக்கங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையைச் சூரிய–எரிப்பு எனக் கூறுவர். இதற்குத் தோலில் உள்ளவை சுட்டும் நிறப் பொருள்களின் செயல்பாடு அடிப்படையாக விளங்குகிறது.\n\nநோய்க் குறிகள். அறிவுப் பிரிவில் பாதிக்கப் பட்ட விலங்குகளோ, மனித இனமோ வெளிப்புறமாகத் தோற்றுவிக்கும் குறிகளைப் பற்றி விளக்கப் படுகிறது. நுரையீரல் வீக்க நோயில், காய்ச்சல், சுவாசத்தில் கடினம், வேக நாடித் துடிப்பு,சளி வெளியேறுதல் போன்ற குறிகள் காணப் படும்.\n\nநோய்ச் சுவடுகள். நோயினால் நிறத்திலும், உறுப்புகளிலும் ஏற்படும் மாற்றங்களை நோய்ச் சுவடுகள் எனலாம். இம்மாற்றங்கள் கண்களாலும் உருப் பெருக்கியாலும் காணக் கூடியவாறு உள்ளன. எடுத்துக் காட்டாகப் பெரிய அம்மை நோய், தோலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் அவற்றின் சுவடுகளாக விளங்குகிறன.\n\nநோய் கண்டறியும் முறையில், நோயுண்டாகும் காரணம், நோய்ச் சுவடு, நோய்க் குறி ஆகியன பற்றி விளக்கப் படுகிறது.நோய்க் காரணி தாக்கிய நாளிலிருந்து நோய் தோன்றும் நாள் வரை நோய் வெளிப் படும் காலம் ஆகும். காட்டாக, வெக்கை நோய்க்கான நச்சுயிரி, விலங்கினத்தைத் தாக்கிய நாளிலிருந்து 4–5 நாள்களுக்குப் பிறகு, நோய்க் குறிகள் தோன்றும். எனவே, வெக்கை நோய்க்கு, நோய் வெளிப்படும் காலம் 4–9 நாள்கள் ஆகும். இக்காலம் சில மணி நேரங்களிலிருந்து, பல ஆண்டுகள் வரை அமையலாம். நோய் உண்டாகும் வழி, எவ்வகை உறுப்புகள் அல்லது திசுக்களின் வழியாக நோய் சென்று, அதன் முடிவு நிலையை அடைகிறது என்பதைப் பற்றி விளக்குகிறது. நோயின் தொடக்கம், விரைவாகவோ, மெதுவாகவோ இருக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட விலங்கினம், நோயினால் விடுபட்டு, இயல்பு நிலையை அடையலாம் அல்லது இறப்பையும் ஏற்படுத்தலாம்.\n\nநோய்க் குறியியல் வல்லுநர் இறந்த விலங்கினத்தை அறுவை செய்து காணும் மாற்றங்களைப் பிண ஆய்வில் காணலாம். நோய்த் திசு ஆய்வினைக் கொண்டு பாதிக்கப்பட்ட உயிருடன் உள்ள விலங்கினத்திலிருந்து எடுக்கப்படும் திசுக்களைக் கொண்டு நோய் அறியப் படுகிறது.\n\nநோய்க் காரணங்கள். நோய்க் காரணங்களை இருவகையாகப் பிரிக்கலாம். அவற்றில் ஒன்று அடிப்படைக் காரணம், மற்றொன்று நோயினைத் தோற்றுவிக்கும் காரணம். நோய்க்கான அடிப்படைக் காரணம் மரபியல் வழியாகவும், மரபியல் அற்ற வகையாகவும் இருக்கலாம். சில விலங்கினப் பிரிவுகள் சில வகை நோய்க்கு உள்ளாக வல்லவை. சான்றாகப் பாலுக்காக வளர்க்கப் படும் மாடு, இறைச்சிக்காக வளர்க்கப் படும் மாடுகளைவிட எளிதில் பாதிக்கப் படக் கூடியது. அதிக உடல் எடையைக் கொண்ட அல்ஷேசன் போன்ற நாய்கள், எலும்பு தொடர்பான நோய்க்கு எளிதில் உட்படக் கூடியவை.\n\nபொதுவாக, பெண் விலங்கினங்கள், சில வகை நோய்க்கு எளிதில் ஆட்படக் கூடியவை, காட்டாக, சிறுநீரக நோய் ஆண் நாய்களையும், பசுக்களையும் எளிதில் தாக்க வல்லது. விலங்கினங்களில் நிறமும், சில நோய்க்குக் காரணமாக விளங்குகிறது. சாம்பல் நிறக் குதிரைகள் ஒரு வகைத் தோல் புற்று நோய்க்கு எளிதில் உள்ளாகக் கூடியவை. வெண்மை நிற விலங்கினங்கள், சூரிய ஒளியினால் பாதிக்கப்பட்டு, நோய் வாய்ப்படக் கூடியவை.\n\nநோயினைத் தோற்றுவிக்கும் காரணங்களை, இயற்பிய காரணங்கள், வேதிக் காரணங்கள், உயிரியல் காரணங்கள் எனப் பிரிக்கலாம். கதிர் வீச்சு, உறை நிலை மின்சாரம், வெளிப் புறக் காற்றழுத்தம், காயங்கள் போன்றவை இயற்பிய காரணங்களாகலாம். பல்வேறு வித அமிலப் பொருள்களும், வேதிப் பொருள்களும், பூச்சிக் கொல்லிகளும், காளான் கொல்லிகளும், மருந்துப் பொருள்களும் நோய் உண்டாக்கக் காரணங்களாகின்றன\n\nஉயிரியல் காரணங்கள். நுண்ணுயிரி, நச்சுயிரி, ஒட்டுண்ணி, பூசணம் போன்றன நோயுண்டாக்கும் காரணங்களாக உள்ளன. இவ்வகை உயிரியல் காரணங்கள், பல்வேறு நச்சுப் பொருள்களை உற்பத்தி செய்வதன் மூலமாகவும், ஒவ்வாமை காரணமாகவும், பல்வேறு உறுப்புகளை அடைந்து, செயலற்றதாக்கச் செய்வதன் மூலமாகவும் நோயுண்டாக்குகின்றன. நோய் வாயில்கள் தோல். தோல் வழியாகப் பல்வேறு நோய்கள் உடலை ஊடுருவுகின்றன. சில வகை ஒட்டுண்ணிகள் நோயில் சில உயிரினங்கள், தோல் பாதிக்கப் படும் போது, உள் நுழைந்து நோயுண்டாக்குகின்றன. கடிக்கும் ஒட்டுண்ணி, கொசு மூலமாகவும், தோல் வழியாக நோய் ஏற்பட வாய்ப்புண்டு.\n\nஉணவுக் குழாய். உணவுக் குழாய், வாய், குடல் போன்றவற்றின் மூலம் பல்வேறு வகை நோய் பரவ வாய்ப்புண்டு. வாயிலோ, குடலிலோ புண்கள் ஏற்படும் போது, அவற்றின் வழியாக நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் நுழைந்து, நோயினை ஏற்படுத்துகின்றன. கண் வழியாகப் பரவும் நுண்ணுயிரிகளால், மாடுகளில் கருச் சிதைவு நோய் பரவக் கூடும்.\n\nசுவாசக் குழாய். சுவாசக் குழாயில் உள்ள சளிப் பொருளால், பல வித நோய்கள் பரவ வாய்ப்புண்டு. மேலும், இனப் பெருக்க உறுப்பு மூலமாக, நாய்களில் ஒரு விதப் புற்று நோய், பசுவினத்தில் கருச் சிதைவு நோய், பால் வினை நோய்களும் ஏற்படலாம்.\n\nபுரத வளர்ச்சி மாற்றம் பாதிக்கப் படுவதால், செல்கள் கலங்கிய நிலையுடனும், வீக்கத்துடனும் காணப் படும். இது செல்களில் முதல் முதலாகத் தோன்றும் மாற்றம் ஆகும். ஆக்சிஜன் இராமையினாலும், நச்சுப் பொருள் தாக்குவதாலும் இந்நிலை ஏற்படுகிறது. இதே போல், செல்களில் ஓட்டைகள் தோன்றுதல், செல்கள் கண்ணாடி போன்ற நிலையினை அடைதல், செல்களில் அயற்பொருள் காணப் படல் ஆகிய பல்வேறு நிலைகள் தோன்றுகின்றன.\n\nகுருதி அணுக்கள் நுண்ணுயிரிகளைக் கொல்லுதல். நோய்க் குறியியலில், குருதி அணுக்கள் நுண்ணுயிரிகளைக் கொல்லுவது இன்றியமையாத செயலாகும். இதில், வெள்ளையணுக்கள் பெரும் பங்கு கொள்ளும். இந்த அணுக்கள் நுண்ணுயிரிகளை வளைத்து, பல்வேறு நொதிப் பொருள்களை அவற்றின் மேல் செலுத்தி, அவற்றினை அழித்து விடுகின்றன. திசு அழற்சி காணப் படும் நீர்மத்தினை அணுக்களாகவும், நீர்மப் பொருளாகவும் பிரிக்கலாம். அணுக்களில், நியூட் ரோஃபில், பேசோஃபில், ஈசினோஃபில், லிம்போசைட், பிளாஸ்மா அணுக்கள், மேக்ரோபேஜ் போன்ற அணுக்கள் காணப் படுகின்றன.\n\nதிசு அழற்சியால் ஏற்படும் சீழ்ப் பொருளில், சேதமடைந்த திசுக்களும், நியூட்ரோஃபில் எனப் படும் வெள்ளணுக்களும் காணப் படும். திசுவீக்கத்தினால் கட்டிகளும் ஏற்படும் வாய்ப்புண்டு. இந்தத் திசு அழற்சியை, உடனடி வகை (acute) என்றும், நாட்டபட்ட வகை (Chronic) என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். தூண்டுதல்களுக்கான காரணத்தைப் பொறுத்து இவ்விரு வகைளும் ஏற்படுகின்றன. திசு அழற்சி ஏற்படுவதற்கான முதன்மைக் காரணம், காரணப் பொருளை வெளித் தள்ளுவதேயாகும். திசு அழற்சி ஏற்படும் காரணம் மிதமாக இருந்தால், அதற்கான காரணி வெளியேற்றப் படுகிறது அல்லது முறியடிக்கப் படுகிறது. சேதமடைந்த திசுக்கள் உறிஞ்சப் படுகின்றன. குருதி அணுக்கள் இங்குமிங்கும் அலைந்து, இறுதியில் குருதிக் குழாயினை அடைகின்றன.\n\nதிசுப் புண் ஆறும் நிலை. நோய்க் குறியியலில் திசுப் புண் ஆறும் நிலை மிக இன்றியமையாதது. திசு அழற்சிக்குப் பின்பு, அதற்குண்டான காரணத்தை அகற்றிய பின்பு, திசு இயல்பு நிலையினை அடைவது நோய்க் குறியியலில் குறிப்பிடத் தக்க நிலையாகும். இந்தப் புண் ஆறும் நிலை, வயது, உட்கொள்ளும் உணவின் நிலை, வைட்டமின் பொருள்கள், குறிப்பாக, வைட்டமின் ஈ, ஆகியனவற்றைப் பொறுத்து மாறு படும். அதே போல் , தைராக்ளின் எனப் படும், நாளமில்லா சுரப்புப் பொருளும் , திசுப் புண் ஆறுவதற்கு மிகவும் உதவும்.\n\nநோய்க் குறியியலில் காய்ச்சல். நோய்க் குறியியலில், காய்ச்சல் முதன்மையான அறிகுறியாகும். சாதாரணமாக, உடலின் வெப்ப நிலை அதிகரித்தால், அதைச் சமச் சீர் ஆக்கும் முயற்சிகள் உடலில் ஏற்படும். வியர்வை, சுவாச எண்ணிக்கை மிகுவதாலும், கதிரி வீச்சு போன்ற முறைகளாலும், உடல் வெப்ப நிலை குறைய வாய்ப்புண்டு. ஆகவே, காய்ச்சலின் போது, வளர் சிதை மாற்றங்களும், சுவாச எண்ணிக்கையும், பசியின்மையும், வாந்தி எடுக்கும் எண்ணமும் , மலச் சிக்கலும், தாகமும் அதிகரித்தும், சிறுநீர் வெளியேற்றம், உடலில் நீர் ஆகியவை குறைந்தும், காணப் படும். காய்ச்சலுக்கான காரணங்கள் பலவாகும். அவற்றில் முதன்மையாகக் குறிப்பிடத் தக்கவை. கிராம் எதிர் நுண்ணுயிரிகள் உண்டாக்கும் நச்சுப் பொருள்கள், நச்சுயிரிகள், நோயுண்டாக்கும் ஓரணுக்கள் , பூசணப் பொருள்கள் , ஒவ்வாமை போன்றவையாகும். காய்ச்சலின் பயனாகக் குருதி வெள்ளணுக்கள் நுண்ணுயிரிகளை செயலற்றதாக்கும் திறன், நியூட்ரோபில் வகை வெள்ளணுக்களின் எண்ணிக்கை , நோய் எதிர்ப்பு அணுக்கள் உற்பத்தி ஆகியவை அதிகரித்துக் காணப்படும். மேலும், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள், அதிக உடல் வெப்ப நிலையில் உயிர் வாழ வாய்ப்பு உண்டு.\n\nநோய்க் குறியியலில் குருதி ஓட்டப் பாதிப்புக்கள். குருதிப் போக்கு, நோய்க் குறியியலில் பல வகைப் படும். வாய், மூக்கு போன்ற பல்வேறு உறுப்புகளிலிருந்து வெளிப்படுவதற்கு ஏற்றவாறு, குருதிப் போக்கு நோய்க் குறியியலில் வகைப் படுத்தப் படுகிறது. இந்தக் குருதிப் போக்கிற்குக் குருதிக் குழாய்கள் சேதமடைதல், வைட்டமின் மற்றும் வகைக் குறைவு எனப் பல காரணங்களைக் கூறலாம். சில நேரங்களில் இந்தக் குருதிப் போக்கு, குருதிக் கட்டிகளாகவும் மாற வாய்ப்புண்டு.\n\nகுருதிக் குழாய் கட்டி. உயிருடன் உள்ள போதே , குருதிக் குழாய்களின் உள்ளே ஏற்படும் கட்டிகளைத் திராம்போஸ் எனக் கூறுவர். இவ்வகை கட்டி, குருதிக் குழாயின் உட்சுவர் பாதிக்கப் படுவதன் மூலமும், குருதிச் சிரையிலுள்ள பொருள்கள் பாதிக்கப் படுவதன் மூலமும் ஏற்படுகின்றன. இக்கட்டியை இதயத்தில் ஏற்படும் கட்டி என்றும், குருதித் தமனியில் ஏற்படும் கட்டி என்றும், குருதிச் சிரையில் ஏற்படும் கட்டி என்றும், குருதி நுண் குழாயில் ஏற்படும் கட்டி எனவும், அடைப்புக் கட்டி எனவும், வலியுள்ள கட்டி எனவும், நுண்ணுயிரிகள் கோர்த்த கட்டி எனவும், வெளுத்த கட்டி எனவும், சிவப்பு நிறக் கட்டி எனவும் பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம்.\n\nசில கட்டி சுருங்கி, உறிஞ்சப் படுகின்றன. சில, குருதி கொண்டு செல்லும் குழாய்களை அடைத்துக் கொள்வதன் மூலமும், குருதி ஓட்டம் திசுக்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்திப் பாதிக்கப் படும் திசுவினைப் பொறுத்து நோய்க் குறிகள் ஏற்படுகின்றன. இதயத்திற்குக் குருதி கொண்டு செல்லும் திசுக்கள் பாதிக்கப் படும் போது, இறப்பையும் ஏற்படுத்தும். நோய்க் குறியியலில் நீர்க் கோப்பு. திசுக்களின் இடையிலும் , உடலில் உள்ள குழிகளிலும் நீர்க் கோப்பு ஏற்படுகிறது. இந்த நீர்க் கோப்பு குருதி நுண் குழாய்களில் சுவர்களின் ஊடுருவும் தன்மை அதிகப் படுவதாலும் , குருதி சவ்வூடு பரவும் அழுத்தம் குறைவதாலும் ஏற்படுகிறது. குருதியில் சவ்வூடு பரவும் அழுத்தம், குருதி இழப்பினாலும், சிறுநீரகப் பாதிப்பினாலும், ஈரல் நோயிலும், சத்துணவு உட்கொள்ளாமையினாலும் ஏற்பட வாய்ப்புண்டு.\n\nநோய்க் குறியியலில் அதிர்ச்சி. குருதிப் போக்கு, காயம், தீப்புண், நச்சுப் பொருள்களை உட்கொள்ளுதல் , மனிதர்களில் மன நோய்க் காரணங்கள் ஆகியவற்றால் அதிர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. அதிர்ச்சியினை முதல் வகை, இரண்டாம் வகை எனப் பிரிக்கலாம். இரண்டாம் வகை அதிர்ச்சி , முதல் வகை அதிர்ச்சியினை விடத் தீமை பயக்கும். இவ்வகையில், குருதியின் கன பரிமாணத்திற்கும், குருதி சுற்றும் இடத்திற்கும் உள்ள மாறுபட்ட விகிதம் அறியப் படும். குருதி சுற்றும் இடம் அதிகரித்து, அவ்விடத்திற்குச் செல்லும் குருதி அளவு குறையும் போது , ரத்த அழுத்தமும் குறைகிறது. இந்நிலையை ஈடு செய்ய, வெளிப் புறக் குருதிக் குழாய்கள் சுருங்கி , மூளைக்கும், இதயத்திற்கும் குருதி ஓட்டம் அதிகரிக்கச் செய்யப் படுகிறது. இதனால், இதயத் துடிப்பு அதிகரித்து, இறப்பு ஏற்படுகிறது. இவ்வகை அதிர்ச்சி, கடுமையான காயங்கள், உடலின் பல்வேறு பகுதிகள் நொறுங்கக் கூடிய விபத்து, பல நாள்கள் தொடர்ந்து வயிற்றுப் போக்கு, சோடியம் உப்புக் குறைவு, நீரிழிவு, மயக்கம் ஆகியவற்றில் காணப் படும்.\n\nநோய்க் குறியியலில் வெப்ப நிலை, தீக்காயம், ஒளி, வேதிப் பொருள்கள், மின்சாரம், கதிர் வீச்சு ஆகியன பல்வேறு வகைத் திசு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் , உடலில் வைட்டமின் குறைவும், மிகையும் பல்வேறு வித நோய்க் குறியியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. புற்று நோய்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் நோய்க் குறியியலில் மற்றுமொரு பிரிவாகும். புற்று நோயினை, அதன் அமைப்பு, வளர்ச்சி, பரவும் விதம், நோய்க் குறி உண்டாக்கும் வகை, நுண் திசுஅமைப்பு ஆகியவற்றைப் பொறுத்துத் தீதுறு வகை, தீதற்ற வகை எனப் பிரிக்கலாம். —வே. புருஷோத்தமன்"}}