{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/evvn8bdw/", "data": {"id": "evvn8bdw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/evvn8bdw/", "kind": "article", "headword": "அசித கேச கம்பளி", "romanization": "acita kēca kampaḷi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.035827+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அசித கேச கம்பளி என்பவர் புத்தர் காலத்தில் வாழ்ந்தவர்.", "body_ta": "அசித கேச கம்பளி என்பவர் புத்தர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் சமய நிந்தனையாளர்கள் அறுவருள் ஒருவர். பீடகங்கள், சாமண்ணாபால சுத்தம், திகநிகாயம் போன்ற பௌத்த சமய நூல்கள் இவர் பெயரைக் குறித்துள்ளன. புராண கசியப்பர், மாக்காளி கோசாலர் போன்றவர்களைப் போல் இவரும் ஒருகாலத்தில் வேலைக்காரராக இருந்தவரே. தம் குருநாதரிடமிருந்து தப்பியோடிய இவர் வாழ வசதியற்ற நிலையில் துறவியாக மாறியவர். மானிடரின் முடியிலிருந்து (கேசம்–முடி) தயாரிக்கப் பெற்ற தரங் குறைந்த கம்பளத்தைப் பயன்படுத்தியதால் இவருக்குக் கேச கம்பளி என்ற சிறப்புப் பெயர் வந்தது போலும். ஆடைகளிலேயே வெறுப் பூட்டுவதான இக்கம்பளியை இவர் ஆண்டு முழுதும் எல்லாப் பருவங்களிலும் பயன்படுத்திக் கொண்டார். ஏனைய துறவிகளைப் போன்று இவரும் தலையை மழித்துக் கொண்டார். தீவிரமான சமய நிந்தனையாளரான இவர் வேதங்கள் மற்றும் பிராமணக் கோட்பாடுகளைப் புறக்கணித்து ஒதுக்குவதில் சிறிதும் அச்சப்படாதவர், மறு பிறப்பு, பழி பாவம், மற்றும் சடங்குகளைப் பற்றிய கொள்கை கோட்பாடுகளை மறுத்தவர். உலகம் நால் வகைப் பூதங்களின் சேர்க்கை என்றும், உணர்வுகளும், ஆன்மாவும் பொருள்களின் இரசாயன விளைவேயன்றி வேறொன்றுமில்லை எனவும் கொண்டவர். பாவபுண்ணியக் கோட்பாடுகளை நம்பாதவர். கச்சாயனர் போதித்த இரு பொருளுண்மைக் கோட்பாட்டை எதிர்த்தவர் (பருப்பொருள், உயிர் இருவேறெனக் கொள்ளும் கோட்பாடு). புத்தரும் மகாவீரரும் அசிதரின் தத்துவத்தைச் செயலின்மைக் கோட்பாடெனக் கூறினர். அசாத சத்துரு மன்னர் அசிதரைச் சென்று பார்த்ததாகத் தெரிகிறது. அசிதர் அவருக்கு ஊழிக் காலத்தின் முடிவில் அனைத்தும் அழிந்துவிடும் என்னும் கோட்பாட்டைப் போதித்தார். அசிதர் புத்தரைவிட வயதில் மூத்தவர்"}}