{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/edum6k2w/", "data": {"id": "edum6k2w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/edum6k2w/", "kind": "article", "headword": "உயிராற்றல்", "romanization": "uyirāṟṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:52.301937+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்தியத் தத்துவ தரிசனங்களையும் மேல்நாட்டுத் தத்துவ தரிசனங்களையும் ஆய்ந்து நோக்கும்போது உயிராற்றலைப் பற்றி அவை கூறும் கருத்துகள் தெளிலானவை.", "body_ta": "இந்தியத் தத்துவ தரிசனங்களையும் மேல்நாட்டுத் தத்துவ தரிசனங்களையும் ஆய்ந்து நோக்கும்போது உயிராற்றலைப் பற்றி அவை கூறும் கருத்துகள் தெளிலானவை. உள்ளுணர்வைப் பற்றியும் உயிராற்றலைப் பற்றியும் என்றி பெர்க்சோன் (Henry Bergson) என்ற மேலை நாட்டறிஞர் நன்கு விளக்கியிருக்கிறார். உள்ளுணர்வு இல்லாத தனித் தன்மையற்ற சடப் பரப்பில்தான் அளவையியலுக்கும் அறிவியலுக்கும் மதிப்புண்டு. உயிராற்றல், உணர்வுநிலை முதலியவற்றை அறிவியல் முறையிலும் அளவையியல் முறையிலும், கணக்கியல் முறையிலும் நோக்க முடியாது என்று கூறுகிறார் என்றி பெர்க்சோன். கவிஞனுடைய படைக்கும் திறனாற்றலையொத்த ஒரு உந்துவிசை பிரபஞ்சத்தில் உள்ளது. அதுதான் உயிராற்றல் எனப்படும். அதனை அறிவியல் அறிவாலோ இயற்பியல் அறிவாலோ அளவையியல் அறிவாலோ மதிப்பிட முடியாது. இதனைச் சீரிய ஒத்துணர்வால்தான் மதிப்பிட முடியும். உள்ளுணர்வு என்பது இயல்பூக்கத்தைப் போன்றது. அறிவியலையும் அறிவாற்றலையும் விட உள்ளுணர்வு உயிறாற்றலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. உண்மைத் தன்மையுள்ள உயிராற்றலையும் உணர்வு நிலையையும் உள்ளுணர்வால் மட்டுமே அறிய முடியும். மெய்ப்பொருளியலால் மட்டுமே அறிவுத் திறத்தையும் உள்ளுணர்வையும் மதிப்பிட முடியும். உணர்வு நிலை உயிருள்ள எல்லாப் பொருள்களிலேயும் உள்ளது. தன்னுடைய செயற்பாட்டிற்காகப் பொருள்களைப் பயன்படுத்திக் கொள்ளும் உணர்வு நிலைதான் உயிராற்றல் ஆகும். பொருள்களின் (Matter) நெகிழ்வுத் தன்மைகளை உயிராற்றல் தனது தனி உரிமைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது. உடம்பில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள உள்ளார்ந்த ஆற்றலை உயிராற்றல் தனது துடிப்பின் மூலம் தூண்டிவிட்டு, கன்னிச்சையான இயக்கங்களைச் செயற்படுத்துகின்றது. தொடர்ந்து புதுமைகளை உருவாக்குகின்ற செயற்பாட்டிற்குத்தான் உணர்வு நிலைத் திரள் என்பது பெயர். இந்த உலகத்திற்கு உருக்கொடுத்து அமைவிக்கும் பொருளும் இந்தப் பொருளைப் பயன்படுத்- திக் கொள்ளும் உணர்வு நிலையும் தங்களைத் தாங்களே விளக்கிக் கொள்ள முடியாதவை. இவை இரண்டையும் ஆட்டுவிக்கும் மூலகாரணமான அந்தச் சக்தியின் (உயிராற்றலின்) தோற்றுவிக்கும் திறனால் தான் பரிணாமம் இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. முழுமையை மெய்யுருவாக்கிக் காண முடியாவிட்டாலும், உயிராற்றலை மனிதனிடத்தில் மட்டுந்தான் தெளிவாகக் காணமுடிகிறது. பொருள்களை ஒழுங்குபடுத்த முற்படும்போதும், தன்னுரிமைக்காகப் பொருளை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனையும்போதும் உணர்வுநிலை தன்னைத் தானே சிக்க வைத்துக்கொள்கிறது. உயிராற்றல் குறுகிய மனப்பான்மையுள்ள எந்த ஒரு பழக்கத்தையும் எதிர்க்கிறது. மனிதனுடைய முழுமைத் தன்மை வாய்ந்த ஆளுமையிலிருந்து அவனுடைய செயல்முறைகள் வெளிப்படும்பொழுது, அவன் சுதந்திரமாக இருக்கிறான். இந்தப் பக்குவப்பட்ட நிலை மனித வாழ்க்கையில் அமைவது அரிது.\n\nஉயிராற்றலுக்குப் பொருள் தடையாகவும் தூண்டுதலாகவும் அமைகிறது. பொருள், உயிராற்றலை உணர்வதற்குக் காரணமாகி, அந்த ஆற்றலைத் தீவிரப்படுத்துவதற்கும் வகை செய்கிறது. மனித வாழ்வின் முடிவான உரிமைக்காப்பு விளக்கமே புதுமையைப் படைத்தலாகும். புறத்தேயிருந்து பெறப்படாத ஆக்கக் கூறுகளால் மனித ஆளுமையைத் தொடர்ந்து வளப்படுத்துதல், அதாவது, தன்னுள்ளேயிருந்து அதனைத் தோற்றுவித்துக் கொள்ளுதல் உயிராற்றலின் முக்கிய பணியாகும். உணர்வு நிலையே உயிராற்றலின் முக்கிய பண்பாகும். உணர்வு நிலை இறந்தகால நிகழ்ச்சிகள் எவற்றையும் இழப்பதில்லை. அந்த ஆளுமையின் அனைத்து வாழ்க்கை நிகழ்ச்சிகளும் பிரிக்க முடியாத விதத்தில் தொடர்ந்து நினைவில் அமையக் காரணமாய் இருப்பது உயிராற்றலாகும். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைக்குப் பின்னாலும் இந்த உணர்வுநிலை தொடருமோ என்று எண்ணும் விதத்தில் உயிராற்றல் அதனைச் செயற்படுத்துகின்றது. எல்.மு.\n\nதுணை நூல்கள்\n\nFrank Thilly, A History of Philosophy, Central Book Depot, Allahabad, 1965.\n\nChevahir Jacquer, Henri Bergron, London, 1928.\n\nLindray, A.D., The Philasophy of Henri Bergron, London, 1911.\n\nRussell, Bertrand, The Philosophy of Bergron, London, 1914."}}