{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f8pc5372/", "data": {"id": "f8pc5372", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f8pc5372/", "kind": "article", "headword": "உச்சரிப்பு முறை", "romanization": "uccarippu muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.023292+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மொழியின் மிகச்சிறிய அடிப்படை அலகு ஒலி.", "body_ta": "மொழியின் மிகச்சிறிய அடிப்படை அலகு ஒலி. உலகில் பேசப்பட்டு வரும் ஏறத்தாழ நான்காயிரம் மொழிகளில் ஒவ்வொரு மொழியிலும் ஏராளமான ஒலிகள் காணப்படுகின்றன. மனித உடல் அமைப்பின், குறிப்பாகப் பேச்சுறுப்புகளின் அடிப்படை ஒற்றுமையால் சில ஒலிகள் பல மொழிகளில் பொதுத்தன்மை பெற்றுக் காணப்படுகின்றன. எனினும், ஒலிகளின் எண்ணிக்கை, ஒலிப்புத் தன்மை, வரன்முறை, இயல்பு போன்றவற்றில் மொழிகளிடையே பெரும்பாலும் வேறுபாடே காணப்படுகிறது. ஒலிகளின் இவ்வடிப்படை வேறுபாடே ஒரு மொழியை மற்றொரு மொழியிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு வகையான ஒலி சிறப்புடையதாகத் திகழ்கிறது.\n\nமொழி ஆராய்ச்சி ஒலி அலகுகளை ஆராய்வதில் தொடங்குகிறது. ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன அல்லது உச்சரிக்கப்படுகின்றன என்பதை விளக்கும் இயல் ஒலிப்பியல் (Articulatory Phonetics) எனப்படும்.\n\nஉயிர்ப்பு\n\nஒலிகள் உச்சரிக்கப்படுவதற்கு உயிர்த்தலே (Breathing) அடிப்படைச் சக்தியாகும். நுரையீரல் அமைந்துள்ள நெஞ்சறையின் அடிப்பகுதி உந்தி அல்லது ‘உதர விதானம்’ எனப்படும். உந்தி கீழும் மேலும் இயங்குவதால் நுரையீரல்கள் சுருங்கி விரிகின்றன. இதனால், நுரையீரல்களிலுள்ள காற்றின் அழுத்தம் வேறுபடுகிறது. நுரையீரலிலுள்ள காற்றின் அழுத்தம் குறையும்பொழுது வெளிக்காற்று மூக்கின் வழியே நுரையீரல்களுக்குள் செல்கிறது. இச்செயல் அகவுயிர்ப்பு (Inspiration) ஆகும். உட்செல்லும் காற்று ‘அகவுயிர்ப்புக் காற்று’ (Ingressive Air) எனப்படும். நுரையீரலிலுள்ள காற்றின் அழுத்தம் மிகும் பொழுது அங்கு அடைபட்ட காற்று மூச்சுக் குழலை அடைந்து, மூக்கு அல்லது வாய் வழியே வெளியேறுகிறது. இவ்வாறு உள்காற்று வெளியேறுதலைப் ‘புறவுயிர்ப்பு’ (Expiration) என்றும், வெளியேறும் காற்றைப் புறவுயிர்ப்புக் காற்று (Egressive Air) என்றும் கூறுவர்.\n\nமொழிகளின் பெரும்பாலான ஒலிகள் இவ்வித நுரையீரலின் புறக்காற்றோட்ட (Pulmonic Air–Stream) இயக்கத்தினாலே பிறக்கின்றன.\n\nஉயிர், மெய் பிறப்பு\n\nநுரையீரல்களிலிருந்து வெளியேறும் புறவுயிர்ப்புக் காற்று மூச்சுக் குழல் வழியே தொண்டையிலுள்ள குரல்வளை மடல்களின் (Vocal Cords) இடையே புகுந்து, வாய் அல்லது மூக்கு வழியாக வெளிப்படும் பொழுது ஒலிகள் பிறக்கின்றன. காற்று வாயறையில் எவ்விதத் தடையுமின்றி வெளியேறும்பொழுது உயிரொலிகளும், வாயறையின் பல நிலைகளில் தடைபெற்று வெளியேறும்பொழுது மெய்யொலிகளும் தோன்றுகின்றன. இக்காற்றுத் தடை வேறுபாடே உயிர்களையும் மெய்களையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. உயிர்களைப் பேச்சுறுப்புகளின் அளவு நிலை (Positions of the vocal organs) அடிப்படையில் வகைப்படுத்தலாம்.\n\nவாய் வழியாகக் காற்று வெளிப்படும்பொழுது பிறக்கும் ஒலிகள் வாயொலிகள் (Oral Sounds) என்றும், மூக்கு வழியாகக் காற்று வெளிப்படும் பொழுது பிறக்கும் ஒலிகள் மூக்கொலிகள் (Nasal Sounds) என்றும் பெயர் பெறும்.\n\nகாற்று வாயில் பல இடங்களில் பல நிலைகளில் தடைபெற்று வெளியேறும் தன்மைக்கு ஏற்ப வேறு வேறு ஒலிகளைத் தருகிறது. மெய்யொலிகளை உச்சரிப்பிடம் (Place of Articulation), உச்சரிப்பு முறை (Manner of Anticulation), அதிர்வுநிலை (Voice–Voiceless) என்பனவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.\n\nஉச்சரிப்பு முறையின் அடிப்படையில் மெய்யொலிகள் ஆறுவகையாகப் பாகுபாடு செய்யப்படுகின்றன. அவை அடைப்பொலி, மூக்கொலி, உரசொலி, மருங்கொலி, வருடொலி, ஆடொலி என்பன.\n\nஅடைப்பொலிகள்\n\nநுரையீரலிலிருந்து வெளிப்படும் புறக்காற்று நுரையீரலுக்கும் வாய்க்கும் இடைவே ஓர் இடத்தில் அடைபட்டு, கடையண்ணம் (Soft Palate), மூக்கறை வாயிலை நோக்கி உயர்த்து காற்று மூச்சுக் குழல்வழி செல்லாமல் தடுக்கும் பொழுது, சட்டென வெடிப்புடன் வெளியேறு நிலையில் அடைப்பொலிகள் (Stops/Plossives) பிறக்கின்றன. கடையண்ணத்தின் இச்செயலே அடைப்பொலிகளை மூக்கொலிகளினின்று வேறுபடுத்துகிறது.\n\nஅடைப்பொலிகளின் பிறப்பாக்கத்தில் அடைப்பு ஏற்படும் எண்ணிக்கைக்குத் தக்கவாறு இவ்வொலிகள் இரண்டாகப் பிரிக்கப்படும். வாயின் ஓரிடத்தில் அமைப்பு நிகழுமானால் அது ‘தனி அடைப்பொலி’ (Simple Stop) என்றும், ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் அடைப்பு நிகழுமானால் அது ‘கூட்டு அடைப்பொலி’ (Compound Stop} என்றும் பெயர் பெறும். தமிழில் தனி அடைப்பொலிகளே காணப்படுகின்றன.\n\nகுரல்வளை மடல்களின் அதிர்வுடன் அடைப்பொலிகள் பிறக்கும்பொழுது அதிர்வு அடைப்பொலிகளும் (Voiced Stops), குரல்வளை மடல்களின் அதிர்வின்றிப் பிறக்கும் பொழுது அதிர்விலா அடைப்பொலிகளும் (Voiceless Stops) தோன்றுகின்றன.\n\nஅடைப்பொலிகளின் பிறப்பில் புறக்காற்றுத் திடீரென்றோ குப்பென்றோ வெளிப்படலாம். மேற்கூறிய இரண்டு நிலைகளிலும் காற்று வெறுயேறுவதே அடைப்பொலிகளின் சிறப்பியல்பாகும். காற்று குப்பென்று வெளியேறும்பொழுது பிறக்கும் அடைப்பொலிகள் ‘மூச்சு அடைப்பொலிகள்’ (Aspirated Stops) என்றும், காற்றுப் பொதுவாக வெளியேறும் பொழுது பிறக்கும் அடைப்பொலிகள் ‘மூச்சிலா அடைப்பொலிகள்’ (Non Aspirated Stops) என்றும் வழங்கப்படும். இந்திய மொழிகளில் தமிழ் தவிர மற்ற மொழிகளில் மூச்சு அடைப்பொலிகள் காணப்படுகின்றன.\n\nஆங்கிலத்தில் p,b,t,d,k,g, என்பன அடைப்பொலிகள். இவற்றில் b,d,g என்பன அதிர்வு அடைப்பொலிகள். மற்றவை அதிர்விலா அடைப்பொலிகள்.\n\nதமிழ் வல்லின எழுத்துக்களுள் க்,ச்,ட்,த்,ப்,ற் (இரட்டை) என்பன அடைப்பொலிகள். இவை அதிர்விலா அடைப்பொலிகள். பேச்சு மொழியில் இவ்வைந்தும் அதிர்வுடனும் ஒலிக்கப்படுகின்றன.\n\nமூக்கொலிகள்\n\nமூக்கொலிகள் அடைப்பொலிகளின் சில பொதுத் தன்மைகளைப் பெற்றுள்ளன. அடைப்பொலிகள் பிறக்கும்பொழுது பேச்சுறுப்புகள் எவ்வாறெல்லாம் செயற்படுகின்றனவோ அவ்வாறே மூக்கொலிகள் (Nasals) பிறக்கும்பொழுதும் செயற்படுகின்றன. வாயறையில் அடைபட்ட காற்று கடையண்ணம் கீழ் நோக்கித் தாழ்ந்து மூக்கறை வாயிலைத் திறக்கும்பொழுது மூக்கின் நாசித் துளைகள் வழி வெளியேறுகிறது. இவ்வியக்கத்தில் பிறப்பனவே மூக்கொலிகள். மூக்கொலிகள் பிறக்கும்பொழுது குரல்வளை மடல்கள் அதிர்வுறுகின்றன. இதனால், எல்லா மூக்கொலிகளும் அதிர்வுடை மூக்கொலிகளே.\n\nஅடைப்பொலி பிறக்கும்பொழுது ஏற்படும் காற்றுத் தடையை மூக்குவழியே வெளியேற்றும் பொழுது அடைப்பொலிகளுக்கு இணையான மூக்கொலிகள் (Homorganic Nasals) தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் m,n,n என்பன மூக்கொலிகள். இவை b,d,g என்ற அடைப்பொலிகளுக்கு இணையானவை.\n\nதமிழில் ங், ஞ், ண், ந், ம், ன் என்ற மெல்லினங்கள் மூக்கொலிகள். இவை க், ச், ட், த், ப், ற் (இரட்டை) என்ற அடைப்பொலிகளுக்கு இணையானவை.\n\nசில வேளைகளில் கடையண்ணம் தாழ்ந்த நிலையிலும் வாயில் தடை ஏற்படாமல், காற்று வாய்வழியாகவும் மூக்கு வழியாகவும் வெளியேறும். இவ்வகையில் பிறக்கும் ஒலிகளை ‘மூக்கினச்சாயல் ஒலிகள்’ (Nasalized sounds) என்பர். பேச்சு மொழியில் இவ்வொலிகள் மிகுதி.\n\nஉரசொலிகள்\n\nவாயறையில் அடைபடும் புறக்காற்று வாயிலுள்ள ஒரு குறுகிய இடைவழி வழியாக உராய்வுத் தன்மை ஏற்படுமாறு வெளியேறும் பொழுது உரசொலிகள் (Fricatives) பிறக்கின்றன. உரசொலிகள் குரல்வளை மடல்களின் அதிர்வுடனோ அதிர்வின்றியோ பிறக்கும். உரசொலிகளின் பிறப்பின்பொழுது வாயறையிலுள்ள பேச்சுறுப்புகள் முழுவதுமாக ஒன்றை ஒன்று நெருங்கி மூடிக் கொள்ளாமல் சிறிது இடைவெளிவிட்டு இருக்கின்றன. எனவே, உரசொலிகள் நாவில் ஏற்படும் இடைவெளிக்குத் தக்கவாறு ‘பிளவு உரசொலி’ (Slit fricative), அகழ் உரசொலி (Groove fricative), தட்டையுரசொலி (Surface fricative) என்று வகைப்படுத்தப்படுகின்றன.\n\nஆங்கிலத்தில் மொத்தம் 9 உரசொலிகள் உள்ளன. பேச்சுத் தமிழில் 7 உரசொலிகள் உள்ளன. இவை பெரும்பாலும் கடன் வாங்கப்பட்ட சொற்களில் காணப்படுகின்றன.\n\nβ\n\n– என்ற ஈரிதழ் உரசொலி (Bilabial fricative) கபம் என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுது தோன்றுகின்றது.\n\nf\n\n– என்ற பல்லிதழ் உரசொலி (Labio-dental fricative) கடன் வாங்கப்பட்ட ஆங்கில, உருதுச் சொற்கள் சிலவற்றின் முதலில் உச்சரிக்கப்படுகிறது. எ–டு, ஃபேன் (Fan).\n\nð\n\n– என்னும் அதிர்வு பல் உரசொலி (Dental fricative) பாதம், மாதம் போன்ற சொற்களில் இருவுயிர்களுக்கு இடையே வழக்கில் வரும்.\n\nx\n\n– என்னும் அதிர்வு கடையண்ண ஒலி (Velar fricative) வேகு போன்ற சொல்லில் இரு உயிர்களுக்கு இடையே வரும்.\n\ns – என்னும் அண்பல் அகழ் உரசொலியைச் (Groove fricative) சோறு, சாவு, சொப்பனம் போன்ற சொற்களில் காணலாம்.\n\nʂ – என்பது நாவளை உரசொலி (Retro flexo fricative). இவ்வொலி விஷம், கஷ்டம் போன்ற சொற்களில் வரும்.\n\nh – என்பது குரல்வளை உரசொலி (Glottal fricative). இது ஹரி, ஹனுமான் போன்ற சொற்களில் வரும்.\n\nஉரசொலியில் அடைப்புரசொலி (Affricative) என்ற ஒரு வகையுண்டு. ஓர் அடைப்பொலியும் உரசொலியும் அடுத்தடுத்து உச்சரிக்கப்படும் பொழுது இவ்வொலிகள் தோன்றுகின்றன. இதனைச் சட்டை, சாட்சி, எச்சில் போன்ற சொற்களில் காணலாம்.\n\nமருங்கொலிகள்\n\nநாவின் மேற்பரப்புச் சிறிது குவிந்து பல், அண்ணப்பகுதி ஆகியவற்றைத் தொட, மூச்சுக் குழலில் அடைபட்ட காற்று நா ஓரங்களின் வழியாக வெளியேறும்பொழுது மருங்கொலிகள் (Laterals) பிறக்கின்றன. மருங்கொலிகள் எல்லாம் பெரும்பாலும் அதிர்வு ஒலிகளே.\n\nஆங்கிலத்தில் ‘l’ என்பது மருங்கொலி. தமிழில் ‘ல்’, ‘ழ்’, ‘ள்’ என்பன மருங்கொலிகள். ‘ழ்’ என்னும் ஒலி தமிழ் மலையாளம் தவிர வேறு எந்த மொழியிலும் இல்லை.\n\nவருடொலி\n\nநாக்கின் நுனி அண்ணத்தின் மேல் நோக்கி வளைந்திருக்கும்பொழுது காற்று மூச்சுக் குழலில் அடைபடுகிறது. பின்னர், நாக்கு அண்பல்லை வருடி வாயின் கீழ்ப்பகுதிக்கு வரும்பொழுது, காத்து நுனி நாக்கிற்கும் அண்பல்லிற்கும் இடையே வெளிப்படும். இந்நிலையில் வெளிப்படுவதே வருடொலி (Flap). இவ்வொலி குரல்வளை மடல்களின் அதிர்வுடனே பிறக்கிறது.\n\nஆங்கிலத்திலுள்ள very, mirror என்ற சொற்களில் வரும் ‘r’ என்பது வருடொலியாகும். தமிழிலுள்ள ‘ர்’ என்னும் ஒலி வருடொலியே.\n\nஆடொலி\n\nநுனிநாக்கு அண்ணத்தில் நடுப்பகுதியை நோக்கி உயர்ந்து வேகமாக அதிரும் பொழுது ஆடொலி (Trill) உண்டாகும். ஆடொலி அதிர்வு ஒலியே.\n\nதமிழிலுள்ள வல்லின ‘றீ’ ஆடொலியாகும். பேச்சுத் தமிழில் பொதுவாக ஆடொலிக்கு மாற்றாக வருடொலியே பயன்பாட்டில் உள்ளது. ஆங்கிலத்தில் ‘r’ என்பது ஆடொலி.\n\nபல மொழிகளில் அரை உயிர்எழுத்துகளும் (Semi vowels) காணப்படுகின்றன. இவை மெய்க்கும் உயிருக்கும் இடைப்பட்ட ஒலியியல்பு உடையன; மெய்யொலிகள் போலச் செயற்படும்; ஆனால், உயிரொலிகளுக்குரிய சில பண்புகளைக் கொண்டிருக்கும்.\n\nஆங்கிலத்தில் w, j என்பனவும் தமிழில் ய, வ என்பனவும் அரைவுயிர்கள். எச்.சி.\n\nதுணை நூல்கள்\n\nAbercrombie, David, Elements of General Phonetics, Edinburgh University Press, 1967.\n\nDavid Crystal, A First Dictionary of Linguistics and Phonetics, Andre Deutsch, London, 1980.\n\nPike, K.L., Phonemics, Anna Arbor, 1946.\n\nSadanand Singh etal., Phonetics - Principles and Practices, University Park Press, Maryland, 1976."}}