{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/fjkvrqxq/", "data": {"id": "fjkvrqxq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fjkvrqxq/", "kind": "article", "headword": "அதிகார வருக்கம்", "romanization": "atikāra varukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:34.123937+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அதிகார வருக்கம் என்பது, அரசாங்கத்தின் நிருவாக அமைப்பைக் குறிக்கக் கூடியதாகும்.", "body_ta": "அதிகார வருக்கம் என்பது, அரசாங்கத்தின் நிருவாக அமைப்பைக் குறிக்கக் கூடியதாகும். இஃது அரசாங்க நிருவாகத்தில் இடம்பெறுகிற அரசாங்கத் துறைகள், அரசாங்க இணையங்கள், அரசாங்கச் செயலாண்மைகள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது. அதிகார வருக்கம் (Bureaucracy) என்பது, பரந்தவகையில் பல பொருள்தரும் வகையில் பயன்படுத்தப்படுவதும் உண்டு. எடுத்துக்காட்டாகச் சமூகவியலில் இது, பொது அமைப்புகளின் அதிகாரங்களைப் பயன்படுத்துகிற விதத்தையும், அமைப்பின் செயல்களின் தனித் தன்மையையும் விளக்கும் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. மாக்சு வீபர் (Max weber) அதிகார வருக்கத்தைச் சமூக அமைப்பாகக் கருதி, அதற்குக் குறிப்பிட்ட பண்புநலன்கள் உள்ளன என வரையறுத்துள்ளார். நிருவாகத் திறமைகளைச் சமூக நிறுவனம், அதிகார வருக்கம் ஆகியவை மிகுதியாக்கும் என்பது மாக்சு வீபரின் கருத்து. பீட்டர் பிளா (Peter Blau) இக்கருத்தைச் சிறிது மாற்றியமைத்து, நிருவாகத் திறமைகளை உயர்த்தும் நிருவாக அமைப்பு அதிகார வருக்கம் என்கிறார். கூட்டான பெரிய நிருவாக அமைப்புகளில் திறமையையும் நிலைத்தன்மையையும் பாதுகாக்க உதவும் ஒருவகை நிருவாக அமைப்பு முறைதான், அதிகார வருக்கம் எனப் பிரான்சிசு (Francis), இசுடோன் (Stone) ஆகியோர் கூறியுள்ளனர். ஆகவே அதிகார வருக்கம் என்பது, அரசுப் பணியின் திறமையை உயர்த்துவதில் தொடர்புடையது என்பதால், அரசுப் பணியின் திறமையின்மையை வெளிப்படுத்தி, அதன்மூலம் நிருவாகத் திறமையை உயர்த்த முயற்சி செய்யும் வேறுபட்ட அரசியல் முறைகளைக் குறிப்பிடுவது, அதிகார வருக்கமென அரசியல் அறிவியல் கூறுகிறது. அரசியல் கட்சிகள், சட்டமன்ற அவைகள், அரசாங்கத்தின் ஆட்சித்துறை ஆகியன அதிகார வருக்கமென அரசியல் அறிவியல் விளக்குகிறது.\n\nஅரசாங்கப் பணியாளர்களை அரசனுக்குத் தரவல்ல உதவியாளர்கள், அரசாங்கத்திற்குப் பணிபுரியக் கூடிய அலுவலர்கள் ஆகிய இருதிறத்தாரும் தனித் தனியாகப் பிரியாமல், அரசனுடைய அரசாங்கத்தில் பணிபுரிந்தனர். இதுதான் அன்றைய நிருவாக முறை. தொடக்கக்கால நிருவாகம் இன்றுபோல் ஓடத்தில் தலைநகர் அமைத்து அங்கிருந்து ஆட்சி செய்யப்படவில்லை. மாறாக, அரசன் ஒவ்வோர் ஊராகச் சென்று நிருவாகத்தை நடத்தி வந்தான். நீதி வழங்கலும் நிதி வசூலித்தலும் அரசனுடைய தலையாய பணிகளாக இருந்தன. அவனுடைய உதவியாளர்களும் தொடர்ந்து பயணம் செய்தனர். அரசனுடைய தேவைகளை நிறைவு செய்வதும் நாட்டை ஆள்வதும் இணைந்தே சென்று கொண்டிருந்தன. மேலும் அப்போது போக்குவரத்தும் பிற தொடர்புகளும் வளர்ச்சி பெறவில்லை.\n\nஅரசன் நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று நிருவகிப்பது என்பது இயலாததாயிற்று. நிருவாகமும் வளர்ந்துகொண்டே இருந்ததால் ஊர் விட்டு ஊர் செல்லும் அலுவலர்களின் மூலமாக நிருவகித்தல் முடியாமலிருந்தது. இக்காரணங்களால் துறைகளின் தலைமையிடங்கள், குறிப்பிட்ட இடங்களில் அமைக்கப்பட்டு அவ்விடங்கள் ஒவ்வொன்றிலும், ஒரு குறிப்பிட்ட சில வேலைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இவ்விடங்களில் பணியாற்றிய பணியாளர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட வேலைகளைச் செய்து, அவற்றை எழுத்து வடிவமாக ஆவணங்களில் (Records) பதிவு செய்து பாதுகாத்தனர். எனவே, இவ்வாறு பல்வேறு இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள் என்றும், அரசனுடன் சென்று அவனுக்கு உதவி செய்பவர்கள் என்றும் இருவகையினராக அலுவலர்கள் பிரிக்கப்பட்டனர். துறைகளைப் பல்வேறு இடங்களில் நிலையாக முதன்முதலாக அமைத்த அரசன் இரண்டாம் என்றி.\n\nநிதித்துறை, முதன்முதலாகத் தனியாக இயங்கத் தொடங்கிய துறையாகும். நிருவாகம் நிலையாகப் பல இடங்களிலிருந்து செய்ய வழிவகுத்தாலும், திறமையான பணியாளர்கள் கிடைக்கவில்லை. பணியினைத் திறம்பட நடத்தப் போதுமான மூலப் பொருள்கள் (Resources) கிடைக்காததால், நிருவாகப் பணி தொடக்க நிலையில்தான் இருந்தது. இருப்பினும் பணியாளர்கள் எல்லாவகைச் செயல்களிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதனால் மிகுதியான சிக்கல்கள் எழுந்ததால் நிதித்துறை தனியாகப் பிரிக்கப்பட்டது.\n\nநிதித்துறையில் முதன் முதலாக மத குருமார்கள் அரசனுடைய அலுவலகச் செய்திகளை எழுதும் பணியில் ஈடுபட்டார்கள். மதத் தொடர்பான வேலைகள் முடிந்த பின்னர், இவர்கள் நிதித்துறைப் பணியில் ஈடுபட்டார்கள். மத குருமார்களுள் ஒருவர் வேந்தராகத் (Chancellor) திகழ்ந்தார். இவர்தாம் அரசனுடைய முத்திரையைப் பாதுகாத்தார். அஞ்சல் போக்குவரத்துகளில் அரசனுடைய முத்திரை இன்றியமையாது தேவைப்பட்டதால், இவர் நம்பிக்கைக்குரிய எழுத்தராக மாறினார். நாளடைவில் இவர்கள் அரசன் சார்பில் கடிதங்களுக்குப் பதில் எழுதக் கூடியவர்களாகவும் மாறினர். பின்னர் இவ்வலுவலகம் தலைமை அமைச்சர் அலுவலகமாக மாறியது. இது போலவே பல துறைகளிலும் பிற செயலாண்மைகளும் அரசாங்கத்தில் ஏற்படுத்தப்பட்டன.\n\nஅதிகார வருக்கத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கலாமென மார்க்சு (Marx) கூறுகிறார். அவை காவல் அதிகார வருக்கம், இன அதிகார வருக்கம், மரபார்ந்த ஆதரவு அதிகார வருக்கம், தகுதி அதிகார வருக்கம் ஆகியனவாகும். காவல் அதிகார வருக்கம் பொதுமக்களின் நலன்களுக்குக் காவலாகத் திகழக் கூடியதாகும். இது சீனாவில் சுங் மரபு தொடங்கிய காலத்தில் (கி.பி. 960) நிலவியிருந்தது; பிரெசியாவில் (Prussia) கி.பி. 1640–இலிருந்து 1740 வரை நிலவியிருந்தது. ஆனால் இந்த அதிகார வருக்கம், பொது மக்கள் கருத்தினின்று தனித்தும் ஏனென்று கேளாத நிலையுடையதாயுமிருந்தது. உயர் இனத்தவர்கள் மட்டுமே நிருவாகியாக வரலாமென்ற நிலையை உருவாக்கியது இன அதிகார வருக்கம். இதனால் இந்தியாவில் பிராமணர்கள், சத்திரியர்கள் ஆகியோர் மட்டுமே நிருவாகத்திற்கு வர முடிந்தது. இதனால் மக்களோடு நிருவாகம் இயைந்து செல்லவில்லை. மூன்றாவதாக மரபார்ந்த ஆதரவு அதிகார வருக்கத்தில், அரசாங்கப் பதவிகள் தனிச்சலுகையாகவோ அரசியல் பரிசளிப்பாகவோ வழங்கப்பட்டன. ஆளும் கட்சி தனது கட்சிக்காரர்களுக்கு உயர் பதவிகளை வழங்குவது, மரபார்ந்த ஆதரவு அதிகார வருக்கம். இதனால் நிருவாகத்தில் பொது நலனைக்காட்டிலும் கட்சிக் கண்ணோட்டம் மேலோங்கியது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் காரிபீல்டு இதற்குப் பலியானார். எனவே புதிய அதிகார வருக்கம் உருவானது. இதுதான் தகுதி அதிகார வருக்கம். அரசாங்கப் பணியில் திறமையானவர்களைச் சேர்க்க வேண்டுமென்று தகுதி அடிப்படையில் ஆள் சேர்ப்பு நடைபெற்றது. இது குறித்து மாக்சு வீபர் விளக்கமாகக் கூறியுள்ளார்.\n\nமாக்சு வீபர் அதிகார வருக்கத்தின் தன்மைகளைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றார்; ஒரு நிருவாக அமைப்பிலுள்ள பணியாளர்கள், ஒப்பந்தத்தாலோ கட்டாயத்தாலோ சில சட்டவரையறைகளைத் (Legal Norms) தங்களுக்குள் வரையறுத்துக் கொண்டு, அவற்றை ஏற்றுச் செயல்படுத்துகின்றனர். இச்சட்ட வரையறைகள், நிருவாக அமைப்புத் திறமையாகச் செயற்படுவதற்காக உருவாக்கப்படுகின்றன. இச்சட்டவரையறைகளைப் பணியாளர்கள் ஏற்பதால், அவர்களுக்குள் கீழ்ப்படிதல் என்ற தன்மை உருவாகிறது. இதனால் பணியாளர்கள் சட்டத்தின் கட்டுப்பாடுகளுக்கு இலக்காகின்றனர். இக்கட்டுப்பாடுகள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் உருவாக்கப்படுகின்றன. இக்கட்டுப்பாட்டினைப் பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல் நடுநிலை வகித்தாலும் பரவாயில்லை; ஆனால் மனநிறைவில்லாமலோ ஏற்றுக் கொள்ளாமலோ இருக்கக்கூடாது. நிருவாக அமைப்பில் அதிகாரம்பெற்ற ஒருவர் அலுவலகத்திற்கு வந்துவிட்டால் அவர் ஆணைகள் இட அதிகாரம் பெற்றவராகி விடுகிறார். அவர் நிருவாக அமைப்பின் கண் உள்ள பிறரோடு ஒப்புநோக்கும்போது பதவியிலும் சிறிது உயர்வு பெற்றவராகி விடுகிறார். இருப்பினும், அவர் தம்முடைய சொந்த விருப்பங்களை நிறைவேற்றத் தனிப்பட்ட ஆணைகளை வழங்க முடியாது. ஆனால் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்ற ஆணையிடும் அதிகாரம், ஆளில்லாத் தன்மையில் உருவாக்கப்படுகின்றது. இந்த ஆளில்லாத்தன்மை அதிகாரம், அமைப்பின் அதிகாரிகளுக்கு மட்டுமன்று, தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தலைமைப் பதவிகளுக்கும் பொருந்தும், அமைப்பின் ஆளில்லாத் தன்மையால்தான் பணியாளர்கள் அவர்களுக்கு மேலுள்ள அதிகாரிகளின் ஆணைகளுக்குக் கட்டுப்படுகின்றனர். தனிப்பட்ட அதிகாரிக்குப் பணியாளர்கள் கீழ்ப்படிவது கிடையாது. அதிகாரிகளுக்கும் பணியாளர்களுக்குமிடையே உள்ள தொடர்புகளைச் சட்டப்படி வரையறுத்து நன்முறையில் நடைபெறச் செய்யக் கீழ்க்கண்ட அம்சங்கள் இடம்பெற வேண்டுமென மாக்சு வீபர் கூறுகின்றார். அலுவலகப் பணிகள் வரையறுக்கப்பட்டு முறையாகத் தொடர்ந்து செய்யப்பட வேண்டும், அலுவலகப் பணிகள் ஒவ்வொன்றும் செயல்களின் தன்மையில் பிரிக்கப்படுவதால், ஒவ்வொரு செயலைச் செய்யவும் பொருத்தமான அதிகாரங்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் கொடுக்க வேண்டும். அலுவலகப் பணிகள் பிரிக்கப்படுவதால் வேலைப் பங்கீட்டுமுறை வளர்கிறது. வேலைப்பங்கீட்டின் மூலம் தனித்தன்மை வளரும். ஒவ்வொரு செயலைச் செய்யவும் பொருத்தமான அதிகாரங்கள் அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படுவதால், பணியாளர்கள் வேலை செய்ய மறுக்கும்போது அவர்களைக் கட்டாயப்படுத்தி, வேலையைச் செய்யவைக்கும் அதிகாரத்தையும் அதிகாரிகன் கொண்டிருக்க வேண்டும். இதனையே நிருவாக உறுப்பு (Administrative Organ) என்பர்.\n\nகுடியரசுத்தலைவர், அமைச்சரவை போன்றவை நிருவாக உறுப்பில் அடங்கும். நிருவாக அமைப்பில் அலுவலகங்கள் அடுக்கு வரிசையாக ஏணி போல் ஒன்றின்கீழ் ஒன்றாக அமைப்பு முழுவதையும் இணைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலகமும் அதற்குக்கீழ் உள்ள அலுவலகத்தைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய பொறுப்பினைப் பெற்றிருக்க வேண்டும். அமைப்பின் உயர் அலுவலகங்கள், அதன் கீழ் அலுவலகங்களின் குறைபாடுகளைக் களைவதாகவும் மேல் விசாரணை (Appeal) செய்யும் இடங்களாகவும் இருக்க வேண்டும், அமைப்பின் பணிகளைச் செய்வதால், அந்த ஒழுங்கு விதிகள் தொழில் நுட்பம் நிறைந்தனவாகவோ சட்டப்படி செய்யப்பட்டனவாகவோ இருக்க வேண்டும். எனவே இவ்வொழுங்கு விதிகளைச் செயற்படுத்தப் பயிற்சி பெற்ற திறமையாளர்கள் இருக்க வேண்டும் அமைப்பில் தகுதி நிறைந்தவர்கள் இருந்தால்தான் அமைப்புத் திறமையாகச் செயல்பட முடியும். இது நிருவாக அமைப்புக்கு மட்டுமன்று; அரசியல், சமயம், பொருளாதாரம் மற்றும் எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும், அமைப்பில் இருக்கிற மூலப் பொருள்கள் அதில் பணியாற்றும் பணியாளர்களிடமிருந்து வேறுபட்டன. அமைப்பில் மூலப் பொருள்கள் தங்களுடையனவெனச் சொந்தம் கொண்டாடக் கூடாது பணியாளர்கள் அமைப்பில் பணியாற்றுவதால் அவர்களுக்குப் பணமாகவோ வேறு பொருள்களாகவோ ஊதியம் போலக் (Compensation) கொடுக்க வேண்டும். பணியாளர்கள் வாழ்கின்ற இடத்தையும் அலுவலகத்தையும் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். அலுவலகம் பொதுத் தன்மை பெற்றிருப்பதால் பணியாளர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதுடன், தன் விருப்பப்படியே அமைப்புச் செயற்படும் வண்ணம் பொருத்தமாக அமைக்கப்படுதல் வேண்டும். நிருவாகச் செயல்கள், நிருவாக முடிவுகள், ஒழுங்கு விதிகள் போன்றவற்றை உருவாக்கி, அவை செயற்படுவதை எழுதிப் பதிவு செய்ய வேண்டும். வாய்மொழி ஒழுங்கு விதிகளைக்கூட எழுத்தால் பதிவு செய்ய வேண்டும். அலுவலகம் என்பது, நிருவாக அமைப்பின் செயல்கள், ஒழுங்கு விதிகள், நடைமுறை விதிகள் ஆகியவற்றைக் கொண்டதாகும்.\n\nஅமைப்பின் நிருவாகப் பணியாளர்கள் எங்ஙனம் பணி அமர்த்தப்படல் வேண்டுமென்பதையும், அவர்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பதையும் வீபரே கூறுகிறார். அமைப்பின் பணியாளர்கள் தனிப்பட்ட முறையில் அமைப்பிலிருந்து பிரிந்து உரிமையோடு செயற்பட வேண்டும். நிருவாக அமைப்பின் கடமையை, அஃதாவது ஆள்தன்மையற்ற பொதுச் செயல்களைச் செய்யக் கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அமைப்பில் அலுவலகப் பதவிகள், ஒன்றின்கீழ் ஒன்றாக அடுக்கு வரிசையாகத் தெளிவாக ஏற்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலகப் பதவிக்கும் சட்டப்படி தகுதிகள் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அலுவலகப் பதவிகளுக்குப் பணியாளர்கள் ஒப்பந்த முறையில் பணி அமர்த்தப்படவேண்டும். பணியாளர்களைத் தொழில்நுட்பத் தகுதி அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும். தேர்தல் மூலம் பணியில் அமர்த்தக் கூடாது. பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியங்கள் உட்பட அனைத்தும் ஊதியத்தில் இடம்பெற வேண்டும், பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களைப் பதவிகளை வரிசைப்படுத்தியதற்கேற்பப் பொருத்தமாக வரையறுக்க வேண்டும். பணியாளர்களுக்கு அலுவலகப் பணியே அவர்களது பணியாக இருக்க வேண்டும். பணியாளர்களை பிற பணிகள் செய்ய அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவர்களது அலுவலக ஈடுபாடு, பொறுப்புணர்வு ஆகியன சிதறலுக்கு இடம் கொடுத்தால், அமைப்பு செம்மையாக இயங்க முடியாது. பணியாளர்கள் தங்களது பணியை வாழ்க்கைப் பணியாக (Career Service) ஏற்பதால் பணியமைவு முறை, பதவி உயர்வுகள் பெறும் வகையில் அமைய வேண்டும். பதவி உயர்வுகள் தகுதியின் அடிப்படையிலோ (Merit) பதவி முதன்மையின் (Seniority) மூலமோ வழங்கப்படலாம். பதவி உயர்வுகள் உயர் அதிகாரிகளின் கணிப்பின் பேரில் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பணியமைவு முறையில், கண்காணிப்பு அதிகாரத்தோடு அமைப்பை இயக்கக் கூடியவர்களாகவும் இவர்கள் திகழ்கின்றனர். அலுவலகப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டுச் செயல்பட வேண்டும் என்பது பற்றியும், தனிப்பட்ட அலுவலர்கள் ஆற்ற வேண்டும் பணிபற்றியும் வீபர் கூறியுள்ளார்.\n\nஅதிகார வருக்கம் ஆள்தன்மையற்றதாக நெகிழ்வில்லாத் தன்மையுடன் இருப்பதால், பல குறைகளுக்கு இலக்காகியுள்ளது. நிருவாக அமைப்புகன் மனிதர்களுக்காக மனிதர்களைக் கொண்டு இயங்குவதால், இயந்திரங்கள் போல நிருவாகத்தை இயக்க முடியாது. ஏனெனில் மனிதர்கள் இயந்திரங்கள் போலச் செயற்படக்கூடியவர்கள் அல்லர். தவிர, தனி மனிதன் தனக்குத் தேவையான செயல்களைத் தானே செய்து கொண்டு வருவானேயானால், சிக்கல் ஏதுமின்றிச் சீராகச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். மனிதர்கள் கூடி அவர்களது சிக்கல்களை அல்லது தேவைகளை நிறைவு செய்ய வேண்டிவரும்போது, அவர்களுள் ஓரிருவர் வேலை செய்ய இயலாமல் இருக்கலாம், அல்லது வேலை செய்வதற்குரிய போதுமான தகுதிகள் நிரம்பாதவராகவும் இருக்கலாம். அல்லது தகுதியும் ஆற்றலும் நிறைந்தவர்கள் பணி செய்ய மறுக்கும்போது, அமைப்பின் வேலைகளைத் தாக்கும் சிக்கல்கள் எழுகின்றன, அமைப்புச் சிறிதாக இருந்தால், சிக்கல்களை எளிதில் அறிந்து கொண்டு அவற்றை விரைவில் நீக்கிவிடலாம். மேலும் சிறிய அமைப்புகளில் சிக்கலும் குறைவாகத்தான் இருக்கும். சிறிய அமைப்பே பெரிதாக வளரும்போது சிக்கல்களும் மிகுகின்றன. அமைப்பில் சிக்கல்கள், அதில் சேர்கின்ற சேர்க்கைகளை (Composition) பொறுத்தே மிகுதியாகின்றன. எனவே நிருவாக அமைப்பின் சிக்கல், அமைப்பின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இரண்டாவதாக அமைப்பின் உருவத்தைப் பொறுத்தும் சிக்கல் அமைகிறது. அமைப்பிலுள்ள அடுக்கு வரிசை, கட்டுப்பாட்டு அளவு அல்லது வீச்சுப் போன்றவை அமைவதற்கிணங்கச் சிக்கல் அமைகிறது. மூன்றாவதாக, அமைப்பில் உள்ள பிரிவுகள் அனைத்தும் தனித்தன்மை பெற்றுச் செயற்படுவது கடினம். ஒரு பகுதி தனித்தன்மை பெறுவது, அமைப்பின் பெரும் பகுதிக்கு மனநிறைவின்மையை உண்டாக்கி விடுகிறது, இதனாலும் சிக்கல் மிகுகிறது. அமைப்பின் ஒழுங்கு விதிகளும் வரையறுப்புகளும் கடுமையாக இருப்பதால், நெகிழ்வின்மை இல்லாததும் ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து விடுகிறது. அமைப்பு தனித்தன்மைகளைப் பல வகைகளில் பெறுவதால், அத்துணைத் தனித்தன்மைகளையும் மேலாதிக்கம் செய்யக்கூடிய தலைமை கிடைப்பதென்பது அரிது. எனவே தனித்தன்மைகள் வளர்ந்து தனித்தனிப் பிரிவுபோலச் செயற்படுவதாலும் சிக்கல்கள் மிகுதியாகின்றன. அமைப்பின் திறமையை மிகுவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆலோசனைப் பிரிவினாலும் சிக்கல் உருவாகிறது. இந்தச் சிக்கல்களை அறிந்து, அவற்றைக் களையவும் வேண்டும்; அவை மறுபடியும் எழாதவாறு பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இதற்காக நிருவாக அமைப்பிலுள்ள ஒவ்வொருவர் பணி, பொறுப்பு ஆகியன குறித்தும் விளக்க வேண்டும். நிருவாகத்தை ஒட்டு மொத்தமாகக் கணிக்கும் அரசியல் ஆட்சியாளர்கள், பணியாளர்களையும் நிருவாக அமைப்பையும் முழுமையாகத் தெரிந்து ஆட்சி செலுத்த வேண்டும்.என்.எஸ்.ச."}}