{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/f7gme9vf/", "data": {"id": "f7gme9vf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f7gme9vf/", "kind": "article", "headword": "அகச்சீராய்வு", "romanization": "akaccīrāyvu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.727057+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அகச்சீராய்வு என்பது ஒரு நிறுவனத்தின் கணக்குப் பதிவு முறையின் கட்டுப்பாட்டைக் குறிப்பது, நிறுவனம் சிறிய அளவில் செயற்படும்போது, அதன் உரிமையாளர் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே சரிபார்த்துக் கொள்ள முடியும்.", "body_ta": "அகச்சீராய்வு என்பது ஒரு நிறுவனத்தின் கணக்குப் பதிவு முறையின் கட்டுப்பாட்டைக் குறிப்பது, நிறுவனம் சிறிய அளவில் செயற்படும்போது, அதன் உரிமையாளர் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே சரிபார்த்துக் கொள்ள முடியும். நாளடைவில் நிறுவனம் வளர்ச்சி அடைய அதன் நடவடிக்கைகள் பெருகும். பணியாளர் பலர் நியமிக்கப்படுவர். இந்நிலையில் உரிமையாளர் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே கண்காணித்தல் இயலாது. பணியாளர் இச்சூழலைப் பயன்படுத்தி மோசடிச் செயல்களில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். இவ்வாய்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல் பணியாளரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வகையில், நிறுவனத்தின் நடைமுறைகளில் சில ஒழுங்குகள் செய்யப்படுவதுண்டு. பணிகள் யாவும் தவறின்றி நடைபெறவும் பணியாளர் குறிப்பிட்ட பணியைத் திட்டப்படி செய்திடவும் பல செய்ம்முறை விதிகளும், வழிகளும் நடைமுறையில் உண்டு, இவ்வகையான அகக் கட்டுப்பாட்டு முறைகளின் ஒரு பகுதியே அகச் சீராய்வு (Internal check) எனப்படுகிறது.\n\nஅகச் சீராய்வு முறையை ஒருவகை வேலைப் பகிர்வு முறை என்றும் கூறலாம். ஒரு குறிப்பிட்ட பணியை அலுவலர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவை ஒரு அலுவலரும், அடுத்த பிரிவை மற்றொருவரும் கவனித்துக் கொள்வர். அடுத்ததை மூன்றாமவர் கவனிப்பர். இரண்டாம் பிரிவை இரண்டாமவர் கவனிக்க முற்படும் பொழுது, தன்னியக்கமாகவே அவர் தமக்கு முன் பார்த்த அலுவலரின் வேலையில் தவறுகளிருந்தால், அவை திருத்தப்படாமல் தம் வேலையைத் தொடர இயலாது, இந்நிலையில் முதல் அலுவலர் செய்த தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுத் திருத்தப்படுகின்றன. இதைப் போலவே ஒவ்வொரு அலுவலரும், அவர்தம் பணியைச் செய்யும்பொழுதே முந்தியவருடைய பணியில் ஏற்படும் தவறுகளை நீக்குவர். இதற்கேற்ப அலுவகைப் பணி பகுக்கப்படுகிறது.\n\nஅகச் சீராய்வின் நோக்கப்படி தவறுகளையோ, மோசடிகளையோ கண்டுபிடிக்க எவரையும் அமர்த்த வேண்டிய தேவையில்லை. எழுத்தர்கள் தத்தம் வேலைகளைச் செய்யும்பொழுதே மற்றவரின் தவறுகள் கண்டு கொள்ளப்படுகின்றன. இச்சீராய்வுமுறையில் கணக்கு வைப்புமுறை செயற்படுத்தப்படும் போதே அவற்றில் ஏற்படும் தவறுகளும் மோசடிகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒருவர் செய்த வேலையை மற்றவர் திரும்பவும் செய்வதாக இல்லாமல், வேலை செய்யும்போதே சரிபார்க்கப்படுகிறது. இம்முறையில் தவறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் மிகக் குறைவு. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர் ஒன்றுகூடிக் கூட்டாகச் செயல்பட்டாலன்றி மோசடிகள் நடைபெற வாய்ப்பில்லை. இம்முறையில் ஒரு நடவடிக்கையின் பல நிலைகளும் ஒருவராலேயே எழுதப்படுவது தவிர்க்கப்படுகிறது. மூலப் பதிவேடு ஒன்றுக்குப் பொறுப்பான எழுத்தர், பேரேடு எழுதும் வாய்ப்பைப் பெறுவதில்லை, ஆனால் பெரிய நிறுவனங்களில் நேரப் பதிவு, கணக்கு வைத்தல், பணப் பதிவு ஆகிய- வற்றுக்குத் தான் இயங்கி எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், பல குறைகள் நீக்கப்படுகின்றன. இதன் காரணமாக அலுவலர் தவறு அல்லது மோசடி செய்யும் வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. நடவடிக்கைகள் எழுதாமல் விட்டுப்போவது குறைக்கப்படுவதுடன், பணியாளர் திறனும் மேம்படுகிறது. பணம், சரக்குகள் ஆகியவற்றைக் கையாடும் வாய்ப்புகள் குறைக்கப்படுகின்றன. தவறு அல்லது மோசடிகளைச் செய்யும் அலுவலர் எளிதில் அகப்படும் வாய்ப்புகள் மிகுதி. நிறுவனம் மேற்கொண்ட முடிவுகள் செயலாக்கப்படுவதைக் கண்காணிப்பதும் எளிதாகிறது.\n\nஅகச் சீராய்வு முறை பயனுள்ளதாக அமைய, சில சிறப்புக் கூறுகளைப் பெற்றிருக்க வேண்டும். பொறுப்புகள் சீரான முறையில் பணியாளரிடையே பகிர்ந்தளிக்கப்படுவது இன்றியமையாதது, பணியாளர் தம் பொறுப்பினைத் தெளிவாக அறிந்திருத்தல் தேவையானது. அவர் பணிக்கான செயல்முறை, ஆணைகள், கடமைகள் ஆகியன தெளிவுற எழுதி வைக்கப்படவேண்டும். பணியாளரின் பொறுப்புகளுக்குட்பட்ட பணிகளில் நிகழும் தவறுகள், மோசடிகள் ஆகியவற்றிற்குத் தொடர்புடைய பணியாளர் பொறுப்பாவர் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். அலுவலர் எவரும் தொடர்ந்து ஒரு வேலையை நீண்ட காலத்திற்குச் செய்ய அனுமதிக்கக் கூடாது. பணியாளர், ஒரு குறிப்பிட்ட கால ஒழுங்குப்படி ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். பேரேடுகள் எழுதும் பணியில் அமர்த்தப்படுபவர், அப்பேரேட்டை நீண்ட காலத்திற்கு எழுத அனுமதிக்கக் கூடாது. விடுப்பினை எடுக்காமல் தொடர்ந்து பணியாற்றும் அலுவலரை அதனை எடுக்கச் செய்து, அவர்தம் பணியினை மற்ற அலுவலர் மூலம் மதிப்பிட வேண்டும். நிலையற்ற பணியாளரின் பணி கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். வங்கி போன்ற நிறுவனங்களில் மிகை நேர வேலை செய்து, கூடுதல் ஊதியம் பெற மிகுந்த வாய்ப்புகள் உண்டு. ஆகவே மிகை நேர வேலைகளை நன்றாகக் கண்காணிப்பது இன்றியமையாதது.\n\nபண நடவடிக்கைகளில் கையாடல் செய்யும் வாய்ப்புகள் மிகுதி. வரவும் செலவும் கூர்மையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். நிறுவனங்கள் பொதுவாக அன்றாடப் பண வரவுகளை அன்றே வங்கியில் செலுத்தும் முறையினைப் பின்பற்றுவது நலம். சில நிறுவனங்களின் அன்றாடச் சில்லரைச் செலவுகளுக்காக அவ்வப்போது பணம் பெறத் தனியொரு ஊழியர் சில்லரைக் காசாளராக அமர்த்தப்படுவர். அவர் பண நடவடிக்கைகளை முன்பண மீட்பு முறை (Imprest System)யில் வைத்துக் கொள்வது நல்லது. இம்முறையில் மாதத் தொடக்கத்தில் காசாளரிடம் ஐந்நூறு ரூபாய் கொடுக்கப்படுவதாகக் கொண்டு அம்மாதத்தில் அவர் நானூறு ரூபாய் அளவிற்கு மட்டும் செலவிட்டிருந்தால் அச்செலவுக்கான கணக்கை முதன்மைக் காசாளரிடம் காண்பித்து, அதற்கான காசோலை ஒன்றினைப் பெறுவார். அடுத்த மாதத் தொடக்கத்தில் அவரிடம் பழைய தொகை நூறு ரூபாயும், பின்பு பெற்ற நானூறு ரூபாயும் சேர்ந்து மொத்தம் ஐந்நூது ரூபாய் இருக்கும். இம்முறையை அவர் ஒவ்வொரு மாதமும் பின்பற்ற வேண்டும். நிறுவனங்களில் அன்றாடச் செலவுக்கான தொகைகளை அன்றாட வசூல் தொகையிலிருந்து எடுத்துக் கொள்ளும் பழக்க முறையைப் பின்பற்றக் கூடாது. செலவுக்கெனத் தனிக் கணக்குமுறை பின் பற்றப்படவேண்டும்.\n\nசரக்குக் கொன்முதல் விற்பனை போன்ற நேரங்களிலும் சேமிப்புக் கிடங்கிலும், சரக்குக் கையாடல் மற்றும் மோசடிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு, சரக்குத் தொடர்பான சீட்டுகளுக்கு அவை தொடர்பான அனைத்து ஏடுகளிலும் தனித்தனியே பதிவுகள் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, கிடங்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட பண்டம் வெளியே செல்கிறதென்றால் அது குறித்த பதிவுகள், சரக்கறைப் பொறுப்பர் (Store keeper) ஏடுகளிலும் கணக்கர் ஏடுகளிலும் செய்யப்பட வேண்டும். சரக்கு வெளியே செல்லும்போது தக்க அனுமதிச் சீட்டு அளிக்கப்பட வேண்டும். நிறுவனத்திற்குக் கடன் அடிப்படையில் சரக்கு அனுப்பியவர் கணக்குகளும், சரக்கு பெற்றவர் கணக்குகளும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சரிபார்க்கப்படவேண்டும். நிறுவன ஏடுகளில் பதிவு செய்யப்பட்ட கணக்குகளைப் பார்ப்பதோடன்றித் தொடர்புடைய ஏட்டின் கணக்குகளைப் பெறத் தனி ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும். இவ்விரண்டு கணக்குகளையும் ஒப்பிடும்பொழுது, பிழைகள் அல்லது மோசடிகள் ஏதேனும் நடந்திருப்பின் கண்டுபிடிக்க ஏதுவாய் இது அமைகிறது. கொள்முதல், விற்பனை ஆகியவற்றுக்கு அளித்த தள்ளுபடி, வாராக் கடன்கள் பற்றி எழுதப்படும் பதிவுகள் ஆகியவை மிகவும் கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். பெரிய நிறுவனங்கள் “தானியங்கி” இயந்திரங்களைப் பயன்படுத்தும்பொழுது, கூடிய வரையில் தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. தானே இருப்பைச் சமநிலைப்படுத்தும் பேரேடு முறையில் (Self Balancing Ledgers) கணக்குப் பதிவுகள் செய்யப்பட வேண்டும். இதனைச் சரிபார்க்கும் பொறுப்பு ஒரு சிறப்பு அலுவலரிடம் இருக்க வேண்டும் மேலாண்மையினருக்கும், பணியாளருக்கும் தொடர்பில்லாத நிலை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். பணியாளர் குறிப்பிட்ட கால ஒழுங்கின்படி அறிக்கை அனுப்புவது செயலாக்கப்பட வேண்டும்.\n\nஅகச்சீராய்வு முறைமையில் பல நன்மைகள் உண்டு. எப்பொழுதும் அலுவலர் நேர்மையோடு நடக்க உதவுவதுடன் வேலை பகிர்ந்தளிக்கப்படுவதால் குறிப்பிட்ட வேலையை அலுவலர் தொடர்ந்து செய்யவும் அதில் சிறப்புப் பயிற்சியும் திறனும் பெறவும் வாய்ப்புள்ளது. தவறுகள் உடனே கண்டுபிடிக்கப்பட்டுத் திருத்தப்படுவதால், ஆண்டுக் கணக்குகளை விரைவில் கணிக்க இயலுகிறது. தணிக்கையர் எளிதில் தம் தணிக்கையை முடிக்க இயலும். இச்சீராய்வு முறையில் பெரும் மோசடிகள் நடக்க வாய்ப்பில்லை.\n\nபல நன்மைகளைக் கொண்டிருந்தபோதிலும் இச்சீராய்வு முறையைப் பின்பற்றுவதில் சில குறைகளும் உள்ளன. இம்முறையை நிறைவேற்ற நிறுவனத்தின் நடவடிக்கைகள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும். பெரிய அலுவலகங்களில் மட்டுமே நடவடிக்கைகளை அவ்வாறு பிரிக்க முடியும். சிறிய நிறுவனங்களைப் பிரிப்பது சிக்கனமாக அமையாது. மோசடிகள் நடப்பதை ஓரளவுக்குத் தவிர்க்க முடியுமே தவிர, திட்டமிட்ட மோசடிகள் நடப்பதைத் தனிர்க்கும் வாய்ப்புகள் குறைவே. இயல்பாக மூன்று அல்லது நான்கு அலுவலர் கூட்டாக முயற்சி செய்தால் மட்டுமே, மோசடிகள் நடக்க வாய்ப்புகள் உண்டு. நடைமுறையில் பெரிய நிறுவனங்களில் முயற்சி எடுத்து மோசடிகள் செய்வதும், அவை நீண்ட காலங்களுக்குக் கண்டுபிடிக்கப்படாமலிருப்பதும் பொதுவில் காணப்படும் உண்மை, திறமையான அகச் சீராய்வு முறை பின்பற்றப்படும் அலுவலகங்களில், தணிக்கையர் தங்கள் தணிக்கையின்போது அணைத்து நடவடிக்கைகளையும் கூர்ந்து கவனிக்காமல் ஒரு சில நடவடிக்கைகளை மட்டும் சரிபார்த்து மனநிறைவடையும் வாய்ப்புண்டு. அந்நிலையில் பல தவறுகள் கண்டுபிடிக்கப்படாமல் போகலாம்.\n\nஅகச் சீராய்வு முறையை அனைத்து நிறுவனங்களுக்கும் ஒரே சீராக அமைக்க இயலாது. நிறுவனத்தின் அமைப்பிற்கேற்ப அகச் சீராய்வு விதிகள் அமையும். பண நடவடிக்கைகளைப் பொறுத்தமட்டில் அகச் சீராய்வு நடவடிக்கைகள் இன்றியமையாதனவாகக் கருதப்படுகின்றன. நிறுவனத்திற்கு வரும் கடிதங்களை ஒரு பொறுப்புள்ள அலுவலரே பிரிக்க வேண்டும். அஞ்சலில் வரும் காசோலைகள், அஞ்சல் ஆணைகள் முதலியன செலாவணி இல்லை (Not negotiable) என்ற சொற்றொடருடன் குனுக்குக் கோடிட வேண்டும். நாள்தோறும் வரவாகும் பணம், காசோலைகள் ஆகியவை பணப்பதிவு ஏட்டில் பதிவு செய்யப்பட்டு உடனே வங்கியில் செலுத்தப்பட வேண்டும், காசாளர் பேரேட்டிலோ மற்ற முதற் பதிவேட்டிலோ பதிவுகள் செய்ய அனுமதி கூடாது. வாடிக்கையாளர் செலுத்தும்தொகைகளுக்குக் குறுக்குக் கோடிட்ட காசோலைகளை அனுப்ப வேண்டுகோள் விடுக்க வேண்டும். எந்த வரவுக்கும் அதற்கான பணச்சீட்டு (Receipt) உடனே அளிக்கப்பட வேண்டும். பணச்சீட்டுப் புத்தகங்கள் தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும். அனுப்பவேண்டிய தொகைகளையும் காசோலைகள் மூலமே அனுப்ப வேண்டும். சில்லரைப் பணத்திலிருந்து சிறு செலவுகள் செய்யப்பட வேண்டும். அவ்வப்பொழுது கையில் உள்ள பணமும், கணக்குப்படி இருக்கவேண்டிய பணமும் ஒத்திருக்கிறதா என்று சரிபார்த்தல் இன்றியமையாதது. அனுப்பப்படும் தொகைகளுக்குச் சான்றாகப் பற்றுச் சீட்டுகள் (Vouchers) பெற்று அவை முறையாகக் கோப்பிலிடப்பட வேண்டும்.\n\nபணம் வாங்கிக் கொண்டு செய்யும் விற்பனையின் போது விற்பனையர் ஒவ்வொருவருக்கும் தனி விற்பனைக் குறிப்பு ஏடு வழங்கப்பட வேண்டும். பணச்சீட்டு ஒவ்வொன்றுக்கும் மூன்று படிவங்கள் இருத்தல் சிறப்புடையது. விற்பனையர் விற்பனைக் குறிப்பேட்டில் விற்பனை விவரங்கள் எழுதும்போது கரித்தாள் (Carbon papers) வழியாக மேலும் இரண்டு படிகளைத் தயாரிக்க வேண்டும். மூலப்பணச் சீட்டும் முதல் படியும் வாடிக்கையரிடம் கொடுக்கப்படும். வாடிக்கையர் அவற்றைக் காசாளரிடம் கொடுத்துப் பணம் செலுத்துவர். காசாளர் கரித்தாள் படியைத் தம்மிடம் இருத்திக்கொண்டு மூலப் பணச்சீட்டைக் கையெழுத்திட்டு வாடிக்கையரிடம் கொடுப்பர். வாடிக்கையர் மூலப் பணச்சீட்டைச் சரக்கு விற்பனையாளரிடம் காட்டிப் பொருள்களைப் பெற்றுக் கொள்வர். காசாளர் தம்மிடமுள்ள பணச் சீட்டுகளின்படி ஒரு பட்டியல் அமைப்பார். விற்பனையாளர் தம்மிடமுள்ள பணச்சீட்டுகளின்படி ஒரு பட்டியல் அமைப்பார். இரண்டு பட்டியல்களும் ஒப்பிடப்பட்டுப் பணம் வாங்கிக் கொண்டு செய்த விற்பனை எவ்வளவு என்று கணக்கிடப்பட்டுப் பொதுப்பண ஏட்டில் பதிவு செய்யப்படும்.\n\nநிறுவனம், அஞ்சல் வழி மூலம் விற்பனை மேற்கொண்டால், (Value Payable by Post) அதற்கெனத் தனி ஏடு ஒன்று வைத்திருக்க வேண்டும். வாங்குபவரிடமிருந்து முன்பணம் பெறப்பட்டிருந்தால் அது இந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். பொறுப்புள்ள அலுவலர் அடிக்கடி இப்பதிவேட்டை முன்னறிவிப்பின்றிச் சீர்தூக்கவேண்டும். வாங்குபவரிடமிருந்து கடித வழித் தொடர்பு கொண்டு அவர் செலுத்த வேண்டிய தொகை சரியாகக் கணக்கிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அஞ்சல் வழியில் நாள்தோறும் பெறும் பணம், பண ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்படவேண்டும்.\n\nபெரிய நிறுவனங்கள் சிலவற்றில் பயண முகவர்கள் (Career Agents) பலர் அமர்த்தப்பட்டு விற்பனை பெருகும். இந்நிலையில் பயண முகவர்களை வாடிக்கையாளரிடமிருந்து பணம் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிக்கப்பட்டாலும் அத்தொகையிலிருந்து எச்செலவிற்கும் பணம் எடுக்க வழி வகுக்கக்கூடாது. தொகை முழுவதும் உள்ளூர் வங்கியில் அலுவலகக் கணக்கில் கட்டப்பட வேண்டும். வசூல் விவரம் உடனுக்குடன் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அலுவலகம், வாடிக்கையாளரிடம் கடித மூலம் தொடர்பு கொண்டு கணக்கைச் சரிபார்க்க வேண்டும். பயண முகவர்களின் பணியிடம் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும்.\n\nசில்லரைச் செலவினங்கள் ஒரு பகுபடு பணப் பதிவேட்டில் (Analytical Cash Book) பதிவாக வேண்டும். சில்லரைச் செலவிற்காகக் காசாளரிடமிருந்து காசோலைகள் மூலம் வரும் பணத்தைத் தவிர, வேறு எந்த வரவும் அதில் இருக்கக் கூடாது எந்தச் சிறிய செலவிற்கும் சான்றுச்சீட்டுப் பெறவேண்டும். சான்றுச்சீட்டுப் பெற முடியாதபோது ஒரு செலவுச்சீட்டுத் தயார் செய்து ஒரு பொறுப்புள்ள அலுவலரின் கையொப்பம் பெற்றுக் கோப்பிலிட வேண்டும். சில்லரை ரொக்க ஏடு, முன்பண மீட்பு முறையில் எழுதப்பட வேண்டும். அலுவலர் எவரும் சில்லரை ரொக்க ஏட்டின் மூலமாகச் சிறுகடன் பெறும் அனுமதி கூடாது.\n\nமிகுந்த எண்ணிக்கையில் தொழிலாளர் வேலை செய்யும் நிறுவனங்களில் கூலிப் பட்டுவாடா செய்யப்படுவது சிறந்த முறையில் இருத்தல் இன்றியமையாதது. கூலி ஏட்டில் கற்பனைப் பெயர்களை எழுதுவது, ஆவணங்களில் பொய்யான விவரங்கள் தருவது போன்றவற்றால் பணம் கையாடப்பட்டு மோசடி நடக்கும் வாய்ப்புகள் மிகுதி. இவை ஏற்படாத வகையில் சீரான அகச் சீராய்வு முறை பின்பற்றப்பட வேண்டும். தொழிற்சாலையின் நுழைவாயிலில் நேரம் பதியும் கடிகாரங்கள் வைக்கப்படவேண்டும். ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரது பெயர், எண், பிரிவு, கூலி விகிதம் போன்ற செய்திகளடங்கிய அட்டை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் கூலி வழங்கு முறை சில நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. கூலிப் பட்டியல் தயாரிக்கும் ஒவ்வொரு எழுத்தரும் அதில் ஏற்படக்கூடிய தவறுகளுக்குப் பொறுப்பேற்கும் வகையில் கையொப்பமிட வேண்டும். கூலிப் பட்டுவாடா செய்பவர், கூலிப் பட்டியல் தயார் செய்தவராக இருக்கக் கூடாது. பணியாளர் ஊதியம் பிறரிடம் அளிக்கப்படக் கூடாது.\n\nநிறுவனத்தின் சரக்கு அறை பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். அதற்குள் வருபவரோ உள்ளிருந்து வெளியே செல்பவரோ பொறுப்பான அலுவலர் ஒருவரைத் தாண்டிச் செல்லும்படியான ஒழுங்குமுறை இருத்தல் நலம். சரக்குப் பிரிவில் இருக்கும் ஒவ்வொரு சரக்கிற்கும் ஒருதனி எண் குறிக்கப்பட வேண்டும். சரக்குகள் வைத்திருக்கப்படும் தொட்டிகளின் (Bin) வெளிப்புறத்தின் ஒரு அட்டை தொங்கவிடப்பட வேண்டும். இந்த அட்டைகளில், பெற்ற சரக்கின் விவரம், வெளியில் எடுத்த அளவு. கையிருப்பு ஆகிய செய்திகள் குறிக்கப்பட வேண்டும். தொழிற்சாலைப் பிரிவுகளிலிருந்து திருப்பி அனுப்பப்படும் சரக்குகள் சரியான முறையில் கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும். அடிக்கடி சரக்கு இருப்புச் சரிபார்க்கும் வேலையை மேற்கொள்வது நல்லது. இவற்றுக்குப் பொறுப்பான அலுவலர் சரக்குக் கணக்குகளை முன்னறிவிப்பின்றிச் சோதனை செய்வது நல்லது.\n\nபொதுவாக, அகச்சீராய்வு முறையில் முழு நன்மையைப் பெற்றிட நிறுவனத்தின் நடவடிக்கைகள் நுண்ணறிவுடன் பகுக்கப்பட வேண்டும். இவ்வகை நிறுவனங்களில் தணிக்கையர் வேலை மிகவும் எளிதாகிறது. தணிக்கையர் தம்முடைய திறமை, பயிற்சி, மதிப்பீடு, நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்டு தம் பணிகளை நிறைவேற்ற வேண்டும். தணிக்கையர் அகச் சீராய்வு முறையில் குறைபாடுகளைக் கண்டால் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து, அதற்கான பரிந்துரைகளை மேலாண்மையினருக்குத் தெரிவிப்பர், காண்க: அகத்தணிக்கை.\n\nபி.இரா."}}