{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fscjh8qf/", "data": {"id": "fscjh8qf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fscjh8qf/", "kind": "article", "headword": "இலிபியா", "romanization": "ilipiyā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.048825+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வட ஆப்பிரிக்கக் கடற்கரையையொட்டியுள்ள சுதந்திர அராபிய நாடுகளுள் ஒன்று.", "body_ta": "வட ஆப்பிரிக்கக் கடற்கரையையொட்டியுள்ள சுதந்திர அராபிய நாடுகளுள் ஒன்று. வடக்கில் மத்திய தரைக் கடலும், தெற்கில் நைசரும் காடும், கிழக்கில் எகிப்தும், தென்கிழக்கில் சூடானும், மேற்கில் அல்சீரியாவும், வடமேற்கு மூலையில் துனீசியாவும் இலிபியாவின் (Libya) எல்லைகளாம். இந்நாட்டின் 90 விழுக்காடு நிலத்தின் சகாராப் பாலைநிலம் பரவியுள்ளது.\n\nஇலிபியா 1960-ஆம் ஆண்டு வரை வறியநாடாகவிருந்தது. இது திடீரெனப் பொருள் வளம் படைத்த நாடாக உருமாறத் தொடங்கியமைக்கு, அங்கு 1959–ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பெட்ரோலிய எண்ணெய்ப் பொருள்களே காரணமாகும்.\n\nஇலிபியா\n\nதிரிப்போலி (Tripoli) இலிபியாவின் தலைநகரும் மிகப்பெரும் நகரமுமாகும். அராபிய மொழி இந்நாட்டின் ஆட்சிமொழி.\n\nபரப்பு\n\nஇலிபியாவின் பரப்பளவு 17,59,540 ச.கி.மீ. ஆகும்.\n\nமக்கள் தொகை\n\nஇந்நாட்டின் மக்கள்தொகை 35 இலட்சமாகும் (1982).\n\nஇலிபியாவின் மக்கள் சிறப்பாக அராபிய, பெர்பர் இனங்களைச் சார்ந்தவர்கள். மேற்கூறிய இரு இனங்களைத் தவிர இத்தாலியர்கள், கிரேக்கர்கள், மால்ட்டினியர்கள் ஆகியோர் சிறுசிறு குழுக்களாக இந்நாட்டில் வாழ்கின்றனர். அராபியர்கள் இங்கு வந்து குடியேறுவதற்கு முன்னர், இந்நாட்டில் பெர்பர் இன மக்கள் வாழ்ந்தனர். அராபியர்கள் படையெடுத்து வந்து குடியேறியவர்கள். இக்காலத்தில் பெர்பர் மக்களும் அராபியரும் இரண்டறக் கலந்துவிட்டனர்.\n\nகிழக்கு இலிபியாவில் பெரும்பாலோர் அராபிய வழி வந்தோர்கள். ஏனைய பகுதிகளில் கலப்பின மக்கள் வாழ்கிறார்கள். இலிபியாவில் ஏறத்தாழ 4000 யூதர்கள் வாழ்கிறார்கள். மக்கள் தொகையில் சற்றேறக்குறைய முக்கால் பங்கினர் வடமேற்கில் மத்திய தரைக்கடலை அடுத்துள்ள பகுதிகளில் வாழ்கிறார்கள். எஞ்சியவர்களுள் ஏறத்தாழக் கால்பங்கினர் வடகிழக்குக் கடற்கரையை யொட்டியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். ஒருசில இலிபியர்கள் பாலைநிலப் பசுஞ்சோலைகளில் வாழ்கின்றனர். எஞ்சியோர் மேய்ச்சல் தரைகளை நாடித் தத்தம் ஆடுகள், செம்மறியாடுகள், ஒட்டகங்கள் போன்றவற்றுடன் சுற்றித் திரியும் நாடோடிகளாக உள்ளனர்.\n\nதட்பவெப்பநிலை\n\nஇலிபியாவின் தட்பவெப்ப நிலை அதன் உயரத்தைப் பொறுத்தும் கடலுக்கடுத்திருக்கும் தன்மையைப் பொறுத்தும் மாறுபடுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதி பாலைநிலத் தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. கோடைக்காலம் மிகுந்த வெப்பத்துடன் மழையில்லாமல் விளங்குகிறது. குளிர்காலத்தில் மழை சில வாரங்கள் மட்டும் பொழிகிறது. கோடைக்காலத்தில் சகாராப் பாலை நிலத்திலிருந்து வெப்பமானதும் வறண்டதுமான மணலோடு கூடிய காற்று வீசுகிறது. அக்காலத்தில் தட்பவெப்பநிலை மிகுதியாக உயர்ந்துவிடுவதால் பயிர்கள் அழிந்துவிடுகின்றன.\n\nநிலம்\n\nவடமேற்குக் கடற்கரைச் சமவெளியும், வடகிழக்கு மேட்டு நிலங்களும் இலிபியாவின் வளமான பகுதிகளாம். சகாரா உலகிலேயே மிகப் பெரிய பாலைநிலமாகும். பாலைநிலத்தில் பல பசுஞ்சோலைகள் உள்ளன. தென்கிழக்கிலுள்ள அல்கூப்ரா ஏரி நாட்டில் பெரும் பரப்பில் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது. பெட்டி சிகரம் (Bette Peak) என்பது இலிபியாவின் மிக உயர்ந்த மலையுச்சியாகும்; அதன் உயரம் 2286 மீ.\n\nதிரிப்பொலிட்டேனியா, சைனயீக்கா, பெசான் என இலிபியாவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\n\nநகரங்கள்\n\nதிரிப்போலியும் பென்காசியும் இலிபியாவின் சிறப்பான நகரங்கள். பீய்டா (Beida), தெர்னா (Derma), தோப்ரூக்கு (Topruk) ஆகியவை ஏனைய நகரங்களாம்.\n\nபொருளாதாரம்\n\nஎண்ணெய் ஊற்றுகள் 1959–இல் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு முன்னர், இலிபியா மக்களின் வருமானம் அராபிய நாடுகளிலே\n\nஇலிபியா திறந்தவெளி அங்காடி\n\nமிகக் குறைவாக இருந்தது. இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவற்றின் பொருளுதவியை இலிபியா அரசு நாடி வந்தது. இன்று இந்நாட்டின் வருமானத்தில் 80 விழுக்காடு பெட்ரோலியப் பொருள்களிலிருந்து கிட்டுகிறது. பெருகிவரும் வருமானத்தை மின் பெருக்கத்திற்கும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கும் இன்னபிற பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள். இக்காலத்தில் இலிபியா பிற நாடுகளுக்குக் கடன் கொடுத்தும் பெருமளவில் படைத்தளவாடங்களை இறக்குமதி செய்தும் வசதியாக வாழ்கிறது. எண்ணெய்க் கிணறுகளிலிருந்து இறைக்கப்படும் பெட்ரோலியப் பொருள்கள் குழாய்கள் மூலம் மத்தியதரைக்கடல் துறைமுகப்பட்டினங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பிறநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. எண்ணெய் எடுக்கும் தொழிலில் இலிபியாவுடன் வெளிநாட்டுக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன.\n\nநிலத்தை நம்பியே 80 விழுக்காடு மக்கள் வாழ்கிறார்கள். ஆனால், 8 விழுக்காடு நிலத்தில் மட்டுமே பண்ணைகள் உள்ளன. பெரும்பாலான பண்ணை நிலம் கால்நடைகளுக்கான மேய்ச்சற்றரைகளாக உள்ளது. குடியானவர்களுக்கு வருமானத்தின் பெரும் பகுதியைக் கால்நடைச் செல்வமே கொடுக்கிறது. பார்லி, எலுமிச்சம்பழம், பேரீச்சை; ஒலிவம், வேர்க்கடலை, தக்காளி, கோதுமை போன்றவை சிறப்பான ஏற்றுமதிப் பொருள்கள்.\n\nவரலாறு\n\nதிரிப்போலிடேனியா கி.மு. எழாம் நூற்றாண்டில் கார்த்தேசின் ஆளுகைக்குட்பட்டது. கிரேக்கர்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சைரனியிக்காவில் குடியேறினர். திரிபோலிடேனியாவும் சைரனியிக்காவும் ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுக் காலம் உரோமானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்தன.\n\nவாண்டல்களும் பைசாண்டியர்களும் கி.பி. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் திரிப்போலிடேவியாவின் மீதும் சைரனியிக்கா மீதும் படையெடுத்து அவற்றை அழித்துப் பாழ்படுத்தினர். அராபியர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்து கி.பி. 15–ஆம் நூற்றாண்டு வரை திரிப்போலிடேனியாவையும் சைரனியிக்காவையும் ஆண்டனர். அதன் விளைவாக அனைத்து இலிபியர்களும் அராபிய மொழி பேசத் தொடங்கி, இறுதியில் முசுலிம்களாகி விட்டனர்.\n\nஇலிபியா கி.பி. 16–ஆம் நூற்றாண்டு முதல் 19–ஆம் நூற்றாண்டு வரை உதுமானியப் பேரரசின் பகுதியாகித் துருக்கியின் கீழ் இருந்தது. ஆனால், இலிபிய அரசர்கள் பெரும்பாலும் சுதந்திரமாகவே செயற்பட்டனர். இக்காலத்தில் பார்பரிக் கடற்கொள்ளைக்காரர்கள் மத்தியதரைக் கடல் பக்கம் வரும் ஐரோப்பிய, அமெரிக்கக் கப்பல்களைச் சூறையாடினர். இதனை எதிர்த்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர் புரிந்தது.\n\nஇலிபியாவை 1912–ஆம் ஆண்டில் இத்தாலி கைப்பற்றியது. அது பெருஞ்செலவில் சாலைகளையும் நகரங்களையும் நீர்ப்பாசனத் திட்டங்களையும் இலிபியாவில் அமைத்தது. அங்கு ஒன்றரை இலட்சம் இத்தாலியர்களும் குடியமர்த்தப்பட்டனர். இரண்டாம் உலகப்பெரும் போரின் போது இத்தாலி தோல்வியுற்று இலிபியாவை இழந்தது. இலிபியா சுதத்திர நாடென ஐக்கிய நாடுகள் அவை 1951–இல் அறிவித்தது. முகமது இட்ரிசு என்பார் அரசராகப் பொறுப்பேற்றார். இது 1951 முதல் 1963 வரை முடியாட்சி நாடாகிய போதிலும், பெசால், திரிப்போலி ஆகியவை தனித்து இயங்கும் தன்மை பெற்றிருந்தன. ஆதலின், தேசிய ஒருமைப்பாடு தடைபடுகிறது என்று பல தலைவர்கள் கருதினர்; மாநிலங்கள் 1963–இல் நீக்கப் பெற்றன. மத்திய அரசால் அது கண்காணிக்கப்படும் முடியாட்சியாகச் செயற்படத் தொடங்கியது.\n\nபடைத்தலைவர்கள் இட்ரிசு மன்னரை 1969–ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதவியிலிருந்து விலக்கி விட்டு ஆட்சியைக் கைப்பற்றினர். மும்மர் எல். கடாபி என்பார் தலைமையேற்று, அரசாட்சியையும் கைப்பற்றிக் கொண்டார். கடாபி 1970–இல் இலிபியாவையும் ஏனைய அராபிய நாடுகளையும் ஒருங்கிணைக்க முயன்று தோல்வியுற்றார். அதனால், பிற அராபிய நாடுகளுடன் இருந்த உறவு சீர்கெடலாயிற்று."}}