{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fp2jg942/", "data": {"id": "fp2jg942", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fp2jg942/", "kind": "article", "headword": "சிறுநீரகச் சோர்வு", "romanization": "ciṟunīrakac cōrvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:56.337964+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அறுவைக்குப் பின் ஏற்படும் சிறுநீரகச் சோர்வு (renal insufficiency) பல காரணங்களால் ஏற்படக் கூடும்.", "body_ta": "அறுவைக்குப் பின் ஏற்படும் சிறுநீரகச் சோர்வு (renal insufficiency) பல காரணங்களால் ஏற்படக் கூடும். அறுவையின் போது, ஏற்படக் கூடிய அதிர்ச்சி நிலையில் மிகு குருதி இழப்பு, மயக்க மருந்து அல்லது வேறு காரணத்தால் ஏற்படக் கூடிய குருதி அழுத்தக் குறைவு போன்ற காரணங்களாலும் ஏற்படலாம். நுண்ணுயிரி தாக்குவதால், நச்சுத் தன்மை பரவினாலும் சிறுநீரகச் சோர்வு ஏற்படலாம்.\n\nதற்போது, திறந்த இதய அறுவை முறை பல இதயக் கோளாறுகளை நிலையாகக் குணப்படுத்த, பெருமளவில் செய்யப்படுகிறது. இது போன்ற தீவிரமான அறுவையால், இதயத் துடிப்பில் ஏற்படும் மாற்றங்களாலும், செயற்கை இதய நுரையீரல் பொறியின் மூலம், குருதி ஓட்டம் தற்காலிகமாக நிகழ்த்தப்படுவதால், குருதி அணுக்களிலும், தந்துகிகளிலும் ஏற்படும் மாற்றத்தாலும் சிறுநீரக இயக்கச் சோர்வு ஏற்படுகிறது. மேலும், கல்லீரல் சோர்வு, பித்தப் பையில் அடைப்புப் போன்ற நோய்களுக்கான கல்லீரல் தொடர்பான அறுவைக்குப் பின்னரும், சிறுநீரகச் சோர்வு மிக அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. விபத்துகளால் ஏற்படும் காயங்களுக்குச் செய்யப்படும் அறுவை முறைகளாலும் கடுமையான சிறுநீரகச் சோர்வு ஏற்படுகிறது.\n\nஅறிகுறிகள். சிறுநீரகச் சோர்வு, பெரும்பாலும் குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுவதைக் கொண்டே உணரப்படுகிறது. சாதாரணமாக, ஒரு நாளில் குறைந்தது 400 மி. லிட்டராவது சிறுநீர் வெளியேறினால்தான், உடலில் உற்பத்தியாகும் நைட்ரஜன் கழிவுப் பொருளையும், அமிலக் கழிவுப் பொருள்களையும் வெளியேற்ற முடியும். ஒரு மணிக்கு 17 மி.லிட்டராவது வெளியேறினால்தான், கழிவுப் பொருள்கள் குருதியில் கூடி விடாமல் காக்க முடியும். எனவே, சிறுநீர் வெளியேறும் அளவைப் பிழையின்றிக் குறித்தல் என்பது ஓர் இன்றியமையாப் பணியாகும். சிறுநீரின் அளவு குறையுமானால், அதற்கான காரணத்தை ஆராய்ந்து, உரிய மருத்துவத்தை உடனே செய்வதால், கடுமையான விளைவுகளைத் தவிர்க்கலாம். ஆனால், சில சமயங்களில் சிறுநீரளவு குறையாமலே, சிறுநீரகச் சோர்வு ஏற்படக் கூடும்.\n\nசிறுநீரில் குருதி கலந்து வந்தாலோ, சிறுநீர் கலங்கலாக அழுக்குப் போல வெளியேறினாலோ, அது சிறுநீரகச் சோர்வின் அறிகுறியாக இருக்கலாம். சுவாசம், மிக விரைவாகவும், ஆழமாகவும், அமிலத் தன்மையைக் குறிக்கும் வகையிலும் இருந்தால், அது ஓர் அறிகுறியாகும். குருதிக் கசிவு மிகையாக ஏற்படலாம். நோயாளியின் நினைவாற்றலில் மாற்றம் ஏற்படலாம். அவர் சுறுசுறுப்பின்றி மந்தமாகவோ, நிலை கொள்ளாமலோ காணப்படலாம். கைகளில் நடுக்கம் மற்றும் சோர்வு காணக் கூடும். இந்த அறிகுறிகள் தென்படுமேயானால், உடனே குருதி ஆய்வு மூலம் குருதியில் சிறுநீர்க் கழிவுப் பொருள்கள் கலப்பதை இனங்காணலாம். காட்டாக, குருதியில் யூரியா, கிரியாட்டினின் ஆகியவை அளவிற்கு அதிகமாகக் காணப்படும்.\n\nதடுப்பு முறைகள். எவ்வகை அறுவையின் போதும், குருதி அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க வேண்டும். மயக்க மருந்தாலோ, குருதி இழப்பாலோ, குருதி அழுத்தக் குறைவு ஏற்பட வாய்ப்பிருந்தால், அதை மாற்று மருந்தாலோ, குருதி உட்செலுத்துவதாலோ உடனடியாக ஈடு செய்தால், மீளா அதிர்ச்சி நிலை ஏற்படாது. சிறுநீரகச் சோர்வும் தவிர்க்கப்படும். அறுவையின் போது, திசுக்களுக்கு ஏற்படக் கூடிய காயத்தையும், கையாளுதலையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.\n\nதிறந்த இதய அறுவை முறையை மிகவும் குறைந்த நேரத்தில் செய்வதாலும், செயற்கைப் பொறியின் மூலம் குருதி ஓட்டம் நிகழ்வதை மிகக் கவனமாகச் செய்வதாலும், இதையொட்டி ஏற்படக் கூடிய சிறுநீரகச் சோர்வைக் குறைக்கலாம். மேலும், இது போன்ற அறுவையின் போது, மானிட்டால் என்னும் மருந்தைப் பயன்படுத்திச் சிறுநீரகங்கள் சோர்வடையாமல், சிறுநீர்ப் பிரிப்பான்களிலும், நுண் குழல்களிலும் யாதொரு தேக்க நிலையும் ஏற்படாதவாறு செய்வதன் மூலம், சிறுநீரகச் சோர்வு ஏற்படுவதைப் பெரிதும் குறைக்க இயலும். சிறுநீரகங்களைப் பாதிக்கக் கூடிய மருந்துகளை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும். ஆழ்ந்த சிதைந்த காயங்களுடன் கூடிய நோயாளிக்குத் தீவிர மருத்துவம் தேவை. குருதி இழப்பை உடனடியாக ஈடு செய்ய வேண்டும்.\n\nமருத்துவம். சிறுநீரகச் சோர்வு என்பது அதன் தீவிரத்தையும், சிறுநீரக நுண்குழல்களில் ஏற்பட்டுள்ள சேதத்தின் தன்மையையும், எண்ணிக்கையையும் பொறுத்து, 1—6 வாரம் நீடிக்கலாம். அரிதாக, நிலையான சோர்வும் ஏற்படலாம். இவ்வாறு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சிறுநீரகங்கள் இயங்கா நிலை ஏற்படும் போது, நிலைமையின் கடுமையையும், கால அளவையும் பொறுத்துப் பொது மருத்துவ முறையையோ, செயற்கைச் சிறுநீரக முறையையோ மேற்கொள்ளலாம்.\n\nதேக்கத்தைக் கட்டுப்படுத்துதல். சிறுநீரகங்கள் இயங்கா நிலை ஏற்படும் போது, நீர் மிகுதியாக உள்ளே சென்றால், அது உடலிலேயே தங்கி விடும். அதனால், உடல் வீக்கம், மிகு குருதி அழுத்தம், மூச்சுத் திணறல், நுரையீரலில் நீர் கோத்தல் போன்ற விளைவுகள் ஏற்படும். எனவே, இந்நிலையில் உட்கொள்ளும் நீரின் அளவை மிகக் கவனமாகத் தீர்மானிக்க வேண்டும், வெளியேறிய நீரின் அளவுடன் 300—500 மி.லி. கூடுதலாகச் சேர்த்து, அதை ஒரு நாள் முழுதும் நோயாளிக்கு அளிக்க வேண்டும். சிறுநீரளவு 1 லிட்டருக்கும் குறைவாக இருக்கும் போது, பொதுவாகச் சோடியம், பொட்டாசியம் கலந்த பொருள்களைத் தவிர்க்க வேண்டும் (உப்பு, இளநீர், ஆரஞ்சு முதலியன). பின்னர், சிறுநீரளவு கூடி வரும் போது, இவற்றைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கொள்ளலாம்.\n\nநீரின் அளவையும் கரை பொருள்களின் அளவையும் கட்டுப்படுத்தும் அதே வேளையில், மிகவும் இன்றியமையாத சத்துப் பொருள்களும், கலோரியும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றில் குறைவு ஏற்படுமானால், உடலிலுள்ள தசையும், ஏனைய உறுப்புகளும் தேய்ந்து, அவற்றிலுள்ள புரதம் உடல் இயக்கத்திற்குப் பயன்படுத்தப்படும். இதனால், குருதியில் யூரியாவும், நைட்ரஜன் கழிவுப் பொருள்களும் மிகுந்து விடும். எனவே, தேவையான அளவு புரத, மாவு, கொழுப்புச் சத்துகள் அடங்கிய உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும். இதில், புரதச் சத்துகளைப் பொறுத்த வரை, பால், முட்டை ஆகியவற்றை உட்கொள்வது சிறந்தது.\n\nசிறுநீரகச் சோர்வு ஏற்பட்ட நிலையில், நுண்ணுயிரிகள் தாக்குதலால் ஏற்படும் விளைவுகளே உயிரிழப்புக்குக் காரணமாகி விடும். மேலும், சிறுநீரகச் சோர்வு ஏற்பட்ட நிலையில், உடலில் எதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளமையால், நுண்ணுயிரிகள் விரைந்து பரவி விடுவதோடு, அதற்கான அறிகுறிகளும் வெளிப்படையாகக் காணப்படுவதில்லை. எனவே, தீவிரக் கண்காணிப்பும், உடனடியான, முறையான மருத்துவமும் மிகவும் இன்றியமையாதவை. தொடர்ந்து, சிறுநீரளவு குறைந்து வருமானால், அதை மாற்றுவதற்காக மானிட்டால், புரூசமைட் என்னும் மருந்துகளைப் பயன்படுத்தலாம்.\n\nமானிட்டால் பயன்படுத்து முன், உடலில் நீர் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், மானிட்டால் மருந்தை ஏறக் குறைய 100 மி.லி. வேகமாக உட்செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்திய பின், சிறுநீரளவில் முன்னேற்றம் ஏற்பட்டாலன்றித் தொடர்ந்து மானிட்டாலைப் பயன்படுத்தக் கூடாது. இது போலவே, புரூசமைட் மருந்தையும் ஏறக் குறைய 200—500 மி.கி. குருதி ஓட்டத்தினுள் செலுத்துவதால், சில சமயங்களில் சிறுநீரளவு கூடலாம், அப்போது இம்மருந்தைத் தேவையான இடைவெளிகளில் பயன்படுத்தலாம்.\n\nசிறுநீரகங்கள் இயங்கா நிலை தொடர்ந்து இருக்குமானால், மருத்துவ முறைகளோடு, செயற்கை முறைகளின் மூலம் குருதியில் கழிவுப் பொருள்கள் சேர்வதையும், அதன் விளைவுகளையும் கட்டுப்படுத்தலாம். இதில் உதரவுறை தூய்மையாக்கு முறை (peritoneal dialysis), குருதித் தூய்மையாக்கு முறை என இரு வகைகள் உள்ளன. முன் கூறிய முறையில், வயிற்றிலுள்ள உதர உறையின் மூலமாகக் குருதியிலுள்ள கழிவுப் பொருள்கள் வயிற்றினுள் நிரப்பப்படும். —த. தினகரன்"}}