{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fqq48q7w/", "data": {"id": "fqq48q7w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fqq48q7w/", "kind": "article", "headword": "உத்துனூர்", "romanization": "uttuṉūr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.878266+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆந்திர மாநிலத்தில் இரெய்ச்சூர்ப் பகுதியில் மகபூப்நகர் மாவட்டத்தில் இசே (IJ) என்ற காட்டாற்றின் கரையில் உள்ளதொரு சிற்றூர், தொல்லியல் சிறப்புப் பெற்றது.", "body_ta": "ஆந்திர மாநிலத்தில் இரெய்ச்சூர்ப் பகுதியில் மகபூப்நகர் மாவட்டத்தில் இசே (IJ) என்ற காட்டாற்றின் கரையில் உள்ளதொரு சிற்றூர், தொல்லியல் சிறப்புப் பெற்றது. இப்பகுதியில் சாம்பல் மேடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\n\nஇங்குள்ள சாம்பல் மேடுகள் பழமை வாய்ந்தவை என்று முதன் முதலில் மெக்கன்சி என்பவர் கண்டுபிடித்தார். இவர்க்குப் பின்வந்த அறிஞர்கள் இதை மறுக்கலானார்கள். ஆனால் புரூசு பூட்டு (Bruce Foote) என்பவர் புதிய கற்கால மக்களின் தடயங்கள் இவை என்றார். பின்னர் இந்தச் சாம்பல் மேட்டை எப்.ஆர். அல்சின் (F.R. Allchin) என்பவர் 1957–இல் அகழாய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n\nஉத்துனூர் சாம்பல் மேடுகள் பற்றிய முதல் அறிக்கையை ‘அய்தரபாது நிலவியர் பத்திரிக்கை’ வெளியிட்டுள்ளது. இப்பகுதியில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டன. துங்கபத்திரா ஆற்றின் கரையில் 7 கி.மீ. தூரத்தில் இந்த ஊர் அமைந்திருப்பதால் புதிய கற்கால மக்களுக்குக் கற்கருவிகள் செய்யக் கற்கள் கிடைப்பது எளிதாக அமைந்தது. இந்த ஊருக்கருகில் புதிய கற்கால மக்களின் கைக்கோடரிகள் செய்யும் தொழில் பட்டரையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் செய்யப்பட்ட மேற்பரப்பாய்வில் புதிய கற்காலக் கோடரிகளும் மட்பாண்டங்களின் ஓடுகளும் கிடைத்துள்ளன.\n\nஇந்தச் சாம்பல் மேடுகளை அகழாய்வு செய்ய ஆந்திர மாநிலத் தொல்லியல் துறையினரும் உதவி செய்துள்ளனர். இந்தச் சாம்பல் மேடுகள் சுமார் 6 அடி உயரத்தில் காட்சி தருகின்றன. மேட்டின் மேல் பகுதியில் மூன்று இடங்களில் அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. பின்னர், இவை விரிவுபடுத்தப்பட்டுப் பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டன. இந்தக் குழிகள் சுமார் 6 அடி வரை தோண்டப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 12 மண் அடுக்குகள் (Layers) கிடைத்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கால கட்டத்தைச் (Periods) சார்ந்தது. இந்த மண்ணடுக்களைக் கொண்டு இப்பகுதியில் ஐந்து காலத்தைச் சார்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. இக்கால கட்டத்தைப் புதிய கற்காலம், வரலாற்றுக் காலம் என்ற இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கவாம்.\n\nமுதற்பிரிவில் வாழ்ந்த மக்கள் புதிய கற்கால மக்கள். அவர்கள் இங்கு மூன்று காலங்களில் தங்கியுள்ளனர். 12–ஆம் மண் அடுக்கில் இருந்து 8–ஆம் மண் அடுக்கு வரை இந்தப் பிரிவைச் சார்ந்த தொல் பொருள்கள் கிடைக்கின்றன. இதில் கால்நடைகளின் சாணமும் சாணத்திற்குத் தீயிட்டதால் ஏற்பட்ட சாம்பல், கால்நடைகளின் எலும்பு ஆகியவையும் கிடைத்துள்ளன. இதில் மாடுகளின் குளம்படி படிந்த சாம்பல் படிவங்கள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கருகில் மாட்டுச்சாணம் குவிக்கப்பட்ட மேடும் உள்ளது. இத்துடன் மண்ணில் கம்பம் நட்ட குழிகள் (Post–Holes) கிடைத்துள்ளன. இவை வீடு கட்டப் பயன்படுத்தப்பட்ட மரக் கம்பங்களை நடுவதற்கான குழிகளாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகின்றன. இக்குழிகள் பெரியதாகவும் சிறியதாகவும் வேறுபட்ட அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் மட்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.\n\nபுதிய கற்காலத்தில் இரண்டாம் பிரிவைச் சார்ந்த மக்கள் 7, 8–ஆம் மண் அடுக்குகளில் வாழ்ந்துள்ளனர். இக்காலத்தும் கால்நடைகள் வளர்த்ததற்கான தடயங்கள் கிடைக்கின்றன. கால்நடைகளை ஓர் இடத்தில் அடைத்து வைத்தனர். அந்த இடத்தில் பாதுகாப்புக்காகக் கால்நடையைச் சுற்றி வேலி போட்டுள்ளனர்; இரண்டு வேலிகள் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுள்ளனர். இவற்றின் முள்வேலிகளும் கிடைக்கின்றன. இக்காலத்தில் கிடைத்த சாம்பல் முற்காலத்தில் கிடைத்த சாம்பலைக் காட்டிலும் மிகுதியானது ஆகும். அம்மண்ணடுக்குகளில் பானை ஓடுகளும் புதிய கற்காலக் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன.\n\nமூன்று, நான்காம் காலங்களும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை. இக்காலத்திலும் சாம்பல், பானை ஓடுகள் கிடைத்துள்ளன. ஆனால் இக்காலத்திய பானை ஓடுகள் நேர்த்தியானவை. ஐந்தாம் காலப் பிரிவில் வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்துள்ளனர். இக்காலத்தில் வரலாற்றுக் கால மட்பாண்டங்கள், புதிய கற்காலக்கருவிகள் கிடைத்துள்ளன. இங்குப் புதிய கற்காலத்துக் கருவிகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. துங்கபத்திரா நதி அருகில் உள்ள காரணத்தால் இங்குக் கிடைத்த கற்கள் கற்கருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இங்குக் கிடைத்த கற்கருவிகளுள் கரண்டிகள், முனைகள், பட்டைக்கற்கள், கைக்கோடரிகள் குறிப்பிடத்தக்கனவாகும். இந்தக் கல் ஆயுதங்கள் படிகக்கல் (Chert), பழுப்புமணி (Jasper), நீலவெண்மணி (Chalacedony) ஆகிய மணிக்கல் வகைகளால் செய்யப்பட்டுள்ளன. பயன்படுத்தப்பட்ட கல் அம்மி, கற்சுத்திகள் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.\n\nஉத்துனூர் அகழாய்வில் கிடைத்த பானை ஓடுகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை: 1. புதிய கற்காலப் பானைகள், 2. வரலாற்றுக் காலப் பானைகள். புதிய கற்காலத்துப் பானை ஓடுகள் கையால் செய்யப்பட்டவை. இப்பானைகள் மணல் அதிகம் நிறைந்த (Coarse Clay) மண்ணால் செய்யப்பட்டதால் சற்றுத் தடித்த ஓடுகளாகக் காட்சி தருகின்றன. இளகிய மண்ணால் செய்யப்பட்டவை குறைந்த அளவிலேயே கிடைக்கின்றன. இக்காலப் பானை ஓடுகள் தக்காணப் பீடபூமிப் பகுதியில் கிடைக்கிற ஓடுகளை ஒத்துக் காணப்படுகின்றமையால் அங்கிருந்த மக்கள் குடிபெயர்ந்து இப்பகுதிக்கு வந்திருக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த ஓடுகளை (அ, அ, அ) என்று மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். முதல் பிரிவு தேய்த்து மெருகூட்டப்படாதவை; இரண்டாம் பிரிவு தேய்த்து மெருகூட்டப்பட்டவை; மூன்றாம் பிரிவு மேல்பாகத்தில் சாயம் பூசப்பட்டவை. அலங்காரக் கோடுகள் போடப்பட்ட பானைகளும் கிடைத்துள்ளன. இவற்றுள் சில சூளையிடுவதற்கு முன்பும், சில சூளையிலிட்ட பின்னும் வரையப்பட்ட கோடுகளாகும்.\n\nஇப்பானைகள் எவ்வாறு சுடப்பட்டன என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் பானைகள் கும்பலாக வைத்துச் சுடப்பட்டிருக்க வேண்டும் என்பது உய்த்துணரப்படுகிறது. பானையின் மேல் பாகத்தில் குறியீடுகள் பதித்தவைகளும் கிடைத்துள்ளன. பானையின் கழுத்துப் பாகத்தில் விரல்களை வைத்து அழுத்திக் குறியீடு செய்துள்ளனர். மங்கலான சிவப்பு நிறப் பானைகள் இங்கு அதிகம் கிடைக்கின்றன. இதைத் தொடர்ந்து கறுப்புப் பானைகளும் கிடைத்துள்ளன. சுமார் 70 பானைகள் அகழாய்வில் எடுக்கப்பட்டன. இவற்றுள் வட்டில்கள் (Shallow Platters), கிண்ணங்கள், சாடிகள், நீண்ட கழுத்துடன் கூடிய சாடிகள், மூடியுடன் கூடிய சாடிகள் போன்ற மட்பாண்டங்கள் குறிப்பிடத்தக்கன.\n\nவரலாற்றுக் காலத்தில் கறுப்பு, சிவப்புப் பானைகள் கிடைத்துள்ளன. இவை மெருகூட்டப்பட்டவை. இவற்றுடன் கருப்புப் பானைகளும் கருப்பும் பழுப்பும் சேர்ந்த பானைகளும் கிடைத்துள்ளன. உரோமானிய பானைவகையைச் சார்ந்த உரௌலெட்டடு ஓடுகளும் இங்குக் கிடைத்தன. பானையின் மேல் பாகத்தில் வெண்ணிறக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இவை குறுக்கு நெடுக்காகவும் நேராகவும் வரையப்பட்டுள்ளன. வரலாற்றுக் காலத்தைச் சார்ந்த சாம்பல் நிற ஓடுகள் குறைந்த அளவிலே கிடைத்துள்ளன. இவை ஆந்திர நாட்டை ஆண்ட சாதவாகனர் காலத்து மட்பாண்டங்களை ஒத்து இருக்கிற காரணத்தால், கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று கணிக்கப்படுகிறது.\n\nஇறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் இக்காலத்தில் இருந்துள்ளது. குழந்தையின் எலும்புக்கூடு ஒன்று அகழாய்வில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சில எறும்புகள் மட்டுமே கிடைத்துள்ளன. இவற்றோடு நூற்றுக் கணக்கான மிருகங்களின் எலும்புக் கூடுகளும் கிடைத்துள்ளன. இந்த எலும்புகள் உடைந்து காணப்படுகின்றன. மாட்டின் எலும்பு அதிகமான அளவிலும் ஆடு, மான் ஆகியவற்றின் எறும்புகள் குறைந்தும் காணப்படுகின்றன. இந்த எலும்புகள் முற்காலத்தில் குறைந்தும் பிற்காலத்தில் அதிகரித்தும் வந்துள்ளன.\n\nஇங்குக் கிடைத்த சாம்பல் கட்டிகளை அய்தராபாதில் பாதுகாத்து வைத்துள்ளனர். இங்குக் கண்டெடுக்கப்பட்ட சாம்பல் கட்டிகள் சுவர்கள் கட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 11–ஆம் மண்ணடுக்கில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பல் பரிசோதனைக்காகப் ‘பிரிட்டீசு அருங்காட்சியகச்’ சோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் இந்தச் சாம்பலின் காலம் கி.மு. 2160–150 என்று கணித்துள்ளனர். அதாவது இவற்றின் காலம் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இங்கு கி.மு. 2000–இலிருந்து கி.பி. முதல் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது அறிய வருகிறது.\n\nஇங்கு வாழ்ந்த மக்கள் கால்நடைகளை வளர்க்கத் தெரிந்திருந்தார்கள். இக்கால்நடைகளின் பாதுகாவலுக்காக வேலியிட்டுள்ளனர். இவற்றின் சாணத்திற்குத் தீயிட்டுச் செல்வது அவர்களுடைய வழக்கமாக இருந்திருக்கிறது. தி.சு.\n\nதுணை நூல்கள்\n\nAllchin, F.R., Utnur Excavation, Andhra Pradesh Government Archaeological Series, No. 5, 1961.\n\nZeuner, F., On the Origin of the Cinder Mounds of the Bellary District, Bull Inst. of Archaeology, 2, 1959."}}