{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/egftms5w/", "data": {"id": "egftms5w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/egftms5w/", "kind": "article", "headword": "நெஞ்சுக் காயங்கள்", "romanization": "neñcuk kāyaṅkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.891371+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இவை பாதிக்கப்பட்ட உறுப்புகளைப் பொறுத்து, மிக எளிய காயங்களாகவோ, சிக்கலான காயங்களாகவோ இருக்கலாம்.", "body_ta": "இவை பாதிக்கப்பட்ட உறுப்புகளைப் பொறுத்து, மிக எளிய காயங்களாகவோ, சிக்கலான காயங்களாகவோ இருக்கலாம். ஓரளவு ஊடுருவியோ, முழுக்க ஊடுருவியோ, காயம் இருக்கலாம். எவ்வளவு எளியதாக இருந்த போதிலும், மார்புக் கூட்டின் உறுப்புகளுக்கும், வயிற்றின் உறுப்புகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா எனத் தெரிந்து கொள்ள வேண்டும். குத்துக் காயங்களோ, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களோ பெருங்கேடு உண்டாக்கா. மார்புக் கூட்டில் இயல்பாக ஃபுளுரா உறையில் குருதி தேங்கும். ஆகவே, தேக்கமடையும் குருதியை அகற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.\n\nவெடி குண்டு வெடித்து, அதிலிருந்து வரும் துணுக்குகளால் மிகவும் சிக்கலான காயங்கள் உண்டாகலாம். இந்நிலையில், மார்புச் சுவரின் சிதைவு மிகையாக இருக்கும். அழுக்கான துணித் துண்டுகளும் உட்செல்லலாம். நுரையீரல் பாதிப்பும், சிதைவும் ஏற்படலாம். மேலும் மீடியாஸ் டைன் உறுப்பு, உதர விதானம், வயிற்று உறுப்பு ஆகியவையும் பாதிக்கப் படலாம்.\n\nபெரும்பான்மையான நோயாளிகளுக்கு அறுவை தேவைப் படுகிறது. இயன்ற வரை, விரைவில் அறுவை செய்ய வேண்டும். உள்ளேயோ, வெளியேயோ கட்டுப் படுத்த முடியாத குருதிப் போக்கு ஏற்பட்டால், மார்புக் கூட்டைத் திறந்து பார்க்க வேண்டும். மூச்சுக் குழல் வழியாக உணர்வகற்றப் பட்டு, போதிய அளவில் மூச்சு விடுவதற்கும் மூச்சுக் குழல் சுரப்புகளை அகற்றவும் ஏற்பாடு செய்யலாம். மார்பின் காயத்தைச் சீர் செய்து, ஒடிந்த விலா எலும்புத் துணுக்குகளை அகற்றி, குருதி வெளிப் பட்டுக் கொண்டிருக்கும் விலா இடைக் குருதி நாளங்களுக்குத் தையலிட்டு, குருதிப் பெருக்கை நிறுத்த வேண்டும். ஃபுளுரா உறைக் குழிவையும் சோதித்துப் பார்த்துத் தேவையிருந்தால், மார்புத் திறப்பு அறுவை நிகழ்த்தலாம். தேங்கிய குருதி, குருதி உறைக் கட்டி, தேவையற்ற பொருள்கள் ஆகியவற்றை நீக்க வேண்டும். தேவையான நுண்ணுயிர் எதிர் மருந்துகள் கொடுக்க வேண்டும். அறுவைக்குப் பின்னர், நுரையீரல்கள் முழுமையாக விரிவடைய, மூச்சுப் பயிற்சிகளைக் கையாள வேண்டும். —அ. கதிரேசன் துணை நூல். A.J.Harding Rains and H.David Ritchie, Bailey & Love's Short Practice of Surgery, Seventeenth Edition, H.K.Lewis & Co. Ltd., London,1977."}}