{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eb5sa8dd/", "data": {"id": "eb5sa8dd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eb5sa8dd/", "kind": "article", "headword": "உசுமானி, முகமது அதவுல் கனி", "romanization": "ucumāṉi, mukamatu atavul kaṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.233538+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பங்களாதேசத்தில் இராணுவ தளபதியாக இருந்தவர்.", "body_ta": "பங்களாதேசத்தில் இராணுவ தளபதியாக இருந்தவர். இவர் 1919–ஆம் ஆண்டில் வங்காளத்- திலிருக்கும் சில்கட்டு (Sylhet) என்னும் ஊரில் பிறந்தார். உசுமானி (Oxmany) சேக் முசிபுர் இரகுமான் (Sheikh Mujibur Rahman) என்பாரைப் பின்பற்றியவர். பங்களாதேசத்தின் விடுதலைக்காக 1971–ஆம் ஆண்டு மேற்குப் பாகிசுத்தானை எதிர்த்து நடைபெற்ற போரின் போது இவர் பங்களாதேசப் படைகளின் தலைவராயிருந்தார். இரண்டாம் உலகப் போரின்போது இவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்தார். தம் 23–ஆம் வயதில் இவர் இராணுவத்தில் மேசர் (Major) என்னும் உயர்பதவியைப் பெற்றிருந்தார். இந்தியப் பிரிவினையின்போது 1947–இல் இவர் பாகிசுத்தான் இராணுவத்தில் சேர்ந்தார். பங்களாதேச அரசியல் கட்சிகளுள் ஒன்றான அவாமிலீகு (Awami League) 1970–ஆம் ஆண்டில் கிழக்குப் பாகிசுத்தான் தேர்தலில் வெற்றிபெற்ற போது, இவர் பங்களாதேசக் கொரில்லாப் (Guerrilla) படைகளின் தலைவராகப் பணியாற்றினார். பங்களாதேசம் விடுதலை பெற்றபோது அந்நாட்டுப் படைகளின் தலைமைத் தளபதியானார்.\n\nஉசுமானி படைத்தளபதி பதவியைத் துறந்து விட்டு 1973–இல் தேர்தலில் வெற்றிபெற்றுப் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பெற்றார். சேக்முசுபுர் இரகுமான் 1975–இல் கொலையுண்ட பின்னர். உசுமானி பாதுகாப்புத்துறை அறிவுரையாளர் (Defence Adviser) ஆனார். பின்னர், இவர் தேசிய மக்கள் கட்சியை (National People's Party) நிறுவினார். இவர் இருமுறை குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோற்றார். இவர் பாராளுமன்ற ஆட்சியில் முழு நம்பிக்கை கொண்டவர். பங்களாதேசத்தின் படைத் தலைவராயிருந்த உசேன் முகமது எர்சாத்து (Hussain Muhammad Ershad) என்பாருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் இவர் பதவியைத் துறந்தார். இவர் 16–2–1984–இல் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான இலண்டன் மாநகரில் காலமானார்."}}