{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ecc2fwmp/", "data": {"id": "ecc2fwmp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ecc2fwmp/", "kind": "article", "headword": "அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள்", "romanization": "aṭṭavaṇaippaṭuttappaṭṭa vaṅkikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.637682+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இந்திய வங்கிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் (Scheduled Banks), அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகள் (Non-Scheduled Banks) என இருவகைப்படும்.", "body_ta": "இந்திய வங்கிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் (Scheduled Banks), அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகள் (Non-Scheduled Banks) என இருவகைப்படும். இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டத்தின் (Reserve Bank of India Act) இரண்டாம் பின்னிணைப்புப் பட்டியலில் ஒரு வங்கியின் பெயர் சேர்க்கப்படுமாயின், அவ்வங்கி அட்டவணைப்பட்ட வங்கி என்னும் தகுதியைப் பெறும். மற்ற வங்கிகள் யாவும் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளாகும். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் மைய இருப்பு வங்கியிடமிருந்து பல சலுகைகளைப் பெற முடியும். குறிப்பாக அவை மைய இருப்பு வங்கியிடமிருந்து கடன் வசதியைப் பெறக்கூடிய தகுதியை அடைகின்றன. அதற்கேற்பச் சில பொறுப்புகளை ஏற்கும் கடமையும் அவ்வங்கிகளுக்கு ஏற்படுகிறது. இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டத்தின் 42–ஆம் பிரிவு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கி என்னும் தகுதியைப் பெறுவதற்கான முறைப்பாட்டினை விளக்குகிறது. எந்த ஒரு வங்கியும் அதற்கான ஒரு விண்ணப்பத்தை இந்திய மைய இருப்பு வங்கியிடம் தரலாம். அதற்கான வரை முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\n\n:: விண்ணப்பிக்கும் வங்கிக்கு உரூபாய் ஐந்து லட்சத்திற்குக் குறையாத அளவில், செலுத்தப்பட்ட மூலதனமும் காப்பும் (Paid up Capital & Reserve) இருத்தல் வேண்டும். :: வங்கியின் நடவடிக்கைகள், அதன் வைப்பாளர் (Depositor) நன்மைக்கு ஊறு நேரா வண்ணம் நடத்தப்படுகின்றன என்று மைய இருப்பு வங்கி தெளிவுற அறிந்து கொள்ளுதல் வேண்டும். :: வங்கி 1953–ஆம் ஆண்டு இந்திய நிறுவனச் சட்டத்தின்கீழ் விளக்கப்பட்டிருக்கும் வகையிலுள்ள ஒரு நிறுவனமாகவோ ஒரு கழகமாகவோ (Corporation) அயல் நாடுகளில் நாட்டின் நடைமுறைச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவோ இருத்தல் வேண்டும்.\n\nமேற்கூறிய வரையறைகள் விண்ணப்பித்த வங்கிக்குப் பொருந்துகின்றனவா என்று அவ்வங்கியின் ஆவணங்களைச் சோதித்து அறிவதன் மூலம் அவ்வங்கியின் பெயரை இரண்டாம் பின்னிணைப்பில் சேர்த்துக் கொள்ள இந்திய மையஇருப்பு வங்கி ஆணை பிறப்பிக்கும். இதற்கு அவ்வங்கியின் பெயரை அட்டவணையிலிருந்து நீக்கிவிடுவதற்கான உரிமையும் உண்டு. அட்டவணைப்படுத்தப்படும். தகுதியைப் பெறும் உரிமை 1966–ஆம் ஆண்டுவரை வணிக வங்கிகளுக்கு மட்டுமே இருந்து வந்தது. பின்னர் அவ்வூரிமை மாநிலக் கூட்டுறவு வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகுதியைப் பெற அவை முன் குறிப்பிட்டுள்ள வரையறைகளில் முதலிரண்டைப் பெற்றிருத்தல் வேண்டும். வட்டார ஊரக வங்கிகள் சட்டத்தின் (Regional Rural Banks Act) படி நிறுவப்படும் எல்லா வங்கிகளும் இரண்டாம் பின்னிணைப்பில் சேர்க்கப்பட்டு, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்குரிய தகுதியைப் பெறுகின்றன. புதிய சட்டங்களின்படி, இப்போது தோற்றுவிக்கப்பட்டிருக்கும் வேளாண்மை, ஊரக முன்னேற்றத்திற்கான தேசிய வங்கிக்கு (National Bank for Agricultural and Rural Development), ஒரு மாநிலக் கூட்டுறவு வங்கியையோ ஒரு வட்டார ஊரக வங்கியையோ இரண்டாம் பின்னிணைப்பில் சேர்க்கவும் நீக்கவும் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவ்வகை வங்கிகளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பின்னிணைப்பிற்கான வரையறைகள் இனிக் கட்டுப்படுத்தாது.\n\nபெறும் பயன்கள்\n\nஒரு வங்கி அட்டவணைப்படுத்தப்பட்டுவிடின் அதற்கு மைய இருப்பு வங்கியிட-\n\nமிருந்து இரண்டு அடிப்படை நன்மைகளைப் பெறும் உரிமை உண்டு. ஒன்று இவ்வங்கிகள் மட்டுமே அயற்செலாவணி வசதிக்குரிய உரிமம் பெற முடியும், மற்றொன்று, மைய இருப்பு வங்கிச் சட்டம் 17–ஆம் பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள கடனுதவிகளைப் பெற முடியும். அக்கடனுதவிகள் வருமாறு;\n\n1970–ஆம் ஆண்டு, தொடங்கப்பட்ட உண்டியல் மறு கழிவுத் திட்டத்தின் (Bill Rediscounting Scheme) கீழ், மறு கழிவு உண்டியல்களையோ கடனுறுதிச் சீட்டுகளையோ மைய இருப்பு வங்கியிடம் மறு கழிவு செய்து கொள்ளலாம். அவை 90 நாள்களுக்கு மேற்படாமலும் இரண்டு மதிப்பு வாய்ந்த கையொப்பங்களைப் பெற்றவைகளாகவும் இருத்தல் இன்றியமையாதது. அவற்றுள் ஒரு கையொப்பமாவது அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கியினுடையதாக இருத்தல் வேண்டும்.\n\nவேளாண்மை நடவடிக்கைகளுக்கோ வேளாண்மைப் பொருள்களைச் சந்தையில் விற்பதற்கோ கடனுதவியை மைய இருப்பு வங்கி தரலாம். இதற்கான காலக் கெடு 150 நாள்கள்.\n\nஅரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகளின் பேரில் 90 நாள்களுக்கு மிகாத கடனுதவி பெற இயலும்.\n\nஅயல்நாட்டு வாணிகத்திற்காக எழுதப்பட்ட உண்டியல் மாற்றுக் கடனுதவி, அவ்வாறான உண்டியல் மாற்றுச் சீட்டுகளின் மேலிடப்பட்ட கையொப்பங்களில் ஒன்று அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கியினுடையதாக இருந்தல் வேண்டும். அச்சீட்டுகளின் மேல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 180 நாள்களுக்கும் மற்ற நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு 90 நாள்களுக்கும் கடனுதவி வழங்கப்படும்.\n\nஏற்றுமதிக்கான உண்டியல் மாற்றுக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 180 நாள்களுக்கு மேற்படாமல் ஏற்றுமதிக்கு முன்னதாகவே கடனுதவி (Pre-Shipment Scheme) உண்டு.\n\nவாணிகம், வேளாண்மை நடவடிக்கைகள், விளை பொருள் விற்பனை ஆகியவற்றிற்கு அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கியின் கையொப்பமிடப்பட்ட கடனுறுதிச் சீட்டின் மேல் 180 நாள்களுக்கு மேற்படாத அளவிற்குக் கடனுதவி உண்டு. ஆனால், கடனைப் பெறும் வங்கி, கடனுறுதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நோக்கத்திற்காகக் கடனுதவி பெறப்படுகிறது என்ற உறுதியை அளித்திட வேண்டும்.\n\nபழைய (1952) மற்றும் புதிய (1970) உண்டியல் அங்காடித் திட்டத்தின் (Bill Market Scheme) கீழ்க் கடனுதவி வழங்கப்படும்.\n\nஅயற் செலாவணி வசதிக்கான கடனுதவி 1978-ஆம் ஆண்டிலிருந்து அளிக்கப்படுகிறது.\n\nஇச்சட்டப் பிரிவின்கீழ் அயற் செலாவணியையே கடனாகப் பெற்றுக் கொள்ளலாம். இது எந்திரக் கருவிகளை இறக்குமதி செய்துகொள்வதற்குப் பயன்படும் வகையில் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.\n\nபொறுப்புகள்\n\nமேற்கூறிய கடனுதவிகளைப் பெறும் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்குச் சில பொறுப்புகளையும் சட்டம் வகுத்துள்ளது. இந்திய மைய இருப்பு வங்கிச் சட்டப் பிரிவு 42(1) இன் கீழ் அவ்வங்கிகளுக்கு இரண்டு பொறுப்புகள் உள்ளன. ஒன்று, அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் தங்களின் கேட்பு வைப்புகள் (Demand Deposits) கால வைப்புகள் (Time Deposits) ஆகியவற்றின் மொத்தத் தொகையில் மூன்று விழுக்காடு பணமாக மைய இருப்பு வங்கியிடம் காப்பீடு செய்ய வேண்டும். இதனை 15 விழுக்காடுவரை உயர்த்துவதற்கு மைய இருப்பு வங்கிக்கு உரிமையுண்டு. 1956–ஆம் ஆண்டிலிருந்து வங்கிகள் ஒரு குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு பெறும் மிகைப்படியான வைப்புகள் மீது கூடுதலான பண இருப்பினைத் (Cash reserve) தன்னிடம் வைக்கும்படி மைய இருப்பு வங்கி ஆணையிடலாம். இவ்வகைக் கட்டுப்பாடுகள் யாவும் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளுக்கும் பொருந்தும். ஆயினும், அவை தங்கள் பண இருப்பினை எந்த வங்கியிலும் வைத்துக் கொள்ளலாம். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் தங்கள் பண இருப்பினை மைய இருப்பு வங்கியில் மட்டுமே வைத்திருக்கவேண்டும். மேலும், அவ்வப்போதைய நடவடிக்கைகளைக் குறித்த, வார இருப்பு நிலைக் குறிப்பொன்றை வாரத்தின் வெள்ளிக்கிழமை வரை முடித்து மைய இருப்பு வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் அடிப்படையில் அதன் மொத்த இருப்புநிலை அறிக்கை ஒன்றை மைய இருப்பு வங்கி வெளியிடும். அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளும் தங்களின் மொத்த இருப்புநிலைக் குறிப்பை மாதந்தோறும் அனுப்பி வைக்க வேண்டும்.\n\nபாரத மாநில வங்கி உள்ளிட்ட நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள், தனியார் வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள், வட்டார ஊரக வங்கிகள் ஆகியவை அட்டவணைப்படுத்தப்பட்டவையாகும். இவற்றுள் தனியார் துறை வங்கிகள் சில அட்டவணைப்படுத்தப்படாதனவாகும். 1982-ஆம் ஆண்டு சூன் 30 ஆம் நாள் வரை இந்தியாவில் 215 அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் இயங்கி வருகின்றன. இவற்றுள் 28 நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், 18 அயல்நாட்டு வங்கிகள், 34 தனியார் துறை வங்கிகள், 14 மாநிலக் கூட்டுறவு வங்கிகள், 121 வட்டார ஊரக வங்கிகள் ஆகும். அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை கடந்த 22 ஆண்டுகளில் பெருவாரியாகப் பெருகியிருக்கிறது. 1960–ஆம் ஆண்டின் இறுதியில் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் எண்ணிக்கை 335 ஆக இருந்தது. 1982 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 4 மட்டுமே. இதன் விளைவாக அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் மொத்த வைப்புக் கணக்கு உரூபாய் 10 கோடியாகக் குறைந்துள்ளது. இக்கணக்கை அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகளின் மொத்த வைப்புத்தொகையான உரூபாய் 43,432 கோடியுடன் ஒப்பிட்டு நோக்கும்போது, இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்படாத வங்கிகளின் பங்கு மிகவும் சிறிதே என்பது புலப்படும்.\n\nஅட்டவணைப்படுத்தப்படுதல் என்பது, வங்கிகளின் சிறப்புத் தகுதியாகக் கருதப்பட்டு வந்தது. இவ்வங்கிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொண்ட காலமுமிருந்தது. ஏறத்தாழ எல்லா வங்கிகளும் அட்டவணைப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில் இத்தகுதியின் தனிப்பட்ட சிறப்புப் பெரிதும் குறைந்துவிட்டது. கே.கோ."}}