{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/efpqv4pa/", "data": {"id": "efpqv4pa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/efpqv4pa/", "kind": "article", "headword": "இளம்பெருமானடிகள்", "romanization": "iḷamperumāṉaṭikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:46.173950+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பதினோராந் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவர்.", "body_ta": "பதினோராந் திருமுறையின் ஆசிரியர்களுள் ஒருவர். பெருமானடிகள் என்னும் பெயர் சிவபெருமானை உணர்த்தும் பெயர்களுள் ஒன்று எனக் கொண்டு, திருஞானசம்பந்தர் தம் திருக்கடவூர்த் தேவாரத்தில் குறிப்பிட்டுப் போற்றியுள்ளார். இளம்பெருமானடிகள் என்னும் பெயர் முருகப் பெருமானுக்குரிய பெயர்களுள் ஒன்று என்றும், அப்பெயர் பின்னர் மக்களுக்கும் இட்டு வழங்கப்பட்டதென்றும் கருதப்படுகிறது. இவர் வரலாற்றைப் பற்றிய பிற செய்திகள் ஒன்றும் அறியக் கூடவில்லை. இவர் பதினோராந் திருமுறையில் ‘சிவபெருமான் திருமும்மணிக் கோவை’ என்னும் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் வெண்காட்டடிகள், அதிரா அடிகள் ஆகியோர் நூல்களுக்கு முன்னே இத்திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளதால், இவரது காலம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் இறுதியும், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமுமாகும் என்று கொள்வது பொருந்தும். இத்திருமுறையின் இருபத்து நான்காம் பிரபந்தமாக அமையும் இவரது நூல் அகவல், வெண்பா, கட்டளைக் கலித்துறை ஆகிய பாக்கள் 30 கொண்டு அமைந்துள்ளது. இதில் அகத்துறை சார்ந்த பாடல்களும் உள்ளன. இதன் பாடலை வீரசோழிய உரையாசிரியர் தம் உரையுள் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்."}}