{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eb32ubke/", "data": {"id": "eb32ubke", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eb32ubke/", "kind": "article", "headword": "சீ", "romanization": "cī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:55.303159+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சீசியம்", "body_ta": "சீசியம்\n\nஇது தனிம மீள் வரிசையில் காரத் தொகுதியான IA தொகுதியில் ரூபிடியத்திற்கு அடுத்து அமைந்துள்ளது. இதன் அணு எண் 55; அணு எடை 132.905. குறியீடு C. சீசியம் (cesium) கார உலோகங்களிலேயே (ஃபிரான்சியத்தைக் தவிர) எடை மிகுந்ததாகும். முதன் முதலில் இது 1860ஆம் ஆண்டில் நிரல் வழிப் பகுப்பாய்வு (spectro analysis) மூலம் கண்டறியப் பட்டது. 1881ஆம் ஆண்டில் மின்னாற்பகுத்தல் முறையில் பிரித்தெடுக்கப்பட்டது. மென்மையான, இலேசான, குறைந்த உருகு நிலை கொண்ட உலோகமான சீசியம் அதிக நேர்மின் தன்மையும், காரங்களிலேயே அதிக வினை புரியும் தனமையும் கொண்டது. புவியில் இதன் மலினம் குறைவாக இருப்பதாலும், இதன் விலை அதிகமாக இருப்பதாலும், இதன் பண்புகளைப் பற்றி மிகுதியாக அறிய முடியவில்லை. ஆனால், 195அம் ஆண்டில், இது லித்தியம் வேதிப் பொருள்கள் தயாரிப்பின் போது, துணைப் பொருளாகக் கிடைத்தது.\n\nபொதுப் பண்புகள். இது தூய்மையான நிலையில், வெள்ளியைப் போன்று பளபளப்பானது. பிற அழுக்குகள் கலந்திருக்கும் போது, மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது. பளப்பளப்பாக இருந்தாலும், காற்றுப் பட்டவுடன் ஒளி மங்கிக் காணப்படுகிறது. ஏனைய கார உலோகங்களைப் போல், சீசியமும் பெட்ரோலியத்திலோ, நாஃப்தாலிலோ வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் இயற்பியல் பண்புகள் பக்கம் 380இல் கொடுக்கப்பட்டுள்ளன.\n\nஇருப்பிடம். சீசியம், புவியின் மேல் தோட்டில் அதிகம் கிடைக்காத (பத்து இலட்சத்தில் 7 பங்கே காணப்படும்) தனிமமாகும். கடல் நீரில் ஏறக் குறைய 0.002 ppm அளவே உள்ளது. குறைந்த அளவு தாவர, விலங்கின உயிர்களிலும் இது காணப்படுகிறது. லித்தியம், ருபீடியத்தைப் போல் சீசியமும் கலவையாகவே கிடைக்கிறது. சோடியம், பொட்டாசியம் உலோகங்களைப் போல் எளிய ஹாலைடுகளாகக் கிடைப்பதில்லை. இதன் முக்கிய கனிமம் பொல்லூசைட் (2Cs₂O.2Al₂O₃.9SiO₂.H₂O). இது தென் ஆஃப்ரிக்காவிலும், எல்பா தீவிலும் கிடைக்கிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பிரித்தெடுத்தல். சீசியம் உலோகம் தொழில் முறையில் தயாரிக்கப்படுவதில்லை. லிப்பிடோலைட் பொடி (லித்தியம் கனிமம்) சம அளவு ஃபுளுவோஸ்பாருடன் கலந்து, அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த்துக் காரீய அல்லது பிளாட்டினத் தட்டில் இட்டுக் கலக்கப்படுகிறது. சிலிக்கான் ஃபுளுரைடு ஆவி முழுதுமாக வெளியேறிய பின், அக்கலவையை மணல் தட்டின் மேல் வைத்து, இது இறுகும் வரை சூடு படுத்தப்படும். பின்னர், இது சுடுநீரால் வடிக்கப்பட்டு இறுக்- கப்படும். கால்சியம் சல்ஃபேட் வீழ் படிவு வடிகட்டிப் பிரிக்கப்படுகிறது. எஞ்சிய நீர்மத்துடன் (filtrate) அம்மோனியம் படிகாரம் சேர்க்கப்பட்டுச். சில மணி நேரம் ஒதுக்கி வைக்கப்படும். இது பொட்டாசியம், ருபீடியம், சீசியம் படிகாரங்களையும், லித்தியம் உப்புகளையும் தருகிறது. இவை நீரில் கரைக்கப்பட்டு, தொடர்ச்சியாகப் பொட்டாசியம், லித்தியம் உப்புகள் இல்லாத வரை படிகமாக்கலுக்கு உட்படுத்தப்படும்.\n\n400 மி.மீ.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வேதிப் பண்புகள். இது ஆக்சிஜனுடன் தீவிரமாக வினை புரிந்து ரூபீடியம், பொட்டாசியம் போல் கலவை ஆக்சைடுகளைக் கொடுக்கிறது. குளிர்ந்த வெப்ப நிலையில், ஆக்சிஜனேற்றத்திற்குத் தேவையான வெப்பமும், இவ்வுலோகத்தை உருக்கப் போதுமானதாகும். சீசியம் நைட்ரஜனுடன் வினைப்படுவதில்லை. ஆனால், உயர் வெப்ப நிலையில் வினைப்பட்டு, ஓரளவு நிலைத்த ஹைட்ரைடுகளைக் கொடுக்கிறது. இது நீருடனும், உலர்பனியுடனும் மிகக் குறைந்த வெப்பத்திலும் (-116°C) தீவிரமாக வினை புரிகிறது. கார்பனுடன் இதன் வினை மிகுதியாக ஆராயப்படவில்லை. சீசியமும், அசெட்டிலீனும் வினை புரிய அசெட்டிலைடு கிடைக்கிறது, ஹாலோஜன்களுடன் இது வன்மையுடன் வினை புரிகிறது. ஏனைய கார உலோகங்களை விட இது நிலைத்த பாலிஹாலைடுகளைத் தருகிறது. எ-டு: CsI₃.\n\nஅம்மோனியாவுடன் வினை புரிந்து, சீசியம் அமைடையும், கார்பன் மோனோக்சைடுடன் குளிர்ந்த நிலையில் வினை புரிந்து, படிகச் சேர்மத்தையும் கொடுக்கிறது. சீசியம், ஏனைய கார உலோகங்களைப் போலவே, கரிமச் சேர்மங்களுடன் வினை புரிகிறது. சான்றாக, எத்திலீனுடன் சீசியம் வினைப்பட்டு, C₂H₄Cs₂ என்ற பழுப்பு நிறத் தண்மம் கிடைக்கிறது. ஏனைய கார உலோகங்கள் ஈரின்களுடனேயே வினை புரிகின்றன.\n\nபயன்கள். இது ஒளி மின்கலம் (photoelectric cell), நிரல் ஆய்வளவி (spectrographic instrument), இராணுவ அகச் சிவப்பு விளக்கு மற்றும் பல ஒளியியல் அளவிகளிலும் பயன்படுகிறது. சீசியம் சேர்மங்கள் கண்ணாடிப் பீங்கான் தயாரிப்பிலும், கார்பன் டை ஆக்சைடு தயாரிப்பிலும் தொழிலகங்களில் உறிஞ்சியாகவும் (absorbents) பயன்படும். —த. தெய்வீகன் —ஆர். சீனிவாசன்\n\nசீசேரியன் அறுவை மருத்துவம்\n\nதற்கால மருத்துவத்தில் குறிப்பிடத் தக்கது தாயையும், சேயையும் பிரித்தெடுக்கும் சீசேரியன் அறுவையாகும், இம்மருத்துவத்தின் நோக்கம், தாயையும், சேயையும் உயிருக்குக் கேடு வாரா வண்ணமும், எவ்வகைப் பாதிப்பும் இல்லாமலும், பிரித்து எடுப்பதேயாகும்.\n\nசீசேரியன் அறுவை முறை கிமு. 100ஆம் ஆண்டிலிருந்து செயல் படுத்தப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் நூமா பாம்ப்பியஸ் என்னும் ரோமாபுரி மன்னர், குழந்தைகள் சரியான நேரத்தில் பிறக்காமல், , இறக்கும் நிலையில் உள்ள தாய்களில் அறுவை மருத்துவம் செய்து மகவை அகற்றியதாகத் தெரிகிறது. ஜுலியஸ் சீசர் இந்த அறுவை வாயிலாகவே பிறந்தவர் என்றும், இதனால், இவர் பெயராலேயே சீசேரியன் அறுவை எனப்படுகிறது என்றும் கருதுவர். சீசேரியன் என்பது அறுப்பது எனப் பொருள்படும் சிடேர் என்னும் லத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது. முதல் சீசேரியன் அறுவை 1501 ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டில் செய்யப்பட்டது. அறுவை மருத்துவ முறைகள் பழங்காலத்தில் இருந்ததை விடத் தற்போது மிகவும் மேம்பாடு அடைந்துள்ளன.\n\nசீசேரியன் அறுவையின் இன்றியமையாமை. குழந்தையின் தலை பெரியதாக இருந்தாலோ, தாயின் பிறப்புறுப்புச் சிறியதாக இருந்தாலோ, குழந்தை பிறக்கும் வழியில் சிறிய தடங்கள் இருந்தாலோ, குழந்தைக்கு இடம் போதா நிலை ஏற்படும். இந்நிலையில் சீசேரியன் அறுவையே மிகச் சிறந்தது. சில வேளைகளில் பேறு காலத்தில் தாயின் உடல் நிலை ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், குழந்தை பிறப்பதில் கடினம் இருக்கும். மேலும், கருப்பை சரியாகச் சுருங்காமல் இருந்து, மகப் பேறில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமையாலும், மகப் பேற்றிற்கு முன்பே பனிக் குடம் உடைந்து விடுவதாலும், தாயையும், சேயையும் நோய் நுண்ணுயிரிகள் எளிதாகத் தாக்க வாய்ப்புண்டு. இதனின்று, தாயையும், சேயையும் காப்பாற்ற, சீசேரியன் அறுவையே சிறந்தது.\n\nபேறு காலத்தில், குழந்தையின் கொடி நழுவுதல், கொடி கழுத்தைச் சுற்றிக் கொண்டு குழந்தைக்கு ஆபத்து விளைவித்தல், கருப்பையில் குழந்தை சரியான நிலையில் இல்லாமல், குறுக்காகவோ, மாறுபாடாகவோ இருத்தல் ஆகிய நிலைகளிலும் அறுவை மருத்துவம் சிறந்தது.\n\nசூலடைவதற்கு முன், தாய்க்குக் கருப்பையில் வேறு நோய்க்காக அறுவை மருத்துவம் ஆகியிருந்தாலோ, வயதான காலத்தில் கருத்தரித்தாலோ, பேறு காலத்தில் கடினம் ஏற்படும், இவற்றைத் தவிர்க்க அறுவை மருத்துவமே சிறந்தது. நஞ்சு கீழ்ப் பகுதியில் இருந்தாலோ, வேறு காரணத்தால் நஞ்சு பிரிந்தாலோ, தாய்க்குக் குருதிப் போக்கு மிகையாகும். இதனால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க, உடனடியாகச் சீசேரியன் அறுவை செய்து, குழந்தையை வெளியே எடுக்க வேண்டும்.\n\nசில வேளைகளில், குழந்தை குறிப்பிட்ட நாளில் பிறப்பதில்லை. இதைச் சரியாகக் கவனிக்கா விட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். இதைத் தவிர்க்கவும், சீசேரியன் அறுவை மருத்துவமே சிறந்தது. தற்போது 7—10% மகப்பேறு, சீசேரியன் அறுவை மூலமே நடக்கிறது. தாயையும், சேயையும் மரணத்திலிருந்து காப்பதற்கு இவ்வறுவையே சிறந்தது. —இரா.திரிபுரசுந்தரி\n\nசீட்டா மின்னழுத்தம்\n\nஇருவேறு நிலைமைகள் (phases) இணைந்துள்ள போது, அவற்றின் இடைப் பரப்பில் (interface) ஓர் அழுத்தம் உருவாகும். நீரினுள் வைக்கப்பட்ட கண்ணாடியின் மேற்பரப்பில் ஹைட்ராக்சைடு அயனிகளாலான ஒரு தகட்டு அடுக்கு (layer) பரப்புக் கவர்ச்சி (absorption) காரணமாக உருவாகும், இதனால் ஏற்படும் எதிர் மின்னூட்டத்தைச் சமப்படுத்த ஹைட்ரஜன் அயனிகள் ஹைட்ராக்சைடு தகட்டு அடுக்கைச் சூழ்ந்து, மற்றொரு தகட்டு அடுக்கை உருவாக்கி விடும். இவ்விரு தகட்டு அடுக்குகளும் சேர்ந்து ஹெம்ஹோல்ட்ஸ் இரட்டைத் தகட்டு அடுக்குகள் (Helmholtz’s double layer) எனப்படும்.\n\nதிண்மத்தோடு ஒட்டியுள்ள தகட்டு அடுக்கு அசையாத் தன்மையது என்றும், அதையடுத்த தகட்டு அடுக்கு நீர்மத்தோடு சேர்ந்து நகரக் கூடியது என்றும் முன்பு கருதப்பட்டது. அண்மைக் கால ஆய்வுகள் இரண்டாம் தகட்டு அடுக்கும்,, மின்செறிவும் உண்மையில் நீர்மத்தின் உள்ளாக விரவிக் கிடக்கின்ற நிலையை (diffused state) உறுதிப்படுத்துகின்றன.\n\nஎனவே, திண்ம—நீர்ம நிலைகளுக்கிடையேயுள்ள பரப்பில் மின்னழுத்தம் இரண்டு பகுதிகளில் மாறுபாடு அடைகிறது. திண்மத்தின் பரப்பிற்கும் அசையாத அயனித் தகட்டு அடுக்கிற்குமிடையே முதல் மாறுபாடு அடைகிறது.\n\nஅசையாத அயனித் தகட்டு அடுக்கிற்கும், நீர் மத்தின் உள் விரவியிருக்கும் அடுக்கிற்கும் இடையே இரண்டாம் அழுத்த மாறுபாடு உருவாகிறது. இந்த இரண்டாம் அழுத்த மாறுபாடே (potential difference) மின் இயக்க அழுத்தம் அல்லது சீட்டா மின்னழுத்தம் (zeta potential) எனப்படும். இதன் குறியீடு ζ (zeta) ஆகும்.\n\nகூழ்களின் (Colloids) மின்னியல் பண்புகளுக்குக் காரணம் சீட்டா மின்னழுத்தமே ஆகும். பிரிகை நிலைப் பொருள் (dispersed phase) பிரிகை ஊடகத்தின் (dispersion medium) உள்ளாகச் சிதறியிருக்கும் போது, இரண்டிற்குமான இடைப் பரப்பில் இரட்டைத் தகட்டு அடுக்குகளாக மின்னூட்டம் பிரிந்து நிற்கும். இவற்றுக்கிடையே சீட்டா மின்னழுத்தம் உருவாகும்.மேலும், சுற்றியுள்ள நீர்மத்திற்கு எதிரான மின்னேற்றமுள்ள பிற அயனிகளும் கூழ்த் துகள்கள் மீது பரப்பு ஊன்றுகை கொள்ளும். இதனால், கூழ்த் துகள்களும், ஊடகமும் எதிரெதிராக மின்னேற்றம் செய்யப்படுகின்றன.\n\nஎனவே, ஒரு மின்புலத்தின் உள்ளாக இருக்கும் போது கூழ்த் துகள்களும், ஊடகமும் எதிரெதிர்த் திசையில் நகர முற்படுகின்றன. ஊடகம் அசையாமல் இருக்கும் போது, கூழ்த் துகள்கள் இடம் மாறிச் செல்வது மின் முனைக் கவர்ச்சி (electrophoresis) எனப்படும். கூழ்த் துகள்களின் இட மாறுதலைத் தடுத்து விட்டால், ஊடகத்தின் மூலக் கூறுகள் இடம் மாறும். இது மின் வழி ஊடு பரவல் (electroosmosis) எனப்படும். இவ்விரட்டைத் தகட்டு அடுக்குக் கொள்கை முதலில் ஹெம்ஹோல்ட்சினால் உருவாக்கப்பட்டுப் பின்னர் ஸ்டெர்ன், காய்ஆகியோரால் விரிவாக்கப்பட்டது. —வை. சிதம்பரநாதன் நூலோதி. ஓ.ஆர். சூரிய நாராயணன், அறிமுறை வேதியியல், தொகுதி II, தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை, 1970.\n\nசீட்டி அல்லது பன்னிற அச்சகத் துணி\n\nஉயர் இழைச் சிணுக்கு எண் கொண்ட பருத்தி நூலால் சாதாரண நெசவு (chintz) முறையில் தயாரிக்கப்பட்ட அச்சிடப்பட்ட துணி சீட்டி அல்லது பன்னிற அச்சகத் துணியாகும். இது பளபளப்பான, கவர்ச்சி மிக்க, சிறிதும் பெரிதுமான பூக்கோலங்கள் அல்லது கற்பனை வடிவமைப்புகளைக் கொண்டு அச்சிடப்பட்டது. பிசிர் நீக்கம், கஞ்சியேற்றம், மெருகேற்றம், உருளை அழுத்தம் ஆகிய சீர் செய்தல் முறைகளுக்கு உட்படுத்தப்படும். மெருகு, நிலைத் தன்மை மிக்கது. ஆடை, உறை, படுக்கை விரிப்பு, அறைகலன் உறை ஆகியவற்றைத் தயாரிக்க இது பயன்படுகிறது. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles-Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985.\n\nசீட்டித் துணி\n\nபாவு, நிரப்பு (ஊடை) இரு திசைகளிலும், சம எண்ணிக்கையிலான நூல்களைக் கொண்ட நெசவுத் துணி, சீட்டித் துணி (sheeting) ஆகும், நிரப்பு நூல்களை விடப் பாவு நூல்கள் கனமானவை. சாதாரண நெசவு முறையில் தயாரிக்கப்படும் இத்துணிக்கு நேராக்கப் பட்ட (carded) நூல்களே பெரிதும் பயனாகின்றன. சில சீட்டித் துணிகளில் வாரி விடப்பட்ட நூல்கள் பல எடைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சீட்டி குறுகியதாகவும், அகலமானதாகவும் நோக்கத்திற்கேற்றவாறு உருவாக்கப்படுகிறது. நூல் அளவு 10s-30s வரையிலான வரம்புக்குட்பட்டது. பருத்தி, முதன்மையான இயற்கை அல்லது செயற்கை இழைகளிலிருந்து இதனைத் தயாரிக்கலாம். —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles-Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985.\n\nசீட்டெசியா\n\nபாலூட்டிகளின் வகுப்பில் சீட்டெசியா என்பது ஒரு வரிசையாகும். நீர் வாழ் பாலூட்டிகளான திமிங்கிலம், வேடன், டால்ஃபின் ஆகியன இவ்வரிசையைச் சார்ந்தவை. நீரில் எளிதாக நீந்திச் செல்லுவதற்கு ஏற்றவாறு, இவற்றின் உடல் வடிவம் மீன்களைப் போன்று நீண்டு, உருண்டு, துடுப்பு வாலுடன் காணப் படுகிறது. கழுத்து இல்லாமையால், இவை தலையை அசைக்கா. இவற்றின் முன் கால்கள் மாற்றமடைந்து, மீன்களின் நீந்துந் துடுப்புப் போன்று தட்டையாகக் காணப்படுகின் றன. இவற்றிற்குப் பின் கால்கள் இல்லை. ஆனால், சில இனங்களில் இடுப்பு எலும்புக் கூட்டின் எச்சங்கள் காணப்படுகின்றன. நீண்ட வாலின் நுனியில், தட்டையாக அமையப் பெற்ற நீந்துந் துடுப்பு உள்ளது. மீனில் செங்குத்தாகக் காணப்படும் நீந்துந் துடுப்பு, திமிங்கிலத்தின் வாலில் கிடைமட்டமாக அமைந்துள்ளது. நீரில் விரைவாகச் செல்லவும், எளிதில் மூழ்கவும், மேலே வரவும் கிடைமட்டமான வால் துடுப்பு மிகவும் உதவுகிறது.\n\nவெப்பக் குருதி விலங்குகளான இவற்றிற்கு மயிர்ப் போர்வை இல்லை. ஆனால், வாயின் அருகில் மீசை போன்று நீண்ட மயிர் காணப்படுகிறது. மிகுதியாகக் காணப்படும் தோலடிக் கொழுப்பின் (blubber) தடித்த அமைப்பால், இவை நீரில் குளிர்ந்து விடாமல், காக்கப்படுகின்றன. வெப்பம் வெளிச் செல்லாமல் காக்கப்படுவதுடன், ஒப்படர்த்தியும் குறைகிறது. திமிங்கிலங்கள் 20-30 .நிமிடங்களுக்கு ஒரு முறை, கடலின் மேற்பரப்பிற்கு வந்து வெளிக் காற்றைச் சுவாசிக்கின்றன. இவற்றின் நுரையீரல்கள் மிகவும் பெரியவை. எனவே, நீண்ட நேர இடைவெளிக்குப் பின், திமிங்கிலங்களுக்கு மூச்சு இழுப்பது இயல்கிறது. மூக்குத் துளைகள் தலையின் உச்சியில் அமைந்துள்ளன. கடலின் மேற்பரப்பிற்கு வந்து மூச்சு விடும் போது, மூச்சுக் காற்றில் உள்ள குளிர்ந்த நீராவியாலும், கடல் மேல்பரப்பில் உள்ள நீராலும், திமிங்கிலத்திற்கு நேர் உயரே நீர் பீறிட்டெழும். இவ்வாறு பீறிட்டு எழும் நீரிலிருந்து, திமிங்கலங்கள் கடலில் உள்ள இடத்தைக் கண்டு கொள்ளலாம். மீன்களைப் போன்ற உருவமைப்புக் கொண்டு, நீரில் வாழ்ந்தாலும், இவை குட்டி போட்டுப் பாலூட்டிப் பேணிக் காக்கின்றன. வரிசை சீட்டெசியா, ஆர்க்கியோசிடி, ஓடோண்டோசிடி, மிஸ்டிசிடி என மூன்று துணை வரிசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆர்க்கியோசிடி துணை வரிசையில் மறைந்தொழிந்து போன பண்டைக் காலச் சியூகுலோடோண்டுகள் உள்ளன. ஒடோண்டோசிடியைப் பல்லுள்ள திமிங்கிலங்கள் என்பர். ஒடோண்டோசிடியில் பல திமிங்கல இனங்கள் உள்ளன. இவற்றிற்கு 2-250 பற்கள் இருக்கும். இவ்வினங்களில் மூச்சுக் குழல்கள் மேல் பகுதியில் இணைந்து, தலையின் மேல் ஒரே வெளித் துளையாக அமைந்திருக்கும். கொல்லும் திமிங்கிலம், சீல்களையும், பெங்குவின் பறவைகளையும் பிடித்துண்ணும். ஏனையவை பெரிய மீன்களையும், கணவாய் மீன் போன்ற விலங்கினங்களையும் வேட்டையாடி உண்ணும். இந்தியக் கடற்பகுதியில் காணப்படும் வேடன்கள் இவ்வகையினவே. கொல்லும் திமிங்கிலம், சௌவர்பி திமிங்கலம், சீசா மூக்குத் திமிங்கிலம், : விந்துத் திமிங்கிலம், வேடன்கள், டால்ஃபின்கள் ஆகியன இவ்வரிசையைச் சார்ந்தவை. டால்ஃபின்களும், வேடன்களும் திமிங்கிலங்களை விடச் சிறிய விலங்கினங்கள். இவற்றில் சில இனங்கள் கூடி வாழும் இயல்புடையவை. இவை பல விதமான ஒலிகளை எழுப்புகின்றன. அவற்றால், அவை ஒன்றையொன்று அறிந்து கொண்டு வாழ்க்கை நடத்துவதாகக் கருதப்படுகிறது.\n\nமிஸ்டிசிடியைப் பல்லற்ற திமிங்கிலங்கள் அல்லது சல்லடைத் தகட்டுத் திமிங்கிலங்கள் என்பர். மிஸ்டிசிடி துணை வரிசையில் நீலத் திமிங்கிலம், கலிஃபோர்னியா பழுப்புத் திமிங்கலம், கூன் முதுகுத் திமிங்கலம், ரைட் திமிங்கிலம், ரார்குவில் ஆகியன அடங்கும். பற்கள் இல்லை என்றாலும், மேல் தாடையிலிருந்து பல சல்லடைத் தகடுகள் (baleen) தொங்குகின்றன. இத்தகடுகள், மேல் பகுதியில் தட்டையாகப் பருத்துக் கீழ்ப் பகுதியில் நூற்றுக் கணக்கான மெல்லிய, வலிய நார்களாகப் பிரிந்து காணப்படும். இத்திமிங்கிலங்கள் வாயைத் திறக்கும் போது, பற்பல சிற்றுயிர்கள் நீருடன் வாய்க்குள் புகும். வாயை மூடும் போது, சல்லடைத் தகடுகள் நீரை இழுத்து விட்டுச் சிற்றுயிரிகளைத் தடுத்து, நாக்கால் உணவுக் குழாய்க்குள் செலுத்தும்,\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பல்லற்ற திமிங்கிலங்கள் சிற்றுயிர்களான சிறு ஓட்டு மீன்களையும், மெல்லுடலிகளையும் அண்டார்க்டிக்காவில் மிகுதியாகக் காணப்படும் கிரில், சொறிகளையும், சிறு மீன்களையும் நீரிலிருந்து சல்லடைத் தகடுகளால் வடி கட்டி, உண்ணும். இவை மிகப் பெரிய அளவிற்கு வளரக் கூடியவை. நீலத் திமிங்கிலங்கள் 30 மீ. நீளமும் 120 டன் எடையும் கொண்டவை. உலகின் விலங்கினங்களில் இவையே மிகப் பெரிய உருவம் கொண்டவை. உடலின் நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி தலைப் பகுதியாக அமைந்துள்ளது. சில இனங்களில் நானூறுக்கும் மேலான சல்லடைத் தகடுகள் காணப்படும்.\n\nதிமிங்கிலம் அனைத்துக் கடல்களிலும் காணப்படும். ஒரு வகையான டால்ஃபின், சீனாவில் நன்னீர் ஏரியில் வாழ்கிறது. சில டால்ஃபின்கள் கங்கை, அமேசான் போன்ற பெரிய ஆறுகளிலும் காணப்படும். அறிவுடைய டால்ஃபின் விலங்குகளைப் பிடித்து எளிதில் பழக்கலாம். கடலுக்கடியில் மூழ்கியுள்ள பொருள்களை எடுக்கவும், கடலில் போடப்படும் கண்ணிகளைப் பற்றி அறியவும், அமெரிக்கக் கடற்படையில் டால்ஃபின்களைப் பழக்கியுள்ளனர்.\n\nதிமிங்கிலங்கள் மிகு விரைவாக நீந்திச் செல்லும். சில திமிங்கிலங்கள், மிகக் குளிரான துருவக் கடல்களில் வெப்பக் காலத்தில் இனப் பெருக்கம் செய்யும். சில திமிங்கிலங்கள் குளிர் கடல்களை விட்டு, வெப்பக் கடல் பகுதிகளுக்கு வலசை (migration) போகும். ஆணும், பெண்ணும் இணைவதற்கு முன், பலவாறாக நீந்தி விளையாடும். திமிங்கிலங்களுக்கு ஏறக் குறைய 16 மாதங்களும், டால்ஃபின்களுக்கு 180 நாளும் சூல் காலமாகும். இவை ஒரு முறை ஒரு குட்டியே ஈனும். பிறந்ததிலிருந்து ஏழு மாதம் வரை தாய், பால் கொடுத்துக் குட்டியைப் பேணிக் காக்கிறது. ஸ்பெர்ம் திமிங்கிலங்களில் கருவுற்றவையும், பால் கொடுக்கும் பெண் திமிங்கிலங்களும், இவற்றின் குட்டிகளும் சிறு கூட்டமாக ஓரிரு ஆண் திமிங்கிலங்கள் உடன் வரக் கடலில் நீந்தித் திரியும்.\n\nதிமிங்கிலங்கள் பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவை. கிழக்குக் கடல்களிலும், தென் துருவப் பகுதிகளிலும் திமிங்கிலம் பிடிக்கும் கப்பல்களால் இவை வேட்டையாடப்படுகின்றன. திமிங்கிலங்களை வேட்டையாட ஒரு பெரிய கப்பலும், விரைவாகச் செல்லக் கூடிய சிறு துணைக் கப்பல்களும் இருக்கும். சிறு கப்பல்கள், வேட்டையாடிய திமிங்கிலங்களைப் பெரிய கப்பலுக்குக் கொண்டு சேர்க்கும். திமிங்கிலங்கள் துண்டாக்கப்பட்டுத் தலைப் பகுதியில் காணப்படும் கொழுப்பு உருக்கி எடுக்கப்படும். இறைச்சி பதப்படுத்தப்பட்டு, டப்பாக்களில் அடைக்கப்படும் அல்லது இறைச்சி மாவு தயாரிக்கப்படும்.\n\nபல்லுள்ள திமிங்கிலங்களின் தலைப் பகுதியில் ஸ்பெர்மசிடி என்னும் கொழுப்பு மிகுதியாகக் காணப்படுகிறது. அதிலிருந்து உயர் வகை எண்ணெயும், மெழுகும் பிரித்தெடுக்கப்படும். ஆம்பர்கிரிஸ் என்னும் மெழுகு போன்ற மணமுடைய பொருள் ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் பெருங்குடலிலிருந்து கிடைக்கிறது. ஆம்பர்கிரிஸ் பெருங்குடலில் உண்டாகும் விதமும், காரணமும் புலனாகவில்லை. உயர் வகை மணப் பொருள்கள் தயாரிப்பதற்குத் திமிங்கல எண்ணெய், ஆம்பர்கிரிஸ் ஆகியன பயன்படுகின்றன. திமிங்கில எண்ணெய், கடிகாரத் தொழிலிலும் பயன்படுகிறது. சுற்றுப்புறச் சூழல் கேடுகளாலும், வேட்டையாடுதலில் நவீன முறைகளைக் கையாளுவதாலும், சில திமிங்கல இனங்கள் அருகி வருகின்றன. க. பாலசுப்பிரமணியன்\n\nசீட்டேன் எண்ணெய்\n\nகாண்க : டீசல் எண்ணெய்\n\nசீத்தா\n\nஇதன் தாவரவியல் பெயர் அன்னோனா ஸ்குவாமோசா (Annona squamosa) ஆகும். இம்மரம் அன்னோனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் மேற்கிந்தியா ஆகும். இந்தியாவில், இதைத் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வளர்க்கின்றனர். தென்னிந்தியப் பகுதிகளில் இது பெரும்பான்மையாக வளர்க்கப்படுகிறது.\n\nமரம். இது 6 மீ. உயரம் வரை வளரும் சிறு மரமாகும். மரம் பச்சையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இலைகள் நீள்வட்ட அல்லது ஈட்டி வடிவில் மெலிந்தும், நொறுங்கும் தன்மையுடனும், பளபளப்பாகக் காம்பருகே ஆப்பு வடிவத்தில் இருக்கும். இலை ஓரம் பற்களோ, வளைவோ இல்லாமல் முழுமையாக இருக்கும்.\n\nபூக்காம்பின் நீளம் 1.5 செ. மீ; பூக்கள் 2-4 கொத்தாகவோ, தனித் தனியாகவோ இருக்கும். பூக்காம்பின் நீளம் 1.5 செ. மீ; புல்லி இதழ்கள் மூன்றும் 3 மி, மீ நீளத்தில் முக்கோண வடிவிலிருக்கும். அல்லி இதழ்கள் 3 (+3), பச்சை கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும். வெளிப் புறமுள்ளவை தடிப்பாக 2-3 X 0.5-0.7 செ.மீ அளவில் இருக்கும். உள்புறமுள்ள அல்லி இதழ்கள் மிகச் சிறியவை. மகரந்தக் கேசரங்கள் நூறுக்கு மேல் இருக்கும். சூலக இலைகள் (carpels) ஐம்பதுக்கு மேல் இருக்கும், இலை பிப்ரவரி மாதத்தில் உதிரும். புதிய இலைகள் மார்ச் மாதத்திலிருந்து உண்டாகும். மார்ச் முதல் பூக்கள் உண்டாகி, ஜூலை—செப்டம்பரில் உச்ச நிலையை அடையும். பழங்கள் நவம்பரில் கிடைக்கும்.\n\nசீத்தாப்பழம் ஒரு பூத்திரள் கனி (aggregate fruit) ஆகும், பூவில் பல சூலக இலைகள் இருக்கும். வெவ்வேறு சூலிலைகளிலிருந்து உண்டாகும் தனித் தனிச் சதைக் கனிகளும் சதைப் பற்றான பற்றுக் கோடில் அழுந்தி, ஒன்றாகக் கூடிச் சூலக அறைகள் இணைந்த (syncarpous) கனியாக இருக்கும். பழம் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக இதய வடிவில் 7.5-10\n\nசெ.மீ விட்டத்திலிருக்கும். மஞ்சளான சதையில் சாறு நிறைந்திருக்கும். இனிப்பான, நல்ல மணம் தரக் கூடிய இக்கனிச் சுளைகளைத் தனித் தனியாகப் பிரித்து உண்ணலாம். விதைகள் செம்பழுப்பாகவும், வழவழப்பாகவும் நீள் சதுரமாகவும் இருக்கும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வறட்சியான வெப்ப நிலத்தில் இது நன்கு வளரும். பச்சை மண்ணிலும், மலை அடிவாரத்திலும் பயிர் செய்யலாம். ஆனால், இம்மரம் உறை பனியைத் தாங்காது. இயற்கையான நிலையில் 15-20 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இது காட்டு வகையாகவும், வளர்க்கும் வகையாகவும் காணப்படுகிறது. விதை ஏழு ஆண்டு வரை முளைப்புத் தன்மையுடன் இருக்கும். விதையை நீரில் ஊற வைத்தால், கடினமான விதையுறை மென்மையடைந்து, எளிதில் விதை முளைக்க வாய்ப்பாகும். இது விதை, நெருக்கு ஒட்டு, மொட்டு ஒட்டு (budding) ஆகியவை மூலம் வளர்க்கப் படுகிறது. நெருக்கு ஒட்டிற்கு இராம சீத்தா கன்று பயன்படுகிறது. இது வறட்சியைத் தாங்கி வளரும். விதை மூலமாகச் சாகுபடி செய்யப்பட்ட மரம் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் நெருக்கு ஒட்டு அல்லது மொட்டு ஒட்டு மூலம் சாகுபடியாகி இரண்டாண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஒட்டுச் செய்வதற்குச் சீத்தாக் கன்றுகளை விட, முள் சீத்தாக் கன்றுகள் சிறந்தவை. விதைகள் மூலம் இனப் பெருக்கமடைந்தவை தாய் மரத்தைப் போல இரா.\n\nசாகுபடி. கன்றுகளை 5X5 மீ. இடைவெளியில் நட வேண்டும். ஒவ்வொரு குழியிலும், 10 கி.கி. தொழு உரம், 1 கி.கி. வேப்பம் புண்ணாக்கு இட வேண்டும். கறையானால் செடி பாதிக்கப்படாமலிருக்க, குழி ஒன்றுக்கு 100 கிராம் B.H.C. 10% தூளை மண்ணுடன் கலக்க வேண்டும். காய்ப்புக்கு வந்த மரங்களில், மரம் ஒன்றுக்கு 250 கிராம் தழைச் சத்து, 150 கிராம் மணிச் சத்து, 250 கிராம் சாம்பல் சத்து உரத்தை இட வேண்டும். பழங்கள் ஆகஸ்ட்—நவம்பர் வரை கிடைக்கும். ஏப்ரல்—மேத் திங்கள் வரை பூக்கிறது. கையால், மகரந்தச் சேர்க்கை செய்தால், காய்ப்பு மிகும். பூக்கும் போது, வீசும் வெப்பக் காற்றால் காய் உண்டாவது குறையும். ஒரு மரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 25-30 கி. கி. பழம் கிடைக்கும். சீத்தாவில் பாலா நகர் என்னும் வகை சிறந்தது. சீத்தாப் பழங்களை 3.89-5.56°C வெப்ப நிலையும், 85-90% ஈரப் பசையும் கொண்ட குளிர் சேமிப்பு அறைகளில் வைத்தால், 5-6 நாள் வரை கெடாமலிருக்கும். பழத்தில் சர்க்கரைச் சத்து மிகுந்துள்ளது. சீத்தா மரத்திலிருந்து காய்களைப் பறித்துப் பழுக்க வைத்து உண்ணலாம். பழத்திலிருந்து சாறு எடுத்தும் அருந்தலாம்,\n\nமருத்துவப் பண்புகள். இதன் இலை, பட்டை, காய், பழம், விதை ஆகியன மருந்தாக உதவும். காய் துவர்ப்பாக இருப்பதால், கழிச்சல், சீதக் கழிச்சல் நீங்குவதற்குத் தரலாம். பழுக்காமல், காய்ந்த காய்களைத் தூளாக்கி, அதை மாவுடன் கலந்து புழுக்களைக் கொல்லலாம். பழம் இனிப்பாகவும், சுவையாகவும், குருதியைப் பெருக்கும் தன்மை கொண்டதாகவும், தசையை உறுதியாக்குவதாகவும், குளிர்ச்சியைத் தருவதாகவும் உள்ளது.\n\nபழத்திலிருந்து கிடைக்கும் இனிப்பான பழக் குழம்பில் சுவை நீர் தயாரிக்கலாம். காலை, மாலை இரண்டிரண்டு பழம் உண்ண, காச நோய் நீங்கும். விதைகளுக்குப் பேன்களைக் கொல்லும் தன்மை உண்டு. விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், பூச்சி கொல்லியாகப் பயன்படுகிறது. வேருக்குச் சிறுநீர்க் கழிவைத் தூண்டும் ஆற்றலுமுண்டு. விதையைப் பொடித்துப் புண்களின் மீது தூவ, எளிதில் அவை குணமாகும். இலையை நீர் விடாமல் அரைத்துப் புண்களுக்குப் பூச, விரைவில் குணம் தெரியும். இலைகளை அரைத்துப் பற்றுப் போட்டால், கொப்புளங்கள், சீழ்ப் புண்கள் ஆகியவை குணமாகும் என்று பிரேசில் நாட்டினர் நம்புகின்றனர்.\n\nஇராம சீத்தா. இதற்கு மணிலா சீத்தா என்ற பெயரும் உண்டு. இராம சீத்தாப் பழங்கள் எருதின் இதயம் போன்றிருப்பதால், இதற்கு ஆங்கிலத்தில் bullock’s heart என்று பெயர் வந்தது. இம்மரத்தின் தாவரவியல் பெயர் அன்னோனா ரெட்டிக்குலேட்டா (Annona reticulata). பழத்தின் மேல் தோலில் சூலிலைகளைக் குறிக்கும் எல்லைகள் வலை (reticulum) போன்ற கோடுகளாகத் தெரிவதால், இம்மரத்திற்கு அன்னோனா ரெட்டிக்குலேட்டா என்று பெயர் வந்தது. இம்மரத்திலிருந்து, ஓரளவிற்கு இலைகள் உதிர்வதைக் காணலாம். இம்மரத்தில் பூக்களும்,பழங்களும் ஆண்டு முழுதும் உற்பத்தியாகின்றன.\n\nமருத்துவப் பண்புகள். பழத்திற்குக் குருதியைத் தூய்மையாக்கும் தன்மை உண்டு. காய், புழுக்களைக் கொல்லும். சீத பேதியைக் குணப்படுத்தும். இதன் விதைகளும், இலைகளும் பூச்சிகளைக் கொல்லும்.\n\nமுள் சீத்தா. முள் சீத்தாவிற்கு (sour sop), புள்ளு பலா,புளிப் பலா, புலிப் பலா என்ற பெயர்களும் உண்டு. பழத்தின் மேல் தோலில் முள்கள் (murex) உள்ளமையால், இதை அன்னோனா மியூரிகேட்டா (Annona muricata) என்கின்றனர். இது 6 மீ. உயரம் வளரும் இலையுதிராத சிறு மரமாகும். தென் அமெரிக்காவிலிருந்து பெரு வரை இது வளர்க்கப்படுகிறது. சமவெளியில் நன்கு வளரும். இந்தியாவில் தமிழ்நாடு, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் வளர்கிறது. ஜாவா, பர்மாவிலும் இம்மரத்தைக் காணலாம். இதில் இஸ்ரேல் ஒட்டு (Israel hybrid) என்பது சிறந்த வகை. இப்பழ மரம், தமிழகத்தில் நீலகிரி, சேர்வராயன், பழனி மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இலைகளிலிருந்து ஒரு வகை ஆவியாகும் எண்ணெயைத் தயாரிக்கலாம். பழத்தில் சிறு சிறு முள் இருக்கும். இதன் பழத்தில் 12.7% சர்க்கரைப் பொருளும், 0.4% புரதமும் உள்ளன, ஜாவா நாட்டினர் முள் சீதாப் பிஞ்சுகளைக் காய்கறியாகப் பயன்படுத்துகின்றனர். பழம் இதய வடிவிலிருக்கும். பழச் சதை வெள்ளையாகச் சாறு நிறைந்ததாகப் புளிப்பாயிருக்கும். விதை கறுப்பாக இருக்கும்.\n\nமருத்துவப் பண்புகள். இதன் பழம், விதை, பூ, இலை முதலியவை மருந்தாகின்றன. பழத்திற்குச் சொறி, சிரங்குகளைக் குணமாக்கும் தன்மை உண்டு. நாட்பட்ட சீத பேதிக்குக் காயை உலர்த்திப் பொடி செய்து தரலாம். இருமலுக்குப் பூ மொட்டுகளும், பூக்களும் பயனாகின்றன. இதன் வேருக்கு வலிப்பை நீக்கும் ஆற்றல் உண்டு. விதைகளுக்குப் பூச்சிகளைக் கொல்லும் தன்மை உண்டு. இலைகள் கொப்புளங்களைப் பழுக்க வைக்க உதவுகின்றன. நஞ்சூட்டி மீன் பிடிக்க விதைகள் உதவும்,\n\nஅனுமான் சீத்தா. அனுமான் சீத்தாவை (cherimova) அனுமான் பழம் என்றும் கூறுவர். இம்மரத்தின் தாவரவியல் பெயர் அன்னோனா செரிமோலியா (Annona cherimolia) என்பதாகும். இம்மரம், இலைகளை உதிர்க்கும் சிறு மரமாகும். இது 4.5-7.5 மீ உயரம் வளரும். பெருவிலிருந்து மெக்சிகோ வரையுள்ள பகுதிகளில், இம்மரத்தை வளர்க்கின்றனர். இதை உயர்ந்த மலைகளில்தான் வளர்க்க முடியும். இந்தியாவில் தமிழகத்தின் ஏற்காட்டுப் பகுதியில் இம்மரம் வளர்க்கப்படுகிறது. இதன் இலைகள் முட்டை வடிவும், அடிப்பகுதி வெல்வெட் போன்று மயிர்களைப் பெற்றும் இருக்கும். சீத்தாக் கன்றுகளைப் பயன்படுத்தி, நெருக்கு ஓட்டு மூலம் இது இனப் பெருக்கம் செய்யப் படுகிறது. நடவு செய்த ஆறாம் ஆண்டிலிருந்து பழம் கிடைக்கும். ஆண்டொன்றுக்கு ஒரு மரத்திலிருந்து 100 பழங்கள் கிடைக்கும். இதில் மம்மூத் (mammoth) வகை சிறந்தது.\n\nஅனுமான் சீத்தா மரம் ஆண்டு முழுதும் பூக்கும். ஏப்ரல்—ஜூலை வரையிலான காலத்தில் பெரும் எண்ணிக்கையில் பூக்கும். கனிகள் செப்டம்பர் மாதத்திலிருந்தே கிடைக்கும். இதன் பழம் மிகச் சுவையாக இருக்கும். பழங்களில் முள் இருப்பதில்லை. உருண்டையாக இதய வடிவில் பச்சை நிறத்தில் 8-15 செ.மீ. குறுக்களவைக் கொண்டு, ரேகை போன்ற பள்ளத்துடன் இருக்கும், —ஜானகி கிருஷ்ணன் —கோ. அர்ச்சுணன் நூலோதி. H.M. Lawrence George, Taxonomy of Vascular Plants, The Macmillian Co., New York, 1957.\n\nசீதக் குடலழற்சி\n\nசீதத்துடன் மலம் வெளிப்படும் நிலையில், குடலும் அழற்சி அடைந்திருக்கும். இதைப் படலக் குடலழற்சி (membranous colitis), சீதப் படலக் குடலழற்சி (mucoumembranous colitis), சீதக் குடலழற்சி (mucous colits), இணைப் படலக் குடலழற்சி (myxomembranous colitis) என்ற பல பெயர்களில் குறிக்கின்றனர். அண்மைக் காலத்தில் இந்நோய் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. குடலின் நரம்பு மற்றும் தசைக் கோளாறால் ஏற்படும் இது பெரும்பாலும், மனோ வய நிலையைச் சார்ந்தது. மலமிளக்கி மருந்துகளும், ஒவ்வாத உணவும் இந்நோயை மோசமடையச் செய்கின்றன. அண்மைக் காலமாக இந்நோய் காணப்படாமையால் மருத்துவமும் இல்லை என்றே தெரிகிறது. —மு. கி. பழநியப்பன்\n\nசீதப் படலம்\n\nஇது சிலேட்டுமப் படலம் (mucous membrane) என்றும் குறிப்பிடப்படும். உடலின் பரப்புடன் தொடர்பு கொள்ளும் அனைத்து உறுப்புகளையும், பாதைகளையும் போர்த்தியிருக்கும் படலத்தைச் சீதப் படலம் என்பர். சீதப் படலத்தில் முக்கியமாக மேலணி அடுக்கு ஒன்றும், அதைத் தாங்கிக் கொண்டிருக்கும் லேமினா புரோப்ரியா (lamina propria) எனப்படும் இணைப்புத் திசுவும் காணப்படும். சில சமயங்களில், இணைப்புத் திசுவில் தசைச் சிலேட்டுமம் (muscularis mucosa) எனப்படும் தசை இழையும் காணப்படலாம். சீதப் படலம், அதன் பரப்பில் கோழையைச் சுரக்கவும் செய்யலாம்; சுரக்காமலும் இருக்கலாம்.\n\nபிறவி ஊனம், நுண்ணுயிர்ப் பாதிப்பு, தோல் நோய், புற்றுக் கட்டி போன்றவை சீதப் படலத்தைத் தாக்கலாம். எண்ணிக்கையில் மிகுந்த மஞ்சளும், வெள்ளையும் கலந்த தடிப்புகள், உதடு மற்றும் கன்னப் பரப்புச் சிலேட்டுமத்தில் காணப்படுவது, ஃபார்டைஸ் நோய் எனப்படும். இவற்றிற்கு மருத்துவம் தேவையில்லை. புவியியல் நாக்கு எனப்படும் நோய் நிலை, குழந்தைகளிலும், இளம் வயதினரிடமும் காணப்படும். நன்கு வரையறுக்கப்பட்ட மெல்லிய செந்நிறப் படைக் கட்டிகள் நாக்கின் சீதப் படலத்தில் காணப்படுகின்றன. இந்நிலைக்கும் மருத்துவம் தேவையில்லை.\n\nஉதடு, வாயின் ஓரக் கோணங்கள் ஆகியவற்றின் அழற்சியும், குழந்தைகளில் காணப்படும் காண்டிடா காளானும் இதில் பங்கு கொள்கின்றன. இதற்குப் பெட்ரோலாடம் களிம்பும், காளான் எதிர் மருந்தும், கார்டிகோஸ்டிராய்டு மருந்துகளும் பயனளிக்கின்றன. சீதத் தேக்க நீர்ப் பைகளும், வாயின் சீதப் படலத்தில் காணப்படுகின்றன. இவை உதடு, நாக்கு, அண்ணம், வாய் ஆகியவற்றின் சீதப் படலத்திலும் காணப்படலாம். அளவில் பெரிதாகி விட்டால், அறுவை தேவைப்படலாம். வாய்க் கொப்புளங்களும், உதடு, வாய், அண்ணம் ஆகியவற்றின் சீதப் படலத்தில் தோன்றுகின்றன. கார்டிகோஸ்டீராய்டு, ஓராபேஸ், சைலோகைய்ன் போன்றவை பயனளிக்கலாம், —சாரதா கதிரேசன் நூலோதி. S.L Moschella, Dermatology, Vol I and II, W.B. Saunders Co., Philadelphia, 1975; Richard S.Shell, Clinical Anatomy for Medical Students, Third Edition, Little Brown and Co., Boston, 1986.\n\nசீதப் பை\n\nசீதம் நிறைந்த பை, சீதப் பை (mucocele) எனப்படும். இது, பெரும்பாலும் பித்த நீர்ப் பையையே பாதிக்கிறது. பித்த நீர் நாளம் நீண்ட காலமாக அடைபட்டுக் கிடந்தால், சீதம் நிறைந்து, பித்த நீர்ப் பை வீங்கி, பெரியதாகிக் காணப்படும். இதனால், நோயாளிக்கு மேல் வயிற்றில் வலியும், நலக் குறைவும் உண்டாகும். வீங்கிய பித்த நீர்ப் பையைக் கையால் தொட்டுப் பார்த்து அறியலாம். அரிதாகப் பையின் சுவரில் வளிமம் தேங்கி, வளியூதல் கொண்ட பித்த நீர்ப் பை அழற்சி உண்டாகிறது, இந்நிலை பெரும்பாலும் ஆண்களிலும், நீரிழிவு நோயாளிகளிலும் காணப்படும். நோய் முற்றி விட்டால் பித்த நீர்ப் பையை அகற்றுவதே சிறந்தது. —மு.கி, பழநியப்பன்\n\nசீத பேதி\n\nபெருங்குடலின் சீதச் சவ்வு அழற்சியடைந்து, சீதத்துடன் வயிழ்றுப் போக்கும் ஏற்படுவதால், இதைச் சீத பேதி (dysentery) என்பர். இதை வயிற்று உளைச்சல் என்றும் கூறலாம். கிரேக்க மொழியில், dys என்றால், கெட்ட அல்லது கடினமான என்றும், enteron என்றால், குடல் என்றும் பொருள்.\n\nநோய்க் காரணிகள். அமீபா என்ற ஒட்டுண்ணி, ஷிகல்லா என்ற பாக்டீரியா, பலான்டிடியம் கோலை (Balantidium coli) எனப்படும் ஒட்டுண்ணி, சிஸ்டோசோமியா ஹீமட்டோபியம் எனப்படும் குடல் புழு, டிரைகோமானோஸ், கியார்டியா போன்ற புழுக்கள், வைரஸ், மலேரியா ஒட்டுண்ணி ஆகிய அனைத்தும் சீத பேதியை உண்டாக்கலாம். மலத்தை ஆய்ந்து காரணியைக் கண்டு பிடித்து, உரிய மருத்துவம் அளிக்க வேண்டும்.\n\nஅமீபா சீத பேதியில் என்டமீபா ஹிஸ்டாலிட்டிகா என்ற ஒட்டுண்ணி, குடல் சவ்வினுள் நுழைந்து புண்களை உண்டாக்குகிறது. வயிற்றுப் போக்குடன், குருதியும், சதமும் வெளிப்படுகின்றன. வயிற்று வலி, வயிற்று உப்புசம், வயிற்றில் இரைச்சல் போன்றவை தோன்றுகின்றன. மலக் குடலில் புண் உண்டாகியிருந்- தால், மலம் கழிக்கும் போது வலி, (tenesmus) உண்டாகிறது. சீத பேதி நாட்பட்ட நிலையடைந்தால், வயிற்றுப் போக்கும் மலச் சிக்கலும் மாறி, மாறித் தோன்றுகின்றன. நாளடைவில், இந்நோயாளி, நோய் கடத்தியாக மாறுகிறார். இந்நோய்க்கு மருத்துவமாக எமெட்டின், டைஹைட்ரோ எமெட்டின், மெட்ரோனிடசால் போன்ற மருந்துகள் பயன்படுகின்றன.\n\nபாக்டீரியா சீதபேதியில், ஷிகல்லா என்னும் நுண்ணுயிரி பெருங்குடலின் சீதச் சவ்வை ஊடுருவிச் சிதைக்கிறது. ஷிகல்லா பாக்டீரியாக்களுடன், மேலும், இரண்டு வகைகளும் (ஃபிளக்ஷனர் மற்றும் சோனி) சீத பேதியை உண்டாக்குகின்றன. அமீபா சீத பேதியை விடப் பாக்டீரியா சீத பேதி மிகு விரைவாகத் தோன்றுகிறது.\n\nஇவ்வகைச் சீத பேதியில் வயிற்றுப் போக்கு, சீதம், குருதி வெளிப்பாடு, காய்ச்சல் ஆகியன தோன்றும். இதுவும் நாட்பட்ட நிலை அடைந்து, பல ஆண்டுகள் நீடிக்கலாம். ஷிகல்லா நுண்ணுயிரிகளின் நச்சுப் பொருள்கள் உள் ஏற்கப்படுவதால், கண் அழற்சியும், மூட்டழற்சியும் தோன்றுகின்றன. அண்மைக் காலமாக மிகு ஆற்றலுடைய நுண்ணுயிர் எதிர் மருந்துகள் (சல்ஃபோனமைடுகள், ஆம்பிசிலின்) கண்டு பிடிக்கப் பட்டுள்ளமையால் இந்நோய் தீங்கற்றதாக மாறி விட்டது. ஆனால், குழந்தைகள் இந்நோயால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன்ர். உணவும், அருந்தும் பானங்களும் தூய்மையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளியைத் தனிப்படுத்த வேண்டும். சிறுநீர், மலம் கழித்த பின்னரும், உண்ணுவதற்கு முன்பும், கைகளை நன்கு தூய்மை செய்து கொள்ள வேண்டும். right|—மு.கி, பழனியப்பன்\n\nசீதம் இறுகு நோய்\n\nசீதச் சுரப்பின் இயல்பு மாறிய பிறவி ஊனமாகப் பரம்பரையாக வெளிப்படும் நோயே, சீதம் இறுகு நோயாகும். கணையத்தையே பாதிக்கும் இதை நார்ப் பைப் பந்து நோய் (fibrocystic disease) எனவும் கூறுவர். சீதத்தைச் சுரக்கும் அனைத்துச் சுரப்பிகளும், குறிப்பாகக் கணையமும், மூச்சுக் கிளை நுண் குழல்களும், சீதம் இறுகு நோயில் பாதிக்கப்படுகின்றன. இறுகிய சீதம், கணைய நாளங்களை அடைத்து, கணையச் சுரப்புகளைத் தேக்கமடையச் செய்கிறது. சில தடுப்புச் சுவர்கள் நசவுற்றுக் கணைய நொதிகள் வெளிப்படுகின்றன. ஆகவே, பிறவியிலிருந்தே அல்லது பிறப்புக்கு முன்பே, குழந்தை நார்ப் பொருளுடன் கூடிய கணைய அழற்சியால் பாதிக்கப்படுகிறது. மற்றுமொரு வெளிப்பாடு குடல் இலிய அடைப்பாகும். இயல்புக்கு மாறான இறுகிய சீதம் மூச்சுக் இளைக் குழலினுட் செல்வதால், மூச்சு மண்டல நோய்கள் உண்டாகின்றன. வெளிப்படும் வியர்வையில் இயல்பு நிலையை விட 3-4 மடங்கு சோடியம் குளோரைடு காணப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு எந்நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்.\n\n10% நோயினர், பிறவியிலேயே முதல் மலத்தால் குடல் அடைப்பு ஏற்பட்டுப் பாதிக்கப்படுகின்றனர். அரிதாக முதல் மல உதரவுறை அழற்சியால் பாதிக்கப்படுகின்றனர். பிறந்த சில வாரங்கள் கழித்து, மூச்சுக் கிளைகளில் குழல் அழற்சியும், மூச்சு விடுதலில் கடினமும் ஏற்படுகின்றன. மார்புக் கூடு பீப்பாய் போன்று உருளையாக மாறுகிறது. இத்தகைய குழந்தைகளின் மலம், எண்ணெய் போன்று கெடு நாற்றத்துடன் அடிக்கடி வெளிப்படுகிறது. இருப்பினும், குழந்தைக்கு நன்றாகப் பசி எடுக்கும். வீங்கிய வயிற்றுடன் எலும்பும், தோலுமாகக் குழந்தை காட்சியளிக்கும்.\n\nவயதடைந்த குழந்தைகளில் அடிக்கடி மூச்சு மண்டல நோய்களும், கல்லீரல் சுருக்கமும், குருதி மிகை அழுத்தமும் உண்டாகின்றன. வயது முதிர்ந்தோரில், பின் கண் ரசத்தில் கலங்கலும், விழியடிக் கரும் படல அழற்சியும், தாடையடி உமிழ் நீர்ச் சுரப்பிகளின் வீக்கமும், மூச்சு மண்டல நோய்களும் காணப்படுகின்றன. நுண்ணுயிரிப் பாதிப்புகளால் அல்லலுறுகின்றனர். முன் சிறு குடலில் டிரிப்சினின் குறைந்த அளவு காணப்படும் அல்லது டிரிப்சின் இல்லாமை, நோய் அறுதியிடலில் உதவுகிறது. இயல்பாக, வியர்வையில் ஒரு லிட்டருக்கு 70 மில்லி மோல் சோடியமும், 60 மில்லி மோல் குளோரைடும், 20 மில்லி மோல் பொட்டாசியமும் காணப்படும். ஆனால், சீதம் இறுகு நோயாளிகளில் மேற்கூறியவை மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன. இதற்கு பைலோ கார்பைன் அயண்டோ போரெசிஸ் என்னும் மருத்துவ முறை அளிக்கப்படுகிறது.\n\nமூச்சு மண்டல நோய்களைக் கட்டுப்படுத்துவதே மருத்துவமாகும். நுண்ணுயிர் எதிர் மருந்துகளுக்கு எதிர்ப்பாற்றல் உண்டாகிறது. மிகையாகப் புரதமும், சர்க்கரையும் கொடுக்க வேண்டும். கொழுப்புப் பொருளைக் கொடுக்கக் கூடாது. பேங்கிரியாடின் 5-10 கிராம், 200 அலகு வைட்டமின் D. 10,000 அலகு வைட்டமின் A ஆகியன மருத்துவமாக அமைகின்றன. —மு.கி. பழநியப்பன் நூலோதி. A.J. Harding Rains, Bailey & Love’s Short Practise of Surgery, Seventeenth Edition, E.L.B.S., London, 1979.\n\nசீப்புச் செவுளிகள்\n\nகாண்க: தகட்டுச் செவுளிகள்\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. அடுத்த பக்கத்தில் புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->\n\nசீபா மரம்\n\nஇதன் தாவரவியல் பெயர் ரஸ் மைசோரென்ஸிஸ் (Rhus mysorensis) என்பதாகும். இதற்கு நெய்க் கிளுவை என்ற வட்டாரத் தமிழ்ப் பெயருமுண்டு. இது புதர்ச் செடியாகவோ, குறுமரமாகவோ வளரும் தன்மையுடையது. முந்திரி, மா போன்ற மரங்களுடன் பல பண்புகளில் தொடர்புடையது. அனக்கார்டியேசி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. மரத்தின் தண்டில் ஆங்காங்கே முள்கள் காணப்படும். இலை மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டு இலையாகும்.\n\nமலர்கள் கூட்டுப் பூத்திரள் (panicle) மஞ்சரியில் காணப்படும். இரு பால் (bisexual) பூக்களாகவோ, ஆண் பூ, பெண் பூ என்று தனித் தனியாகவோ ஒரே மரத்தில் வெவ்வேறு கிளைகளில் அமைந்திருக்கும். 4-6 புல்லிகளையும், 4-6 அல்லிகளையும், 4-6 மகரந்தங்களையும் கொண்டிருக்கும். சூலகம் ஓர் அறையுடன் ஒரு சூலைக் கொண்டிருக்கும். மூன்று சூல் தண்டுகளைக் கொண்டது. கனி உலர்ந்த கொட்டைக் கனி (drupe) வகையைச் சார்ந்தது. மரப் பட்டையிலிருந்து பெறப் படும் ஒரு வகை வேதிப் பொருள் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில், தோல்களுக்குச் சாயம் ஊட்டப் பயன்படுகிறது. —கோ. அர்ச்சுணன் நூலோதி. H.M. Laurence George, Taxonomy of vascular plants, The Macmillan Co., New York, 1957.\n\nசீபெக் விளைவு\n\nஇரண்டு வெவ்வேறான உலோகங்களாலான கம்பிகளை முனைக்கு முனை இணைத்து, ஒரு சந்தியைக் குளிர்ச்சியாகவும், பிற சந்தியைச் சூடாகவும் வைத்- தால் அக்கம்பிச் சுற்றின் வழியாக ஒரு மின்னோட்டம் பாய்கிறது என்று 1821 ஆம் ஆண்டில் சீபெக் என்னும் அறிவியலார் கண்டு பிடித்தார். எனவே இந்நிகழ்வு, சீபெக் விளைவு (Seebeck effect) எனப்படுகிறது. வெப்ப நிலை குறைவாயிருக்கிற சந்தி, குளிர் சந்தி எனவும், சூடான சந்தி வெப்பச் சந்தி எனவும் பெயர் பெறும். மின்கலங்கள் இல்லாத போதே, சுற்றில் மின்னோட்டம் பாய்வதால் இது ஒரு வியத்தகு விளைவு ஆகும்.\n\nசீபெக் ஒரு பிஸ்மத் தகட்டின் இரு முனைகளிலும் செம்புக் கம்பிகளைப் பொருத்திச் செம்புக் கம்பிகளின் முனைகளுக்கு இடையில் ஓரு கால்வனோ அளவியை இணைத்தார். ஒரு சந்தி, குறைந்த வெப்ப நிலையில் இருக்குமாறு செய்து, பிற சந்தியைச் குடாக்கினால், கால்வனோ அளவியின் வழியாக ஒரு மின்னோட்டம் பாய்ந்தது. இரும்பு, செம்பு ஆகிய இரு உலோகங்களை வைத்து ஆய்வு செய்த போதும், இதே போன்ற மின்னோட்டம் தோன்றியதைச் சீபெக் கண்டார். இவ்விளைவு வெப்ப மின் விளைவு எனவும் அதில் தோன்றும் மின்னோட்டம் வெப்ப மின்னோட்டம் எனவும் கூறப்படுகின்றன .இத்தகைய இரட்டைக் கம்பி மின் சுற்று, வெப்ப மின் இரட்டை எனப்படுகிறது. அதில் தோன்றும் மின்னியக்கு விசை, வெப்ப மின்னியக்கு விசை எனப்படும்.\n\nஇரண்டு சந்திகளும் ஓரே வெப்ப நிலையில் இருக்கும் போது, வெப்ப மின் விளைவு தோன்றுவதில்லை. ஒரு சந்தி உருகும் பனிக் கட்டியிலும், பிற சந்தி குடான நீரிலும் வைக்கப்பட்டால், மின்னோட்டம் உண்டாகிறது. சூடான சந்தியில், செம்பிலிருந்து இரும்புக்கும், குளிர் சந்தியில் இரும்பிலிருந்து செம்புக்கும் மின்னோட்டம் பாய்கிறது. சூடான சந்தியின் வெப்ப நிலையை அதிகரித்தால், வெப்ப மின்னோட்ட அளவும் அதிகரிக்கிறது. சூடான சந்தியின் வெப்ப நிலை 270°C ஆக இருக்கும் போது, வெப்ப மின்னோட்டம் பெருமமாக உள்ளது. சூடான சந்தியின் வெப்ப நிலையை மேலும் அதிகரித்தால், வெப்ப மின்னோட்டம் குறையத் தொடங்கி 540°Cஇல் சுழியாகி விடுகிறது.\n\n1823 ஆம் ஆண்டில் கம்மிங் என்பார் செம்பு—இரும்பு வெப்ப மின் இரட்டையின் வெப்பச் சந்தியின் வெப்ப நிலையை 540°Cக்கு மேல் அதிகமாக்கினால், வெப்ப மின்னோட்டத்தின் திசை மாறி விடுவதாகக் கண்டு பிடித்தார். வெப்பச் சந்தியில், இரும்பிலிருந்து செம்புக்கும், குளிர் சந்தியில் செம்பிலிருந்து இரும்புக்கும் வெப்ப மின்னோட்டம் பாயத் தொடங்குகிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->\n\nவெப்ப மின்னோட்டம் பெருமமாகிற வெப்பச் சந்தி வெப்ப நிலை ஒரு குறிப்பிட்ட வெப்ப மின் இரட்டையின் நடு நிலை வெப்ப நிலை எனப்படும். ஒரு குறிப்பிட்ட வெப்ப மின் இரட்டைக்கான நடு நிலை வெப்ப நிலை ஒரு மாறாத அளவு ஆகும். குளிர் சந்தியின் வெப்ப நிலை எதுவாக இருந்தாலும், நடு நிலை வெப்ப நிலை மாறாது. குளிர் சந்தியின் வெப்ப நிலை 0°Cஇல் உள்ள போது, வெப்பச் சந்தியின் வெப்ப நிலைக்கும், வெப்ப மின்னியக்கு விசைக்கும் இடையில் ஒரு வரை படம் வரைந்தால், ஒரு பரவளைய வடிவமுள்ள கோடு கிடைக்கிறது. E = at + bt² என்ற சமன்பாட்டின் மூலம், வெப்ப மின்னியக்கு விசை வெப்ப நிலையுடன் மாறுகிறது. இங்கு a, b ஆகியவை மாறிலிகள். A என்னும் புள்ளி நடு நிலை வெப்ப நிலையைக் குறிக்கிறது. வெப்ப மின்னோட்டத்தின் திசை மாறுகிற வெப்ப நிலையான B புரட்டு வெப்ப நிலை எனப்படும். புரட்டு வெப்ப நிலை மாறக் கூடியது. நடு நிலை வெப்ப நிலையிலிருந்து, குளிர் சந்தியின் வெப்ப நிலை எவ்வளவு குறைவாயிருக்கிறதோ, அதே அளவில் புரட்டு வெப்ப நிலை நடு நிலை வெப்ப நிலையை விட மிகுதியாக இருக்கும். அதாவது, நடு நிலை வெப்ப நிலை, குளிர் சந்தியின் வெப்ப நிலை, புரட்டு வெப்ப நிலை ஆகிய இரண்டின் சராசரி மதிப்புக்குச் சமமாக இருக்கும். செம்பு—இரும்பு வெப்ப மின்னிரட்டையில், குளிர் சந்தி 0°Cஇல் உள்ள போது, புரட்டு வெப்ப நிலை 540°C ஆகும். குளிர் சந்தி 100°Cஇல் இருந்தால் புரட்டு வெப்ப நிலை 440°C ஆக இருக்கும்,\n\nஆய்வுகள் மூலம் சீபெக் பல உலோகங்களை ஒரு வரிசையாக அமைத்தார். அது சீபெக் வரிசை எனப்படுகிறது. அது பின் வருமாறு:\n\nஇவ்வரிசையில் எவையேனும் இரண்டு உலோகங்களை எடுத்து, வெப்ப மின் இரட்டையை அமைத்தால், அவற்றின் வெப்பச் சந்தி வரிசையில் முன்னுள்ள உலோகத்திலிருந்து, பின்னுள்ள உலோகத்திற்கு வெப்ப மின்னோட்டம் பாயும். இவ்வரிசையில் இரண்டு உலோகங்களுக்கு இடையிலான தொலைவு அதிகமாக, அதிகமாக ஒரு குறிப்பிட்ட வெப்பச் சந்தி வெப்ப நிலைக்கு வெப்ப மின்னியக்கு விசையும் மிகுதியாக இருக்கும். இவ்வாறு, பிஸ்மத், டெலூரியம் ஆகியவற்றால் ஆன ஒரு வெப்ப மின்னிரட்டையில், ஏனைய அனைத்து வெப்ப மின்னிரட்டைகளையும் விட மிகுதியான வெப்ப மின்னியக்கு விசை தோன்றும். அதன் வெப்பச் சந்தியில் பிஸ்மத்திலிருந்து டெலூரியத்திற்கு வெப்ப மின்னோட்டம் பாயும். சீபெக்கின் வரிசையில் உலோகங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆனாலும், உலோகக் கலவைகளுக்கும், வெப்ப மின்னிரட்டைகளாகச் செயல் புரியும் தன்மை உண்டு. இவ்வரிசையில் காரீயத்துக்கு முன்னால் உள்ள உலோகங்கள் வெப்ப மின் தன்மையில் எதிரினமாகவும், காரீயத்துக்குப் பின்னால் உள்ள உலோகங்கள் நேரினமாகவும் கொள்ளப்படுகின்றன. —கே. என். ராமச்சந்திரன் நூலோதி. Brijlal and N.Subrahmanyam, A Text Book of Electricity and Magnetism, Ratan Prakashan Mandir, New Delhi, 1983.\n\nசீம்பால்\n\nகுழந்தை பிறந்த 3-6 நாளில் தாயின் மார்பகங்களிலிருந்து, மஞ்சள் நிறத்தில் சுரக்கின்ற நீர்மத்தையே சீம்பால் (colustrum) என்பர். குழந்தை பிறந்த முதல் சில நாளில், இது 10-40 மிலி/நாள் என்ற அளவில் சுரந்து, பிறகு முழுமையான பாலாக (natural milk) மிகு அளவில் சுரக்கத் தொடங்குகிறது.\n\nசீம்பாலில் தடுப்பாற்றல் பொருள். சீம்பாலில் புரதங்கள், மின்பகுளிகள் (electrolytes), கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஆகியன பெருமளவில் உள்ளன. ஆனால், முழுமையான பாலை விடக் குறை அளவிலேயே கொழுப்பு உள்ளது. புரதத்தின் பெரும் பங்கு IA என்ற தடுப்புக் குளோபுலின் (immunoglobulin) ஆக உள்ளது. மேலும், வேறு பல தடுப்புக் குளோபுலின்களும், எதிர்ப் பொருள்களும் (antibodies) இதில் காணப்படுகின்றன. முன்னரே, தாயின் உடல் பல வித நோய்த் தொற்றுக்கு உட்பட்டிருக்க, வாய்ப்புகள் மிகுதி; ஆதலால் தடுப்புக் குளோபுலின்கள் சீம்பாலில் காணப்படுகின்றன.\n\nசீம்பாலைக் குழந்தை அருந்துவதால், குழந்தையின் குருதியில் இவை உறிஞ்சப்படுகின்றன. இதனால், குழந்தை, பல நோய்களிலிருந்தும் காக்கப் படுகிறது. மேலே கூறப்பட்ட IA வகைக் குளோபுலின், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் குடல் சிலேட்டுமப் படலத்தின் மேல் ஒரு திரை போலப் படிந்து பாதுகாப்பு அளிக்கிறது. குழந்தை, தானே IA குளோபுலினை உருவாக்கும் பக்குவம் பெறும் வரை, குளோபுலின் பல தொற்று நோய்களிலிருந்து, குழந்தையைப் பாதுகாப்பதோடு, பல ஒவ்வாமை விளைவுகளிலிருந்தும் காக்கிறது, பசும் பாலில் IA குளோபுலின், தாய்ப் பாலை விடக் குறைந்த அளவிலேயே உள்ளது; மேலும் பசும் பாலைக் காய்ச்சும் போது, சிறிதளவான IA குளோபுலினும் சிதைந்து விடுகிறது. ஃ லாக்டோஃபெரின், டிரான்ஸ்ஃபெரின் இவற்றுக்குப் பாக்டீரிய எதிர்ப்புப் (antibacterial) பண்பு பெருமளவில் உள்ளது. ஏனெனில், இவை எஷ்செரிச்சிய கோலை (E. coli) போன்ற பாக்டீரியாக்களுக்குத் தேவையான இரும்புச் சத்துக் கிடைக்க விடாமல் செய்து விடுகின்றன. சீம்பாலில் லாக்டோஃபெரின் முதலான புரதங்கள் பசும் பாலை விடப் பெருமளவில் உள்ளன.\n\nசீம்பாலிலும், முதல் இரண்டு வாரங்களில் சுரக்கும் தாய்ப் பாலிலும், வெள்ளணுக்கள் போன்ற செல்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவை பாக்டீரியாக்களை எதிர்ப்பதில் பெரும் பங்கு கொள்கின்றன. எதிர்ப் பொருள் அல்லாத, ஆனால், வைரஸ் நுண்ணுயிர்களை எதிர்க்கும் ஒரு பொருள் சீம்பாலில் உள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். சில வைரஸ் நோய்களிலிருந்து, குழந்தையைக் காக்க இது உதவும்.\n\nசீம்பாலுக்கும், முழுப் பாலுக்கும் உள்ள பிற வேறுபாடுகள். சீம்பால் முழுப் பாலை விட அடர்த்தி மிகுந்தது. புரதம், வைட்டமின், தாது உப்புகள் ஆகியவை சீம்பாலில் முழுமையான பாலை விட மிகுதியாக உள்ளன. ஆனால், கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்து இவை இரண்டும் சீம்பாலில் முழுமையான பாலை விடக் குறைந்த அளவில் உள்ளன.\n\nசீம்பாலைப் பிறந்த குழந்தைக்கு ஊட்டினால் தீங்கு ஏற்படும் என்ற தவறான கருத்து பெரும்பாலான தாய்மார்களிடம் இருந்து வருகிறது. பிறந்த குழந்தைக்குச் சீம்பாலை ஊட்டுவது, குழந்தையை நோய்த் தொற்றுகளிலிருந்து காப்பாற்றுமாதலால், பிறந்த குழந்தைகளுக்குத் தவறாது சீம்பாலை ஊட்ட வேண்டும். —கு. சிவஞானம் நூலோதி. C.B.S. Wood and Simth J.A. Walker Mackeith’s Infant Feeding and Feeding Difficulties, Sixth Edition, Churchill Livingstone, Edinburgh, 1981.\n\nசீமென் விளைவு\n\nஒளித் தோற்றுவாயை ஒரு காந்தப் புலத்தில் வைத்தால், அதன் நிற மாலை வரிகள் பிளவுபடுகின்றன. இது சீமென் விளைவு (Zeeman effect) எனப்படும். இதை 1896ஆம் ஆண்டில், மென் என்பார் கண்டு பிடித்தார். இவ்விளைவு நிற மாலைகளைப் பகுப்பாய்வு செய்வதில், இன்றியமையாத தகவல்களை அளிக்கிறது. ஒவ்வொரு நிற மாலை ஆற்றல் மட்டமும், தனிச் சிறப்பான வகையில் பிளவுபடுகிறது. இதனால், நிற மாலை ஆற்றல் மட்டங்களை அடையாளம் காண முடிகிறது. மேலும் சீமென் விளைவின் உதவியால், எலெக்ட்ரானின் மின்னுக்கும், நிறைக்கும் உள்ள தகவையும், அதன் நுட்பமான காந்தத் திருப்புத் திறனையும் அளவிட. முடிகிறது.\n\nஇயல்பு சீமென் விளைவு. சீமென் விளைவு அமைப்பைக் காந்தப் புலத்திற்குச் செங்குத்தான திசையில் பார்க்கும் போது, ஒரு நிற மாலை வரி மூன்றாகப் பிரிகிறது. காந்தப் புலத்திற்கு இணையான திசையில் பார்க்கும் போது, அது இரண்டாகப் பிரிகிறது. இது இயல்பு சீமென் விளைவு எனப்படும். இவ்வாக்கக் கூறுகளின் ஒளி, படம் 1இல் காட்டப் பட்டவாறு முனைவாக்கம் அடைந்துள்ளது. தற்சுழற்சிக் குவாண்டம் S=0 என உள்ள அனைத்து ஒற்றை வரி அமைப்புகளிலும் இயல்பு சீமென் விளைவு ஏற்படுகிறது. இடம் மாறிய ஆக்கக் கூறு வரிகளின் அதிர்வெண்ணில் ஏற்படும் மாற்றம் Δγ ஐப் பழங்கொள்கை மூலம் மின் காந்தத் தத்துவங்களின் அடிப்படையில் பின் வருமாறு கணக்கிடலாம்.\n\ne என்ற மின்னுள்ள ஒர் எலெக்ட்ரான் r என்ற ஆரமுள்ள ஓடு பாதையில் ω ரேடியன்/நொடி என்ற கோணத் திசை வேகத்துடன் சுற்றி வருவதாகக் கொள்ளலாம். H என்ற காந்தப் புலத்தை ஓடு பாதையின் தளத்திற்குச் செங்குத்தாகச் செலுத்தினால், எலெக்ட்ரானின் ஓடு பாதை வழியாக உள்ள காந்தப்பாயம் மாறுவதால், அதன் திசை வேகம் அதிகரிக்கவோ, குறையவோ செய்யும்.\n\nகாந்தப்புலம் செலுத்தப்படுவதற்கு முன்னர், எலெக்ட்ரானில் உள்ள மைய நோக்கு விசை f₀ எனவும், காந்தப் புலம் செலுத்தப்பட்ட பிறகு, காந்தப் புலத்திற்குக் குறுக்காக எலெக்ட்ரான் பாய்வதால் ஏற்படும் கூடுதல் விசை f எனவும் கொள்ள வேண்டும். அப்போது, f₀ = mω²r, f = He(ω±Δω)r (1)\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> படம் 2 (அ) இல் மைய நோக்கு விசையும், கூடுதல் விசையும் ஒரே திசையில் செயல்படுவனவாகக் காட்டப்பட்டுள்ளது. அவற்றின் கூட்டுத் தொகையை ω+Δω என்ற கோணத் திசை வேகமுள்ள ஓர் எலெக்ட்ரானின் மேல் செயல்படும் மைய நோக்கு விசைக்குச் சமமாக இருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அதன்படி, f + f = mω²r + He(ω+Δω)r\n\n= m (ω+Δω)²r (2) Δω என்பது ωஐ விட மிகச் சிறியது என வைத்துக்கொண்டு, மேற்காணும் சமன்பாட்டைத் தீர்வு செய்தால், பின் வரும் சமன்பாடுகள் கிடைக்கும். Δω = eH/2m\n\nΔγ = eH/4πm (3) இச்சமன்பாடுகள் ஒரு குறிப்பிட்ட e/m மதிப்புடைய, குறிப்பிட்ட மைய விசையின் ஆளுகையில் இயங்கும் அனைத்துத் துகள் அமைப்புகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.\n\nஓர் எலெக்ட்ரானின் e/m மதிப்பைப் பதிலீடு செய்தால், Δγ = 1.3996X10⁶ H/நொடி என வருகிறது. இதற்கு மறுதலையாக நிற மாலை வரிப் பிரிகையின் அளவு Δγ, புலச் செறிவு ஆகியவற்றைப் பதிலீடு செய்து கணக்கிடும் போது, ஓர் எலெக்ட்ரானின் e/m மதிப்பு 1.7572 ± 0.0007 மின் காந்த அலகு/கிராம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனைய முறைகளில் கணக்கிடப்பட்ட e/m மதிப்புகளுடன் இது நன்கு பொருந்தியுள்ளது.\n\nமுரணிய சீமென் விளைவு. இது மிகு சிக்கலான வரிப் பிரிகை விளைவு ஆகும். பழங்கொள்கையின் ஊகங்களுக்கு முரண்பட்டுள்ளமையால், இதற்கு முரணிய சீமென் விளைவு (anomalous Zeeman effect) எனப் பெயரிடப்பட்டது. ஒன்றை விட அதிகமான பன்மைத் தன்மையுள்ள (multiplicity) நிற மாலை ஆற்றல் மட்ட.ங்களின் (terms) கூட்டிலிருந்து உருவாகும் அனைத்து நிற மாலை வரிகளிலும் இது ஏற்படும். படம் 3இல் சோடியத்தின் மஞ்சள் நிற இரட்டை வரிகளுக்கான பிரிகைப் பாங்கு காட்டப்பட்டுள்ளது.\n\nநிற மாலை வரிகளின் பன்மைத் தன்மை எலெக்ட்ரான்களின் தொகு பயன் தற்சுழற்சி வெக்டார் Sஇன் காரணமாக உண்டாகிறது. எனவே, எலெக்ட்ரான் தற்சுழற்சியின் ஒரு பழங்கொள்கை மூலம் அல்லாத காந்தவியலின் நடத்தை காரணமாகவே, முரணிய சீமென் விளைவு ஏற்படுவதாகக் கொள்ளலாம். பழங்கொள்கை, ஓடுபாதைக் கோண உந்தத்தின் L வெக்டாருக்கும், ஒரு காந்தத் திருப்புத் திறனுக்கும் இடையில் பின் வரும் தொடர்பு இருப்பதாகக் கூறுகிறது. μ = (eh/4πmc)L\n\nஆனால், முரணிய சீமென் விளைவுக்கு விளக்கம் அளிக்கும் போது, S-க்கு ஒத்த காந்தத் திருப்புத் திறன் பின் வருமாறு அமைந்திருப்பதாகக் கொள்ள μ = (eh/2πmc)S வேண்டியுள்ளது. இவ்வாறு தற்சுழற்சி, ஓடு பாதை இயக்கம் தோற்றுவிப்பதைப் போல, இரு மடங்கு காந்தத் திருப்புத் திறன் உண்டாக்குகிறது. L, S ஆகிய இரண்டுமே வரையறுக்கப்பட்டவையாக உள்ள ஓர் எலெக்ட்ரானில் தொகு பயன் காந்தத் திருப்புந் திறனைப் பின் வருமாறு குறிப்பிடலாம். μ = g(eh/4πmc)J = gμ₀J இதில் J என்பது L,S ஆகியவற்றின் தொகு பயனான L-S இணைப்பில் மொத்தக் கோண உந்தத்தின் அளவு அகும். μ₀ என்பது eh/4πmc என்ற போர் மாக்னட்டான் (Bohr magneton) ஆகும். g என்பது லான்டே காரணி எனப்படும். அது நிற மாலை ஆற்றல் மட்ட வகையின் சிறப்பியல்பு ஆகும். L-S இணைப்பில், g = 1 + \\frac{J(J+1) + S(S+1) - L(L+1)}{2J(J+1)} பழங்கொள்கைப்படி கணக்கிடப்படும் ஓர் எலெக்ட்ரான் ஓடு பாதைக்கு g=1. இது இயல்பாகச் சீமென் விளைவைத் தோற்றுவிக்கிறது. ஆனால், S என்ற தற்சுழற்சி உள்ள போது, μJக்கு நேர் விகிதத்தில், காந்தப் புலத்தால் உண்டாக்கப்படும் ஆற்றல் மாற்றங்கள் g மடங்கு மிகுதியாக உள்ளன. இதுவே, முரணிய சீமென் விளைவு ஏற்படக் காரணமாகிறது. கொள்கை அடிப்படையிலும், ஆய்வின் அடிப்படையிலும் g மதிப்பைக் கணக்கிடும் போது, எலெக்ட்ரானின் g காரணி சரியாக 2 என்று இல்லாமல், 2.00229 என்ற மதிப்பைப் பெற்றுள்ளது.\n\nபுலத்திசையில் μJ இன் ஆக்கக் கூறு gμ₀M ஆகும். இதில் M என்பது அத்திசையில் J இன் குவாண்டமாக்கப்பட்ட ஆக்கக் கூறு ஆகும். ஆற்றல் எண் கூறுகள் T = T₀ + gμ₀M என்று ஆகி விடுகின்றன. இதில் T₀ என்பது காந்தப் புலம் எதுவும் இல்லாத போது, ஆற்றல் எண் கூறு மதிப்பு; M என்னும் இந்தக் காந்தக் குவாண்டம் எண் J,J-1,J-2,…… -J ஆகிய 2J+1 மதிப்புகளையே பெற்றிருக்கிறது. ஆற்றல் எண் கூறுகளுக்கிடையிலான அனுமதிக்கப்பட்ட இடப் பெயர்ச்சிகள் ΔM=|O|, ±1 என்ற தேர்வு விதிக்கு உட்பட்டே நடை பெற முடியும். ஒற்றை வரி அமைப்புகளில் S சுழிக்குச் சமமாகவும், J = L எனவும் இருப்பதால், gஇன் மதிப்பு ஒன்றாக இருப்பதாலேயே, அவ்வமைப்பில் அனைத்து வரிகளுக்கும் இயல்பு சீமென் விளைவைக் காண முடிகிறது.\n\nஇருமடிச் சீமென் விளைவு. இருமடிச் சீமென் விளைவு (quadratic Zeeman effect) புல வலிமையின் இருமடியைப் பொறுத்து ஏற்படுகிறது. அதில் இரு. வகை உண்டு. முதல் வகை மேலே காட்டப்பட்ட வழிச் சமன்பாடுகளில் உள்ள இரண்டாம் வரிசை உறுப்புகளால் ஏற்படுவது. இது வரை அவை புறக்கணிக்கப்பட்டு வந்தன. இரண்டாம் வகை விளைவு எலெக்ட்ரான் பெரிய ஓடு பாதைகளில் சுற்றி வரும் போது, அதன் டயாகாந்த (diamagnetic) வினைச் செயல்களால் ஏற்படுவது.\n\nதலை கீழ்ச் சீமென் விளைவு. உட்கவர்ச்சி வரிகளில் சீமென் விளைவு தலை கீழ்ச் சீமென் விளைவு (inverse Zeeman effect) எனப்படும். இது ஃபாரடே விளைவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. ஒரு தள முனைவாக்கம் செய்யப்பட்ட ஒளியைக் காந்தப் புலத்தில் வைக்கப்பட்ட ஊடகங்கள் சுழற்றுவது ஃபாரடே விளைவு ஆகும்.\n\nமூலக்கூறுகளில் சீமென் விளைவு. பொதுவாக மூலக் கூற்றில் சீமென் விளைவு மிகச் சிறிய அளவில் ஏற்படுவதால், ஒரு நிலையான காந்தத் திருப்புத் திறன் உள்ள மூலக் கூறுகளுக்கும், அதைப் பதிவு செய்வது இயலாததாகவுள்ளது. J என்ற மொத்தக் கோண உந்தம் கொண்ட ஒவ்வோர் ஆற்றல் மட்டமும் 2J + 1 ஆக்கக் கூறுகளாகப் பிளவுபடுகிறது. அணுக்களிலும் இத்தகைய நிகழ்வு ஏற்படுகிறது. ஆனால், வெளிக் காந்தப் புலத்தின் திசைக்கு இணையான திசையில் அமைகிற காந்தத் திருப்புத் திறன் ஆக்கக் கூறுகள் சிறியவை. ஏனெனில், காந்தத் திருப்புத் திறனையும், உடன் சுமந்து செல்கிற மூலக் கூற்றின் தற்சுழற்சி காரணமாகக் காந்தத் திருப்புத் திறனின் பெரும் பகுதி ஒன்றையொன்று ஓதுக்கி விட்டுச் சுழியாகி விடும். இதன் பின் விளைவாகச் சுழற்சியே இல்லாத அல்லது மிகக் குறைவான சுழற்சியுள்ள மூலக் கூறுகளைத் தவிர, ஏனைய மூலக் கூறுகளில் காந்த ஆற்றல் மட்டங்களின் இடைத் தொலைவு மிகக் குறைவாக இருக்கிறது. சில லேசான மூலக் கூறுகள் இதற்கு விதிவிலக்கானவை. அவற்றில் காந்தத் திருப்புத் திறன் மூலக் கூறின் கட்டமைப்புடன் மிக மெலிந்த வகையில் பிணைந்திருக்கும். எனவே, அது அணுக்களில் இருப்பதைப் போல, வெளிக் காந்தப் புலங்களின் திசையில் தன்னிச்சையாகத் திரும்பித் திசை கொள்ள முடியும்.\n\nபடிகங்களில் சீமென் விளைவு. உட்கவர் நிற மாலையிலோ, ஒளிர்தல் நிற மாலையிலேோ கூர்மையான வரிகளைக் கொண்டுள்ள பல படிகங்களிலும் கெளிவான சீமென் விளைவைக் காண முடியும். இத்தகைய படிகங்கள் குறிப்பாக அருமண் தனிம (rare earths) உப்புகளில் காணப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் படிகங்களுக்குள் இருக்கும் உள்ளிட மின் புலம் பிளவு பட்டுத் தனி அயனிகளின் ஆற்றல் மட்டத்தை இடம் பெயரச் செய்கிறது. எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை இரட்டைப் படையாகவும், படிகச் சமச் சீர்மை குறைந்ததாகவும் இருக்கும் போது, இத்தகைய மின் புலப் பிரிவு முழுமையானதாக இருக்கும். பன்மைக் கூறான தன்மையும் மறைந்து விடும். எனவே, காந்தப் புலத்தால் இதற்கு மேல் பிளவுகளை உண்டாக்க முடியாது. ஒற்றைப்படை அல்லது இரட்டைப் படை எண்ணிக்கை எலெக்ட்ரான்களுடன், படிகச் சம சீர்மை உயர் அளவில் இருக்கும் போது, ஆற்றல் மட்டங்கள் பன்மைக் கூற்றுத் தன்மையுள்ள இரட்டைகளாக அமைகின்றன. அவற்றைக் காந்தப் புலங்களால் பிளவு படுத்த முடியும். ஒவ்வொரு வரியும் நான்கு ஆக்கக் கூறுகளாகப் பிளவு படும். கன சதுரச் சமச் சீர்மை உள்ள படிகங்களில், கோண உந்தம் எலெக்ட்ரான்களின் தற்சுழற்சியின் காரணமாகவே உண்டாகும் போது, நான்குக்கு மேற்பட்ட ஆக்கக் கூறுகளாகப் பிளவு படுவதும் உண்டு.\n\nஅணுக் கருச் சீமென் விளைவு. அணுக் கருவின் காந்தத் திருப்புத் திறன், அணு நிற மாலையில் மென் பிளவுகளை உண்டாக்குகிறது. இவற்றின் எண் மதிப்பு சாதாரண சீமென் விளைவில் காணப்படுவதை விட, ஆயிர மடங்கு குறைவாக இருக்கும். நுண் வரிக் கட்டமைப்பில் ஏற்படும் இச்சீமென் விளைவு வழக்கமாக ஓர் அணுக் கரு பாசன்—பாக் விளைவால் (Paschen-Back effect) மாற்றியமைக்கப் படும். ஒரு வலிமையான காந்தப் புலம் வரிகளின் ஒளிச் செறிவுகளையும், தேர்வு விதிகளையும் மாற்றி அமைக்க முடியும். இதன் காரணமாக வழக்கமாகக் காணப்- படாத நிற மாலை வரிகள் காட்சியளிப்பதுண்டு. காட்டாக, ஒரு காந்தப் புலத்தைச் செலுத்தும் போது, J தேர்வு விதி பயன்படாமல் போகிறது. —கே. என். ராமச்சந்திரன் நூலோதி. J.B. Rajam, Modern Physics, S. Chand and Company Ltd, New Delhi, 1983.\n\nசீமை அகத்தி\n\nகாண்க: அகத்தி\n\nசீமைக் கற்றாழை\n\nகாண்க: கற்றாழை\n\nசீமைக் கிழங்கு\n\nஇதன் தாவரவியல் பெயர் கலேடியம் (Caladium) என்பதாகும். இது ஏரேசி எனப்படும் ஒரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. குளிர் பகுதிகளில் சீமைக் கிழங்கு நன்கு வளரக் கூடியது. இது பெரிய இலைகளைக் கொண்டது. பெரும்பாலும், தழைகளுக்காகவே, இத்தாவரம் பயிரிடப்படுகிறது. இதன் பல சிற்றினங்கள் பெரும்பாலும் தோட்டக் கலைத் துறை மூலம் உருவாக்கப்பட்டு, வணிகத்தில் பயன்படுகின்றன. புதர்ச் செடி வகையைச் சார்ந்த இது, பல்லாண்டுத் (perennials) தாவரமாகும். இத்தாவரத்தின் மட்டக் கிழங்கிலிருந்து (rhizome) நீண்ட இலைக் காம்புடன் பல வண்ணம் கொண்ட அழகான நரம்பமைவுடைய இலைகள் தோன்றுகின்றன.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> பொதுவாக இதன் மஞ்சரிக் காம்பு (peduncle) தனித்தது. மஞ்சரியின் பாளை (spathe) திருகு அமைவில், குழாய் போன்று கழுத்துப் பகுதியில் அமைந்துள்ளது. மஞ்சரி, நேரானது என்றாலும், பாளையை விட.ச் சிறியது. கீழ்ப் பகுதி பட்டைப் போன்றது. மகரந்தத் தாள் பகுதி சூலகத்தை விடப் பெரியது. இத்தாவரம் ஒரு பால் (unisexual) மலர்களைக் கொண்டது. பூக்கள், வெள்ளை நிறமானவை. பூ இதழ்கள் அற்றவை. கனிகள் சதைக் கனி (berry) வகையைச் சார்ந்தவை.\n\nஇத்தாவரத்தின் இலைகள் காய்ந்து துவளத் தொடங்கியவுடன், அனைத்து இலைகளும் உதிர்வதற்குள் நீர் தேங்கியிருக்கச் செய்ய வேண்டும். பின்பு, தொட்டிகள் இட மாற்றம் செய்யப்பட வேண்டும் அல்லது மணற்பரப்பில் வைக்கப்பட வேண்டும். இந்த ஓய்வுக் காலங்களில், தாவரங்கள் குறைந்த வெப்ப நிலையில் இருக்க வேண்டும். மார்ச் மாதத் தொடக்கத்தில் மீண்டும் துளிர்க்கத் தொடங்கும். இவற்றில் பெரிய அளவில் உள்ள மட்டக் கிழங்குகளைத் தேர்ந்தெடுத்து, இலைமட்கு கலந்த மண்ணில், நன்கு சூரிய ஒளி படுமாறு வளர்க்க வேண்டும். இம்முறையில் வளரும் தாவரங்கள் உடனடியாக இனக் கலப்புச் செய்ய ஏற்றனவாக உள்ளன.\n\nஅழகான இலைகளுடன் கூடிய இத்தாவரங்கள் பெரும்பான்மையான நிலப் பரப்பில் பயிரிடப்படுகின்றன. இதற்கேற்ப முதலில் நிலத்தை நன்கு எலும்புத் தூள் கொண்ட உரத்துடன் வளப்படுத்த வேண்டும். மட்டக் கிழங்குகள் ஓய்வு நிலைக்கு (dormant state) உட்படுத்தப்பட்டவையாக இருந்தால், நல்ல வளர்ச்சியைக் கொண்ட தாவரத்தைப் பெறலாம். நல்ல நிறமுடைய தழைகளைக் கொண்ட தாவரங்களைக் கண்ணாடி இல்லத்தில் (glass house) வளர்ப்பதைப் போல், வெளியில் பயிரிட்டு மிகு உற்பத்தி செய்ய இது ஏற்றதன்று. கண்ணாடி இல்லங்களிலும், வெளியிலும் பயிரிடப்படும் இத்தாவரங்களின் தழை வளர்ச்சிக்கு உரமிட்ட பின், அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும். —வே. வெங்கடேசலு\n\nசீமைச் சோம்பு\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இதன் தாவரவியல் பெயர் கேரம் கார்வி (Carum carvi). இது ஏப்பியேசி அல்லது அம்பெல்லிஃபெர்ரே எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது, இது ஒர் இரு பருவத் தாவரம் (biennial). அரிதாக, பல ஆண்டுகள் வரை இருக்கக் கூடியது. மைய, வடக்கு ஐரோப்பிய நாடுகளில் இது பரவலாகப் பயிரிடப்படுகிறது. மேலும் ஹாலண்ட், ஜெர்மன், நார்வே, ஸ்வீடன்,, சோவியத் ஒன்றியக் குடியரசு, மொராக்கோ நாடுகளிலும் பெருமளவில் பயிரிடப்படுகிறது. இச்செடி களி மண் நிலத்தில் நன்கு வளரும்.\n\nஇத்தாவரத்தின் தண்டு நேரானது; கிளைத்தது; 60 செ.மீ. உயரம் வரை வளரும். இலையடி நீளமானது. இலைகள் இறகு போன்று பல பகுதிகளாகப் பிளவு பட்டவை. இதன் சிற்றிலைகள் நீண்டவை. பொதுவாக 8 செ.மீ. நீளம் உடையவை, மேல் இலைகள் சிறியவை. குறைவாகப் பிளவு பட்டவை. குடை மஞ்சரி (umbel) எட்டு அல்லது பத்து ஆரங்கள் கொண்டது.\n\nகனிகள் கிரிமோகார்ப் வகையைச் சார்ந்தவை. 4-6 மி.மீ. நீளமும், 1மி,மீ .அகலமும் கொண்ட கூர்மையான பழுப்பு நிறமுடைய, மென்மையான கனிகள் ஆகும். இவை மணமிக்கவையாதலால், மணப் பொருளாகப் பயன்படுகின்றன. காரத் தன்மையும் நிறைந்தவை.\n\nவிதைகள் மருத்துவப் பயன் மிக்கவை. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தவும், தலை நோய், வெண் குட்டம், வயிற்றுப் புண் ஆகியவற்றைப் போக்கவும் சீமைச் சோம்பு மருந்தாகப் பயன்படுகிறது. முறைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது; வயிற்று வலியைத் தீர்க்கிறது. சிறுநீர்ச் சுரப்பை அதிகரிக்கிறது. குடல் புழுக்களை அழிக்க வல்லது; விக்கலை நிறுத்துகிறது; பசியைத் தூண்டுகிறது; பார்வையை வலிமைப்படுத்துகிறது. கருப்பை வீக்கத்திற்கும் அரிய மருந்தாகும். இங்கிலாந்தில் இதிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், குழந்தை மருத்துவத்தில் பெரும் பங்கு பெறுகின்றன. —வெ. வெங்கடேசலு\n\nசீமைத் தக்காளி\n\nகாண்க: தக்காளி\n\nசீமை நில வேம்பு\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இதன் தாவரவியல் பெயர் ஸ்வெர்ஷியா சிரயிடா (Swertia chirayita). இது ஜென்ஷியனேசி என்ற இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதற்கு, சிரட் குச்சி என்ற பெயரும் உண்டு. புகழ் வாய்ந்த இந்திய மருந்தான சிரேட்டா (chiretta) என்பது நேப்பாளத்தில் வளரும் இதன் காய்ந்த செடிகளிலிருந்து தயாரிக்கப்படுவதாகும்.\n\nசீமை நில வேம்பு ஒரு குத்துச் செடி (herb) வகையைச் சார்ந்தது. இத்தாவரம் வட இந்திய மலைப் பகுதிகளில் நன்கு வளரும். நீண்ட காலமாக, இந்துக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இக்குறுஞ் செடி கி.பி. 1830ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐரோப்பிய நாட்டு மருத்துவத்தில் பெரும் பங்கு பெற்றது. இது 1 மீ. வரை வளரக் கூடிய ஓராண்டு தாவரமாகும். இச்செடியின் அனைத்துப் பகுதிகளும், குறிப்பாக, மலர்ந்த பூக்கள் மருந்திற்காகப் பயன்படுகின்றன.\n\nஇதன் தண்டு மெலிந்து, பளபளப்புடன், மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக இருக்கும். இதன் வேர்கள் ஆணி வேர்த் தொகுதியைச் சார்ந்தவை. இலைகள், இலைக் காம்பற்று எதிர் அடுக்கு (opposite) இலை அமைவில் உள்ளன. வேல் வடிவம் (lanceolate) கொண்டவை; இலையடி அகலமானது; பளபளப்பானது. மஞ்சரி கூட்டுப் பூத்திரள் (panicle) வகையைச் சார்ந்தது. புல்லிகள் நான்கு; இணைந்தவை. அல்லிகள் நான்கு; இணைந்தவை. நான்கு மகரந்தத் தாள்கள் உண்டு, சூலகம்,, இரண்டு சூலக அறைகளுடன், மேல் மட்டச் சூலக அமைவில் இருக்கும். கனிகள் வெடி கனி (capsule) வகையாகும். விதைகள் எண்ணற்றவை.\n\nசெடியின் அனைத்துப் பகுதிகளும் சசப்புத் தன்மை உடையவை. இச்செடியின் தண்டு, இலை, கனி, தரைக் கீழ்த் தண்டு (rhizome), வேர் ஆகியவை மருத்துவத்தில் பெரும் பங்கு பெறும். இதிலிருந்து, ஆயுர்வேத மருந்தான சுதர்சன் மாவு (Sudarshan powder) தயாரிக்கப்படுகிறயது. இது தீராத காய்ச்சல், வயிற்று வலி முதலியவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. மருத்துவத்தில் இதை வெண் சிரெட்டா என்பர். பச்சை சிரெட்டா எனப்படுவது தென்னிந்தியாவில் வளரும் நில வேம்பு அல்லது சிறியா நங்கை ஆகும், சிலர் இரண்டையும் சேர்த்துக் கலப்படம் செய்வதுண்டு. —வே. வெங்கடேசலு\n\nசீமைப் பெருச்சாளி\n\nஇவ்விலங்குகள் முயூரிடே (muridae) குடும்பத்தைச் சார்ந்தனவாகும். இக்குடும்பத்தில் ஏறத் தாழ 98 பேரினங்களுடன், ஏறக் குறைய 457 இனங்களைச் சார்ந்த பழைய உலக எலிகளும்,, சுண்டெலிகளும் காணப்படுகின்றன. சீமைப் பெருச்சாளிகள் மனிதனுக்குப் பயன் தரும் வகையில் காணப்படுவதில்லை. இவை தென் கிழக்கு ஆசியா, யூரேசியா, ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, ஆஃப்ரிக்கா ஆகிய இடங்களில் ஒரளவு காணப்படுகின்றன. வெப்ப மித வெப்பப் பகுதிகளில் இவ்வகையான எலிகள் மிகுதியாக உள்ளன. இவை கொரிப்பன வரிசையில் மையோமார்பா துணை வரிசையில், முயூரிடே குடும்பத்தில், மைலோபோனஸ் பேரினத்தில், ஹார்ஸ்ஃபிலி இனத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சிறப்புப் பண்புகள். சீமைப் பெருச்சாளிகள் மிகவும் பெரியவை. ஏறத் தாழ 800 மி.மீ. நீளமும், 1 கி.கி. எடையும் கொண்டனவாகக் காணப்படுகின்றன. சில நேரங்களில் இவற்றின் உடல் மீது மயிர் அடர்த்தியாகக் காணப்படும், சீமைப் பெருச்சாளிகளின் கடை வாய்ப் பற்கள் எப்போதும் வளர்ந்து கொண்டேயிருக்கும். பற்களின் மேல் பகுதி எளிமையாகக் காணப்படுகிறது. இவற்றின் உள் கண் குழி பெரியதாக விரிவடைந்து காணப்படுவதில்லை, இருப்பினும், நடு மாசட்சின் (massetes) முன் பகுதியைக் கண் குழி சூழ்ந்துள்ளது. கால்கள் அனைத்து விரல்களையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன.\n\nஉடல் அமைப்பு. சீமைப் பெருச்சாளிகள் ஏறத் தாழ 60-80 செ.மீ. நீளம் வளர்கின்றன. இவற்றின் கரடு முரடான மயிர் நுனிப் பழுப்பாகவும், கரும் பழுப்பாகவும், அடிப் பகுதியில் சாம்பல் நிறமாகவும் இருக்கும். உள்ளங்கால்கள் மயிர்களற்றுக் காணப்படும். விரல்களின் நுனியில் நகங்கள் கூர்மையாகக் காணப்படுகின்றன. தலையில் புடைப்பான கண்களும், காது மடலும், மீசை மயிரும் காணப்படுகின்றன. வால் பகுதி திறந்தவாறோ, சிறு செதில்களுடனோ, மயிர் கொண்டோ காணப்படும்.\n\nஉணவு முறைகள். சீமைப் பெருச்சாளிகள் தரைக்கடியில் உள்ள சுரங்க வழிகளில் காணப்படும் வேர்களையும், பல்வேறு தாவரங்களையும் மரப் பொருள்களையும் உண்ணுகின்றன. இரவு நேரங்களில் தரையின் மேற்பரப்பிற்கு வத்து கிடைக்கக் கூடிய பல வகையான பழங்களை உண்கின்றன.\n\nபொருளாதாரச் சிறப்பு. சீமைப் பெருச்சாளிகளால் மரங்களின் வேர்களுக்கும், வீடுகளுக்கும் அழிவு ஏற்படுகிறது, அணை போன்ற மண் அமைப்புகளை அழித்துக் கேடு விளைவிக்கின்றன. தெள்ளுப் பூச்சியின் மூலம் பிளேக் போன்ற அஞ்சத் தக்க கொள்ளை நோயை இவை பரப்பக் கூடும். பிற கொரிக்கும் உயிரிகளைப் போலவே, சீமைப் பெருச்சாளிகளும் விரைவாக இனப் பெருக்கம் செய்கின்றன. ஒரு முறைக்குப் பத்துக் குட்டிகளுக்கு மேல் ஈனுகின்றன. —தி, வாசுதேவன் —என். இராமலிங்கம் நூலோதிM. Ekambaranatha Ayyar, Outlines of Zoology, S. Viswanathan Printers Pvt. Ltd., Madras, 1975.\n\nசீமை வாகை\n\nகாண்க : தூங்குமூஞ்சி மரம்\n\nசீர் குலைவு\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மின்னணுவியல் சுற்றுகளில் பெருக்கிகள் (multipliers) இன்றியமையாதவையாகும். மின்னழுத்த அலைகளின் உயரம், மின்னோட்டம், அலையின் ஆற்றல் ஆகியவற்றைப் பெருக்க, பெருக்கிகள் பயன்படும். இவ்வாறு அலைகளைப் பெருக்கிகள் மூலம் பெருக்கும் பொழுது வெளிப்படும் அலைகள் மூல அலையின் வடிவத்தைப் பெற்றிரா. அலையின் வடிவம் மாறுபட்டுச் சீர்குலைவு (distortion) அடையும். சீர்குலைவு அடைவதால், ஒலிபெருக்கி போன்ற பிற கருவிகளில் தரமில்லா வெளியீடே கிடைக்கும். ஒரு பெருக்கியின் தரத்தை அதன் வெளியீட்டுச் சைசையைக் (signal) கொண்டு அறியலாம். வெளியிடும் சைகை அதன் அலை வடிவில் சீர் குலையக் கூடாது. சதுர அலைகளாக இருந்தாலும், சைன் அலைகளாக இருந்தாலும், அலைகள் சீர் குலையக் கூடாது. படம் 1இல் சதுர வடிவான அலையின் சீர் குலைவும், சைன் அலைகளின் சீர் குலைவும் காட்டப்பட்டுள்ளன.\n\nஅலை வடிவின் சீர் குலைவை அளப்பதற்குச் சீர் குலைவுக் காரணியைப் (distortion factor) பயன்படுத்துகின்றனர். அலைச் சீர் குலைவுகள், மின்னணுவியல் சுற்றுகளில் பயன்படும் வெற்றிடக் குழாய்கள் மும்முனையங்களின் இயல்புகளால் ஏற்படுகின்றன. இக்கருவிகள் சீரற்ற (non-linear) இயல்புகளைப் பெற்றுள்ளமையால், வெளியீட்டில் அலைச் சீர் குலைவு ஏற்படுகிறது. காட்டாக, சீர் குலைந்த அலை கொண்ட சைகையை ஓலி பெருக்கிக்குக் கொடுக்கும் போது, வெளி வரும் ஒலியின் தரம் மிகவும் குறைந்து விடும். சீர் குலைந்த அலையால், சில கருவிகள் பழுதடையலாம். —ச. அர. பழனிச்சாமி\n\nசீர் செய்தல், எரி தன்மை\n\nதுணி எரிதலைத் தடுக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்கள் எரிதல் குறைவிப்பிகள் (flame retardants) எனப்படும். தேய்த்துப் பிடுங்கப்பட்ட (napped) ரேயான் துணிகளால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான உடைகள் எளிதில் தீப்பற்றுவது தெரிய வந்ததால், எரிதல் தவிர்ப்பு முறைகள் தோன்றலாயின. மூன்று நிலைகளிலிருந்து சிக்கலுக்கான தீர்வுகள் கருதப்பட்டன. அவை: துணி மீது வேதிப் பூச்சு அளித்தல், செயற்கை இழைகளைத் தக்கவாறு திருத்தம் செய்தல், புது தீ எதிர்ப்புத் தன்மை மிக்க இழைகளை உருவாக்குதல் ஆகியன,\n\nதுணிக்குத் தீ எதிர்ப்புத் தன்மையை அளிக்கக் கூடிய வேதிப் பொருள்களில் முதன்மையானது ட்ரிஸ் 2, 3 டைபுரோமோபுரொபைல் பாஸ்ஃபேட், இப்பொருள் ஒரு புற்று நோய்த் தோற்றி (carcinogen) என அறியப்பட்ட பின்பு, அதைப் பயன்படுத்தும் வழக்கம் குறையலாயிற்று. அம்மோனியாவால் பதப்படுத்தப்பட்ட டெட்ராகிஸ் ஹைட்ராக்சிமெத்தில் பாஸ்ஃபோனியம் ஹைட்ராக்சைடு, டெட்ராகிஸ்ஹைட்ராக்சி மெத்தில் பாஸ்ஃபோனியம் குளோரைடு, டெகாபுரோமோடைஃபீனைல் ஆக்சைடு, பல ஹாலோஜன்—பாஸ்ஃபரஸ், நைட்ரஜன்—பாஸ்ஃபரஸ், போரான்—பாஸ்ஃபரஸ், ஆன்டிமனி சேர்மங்கள் ஆகியன இத்துறையில் பெரும் பயன் தருகின்றன. இவற்றுள் சில சேர்மங்கள் ஒவ்வாத நெடியை உமிழ்கின்றன, கழுவுவதாலும், உலர் சலவை செய்வதாலும், செயல் திறனை இழப்பவையும் உண்டு. தீ எதிர்ப்புப் பொருள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட துணி வகைக்கே பயன்படுத்த ஏற்றது. எனவே, கழுவுதலிலும், உலர் சலவை செய்தலிலும் திடம் (durability) பாதிக்கப்படுவதிலும், வேறுபாடுகள் உள்ளன.\n\nஇரண்டாம் அணுகு முறையில், நூற்புக் கரைசலில் சில வேதிப் பொருள்களைக் கலந்து தீ எதிர்ப்பு வகை இழைகளை உருவாக்குவர். நிலைத் தன்மை கூடுவதால், தயாரிப்பாளரால் ஓப்புக் கொள்ளப்பட்ட வழி முறையாக இது நிலைத்து விட்டது. உடை உடுத்துவோரின் உடல் நலமும் பாதிக்கப்படுவதில்லை. ஆதலால், நுகர்வோரிடமிருந்தும் ஆதரவு கிடைத்து விடுகிறது. ஒரே வகையைச் சார்ந்த இழைகளுள் தீ எதிர்ப்பு வகை விலை கூடுதலானது. இவ்வகையில் சில இழைகள் நூற்பதற்கு ஏற்றவையாக இல்லை; சில நூல்கள் நெசவுக்கு ஏற்றவையல்ல. சாயத்தின் திடமும், ஒளிக்கு ஈடு கொடுத்தலும் குறைகின்றன. இத்துணிகளைத் தைப்பதற்கு எரிதல் தன்மையற்ற நூலையே பயன்படுத்த வேண்டியிருக்தம். இத்துறையில் அக்ரிலான் ப்ளஸ், செஃப்ரான் FR, டிரெவிரா 271 (பாலிஎஸ்ட்டர்) ஆகியன சில வணிகப் பெயர்கள் ஆகும்,\n\nமூன்றாம் வழிமுறையில் எரிதல் தன்மையற்ற புதிய இழைகளை உருவாக்குதல் பின்பற்றப்படுகிறது. விலையுயர்ந்தவையாக இருப்பதுடன், சீர் செய்தல், சாயமேற்றல் ஆகிய கட்டங்களில் சற்றே கடினம் ஏற்படுத்துவன. நோமெக்ஸ் எனும் அரமிட் இழை, தொழிலகங்களுக்கான துணிகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது. மோடக்ரிலிக் எனும் திருத்தப்பட்ட அக்ரிலிக் இழை சிறாரின் உடை தயாரிப்புக்குப் பயன்படுகிறது. மோடக்ரிலிக் இழையை ஏனையவற்றுடன் கலப்பினமாகவும் பயன்படுத்தலாம். ஃபீனாலிக் ரெசின் வகையைச் சார்ந்த கைனால் தீயணைப்புப் படையினரின் உடைகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. தோர்னெல் எனும் கிராஃபைட் இழை, ராணுவத்தினரின் சீருடைக்கு ஏற்றது. கண்ணாடி, பாலிபென்சிமடசோல், பாலிவினைல் ஆல்கஹாலும், பாலிவினைல் குளோரைடும் இணைந்த கலப்பினமான கார்டிலான், லீவில் ஆகியன பல்வேறு நெகிழி நிறுவனங்களால் தயாரிக்கப்படும் தீ எதிர்ப்பு வகை இழைகளாகும்.\n\nஎரிதல் எனும் நிகழ்ச்சி நெசவியலில் தடுக்கப்பட வேண்டியதேயாயினும், எரிதலைக் கொண்டு இழை, நூல், துணி ஆகியவற்றின் வகையைக் கண்டறியலாம். இழை, நூல் அல்லது துணியை மெல்ல, மெல்ல ஒரு சிறு தீச் சுடரினருகே கொண்டு செல்ல வேண்டும். சூட்டினால் ஏற்படும் வெளிப்படைப் பாதிப்பைக் குறித்துக் கொள்ள வேண்டும். ஆய்வுப் பொருளின் ஒரு நுனியை நேரடியாகச் சுடரில் புகுத்தி, எரிதல்\n\nஅட்டவணை\n\nவிரைவை (burning rate) நோக்க வேண்டும். சுடரிலிருந்து அகற்றிய பின்பு எரியும் விரைவையும், புகையின் நெடியையும் கூர்ந்தாய்தல் வேண்டும். எரியும் பொருள் குளிர்ந்த பின்பு, எஞ்சிய சாம்பலின் அளவு, தோற்றம், நிறம், கடினத் தன்மை ஆகியவற்றைக் குறித்துக் கொள்ள வேண்டும்.\n\nபாவு நூல்களும், நிரப்பு நூல்களும் வெவ்வேறு வகை இழைகளைச் சார்ந்தவையாக இருந்தால், இரு வகைகளையும் தனித் தனியே பிரித்து ஆய்வு செய்தல் வேண்டும். இரு வேறு இழைகள் முறுக்கப் பட்டு, ஒற்றை நூலாக முறுக்கப்பட்டிருந்தால், நூலிலிருந்து இரு இழைகளையும் பிரித்துத் தனித் தனியே ஆய்வு செய்தல் லேண்டும். சீர் செய்தல் முறைகளில் பயன்படும் வேதிப் பொருள்கள் ஆய்வு முடிவுகளைப் பாதிக்கக் கூடும். தீ எதிர்ப்பு வகை (எரியாத வகை) இழைகளான ட்ரெவிரா 271, மோடக்ரிலிக், அக்ரிலான்—அக்ரிலிக் கலப்பு ஆகியவற்றை எரிதல் ஆய்வுகளால் கண்டறிய இயலாது. எரிதல் ஆய்வுகள் அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ளன. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B. P. Corbman, Textiles—Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985.\n\nசீர் துளையிடல்\n\nகாண்க: துளையிடல்\n\nசீர்மை\n\nமின் பாதை மின்னழுத்தம், சுமை போன்றவற்றில் வேறுபாடுகள் இருப்பினும், ஓர் அளவை அல்லது நிலைமையை முதன்மையாக மாறாது பராமரிக்கும் ஒரு செயல் துறையே சீர்மை (regulation) எனப்படும், தொழிலியல் செயல் முறைக் கட்டுப்பாட்டு அமைப்புகளில், வேகம், வெப்ப நிலை, மின்னழுத்தம் அல்லது முதன்மை உறுப்பின் நிலை ஆகியவை சீர்மைக்குள்ளாகும் நிலைமையை அளந்து பின்னூட்டு முறைகளைக் கையாளுவதால் மாறாது வைக்கப்படுகின்றன. அதற்காகத் தேவைப்பட்ட அளவைக்கும் உண்மை நிலைக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் காட்டும் ஒரு குறிப்பு அமைப்பில் செலுத்தப்படுகிறது.\n\nஎடுத்துக் காட்டாக, வேதிப் பொருள்களின் கலவையின் வெப்ப நிலை மிகக் குறைவாக இருப்பின் ஓர் உணரும் உறுப்பு கட்டுப்படுத்திக்கு ஒரு குறிப்பை அனுப்பி மிகு வெப்பம் கொடுக்குமாறு செய்கிறது. சீர்மை எனும் சொல்,, மாறுபடும் பொருளில் ஒரு பாதை அல்லது கருவியின் முனையத்தில் பெறும் மின்னழுத்தக் குறைவைக் குறிப்பிடுகிறது. அது விழுக்காடுகளிலும் குறிப்பிடப்படும். அது போன்றே வேறு எந்த அளவை அல்லது நிலையில் ஏற்படும் குறைவையும் அது குறிப்பிடப் பயன்படும்.\n\nசீர்மையில், மின்னழுத்தச் சீர்மை (voltage regulation) என்றும், வேகத்தின் சீர்மை (speed regulation) என்றும் இரு பகுதிகள் உண்டு. முன்னது மின் இயக்கிகளிலும், மின் மாற்றிகளிலும் உள்ளது. பின்னது, மின்சார மின்னோடிகளில் குறிக்கப் படுகிறது. சீர்மை செய்வதற்குச் சீராக்கி (regulator) என்ற கருவி பயன்படுகிறது. —எஸ், சுந்தரசீனிவாசன்\n\nசீர்மையிலாக் கார்பன், ஒத்த தொகுப்பு\n\nஒரு மூலக் கூறில், குறிப்பாகக் கரிம வகை மூலக் கூறில், ஒரு பகுதியில் எதிர் வடிவத் தோற்றிகள் (enantiotopic groups) இடம் பெறுமாயின், அப்பகுதி சீர்மையின்மைத் தோற்றுவாய் (prochiral centre) எனப்படும்.\n\nபுரோப்பியோனிக் அமிலத்தில் —CH₂—தொகுதியிலுள்ள ஹைட்ரஜன் அணுக்களை ஒவ்வொன்றாகப் புரோமின் அணுவால் பதிலீடு செய்தால், இரு எதிர் வடிவங்கள் கிடைக்கின்றன. பதிலீட்டில் இரு ஹைட்ரஜன் அணுக்களும் ஒரே எதிர் வடிவ வகை மூலக் கூறை அளிப்பதில்லை. இவ்விரு ஹைட்ரஜன் அணுக்களும் எதிர் வடிவத் தோற்றிகள் என்றும், இவற்றைச் சுமந்துள்ள கார்பன், சீர்மையின்மைத் தோற்றுவாய் என்றும் குறிப்பிடப்படுகின்றன. புரோப்பியோனிக் அமிலத்தில் இவ்விரு அணுக்களும் ஒரே மூலக் கூறினுள் உள்ளன. எனவே, இவற்றை அக ஒப்பீட்டு வகை என்பர், மேற்கூறிய பதிலீட்டில் விளைவாகியுள்ள புரோமோ புரோப்பியோனிக் அமிலங்களில், புரோமினையோ, மெத்தில் தொகுதியையோ மேலும் பதிலீடு செய்தால், புதிய எதிர் வடிவ வகை மூலக் கூறுகள் விளைவாகும். இவ்வணுக்களைப் புற ஒப்பீட்டு வகை எனலாம்.\n\nபுரோப்பியோனிக் அமிலத்தில் ஏனைய வகைகளில் வேறுபாடற்ற -CH₂— தொகுதியின் ஹைட்ரஜன் அணுக்கள் சீர்மையற்ற கார்பனைத் தோற்றுவிக்க வல்லனவாதலால், அவற்றை (ஒன்றிலிருந்து மற்றொன்றை) வேறுபடுத்திக் காண்பதற்கு R,S எனும் குறியீடுகள் பயன்படுகின்றன.\n\nஒரே அளவு காந்தப் போர்வையைக் கொண்டிருக்கும் அணுக் கருக்கள் அணுக் கருக் காந்த உடனிசைவு நிரலில் (NMR spectrum) சம அளவுக்கு வேதிப் பெயர்ச்சி (chemical shift) காண்கின்றன. இவ்வணுக் கரு இரட்டைகளைச் சம காந்தப் புலமிகள் (isochronous) எனலாம். வேதி நோக்கில் வேறுபடாத ஹைட்ரஜன் அணுக்கள் இவ்வகையைச் சார்ந்தவை. NMR நிரலியலில் இவ்வணுக்களின் வேதி நிலை மாற்றங்கள் சமமானவையாயினும், சமச் சீர்மையற்ற கரைப்பான்களில் கரைந்த நிலையில் எதிர் வடிவத் தோற்றி வகை ஹைட்ரஜன் அயனிகள் (அணுக்கள்) வேதி நிலை மாற்றங்களில் வேறுபடுகின்றன.\n\nபுரோப்பியோனிக் அமிலம் புரோமினுடன் வினையுறும் போது, உருவாகும் எதிர் வடிவ இரட்டைகள் சம அளவில் தோன்றுகின்றன. எதிர் வடிவத் தோற்றிகள் சீர்மையுற்ற (achiral) வினைப் பொருளுடன் வினை புரியும் போது தோன்றும் இடை நிலைகளின் (transition state) ஆற்றல் அடக்கம் சமமாக உள்ளமையே இதற்குக் காரணமாகும். மாறாக, இவ்வினைப் பொருள் சீர்மையற்றதாயின், இடை நிலைகள் எதிர் வடிவங்களல்லாத, ஒளிச் சுழற்சிப் பண்பு கொண்ட மாற்றுகள் (diastereomers) விளைவாகின்றன.\n\nஇடை நிலைகளின் ஆற்றல் அளவுகள் வேறுபடுவதால், இரு வினைகளின் விரைவுகளும் வேறுபடுகின்றன. இறுதி விளைவாக, இரு எதிர் வடிவ விளைபொருள் மூலக் கூறுகளும் மாறுபட்ட அளவுகளில் உருவாகின்றன. சான்றாக, ஆல்கஹால் டிஹைட்ரஜனேஸ் எனும் நொதியைப் பயன்படுத்தி, ஆல்கஹாலை ஆக்சிஜனேற்றம் செய்யும் வழி முறையில் எதிர் வடிவத் தோற்றிகளான இரு ஹைட்ரஜன்களுள் ஒன்று மட்டுமே பதிலீடாகிறது. அணுக்கள், தொகுதிகள் தவிர, பிணைப்புகளும் சமச் சீரின்மையைத் தோற்றுவிக்கலாம். இரட்டைப் பிணைப்புக் கொண்ட ஒரு மூலக் கூறில் சேர்க்கை வினைகளால் இரு வேறு முப்பரிமாண மாற்றுகள் (stereoisomers) தோன்றக் கூடுமாயின், அவ்விரட்டைப் பிணைப்புகளின் முகப்புகள் (faces) சீரின்மைத் தோற்றிகளாகக் கருதப்படுகின்றன.\n\nஎதிர் வடிவத் தோற்றுவாய்களான இவ்விரு முகப்புகளுக்கும் பெயரிடுவதற்கு வரிசை விதியை (sequence rule) இரு பரிமாணங்களிலும் பயன்படுத்த வேண்டும்.\n\nஇதே பெயரிடும் முறையை எத்திலீன் வகை இரட்டைப் பிணைப்புக்கும் பயன்படுத்தலாம். இங்கு இரட்டைப் பிணைப்பின் இரு முனைகளும் தனித் தனியே வரிசை விதிக்கு உட்படுத்தப்படுகின்றன.\n\nஎனும் வினையை நோக்கினால், வினைபடு மூலக் கூறில் ஒரேயொரு சீர்மையற்ற கார்பனும், வினை விளை பொருளில் இரு சீர்மையற்ற கார்பன்களும் உள்ளன என்பது தெரிய வரும்.\n\nமூலக் கூறு Iஐப் புரோமினேற்றம் செய்தால், மூலக் கூறுகள் IIஉம், IIIஉம் விளைகின்றன. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று எதிர் வடிவங்களல்லாத, ஒளிச் சுழற்சிப் பண்புடைய மாற்றியங்கள் (diastereoisomers) ஆகும். இவையிரண்டும் சம அளவில் விளைவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. வினை படு பொருளின் மூலக் கூறில் பதிலீடாகும் இரு ஹைட்ரஜன் அணுக்களும் மூலக்கூறின் கீழ் பாதிப் பகுதியைத் தொடர்புற்ற நிலையில் காணும் போது, சீர்மை குலைந்தனவாகக் காணப்படுகின்றன. ஒரு ஹைட்ரஜன் வேறொரு ஹைட்ரஜனையும், மற்றொரு ஹைட்ரஜன் மெத்தில் தொகுதியையும் அண்டைத் தொகுதிகளாகக் கொண்டுள்ளன. இதன் விளைவாக, இரு ஹைட்ரஜன் அணுக்களின் பதிலீட்டு வினைகளில் விரைவு வேறுபாடு தோன்றுகிறது. இதே போன்று, தொடக்க மூலக் கூறில் L—வகைச் சமச் சீரற்ற கார்பன் கொண்ட நிலையிலும், புரோமினேற்றத்தால் இரு வேறு எதிர் வடிவங்களல்லாத, ஒளிச்சுழற்சிப் பண்புடைய மூலக் கூறுகள் வெவ்வேறு விரைவில் தோன்றுகின்றன.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> எதிர்வடித் தோற்றிகள் சீர்மையுற்ற விளைப் பொருள்களுடன், சம விரைவில் வினை புரிகின்றன என்பதை நினைவில் கொண்டால், தற்போதைய வினையில் இரு மாற்றியங்களும், வெவ்வேறு அளவுகளில் இரு வேறு விரைவுகளில் உருவாதல் முரண்பாடு போல் தோன்றக் கூடும். ஆனால், இங்கு விளை பொருள் மூலக் கூறுகள் எதிர் வடிவங்களல்லவாதலால், முரண்பாடு இல்லை. இவ்விரு ஹைட்ரஜன் அணுக்களும் எதிர் வடிவமற்ற ஒளிச் சுழல் பண்பு தோற்றிகள் (diastereotopes) எனப்படுகின்றன. இவ்விரு அணுக்களும் ஓரே மூலக் கூறினுள் அமைந்திருப்பதால், இவை அக ஒப்பீட்டு வகையைச் (internal comparison) சார்ந்தவை. ஈர் எதிர் வடிவமற்ற ஒளிச் சுழற்சிப் பண்புடைய மூலக் கூறுகளில் இவ்வணுக்கள் அமைந்திருப்பின், அவை புற ஒப்பீட்டு வகை (external comparison) எனப்படும்.\n\nதொகுதிகளுக்கு உள்ளது போல் இரட்டைப் பிணைப்புகளுக்கும் இவ்வகை மாற்றியங்கள் உண்டு, எதிர் வடிவமற்ற, ஒளிச் சுழல் பண்புடைய மூலக் கூறு தோற்றி வகைக் தொகுதிகளைக் கொண்ட மூலக் கூறு பகுதிகளும் சீர்மை குலைவு தோற்றிகள் (prochiral centred) ஆகலாம். இவை பல்லினத் தோற்றிகள் (heterotopes) எனப்படும்.\n\nஎதிர் வடிவத் தோற்றிகளைப் பொறுத்த வரை சீர்மையுற்ற மூலக் கூறுகளுடனான வினைகளில் இடை நிலைகள் சம ஆற்றல் கொண்டனவாகவும், சீர்மையற்ற (chiral) மூலக் கூறுகளுடனான வினைகளில் இடை நிலைகள் சம ஆற்றல் அற்றனவாகவும், உள்ளன. எதிர் வடிவமற்ற ஒளிச் சுழற்சிப் பண்புடைய மூலக் கூற்றுக் தோற்றிகள் (diastereotopes) சமச் சீரான, சமச் சீரற்ற வினைப் பொருளுடன் வினையுற்றாலும், சம ஆற்றல் கொண்ட இடை நிலைகளைத் தருவதில்லை. இவ்வகைத் தொகுதிகளிலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் வெவ்வேறு வேதி நிலை மாற்றங்களை NMR நிரலில் தோற்றுவிக்கின்றன. ஏனெனில், இவற்றின் சுற்றுப்புறங்கள் வேறுபடுகின்றன. இவ்வகை ஹைட்ரஜன் அணுக்கள் வேறுபட்ட காந்தப் புலமிகள் (anisochronous) எனப்படுகின்றன. இவ்வேதி நிலை மாற்றங்களிலுள்ள வேறுபாடு, இச்சேர்மங்கள் கரைக்கப்பட்டுள்ள கரைப்பான்களின் சீர்மையையோ, சீர்மையின்மையையோ (achirality or chirality) பொறுத்ததன்று.\n\nசீர்மை குலைவு தோற்றம் (prochirality) உயிர் வேதியியலில் முதன்மை இடம் பெற்றுள்ளது. சாதாரண சீர்மையற்ற வேதி வினைப் பொருள்களை விட, நொதிகள் எதிர் வடிவங்களை வேறுபடுத்திக் காட்டுவதில் வல்லமை மிக்கவை.\n\nஎடுத்துக்காட்டாக, சிட்ரிக் ! அமிலத்தை α—ஆக்சோகுளூட்டாரிக் அமிலமாக உயர் வேதி இயங்கு முறையில் மாற்றுதலைக் கருதலாம். இரு CH₂COOH தொகுதிகளும், எதிர்வடிவத் தோற்றிகளாகும். ஐசோடோப் குறியீட்டு ஆய்வுகளால் தெரிய வந்த உண்மை இவ்விரு தொகுதிகளுள் ஒன்று மட்டுமே —COCOOH ஆக மாறுகிறது என்பதேயாகும், —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Jerry March, Advanced Organic Chemistry, Second Edition, McGraw—Hill Book Company, Singapore, 1977; I.L. Finar, Organic Chemistry, Vol 2., Fourth Edition, ELBS, London, 1973.\n\nசீர்மை வளிமம்\n\nஎந்த வெப்ப நிலையிலும், அழுத்த நிலையிலும் பாயில் விதி, சார்லஸ் விதி ஆகிய வளிம இயக்க விதிகளுக்கு உட்படும் வளிமத்திற்குச் சீர்மை வளிமம் (ideal gas) என்று பெயர். இது PV=nRT என்ற சீர்மை வளிமச் சமன்பாட்டிற்கு உட்படும். இச்சமன்பாட்டில் உள்ள P,V,n,R,T என்பவை முறையே வளிமத்தின் அழுத்தம், பருமனளவு, கிராம் மூலக் கூற்றின் எண்ணிக்கை, மோலார் வளிம மாறிலி, தனி பூஜ்ய வெப்ப நிலை ஆகும். நடைமுறையில் பயன்படக் கூடிய இயல் நிலை வளிமங்கள் மிகத் தாழ்ந்த அழுத்தத்திலும், உயர்ந்த வெப்பத்திலும் சீர்மை நிலையை அடைய வளிம இயக்க விதிகளுக்கு உட்பட முயல்கின்றன. சீர்மை வளிமம் இயல் நிலை வளிமத்தினின்றும் இரண்டு தற்கோள்களில் வேறுபட்டதாகும். அவை: 1) வளிமத்தின் மொத்தப் பருமனளவுடன் ஒப்பிடும் போது, எந்த அழுத்த நிலையிலும், வெப்ப நிலையிலும், தனி மூலக் கூற்றின் பருமனளவு மிக, மிக நுண்ணியதாக உள்ளமையால், அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை; 2) வளிமத்தின் மூலக் கூறுகள் தம்மிடையே எவ்வித ஈர்ப்புக். கவர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை; அவை மீள் தன்மை கொண்டவையாக இயங்குகின்றன. சீர்மை வளிமம் ஒரு கருதுகோள் பொருளேயன்றி, நடைமுறையில் காணும் இயல் நிலை வளிமமன்று. —கே. சுந்தரம் நூலோதி. S.H. Maron and C.F. Pruton, Principles of Physical Chemistry, Fourth Edition, The Macmillan Company, New York, 1969.\n\nசீரகம்\n\nஇதன் தாவரவியல் பெயர் குமினம் சிமினம் (Cuminum cyminum). சீரகம் எப்பியேசி எனப்படும் இரு வித்திலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஓராண்டு வாழும் குறுஞ்செடி வகையினது. இத்தாவரம் இந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படுகிறது; பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கேரளா ஆகிய பகுதிகளில் மிகுதியாக. வளர்க்கப்படுகிறது. ஏறக் குறைய, 80—100 செ.மீ. உயரம் வரை வளரும் தன்மையுடையது. இதன் தனி இலைகள் இரண்டு அல்லது மூன்று முறை பிளவு பட்டும், அதற்கு மேற்பட்ட பிளவுகள் இழை போன்றும் இருக்கும். இலைக் காம்பு குட்டையானது. இலையடி உறை போன்றது. இதன் கனியைத் தவிர, பிற பகுதிகள் பளபளப்பான சுரப்பிகளைக் கொண்டுள்ளன. ஆகவே, இத்தாவரத்தின் அனைத்துப் பகுதிகளும் ஒரு வித நறுமணத்துடன் நிகழ்கின்றன. சிறிய ஆணி வேர்த் தொகுதி, பல சல்லி வேர்களைக் கொண்டுள்ளது.\n\nமஞ்சரி, கூட்டுக் குடை மஞ்சரி (compound umbel) வகையைச் சார்ந்தது. மஞ்சரியில் பூக்கள் வட்ட அமைவுடன் நெருக்கமாக அமைந்துள்ளன. மலர்கள் இரு பால் (bisexual) வகையின. புல்லிகள் ஐந்தும் இணைந்து, தொடு இதழ் அமைவில் பசுமை நிறத்துடன் உள்ளன. ஐந்து அல்லிகள் உள்ளன. ஐந்து மகரந்தங்கள்; தனித் தனியானவை; இரண்டு மகரந்தப் பைகள்; மகரந்தங்கள் நீளவாக்கில் வெடிப்பவை. கீழ் மட்டச் சூலகப் பை; இரண்டு சூலக இலைகள் இணைந்திருக்கும். ஒவ்வோர் அறையும் ஒரு தொங்கும் சூலைக் கொண்டுள்ளது.\n\nகனி கிரிமோகார்ப் (cremocarp) வகையைச் சார்ந்தது. ஏறத்தாழ 6 மி.மீ. நீளமுடையது. காண்பதற்குச் சீமைச் சோம்பைப் போலத் தோற்றமளிக்கும். ஆனால், சீமைச் சோம்பைப் போலல்லாமல், நேராக இருக்கும். மெல்லிய, குட்டையான மெல்லிழை போன்ற வளரிகளால், கனியின் பரப்புகள் நெருக்கமாகப் போர்த்தப்பட்டிருக்கும். சீரகத்தில், 2.5—4% அளவு எளிதில் ஆவியாகக் கூடிய எண்ணெய் உள்ளது. இதனால், சீரகம் நறுமணப் பொருளாகப் பயனாகிறது. இது ஒரு சம்பாரப் (condiment) பொருளாகும்.\n\nபயிரிடல். மித தட்ப வெப்பச் சூழ்நிலையில் சீரகம் நன்கு வளரும். தோட்டங்களின் சிறிய பகுதிகளில் இதைப் பயிரிடுவர். வயல்களில் பயிரிடுவதில்லை. இதற்கு முக்கிய காரணம் இதன் பராமரிப்பு மிகவும் கடினமானது. இப்பயிரை இரு பருவத்தில், பயிர் செய்வதுண்டு. தென் மேற்குப் பருவ மழைக்கு முன்போ, வட கிழக்குப் பருவ மழைக்குப் பிறகோ, பயிர் செய்வர். ஓர் ஏக்கர் நிலத்திற்கு 10-15 கி.கி. விதைகள் தேவைப்படும். பூஞ்சைகள் செடியைப் பாதிப்பதுண்டு.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —வே, வெங்கடேசலு நூலோதி. T. E. Wallis, Text Book of Pharmacognosy, J and A Churchill Ltd., London, 1967.\n\nசீரடுக்குப் பாய்வு\n\nபொதுவாக நீர்மங்கள், அவற்றின் பாகுத் தன்மையைப் பொறுத்து, இடையூறு இல்லா நீர்மம், உண்மையான நீர்மம், நியூட்டானியன் நீர்மம், நியூட்டானியன் அல்லாத நீர்மம் என நான்கு வகைப்படும்.\n\nநீர்மத்தில் உள்ள நுண் நீர்மப் பொருள்களின் ஒட்டும் தன்மையைப் பொறுத்து, அதன் பாகு நிலை அமையும். அப்பாகு நிலை, நீர் ஓடும் வேகத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. பாகு இயல் எண் என்பது நீர்மம் தளத்தின் ஓரலகு பரப்பில் செயல்பட்டு, அந்தத் தளத்திற்கு நேர் குத்தாக ஓரலகுத் திசை வேக வாட்டத்தை நிறுவ வல்ல தொடுவியல் விசை (tangent force) ஆகும். பாகு நிலை (viscosity) இல்லாத நீர்மம், இடையூறு இல்லாத சிறந்த நீர்மம் எனப்படும். பாகு நிலை உள்ள நீர்மம், இயற்கையாக உள்ள உண்மை நீர்மம் எனப்படும்.\n\nநீரின் திசை வேகச் சரிவு மற்றும் பாகு நிலைக் குணகம் அல்லது பாகு இயல் எண் ஆகியவற்றின் பெருக்குத் தொகையின் மூலம் நீர்மத்தின் வெட்டுத் தகைவு கிடைக்கும். அசைவு நிலைப் பாகு நிலை, உண்மைப் பாகு நிலைக்கும், நீர்மத்தின் அடர்த்திக்கும் உள்ள விகிதம் ஆகும். இவை நியூட்டானின் விதி எனப்படும். இவ்விதிக்குட்பட்டு இயங்கும் நீர்மம் நியூட்டானியன் நீர்மம் (Newtonian fluid) என்றும் உட்படாமல் இயங்கும் நீர்மம், நியூட்டானியன் அல்லாத நீர்மம் என்றும் கூறப்படும்.\n\nபாகு நிலையின் தீவிரத் தன்மையைப் பொறுத்து உண்மை நீர்மம் சீரடுக்குப் பாய்வு, கட்டுப்பாடற்ற பாய்வு எனப் பிரிக்கப்படுகிறது. சீரடுக்குப் பாய்வு எனப்படும் ஒட்டம் உள்ள நீர்மத்தில் பாகு நிலை, அந்நீர்மத்தின் நிலைம விசையை விட மிகுந்து காணப்படும். இது பாகு நிலைப் பாய்வு (viscosity flow) என்றும் குறிப்பிடப்படும். இது ஏறத் தாழ, கொள்கை அளவில் மட்டுமே ஏற்படக் கூடிய அசாதாரணமான நிலைகளில் மட்டுமே பொறியியல் வல்லுநர்களால் கையாளப்படும் பாய்வு ஆகும். இச்சீரடுக்குப் பாய்வு, ஓர் உருளைக்குள் பல உருளைகளை ஒன்றினுள் ஒன்று இருக்குமாறு அமைத்தால், அவை சரியும் போது, ஏற்படும் தோற்றத்தைப் போல் இருக்கும். அடுக்கு உருளைகள் மெல்லிய தகடுகள் போல நகரக் கூடியவை. மிகக் குறைந்த திசை வேகத்தில் செல்லும் இப்பாய்வு, சீரடுக்குப் பாய்வு எனப்படும்.\n\nஇதற்கு நேர் எதிரிடையாக நீர்மத்தின் நிலைம விசை, நீர்மத்தின் பாகு நிலையை விட மிகுந்து காணப் பட்டால், கட்டுப்பாடற்ற பாய்வு அல்லது சீரற்ற பாய்வு எனப்படும். இப்பாய்வு உள்ள நீர்மத்தில் அடுக்கு உருளை நீர்மங்கள் சிதறி ஒன்றோடு ஒன்று கலந்து கட்டுப்பாடு இல்லாத ஓட்டமாக இருக்கும். மிக அதிகமான திசை வேகத்தில் (velocity) ஒடும் இப்பாய்வு சீரற்ற பாய்வு ஆகும், ஒரு நீர்மம் ஓடும் போது, சீரடுக்குப் பாய்வு நிலையிலிருந்து சீரற்ற பாய்வு நிலைக்கு மாறும் திசை வேகத்தைச் சிக்கலான திசை வேகம் எனக் குறிப்பிடலாம்,\n\nஒரு நீர்மத்தின் பாகு நிலைத் தன்மையின் அளவைக் கண்டு பிடிக்கவும், வகைப்படுத்தவும், ரெனால்ட் கருவி பயன்படுகிறது, இக்கருவியில் ஒரு பெரிய நீர்த் தொட்டியும், அதன் மேல் புறம் சிறிய சாயக் கரைசல் தொட்டியும் உண்டு. நீர்த் தொட்டியுடன் கிடை மட்டத் தளத்தில் 50 மி. மீ. விட்டமும், 1.5 மீ. நீளமும் உள்ள கண்ணாடிக் குழாய் ஒன்று நீர் ஓடுவதற்கு வசதியாக இணைக்கப்பட்டிருக்கும். கண்ணாடிக் குழாய் வழியாக ஓடக் கூடிய நீர் அளவைச் சீராகக் கட்டுப்படுத்த ஒரு வழிக் கட்டுப்பாட்டிதழ் இணைக்கப் பட்டிருக்கும்.\n\nஇப்போது தொட்டியில் மிகுதியான அளவு நீர் நிரப்பி பல மணி நேரத்திற்கு நீர் அசையாதவாறு செய்ய வேண்டும். பின்னர், நீர் கண்ணாடிக் குழாயின் வழியே ஓடுமாறு கட்டுப்பாட்டிதழை மெதுவாகத் திறக்க வேண்டும். நீரின் அடர்த்தி எண்ணுக்குச் சமமான அடர்த்தி எண் உடைய சாயக் கரைசலைச் சீராகக் கண்ணாடிக் குழாயின் மையப் புள்ளியில் செலுத்த வேண்டும். அச்சாயக் கரைசல் மெல்லிய நூல் போன்று, நீரின் நடுவில் எடுத்துச் செல்லப் படுவதைக் காணலாம். அச்சாயக் கரைசல், நீர் சீரான ஓட்டத்தில் இருக்கும் போது, அது அசையாமல் இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும். இச்சீரான பாய்வு, சீரோட்டப் பாய்வு எனப்படும்.\n\nஇப்போது கண்ணாடிக் குழாயினுள் பாய்ந்து கொண்டிருக்கும் நீரின் திசை வேகத்தைப் படிப்படியாக, கட்டுப்பாட்டிதழை இயக்குவதின் மூலம் அதிகரித்தால், ஒரு நிலையில் சாயக் கரைசல், நூல் போன்ற அமைப்பிலிருந்து மாறுபட்டு ஒழுங்கற்ற முறையில் செல்லத் தொடங்கிப் பின்னர், சிதறி ஓடத் தொடங்கும். அவ்வாறு எந்தத் திசை வேகத்தில் ஒழுங்கற்ற ஓட்டம் தொடங்குகிறதோ, அந்தத் திசை வேகத்தைக் குறைந்த சிக்கல் திசை வேகம் எனலாம். மேலும், நீரின் திசை வேகத்தை அதிகரித்துக் கொண்டே போனால், ஒரு நிலையில் சாயக் கரைசல், நூல் செல்வதே காண முடியாத அளவு நீரில் அடித்துச் செல்லப் படும். அந்நிலையில் உள்ள திசை வேகத்தை மிகு சிக்கல் திசை வேகம் எனலாம். அதற்கும் அதிகமான திசை வேகம் உள்ள நீர் ஓட்டத்தைச் சீரற்ற பாய்வு அல்லது கட்டுப்பாடற்ற பாய்வு எனலாம்.\n\nரெனால்டு எண் என்பது நீரின் நிலைம விசைக்கும், அதன் பாகு நிலை விசைக்கும் உள்ள விகிதம் ஆகும். இந்த எண், ஓர் அலகு இல்லாத எண் ஆகும். இதை, நீரின் சராசரி திசை வேகத்தையும், அது செல்லும் குழாயின் விட்டத்தையும் பெருக்கி அத்தொகையை அசைவு நிலைப் பாகு நிலையால் வகுத்துக் கண்டு பிடிக்க வேண்டும்.\n\nரெனால்டு எண் கண்டு பிடிக்கப்பட்டால், அதைப் பயன்படுத்தி நீரின் பாய்வு, சீரடுக்குப் பாய்வு அல்லது சீரற்ற பாய்வு எனக் கணக்கிட முடியும். ரெனால்டு எண் 2000க்கு குறைவாக உள்ள நீர்ம ஓட்டம், சீரடுக்குப் பாய்வு எனப்படும். ரெனால்டு எண் 2800க்கு மேற்பட்டால் அதைச் சீரற்ற பாய்வு எனலாம். 2000-2800 வரை உள்ள நீர்ம ஓட்டம் சீரடுக்குப் பாய்விலிருந்து சீரற்ற பாய்வு நிலைக்கு மாறிக் கொண்டிருக்கும் பாய்வு எனலாம். 2000-2800 வரை உள்ள நீர்ம ஓட்டம் சீரடுக்குப் பாய்விலிருந்து, சீரற்ற பாய்வு நிலைக்கு மாறிக் கொண்டிருக்கும் பாய்வு எனலாம். ரெனால்டு எண் 2000 இருக்கும் போது, நீர்மத்தின் திசை வேகம் குறைந்த சிக்கல் திசை வேகமாகவும், ரெனால்டு எண் 2800 இருக்கும் போது, மிகு சிக்கல் திசை வேகமாகவும் இருக்கும். ஒரு நீர்மம் குழாயினுள் ஓடிக் கொண்டிருக்கும் போது, நீர்மத்தின் பாகு நிலையால், நீரின் ஆற்றல் உயரத்தில் இழப்பு ஏற்படும். ஆற்றல் உயர இழப்பு = \\frac{32\\mu VL}{w.d^2} μ என்பது பாகு நிலை எண்; V என்பது நீர்மத்தின் திசை வேகம்; L—குழாயின் நீளம்; d—குழாயின் விட்டம்; W—நீர்மத்தின் எடை எண் ஆகும்,\n\nகுழாயினுள் நீர்மப் பாய்வு நிகழும் போது, இப்பாகு நிலைத் தன்மையால், குழாயின் மையத்தில் திசை வேகம் மிகுதியாகவும், குழாயின் ஓரப் பகுதிகளில் குறைவாகவும் காணப்படும்.\n\nஒரு குழாயினுள் பாய்ந்து கொண்டிருக்கும் நீர்மத்தில் சீரடுக்குப் பாய்வு ஏற்படும் போது, அந்நீர்மத்தின் பாகு நிலையைப் பொறுத்து ஏற்படும் ரெனால்டு எண் கணக்கிடப்பட்டால், அதன் மூலம் குழாய் உராய்வுக் குணகம் கண்டுபிடிக்க முடியும், சீரடுக்குப் பாய்வில் ஏற்படும் குழாய் உராய்வுக் குணகம் 16 ÷ ரெனால்டு எண், —ஏ.எஸ்.எஸ். சேகர் நூலோதி. S.K. Garg, Irrigation Engineering and Hydraulic Structures, Seventh Edition, Khanna Publishers, New Delhi, 1987.\n\nசீராக்கி\n\nசில அளவுகளின் மதிப்புகளை நிலையாக வைத்திருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டுக் கருவி சீராக்கி (regulator) எனப்படும். வெப்ப நிலைச் சீராக்கி என்னும் கருவி குறிப்பிட்ட சுற்றுப் புறத்தின் வெப்ப நிலையை, மாறாமல் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. இவ்வாறு நிலைப்படுத்தப்படும் மதிப்பு, அச்சீராக்கியின் இடைவெளிக்குள் இருக்குமாறு செய்யப்படுகிறது.\n\nசீராக்கப்பட்ட அமைப்பு என்பது, அவ்வமைப்பின் சில அளவுகளை, நிலையான மதிப்பில் வைத்திருக்க உதவும் சீராக்கியைக் கொண்ட மின்னூட்டக் கட்டுப்பாட்டமைப்பாகும். இதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு, தானியங்கிகளில் உள்ள மின்னழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பாகும். —எஸ். சுந்தரசீனிவாசன்\n\nசீரிசைப் பகுப்பாய்வு\n\nகுறிப்பிட்ட கால கட்ட அமைப்பில், இயற்கையில் ஏற்படும் நிகழ்ச்சியை அளக்கும் கணித முறைக்கு சீரிசைப் பகுப்பாய்வு (harmonic analysis) எனப் பெயர், மிகக் கடினமான, தீர்க்கவியலாத பல சிக்கல் இம்முறையால், சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் தீர்வு காணப்படுகின்றது. எந்திரத்தின் அசைவுகளை அளவிடுவது முதல், சூரியப் புள்ளிகளின் (sun spots) ஆய்வு வரை இது பயன்படுகின்றது.\n\nவெப்பத்தின் பகுப்பாய்வுக் கோட்பாடு (analytical theory of heat) என்ற படைப்பின் மூலம் ஜீன் பாப்டைஸ் ஜோஸப் ஃபூரியா என்பாரே இப்பகுப்பாய்வைப் பற்றி முதன் முதலாக அறிவித்தார். கணிதம், இயற்பியல், பொறியியல் ஆகிய துறைகளில் மிக இன்றியமையாத இப்பகுப்பாய்வு, கடலில் தோன்றி மறையும் அலைகளைப் பற்றிய கணிப்பிற்குப் பெரிதும் பயன்படுகின்றது. குறிப்பிட்ட கால அளவில் ஏற்படும் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, வெப்ப நிலைச் சூரியப் புள்ளிகள், காந்த விலக்கங்கள் (magnetic deviations), ஆற்றின் நீரோட்டம், வானொலியில் ஏற்படும் ஒலிச் சிதறல்கள், ஒலி மாறுபாடுகள் போன்ற காலத்திற்கு அப்பாற்பட்ட நிலைகளைக் கணிப்பதிலும் இது முன்னோடியாக உள்ளது. மிக இக்கட்டான நிலைகளிலும் கூட, சைன், கொசைன் வரிசைகளை உருவாக்கிப் பல தீர்வுகள் எளிதாகத் தீர்க்கப்படுகின்றன.\n\nசிக்கலாகக் கருதப்படும் நிலைகள், சாதாரணக் கணித வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தித் தீர்க்க இயலாத போது, சீரிசை பகுப்பாய்வால் எளிதாக்கப் படுகின்றன. மிகுதியான, ஆழமான பகுப்பாய்வு தேவைப்படும் போது, எந்திரப் பகுப்பாய்வைப் பயன் படுத்துவது சிறந்ததாகும். —எம், அரவாண்டி\n\nசீரியம்\n\nசீரியம் இது ஓர் அருமண் தனிமம். இதன் குறியீடு Ce; அணு எண் 58. அணு எடை 140.12. தனிம மீள் வரிசை அட்டவணையில் லாந்தனைடு வரிசையில் லாந்தனத்திற்கும் புரோட்டோக்டினியத்திற்கும் இடையில் இது இடம் பெற்றுள்ளது. கார அல்லது காரமண் உலோகங்கள் போல் பெருமளவில் காணப் படாமல், மிகக் குறைந்த அளவிலேயே, புவியின் மேற்பரப்பில் கிடைக்கிறது. எனவேதான், இத்தனிமம் அருமண் உலோகம் எனப்படுகிறது. எனினும், தனிம வரிசை அட்டவணையில் உள்ள ஏனைய அருமண் உலோகங்களை விட, இதுவே புவியின் மேற்பரப்பில், மிகுதியும் கிடைக்கும் தனிமம் ஆகும்.\n\nஇயற்கையில் கிடைக்கும் இத்தனிமம் நான்கு ஐசோடோப்புகளாக உள்ளது. Ce-136 (0.193%) மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. Ce 138 0.250%உம், Ce-140 88.48%உம், Ce-142 11.07%உம் காணப்படுகின்றன. ஒரு கதிரியக்கத் தனிமமான இது ஆல்ஃபாக் கதிர்களை வெளியிடுகிறது. Ce-142 என்ற ஐசோடோப்பின் அரை ஆயுட்காலம் 5 X 10⁵ ஆண்டுகள். எம். ஹெச்.லப்ரோத் (M.H. Klaproth) என்பாரால் 1803ஆம் ஆண்டு இவ்வுலோகத்தின் ஆக்சைடு கண்டறியப்பட்டது. ஜெ. ஜெ. பெர்சலீஸ், டபிள்யூ. கிசிஞ்ஜர் என்போராலும் இந்த ஆக்சைடு கண்டறியப்பட்டது. சீரியம் ஏனைய அருமண் உலோகத் தாதுக்களில் கலந்து காணப்படுகிறது. குறிப்பாக, மோனோசைட், ஃபிளாஸ்ட்னாசைட் போன்ற தாதுக்களில் மிகுந்துள்ளது. மேலும், யுரேனியம், தோரியம், புளுட்டோனியம் ஆகிய தனிமங்கள் அணுப் பிளப்பு வினைக்குட்படும் போது சீரியம் உடன் விளைபொருளாகக் கிடைக்கிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->\n\nசீரியத் தின் பொதுவான இணை திறன் 3. எனினும், நான்கு இணை திறனைப் பெற்றுள்ள பல சேர்மங்கள் காணப் படுகின்றன. இந்த அருமண் உலோகம் மட்டுமே +4 அயனியைக் கரைசல் நிலையிலும் பெற்றுள்ளது. ஏனைய அருமண் உலோகங்களிலிருந்து, அயனிப் பரிமாற்ற முறையில் மிகத் தூய்மையாகப் பிரித்தெடுக்க முடிந்தாலும், வேதி முறையிலேயே இது பிரித்தெடுக்கப்படுகிறது. வேதி முறை, இதன் +4 ஆக்சிஜனேற்ற சேர்மம் தரும் பண்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எளிதில் ஆவியாகும் அமிலங்களில் சீரியம் உப்பைச் சூடு செய்தால், சீரிக் ஆக்சைடு கிடைக்கும். இந்த ஆக்சைடின் வாய்பாடு CeO₂ ஆகும்.\n\nசீரிக் ஆக்சைடு ஒரு வெண்மையான பொடி. பொதுவாகப் பயன்படும் பல அமிலங்களில் இது கரைவதில்லை. எனினும், ஓர் ஒடுக்கி (reductant) உடனிருக்க, சல்ஃப்யூரிக் அமிலம் அல்லது வேறு அமிலத்தில் எளிதில் கரையும், மூன்று இணை திறனைப் பெற்றுள்ள நிலையில் உள்ள இதன் உப்புகள் வெண்மை நிறம் உடையவை. எனினும், நான்கு இணை திறன் உப்புகள் பொதுவாக மஞ்சள் நிறம் உடையவை. இவ்வுலோகம் இரும்பு போன்ற சாம்பல் நிறமுடையது. காற்றினால் எளிதில் ஆக்சிஜனேற்றம் அடைந்து, சாம்பல் நிற அடுக்குகளாக ஆக்சைடுகளைத் தரும். தூய நிலையில் உள்ள இவ்வுலோகம் மிகு அளவு வெப்பந்தாங்கியாகக் (pyrophoric) காணப்படுவதில்லை. ஆனால், சிறிது ஆக்சிஜனேற்றம் அடைந்த நிலையிலோ, இரும்புடன் உலோகக் கலவையான நிலையிலோ, மிகச் சிறந்த வெப்பந்தாங்கியாகச் செயல்படுகிறது. இதனால்தான், இதன் உலோகக் கலவையான மிஷ் உலோகம் விளக்கேற்றிகளில் (lighters) உறைகல் (flints) தயாரிக்கப் பெரிதும் பயன்படுகிறது. சீரியத்தின் ஆர்வத்தைத் தூண்டும் மற்றொரு முக்கியமான பண்பு, மிகக் குறைந்த வெப்ப நிலைக்கு அல்லது அதிக அழுத்தத்திற்கு இவ்வுலோகத்தை உட்படுத்தும் போது, இதன் நான்காம் புற வேற்றுமையாக, முக மையக் கன சதுர வடிவுடைய (face centred cubic), டயா காந்தத் தன்மையுடைய, சாதாரண உலோகத்தை விட 18%, அடர்த்தியான புற வேற்றுமை கிடைக்கிறது.\n\nதூய்மையற்ற ஏனைய அருமண் உலோகங்களுடன் கலந்த நிலையில், சீரியம் பெரும் பயன்களைத் தொழிற் துறையில் பெற்றுள்ளது. கண்ணாடித் தொழிற்சாலையில், கண்ணாடிகளுக்கு ஒளி புகாத் தன்மையை ஏற்படுத்தவும், பளபளப்பை உண்டாக்கவும் பயன்படுகிறது. பிற உலோகத் தொழிற்சாலைகளிலும் இது பயன்படுகிறது. ஏனைய அருமண் உலோகங்கள் போலச் சீரியம் உருகிய யுரேனியத்தில், ஒன்றுடன் ஓன்று கலவாத நீர்ம நிலையில் உள்ளது. இப்பண்பைப் பயன்படுத்தி, பயன்படுத்திய யுரேனிய எரி பொருளிலிருந்து பிளப்பு வினை விளை பொருள்களை எளிதில் நீக்கலாம். சீரிக் உப்புகள், பகுப்பாய்வு வேதியியலில் ஆக்சிஜனேற்றியாகப் பயன்படுகின்றன. சீரியம்,, மிஷ் உலோகம் ஆகியவை சீரியம் (111) குளோரைடு (CeCl₃) அல்லது சீரியம், லாந்தனம், நியோடைமியம் ஆகிய குளோரைடுகளின் கலவையை உருகிய நிலையில் மின்பகுப்புச் செய்வதன் மூலம் தயார் செய்யப்படுகின்றன.\n\nசரியம் f தொகுதித் தனிமம் ஆகும். ஏனெனில், அணு எண் அதிகரிக்கும் போது, புதிய எலெக்ட்ரான்கள் f—ஆர்பிட்டாலை வந்தடைகின்றன. இத்தனிமத்தின் எலெக்ட்ரான் அமைப்பு: 1s²2s²2p⁶3s²3p⁶3d4s²4p⁸3d4f²5f²5p⁶5d6s² புதிதாக வரும் எலெக்ட்ரான்கள் உள் வட்டப் பாதையில் உள்ள f—ஆர்பிட்டாலை வந்தடைவதால், சீரியமும், அதன் வரிசைச் சேர்மங்களான லாந்தனைடுகளும் ஓத்த பண்பைப் பெற்றுள்ளன. உள் வட்டப் பாதையில், எலெக்ட்ரான்கள் வந்தடைவதால்தான், அணுப் பருமன் பெருக்கமடையவில்லை. மாறாக, அணுக் கருவின் மின்னேற்றம் அதிகரிப்பதால், வட்டப் பாதையில் உள்ள எலெக்ட்ரான்கள் வலிமையாகக் கவரப்பட்டு, அணுப் பருமன் சுருங்குகிறது. இதனால்தான், இவ்வரிசைத் தனிமங்களில் லாந்தனைடு சுருக்கம் காணப்படுகிறது. அட்டவணையில்கொடுக்கப்பட்டுள்ள அணு ஆரப் புள்ளி விவரம், அயனி ஆரப் புள்ளி விவரம் ஆகியவை இதை விளக்குகின்றன.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> அயனிகளின் ஆர மதிப்புகளிலிருந்தும், லாந்தனைடு சுருக்கத்தையும், சுருக்கத்தில் சீரியத்தின் இடத்தையும் அறிந்த கொள்ளலாம். சீரியத்தின் முதல் அயனி ஆக்க மின்னழுத்தம் (first ionisation potential) 6.97 ஆகும். இதன் நியம ஆக்சிஜனேற்ற அழுத்தம் (Standard oxidation potential) 2.48eV.\n\nமோனோசைட் தாதுவிலிருந்து சீரியம் பிரித்தெடுக்கப்படுகிறது, லாந்தனம் யூரோப்பியம் வரையிலான லேசான லாந்தனைடுகள் 50-70% வரையில் மோனோசைட் தாதுவில் உள்ளன. தூய்மையாக்கப்பட்ட மோனோசைட் தாதுவுடன் அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த்து 210°C இல் பல மணி நேரம் சூடு செய்ய வேண்டும். பழுப்பு நிறக் கழிவைக் குளிர்ந்த நீர் கொண்டு பிரிப்பதன் மூலமாகக் கரையாத சிலிக்கான், சிர்க்கோனியம், டைட்டேனியம் முதலிய ஆக்சைடுகளை நீக்கலாம். இதன் விளைவாக அமிலக் கரைசல் கிடைக்கும். இத்துடன் சோடியம் பைரோபாஸ்ஃபேட் கரைசலைச் சேர்த்தால், தோரியம் வீழ்படிவாகி நீக்கப் படும். கிடைக்கும் வடிநீரில் ஆக்சாலிக் அமிலக் கரைசலைச் சேர்த்தால், லாந்தனம் முதலியன ஆக்சலேட்டுகளாக வீழ்படிவாகும். இத்துடன் அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தைச் சேர்த்து, பின்பு சோடியம் சல்பேட் கரைசலைச் சேர்த்தால், லேசான லாந்தனைடுகள் இரட்டைச் சல்ஃபேட் உப்புகளாக வீழ்படிவு அடையும். இவ்வீழ்படிவுடன் சோடியம் ஹைட்ராக்சைடு சேர்த்த பின் உலர்த்தினால், 50% உள்ள சீரியம் ஆக்சைடு (CeO₂) கிடைக்கும். இத்துடன் நீர்த்த நைட்ரிக் அமிலத்தைச் சேர்த்தால், CeO₂ கரையாது. எனவே வீழ்படிவாகக் கிடைக்கும். பிற லாந்தனைடுகள் கரைந்து விடும்.\n\nசீரியம் ஆக்சைடைக் காரம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தால், Ceஅயனிகள் முழுமையாக Ce அயனியாக ஆக்சிஜனேற்றம் அடையும். ஏனைய லாந்தனைடு மாசுகள் ஆக்சிஜனேற்றம் அடைவதில்லை. Ce ஐ விட Ce அயனிகள் சிறிய அயனிப் பருமனைப் பெற்றுள்ளமையால், இது வலிமை குன்றிய காரமாகவும், மிகக் குறைந்த கரை திறன் உடையதாகவும் காணப்படுகிறது. ஆகவே சிறிதளவு காரத்தைச் சேர்ப்பதன் மூலமாக Ce அயனியை Ce(OH)₄ என்ற வீழ்படிவாக்கலாம். ஏனைய லாந்தனைடுகள் +3 நிலைக் கரைசலிலேயே இருக்கும். இவ்வாறு திடைக்கும் வீழ்படிவிலிருந்து 99% வரை தூய சீரியத்தைப் பெறலாம். பி, ஈ. எம். லியாகத் அலிகான்\n\nசீரீஸ் (பெரும் சிறுகோள்)\n\nசூரிய மண்டலத்தில் உள்ள சிறு கோள்களில் (asteroids) மிகப் பெரிய சிறு கோள் சீரீஸ் (ceres) ஆகும். இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளாகும். இதை 1801ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதலாம் நாள் இத்தாலிய வானியலார் கையூஸ்ப்பி பியாஸி என்பார் கண்டுபிடித்தார். இதன் சுற்று வட்டப் பாதை ஜெர்மன் கணித அறிஞர் கார்ல் ஃபிரெட்ரிக் காஸ் என்பாரால் கணக்கிடப்பட்டது. இது ரோமன் உழவர்களின் தேவதையைக் குறிக்கும் சொல்லாகும்.\n\nசீரீஸ் கோளின் விட்டம் ஏறத் தாழ 955 கி.மீ. ஆகும். இது சூரியனை ஒரு சுற்றுச் சுற்ற 6.4 ஆண்டுகள் ஆறெது. இதன் நிறை (mass), சிறு கோள் அமைப்பின் மொத்த நிறையில் ஏறத் தாழ பாதி அளவு இருக்கும். இக்கோள் தன் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வரும் போது, சூரியனுக்கு அருகே 2.55 வானியல் அலகு தொலைவிலும், மிகு தொலைவாக 2.98 வானியல் அலகு தொலைவிலும் செல்கிறது. இதன் தோற்றப்பொலிவு பரிமாணம் +7. —பெ, வடிவேல்\n\nசீரோட்டப் பாய்வு(பெரும் சிறுகோள்)\n\nதாறுமாறான நிலையின்றி ஒரே சீராக உருவாகும் வளிமப் பாய்வின் நிலை சீரானப் பாய்வு (uniform flow) எனப்படுகிறது.\n\nஒரு நீர்மம் ஓடிக் கொண்டிருக்கும் போது, அந்நீர்மத்தின் நுண் பொருள்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பாதையில் மட்டுமே நகர்ந்து சென்று கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு நீர்ம நுண் பொருளின் பாதையும், ஒன்றோடு ஒன்று மோதாமலும், குறுக்கிடாமலும் சீராகச் சென்றால், அந்நீர்ம ஓட்டம் சீரானப் பாய்வு எனப்படும்.\n\nசீரோட்டப் பாய்வின் வளிமத்தில் துகள்கள் நன்கு அறுதியிடப்பட்ட சீரான பாதையில் நகர்கின்றன. சீரோட்டப் பாய்வின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியிலும், திசை வேகம் நிலையானதாகவோ, நேரத்திற்கு ஏற்ப ஒரே வகையில் வேறுபடுவதாகவோ இருக்கும். திசை வேகம் நிலையாக இருந்தால், நிலையான பாய்வு (steady flow) என்றும், திசை வேகம் மாறிக் கொண்டே இருந்தால், நிலையற்ற பாய்வு (unsteady flow) என்றும் கொள்ளலாம். இத்துடன் ஒப்பு நோக்கும் போது, தாறுமாறான பாய்வில், திசை வேகம் வரைமுறை இல்லாமல் திடீர் திடீரென்று வேறுபடும்.\n\nசீரோட்டப் பாய்வைப் பல்வேறு அடுக்குகளாலான வளிமம் ஒன்றின் மேல் பிற அடுக்குகள் சறுக்கிச் செல்வதாக உணரலாம். காட்டாக, ஒரு குழாயில் சீரோட்டப் பாய்வு நிகழ்வதாகக் கொண்டால், அக்குழாயில் உள்ள வளிமம் சிறு பருமனுள்ள பல்வேறு அளவுகளைக் கொண்ட வளிமக் குழாய்கள் ஒன்றின் மேல் ஒன்று சறுக்கிச் செல்வதற்கு ஒப்பாகும்.\n\nரெனால்ட் எண்ணைப் பொறுத்தே சீரோட்டப் பாய்வு நிகழவும், நிலைக்கவும் செய்யும். ரெனால்ட் எண் கீழ்க் காணுமாறு வரையறுக்கப்படும். அவை பாய்பொருளின் அடர்த்தி, ஒப்புமையான நீளம், ஒப்புமையான ஓட்டத் திசை வேகம், பாகுத் தன்மையின் குணகம் (coefficient of viscosity) எனப்படும், வளிமத்தின் ஒரு குறிப்பிட்ட ஓட்ட ரெனால்ட் எண்ணின் மதிப்பு வரையறுக்கப்பட்டதை விட மிகும் போது, சீரோட்ட. பாய்விலிருந்து கொந்தளிப்புப் பாய்விற்கு அடர்த்தி ρ என்றும், அடிப்படை வளிமத் திசை வேகம் U என்றும், அடிப்படை நீளம் L என்றும், பாய்வு எதிர்ப்புத் தன்மையின் குணகம் μ என்றும் கொண்டால், அலகுகளற்ற ரெனால்ட் எண்ணை எனலாம். ஒரு பாய்வின் ரெனால்ட் எண் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு (மிகை உய்ய எண்) மிகையானால், சீரான பாய்வு மறைந்து, தாறுமாறான நிலையை அடைந்து விடும்.\n\nசில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் சீரோட்டப் பாய்வும், தாறுமாறான பாய்வும் மாறி, மாறி நிகழ்வதுண்டு. ரெனால்ட் எண் மிகை உய்ய நிலையை (critical value) நெருங்கும் போது, இத்தகைய நிகழ்வைக் காணலாம். காற்றைப் போன்று பாய்வு, எதிர்ப்புத் தன்மை மிகக் குறைவாக உள்ள வளிமங்களில் எல்லைப் பரப்பை அடுத்துள்ள வளிம அடுக்குகளிலேயே (எல்லை அடுக்கு) உராய்வின் பாதிப்பு இருக்கும். அதே நேரத்தில் உராய்வின் காரணமாக எல்லை அடுக்கில் உள்ள பாய்வு தாறுமாறாக இருக்கவும் கூடும். எனவே, இத்தகைய வளிமங்களில் சீரோட்டப் பாய்வும், தாறுமாறான பாய்வும் ஒரே நேரத்தில் நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு.\n\nஒரு நீர்மம் ஓடும் போது, நீர்ம ஓட்டப் பாதையில் வரையப்படும் ஒரு கற்பனைக் கோடு, எந்த ஒரு புள்ளியிலும் அக்கற்பனைக் கோட்டிற்கு வரையப்படும் தொடு கோடு, அப்புள்ளி நகர்ந்து செல்லும் திசையைக் குறிக்கும் வகையில் அமைந்தால், அக்கற்பனைக் கோடு சீரோட்டக் கோடு எனப்படும். இச்சீரோட்டச் கோடுகள் ஒரே நேரத்தில் அனைத்து நீர்ம நுண் பொருள்கள் செல்லும் திசையைக் குறிக்கும்.\n\nநீர்மத்தின் எந்த ஒரு பகுதி, பல சீரோட்டக் கோடுகளால் சூழப்பட்டுக் கட்டுப்பாடான ஓட்டம் கொடுக்கிறதோ, அப்பகுதி, சீரோட்டக் குழாய் எனக் குறிக்கப்படும். சீரோட்டக் கோட்டின் குறுக்கே நீர்மம் எதுவும் வர வாய்ப்பு இல்லாமையால், சீரோட்டக் குழாயின் முனைகளைத் தவிர வேறு எந்த இடத்திலும் வேறு நீர்மம் சேர்வதோ, பிரிவதோ இல்லை. இதனால் சீரோட்டக் குழாய் ஒரு திண்மப் பொருளால் ஆன குழாய் போலவே உள்ளது.\n\nநீர்மம் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடம் நோக்கிச் செல்லும் போது, அதன் ஆற்றல் உயரத்தில் அது செல்லும் தொலைவுக்கேற்ப இழப்பு ஏற்படுகிறது. ஆதலால், வெவ்வேறு புள்ளிகளில் ஆற்றல் உயரம் வேறுபடுகிறது. அவ்வாறு உள்ள நீர்ம ஓட்டப் பகுதியில், ஒரே ஆற்றல் உயரம் உள்ள புள்ளிகளை இணைத்து வரையப்படும் கோடு சம ஆற்றல் கோடு எனப்படும். இக்கோடுகள் பொதுவாக, சீரோட்டக் கோடுகளுக்குக் குறுக்குச் செங்குத்துத் திசையில் இருக்கும். இவ்விரு கோடுகளையும் ஒரு நீர்ம ஓட்டத்திற்கு வரைந்தால், அதைப் பாய்வுக் கட்டங்கள் (flow net) எனக் கூறலாம்.\n\nபாய்வுக் கட்டங்கள் வரைபடமாக வரையப்படும் போது, சீரோட்டக் கோடுகளின் அமைப்பு ஒவ்வோர் இடத்திலும் எவ்வாறு உள்ளது என்பதையும், நீர்மம் குறுகிச் செல்லும் போது, அவற்றின் வடிவங்களில் மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பதையும், சீரோட்டக் கோடுகளுக்கு இடையே உள்ள நீர்ம மொத்த அளவு அகலங்களைப் பொறுத்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் அறியலாம்.\n\nசீரோட்டப் பாய்வு என்ற நிலை பொதுவாக இடையூறு அற்ற நீர்ம ஓட்டத்தின் போதும், குறைந்த திசை வேகத்தில் நீர்மம் ஓடும் போதும் மட்டுமே அமையக் கூடும். திசை வேகம் அதிகரித்தால், நீர்ம அடுக்குகள் ஒன்றையொன்று, குறுக்கிட, அது கட்டுப்பாடற்ற பாய்வாக மாறி விடும். நிலத்தடி நீர் ஓர் இடத்திலிருந்து வேறு ஓர் இடத்தை நோக்கிச் செல்லும் போது, தொடக்கத்தில் பல்வேறு அழுத்தங்களாலும், விசைகளாலும் ஆட்கொள்ளப்பட்டுச் சீரற்ற பாய்வாக அமையும். காலப் போக்கில் நிலத்தடி நீர், அது செல்லும் பாதைகளைச் சீராக அமைத்துச் செல்லத் தொடங்கும். அதன் பின், நீர் நிலத்தின் ஊடே கசிந்து செல்லும் பாய்வு, பொதுவாக, சீரானப் பாய்வாக அமையும். பின்னர், வரைபடமாக அமைத்து, நீர் செல்லும் மொத்த அளவைக் கணக்கிட இயலும். —வயி. அண்ணாமலை —வி. சண்முகசுந்தரம் —ஏ. எஸ். எஸ் சேகர் நூலோதி. S.K.Garg, Irrigation Engineering and Hydraulic structures, Seventh Edition, Khanna Publishers, New Delhi, 1987.\n\nசீரோட்டம்\n\nஏதேனும் ஒரு பொருள் ஒரு வளிமத்தின் ஊடே நகர்த்தப்படும் போது, ஏற்படும் தடையைக் குறைக்கும் பொருட்டு, அப்பொருளின் புறப் பரப்பை மாற்றி வடிவமைத்தலே சீரோட்டம் (stream lining) ஆகும். நகர்வுக்கு உருவாகும் தடையே பின்னிழுப்பு எனப் படும்.\n\nபின்னிழுப்பு விசைகள். சீரோட்டம் நிகழ்த்த வடிவமைக்கும் போது, பின்னிழுப்பு விசைகளின் தன்மையையும் கருத்தில் கொள்ள வேண்டும். தூண்டப்பட்ட பின்னிழுப்பு, அலைப் பின்னிழுப்பு,\n\nஅழுத்தப் பின்னிழுப்பு, மேற்பரப்பு உராய்வுப் பின்னிழுப்பு எனப் பின்னிழுப்பு நான்கு வகைப்படும், ஏற்றம் (lift) உருவாக்கும் சிறகு போன்றவற்றிற்குத் தூண்டப்பட்ட பின்னிழுப்பு இன்றியமையாதது. மிகை ஒலி வேகத்தில் பறக்கும் பொருள்களுக்கு அலைப் பின்னிழுப்பு தேவை. ஏனைய இரு வகைப் பின்னிழுப்புகளும் குறை ஒலி வேகப் பறப்பிற்கு மிகவும் இன்றியமையாதவை.\n\nஒரு பொருளின் நகர் திசையில் செயல்படும் அழுத்த விசைகளின் சமமற்ற தன்மையால் அழுத்தப் பின்னிழுப்பு உருவாகிறது. நிறை வளிமத்தில் சீரான திசை வேகத்தில் நகரும் பொருளில் எவ்விதமான அழுத்தப் பின்னிழுப்பும் உருவாவதில்லை. ஆனால், உண்மையான வளிமத்தின் பாய்வு எதிர்ப்பின் காரணமாக, அப்பொருளிலிருந்து பிளந்து பிரிக்கப்படுகிறது. இதன் காரணமாகப் பாய்வின் ஒரு புறத்தில் திசை மாற்றமும், சுழற்சியும் ஏற்படும், இதனால், பொருளின் பின்புறத்தில் அழுத்தக் குறைவு ஏற்பட்டு, மொத்த விளைவாக நகர் திசைக்கு எதிர்த் திசையில் ஓர் இழு விசை உருவாகும்.\n\nவளிமப் பாய்வின் எதிர்ப்பு உராய்வு மூலம் வெப்பம் பரவுதலால், உராய்வுப் பின்னிழுப்பு உருவாகிறது, காற்று, நீர் போன்ற பாய்வு எதிர்ப்புத் தன்மை குறைவாக உள்ள வளிமங்களில் உராய்வின் தாக்கம் எல்லை அடுக்குகளோடு முடிந்து விடுகிறது. பொருளின் நகர் திசைக்கு எதிர்த் திசையில் அழுத்தம் செயல்படுவதால், எல்லை அடுக்குகளுக்குள் நிகழும் பாய்வு திசை மாறி வளிமப் பாய்வுக்கு எதிர்த் திசையில் நகரத் தொடங்கும். படம் 1இல் எல்லை அடுக்கு, பிளவுப் பகுதி, சுழல் பகுதி ஆகியவற்றைக் காணலாம்.\n\nகுறை ஒலி வேகப் பறப்பிற்கான சீரோட்டம். குறை ஒலி வேகப் பறப்பில் சீரோட்டம் என்பது சுழற்சி (wake) குறைவாக இருக்கும் வண்ணம் புறப் பரப்பை வடிவமைப்பதாகும். அவ்வாறு செய்து விட்டால், பிறகு, உராய்வின் மூலம் மட்டுமே பின்னிழுப்பு நிகழும். முடுக்கக் குறைவினால்தான் பாய்வுப் பிளவும், சுழற்சியும் உருவாகின்றன. எனவே, சீரோட்ட வடிவமைப்பில் பாய்வின் முடுக்கம் சீராகக் குறையுமாறு அமைக்க வேண்டும். இதற்கு, நகரும் பொருளின் முன் முனை, உருளை வடிவில் இருக்க வேண்டும். முன் புறத்திலிருந்து எந்தத் தடையும் (மேடு பள்ளம்) இல்லாமல், ஒரே சீராகப் பின்னோக்கிச் சரிவதாக இருக்க வேண்டும். இத்தகைய அமைப்பைப் படம் 2இல் காணலாம்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மிகை ஒலி வேகப் பறப்பிற்கான சீரோட்டம். இவ்வகைப் பறப்பில் நகரும் பொருள், ஒலியை விட மிக விரைவாகப் பறக்கிறது. அழுத்த அலைகள் ஒலி வேகத்தில் பரவுகின்றன. எனவே குறை ஒலிவேகப் பறப்பில் நிகழ்வது போல், இங்கு பாய்வின் திசை மாறுவதில்லை. பாய்வின் திசை, நகரும் பொருளின் முன் முனையில் பட்டு மாறும் போது, ஓர் அழுத்த அலை உருவாகிறது. பொருளின் கூர் முனையைப் பொறுத்- துப் பாய்வின் திசை மாற்றம் வேறுபடுகிறது. திசை மாற்றத்திற்கு ஏற்ப அழுத்த அலையின் வலிமை வேறுபடுகிறது. மிகு கூர் முனையால், திசை மாற்றம் மிகக் குறைவாகவும், அழுத்த அலை வலிமையற்றதாகவும் இருக்கும். நகரும் பொருளின் மையப் பகுதியில் பாய்வு விரிவடைந்து, பொருளின் புறப் பரப்பைத் தழுவிச் செல்கிறது. இதனால், விரிவடையும் அதிர்வலை (expansion shock wave) உருவாக்கப்படுகிறது. பொருளின் வால் புறத்தில், மீண்டும் பாய்வின் திசை மாறுகிறது. இதனால், அழுத்த அதிர்வலை உருவாகிறது. ஒவ்வோர் அதிர்வலையிலும் அழுத்தம், திசை வேகம், அடர்த்தி ஆகியவை வேறுபடுவதால், ஆற்றல் இழுக்கப்பட்டு, அதன் காரணமாக அலைப் பின்னிழுப்பு நிகழ்கிறது.\n\nமிகை ஒலி வேகப் பறப்பிற்கான வடிவமைப்பில் மிகக் கூர்மையான முன் முனை, பின் முனை, மிகுதியில்லாத திசை மாற்றம் இரு முனைகளுக்கிடையேயான பகுதி ஆகியவற்றைக் காணலாம். மிகக் குறைந்த திசை மாற்றமே இருக்க வேண்டும் என்பதால், இரு முனைகளுக்கு இடையேயான பகுதி நேர் கோட்டால் இணைக்கப் பட வேண்டியுள்ளது. வளைந்த பகுதியில், திசை மாற்றம் தொடர்ச்சியாக நிகழ்வதால், இவ்வகை அமைப்பு மிகை ஒலி வேகப் பறப்பில் அமைக்கப்படுவது இல்லை. பின்னிழுப்பு விசையும், அதிர்வலையின் வலிமையும் முனையின் தன்மையைப் பொறுத்தே அமைவதால், நகரும் பொருளின் முன் முனையும், பின் முனையும் நடை முறையில் சாத்தியமான அளவு கூர்மையாகவும், பொருள் மிகக் குறைவான பருமனுள்ளதாகவும் அமைக்கப்படுகின்றன.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> குறை ஒலி வேகப் பறப்புக்கு வடிவமைக்கப்பட்ட பொருள் மிகை ஒலி வேகப் பறப்பில் செயல்படும் போது, பொருளின் மழுங்கிய முன் முனை மோதும் காற்றை மிக விரிவான கோணத்தில் திருப்பி அனுப்பி விடுவதால், பொருளை ஓட்டினாற் போல் அல்லாமல், மிகவும் முன் புறமாக அதிர்வலை தோற்றுவிக்கப்படுகிறது. எனவே, மிக வலிமையான ஓர் அதிர்வலை நகரும் பொருளுக்கு முன் புறமாகப் படம் 4இல் உள்ளவாறு உருவாகிறது, இவ்வலை, நகர் திசைக்குச் செங்குத்தாகச் செயல்படுகிறது. இந்த அலைக்கும், நகரும் பொருளுக்கும் இடையே உள்ள காற்று குறை ஓலி வேகத்தில் நகர்வதாகவும், பொருளின் மழுங்கிய முனையின் மேல் குறை ஓலி வேகத் தத்துவங்களின் படி, பாய்வதாகவும் இருக்கும். மிகை ஒலி வேகப் பறப்பில் உருவாகும் அதிர்வலையை விட, இந்த அதிர்வலை பல மடங்கு மிகு வலிவுடையதாகும். அழுத்தம், அடர்த்தி, திசை வேகம் இவற்றின் மாற்றமும் அதிகமாக இருக்கும். இதனால், ஆற்றல் இழப்பும், பின்னிழுப்பு விசையும் மிகுதியாக இருக்கும். —வயி, அண்ணாமலை நூலோதி. S.K. Garg, Irrigation Engineering and Hydraulic Structures, Seventh Edition, Khanna Publishers, New Delhi, 1987.\n\nசீல்\n\nஇவ்விலங்கு ஊனுண்ணி வரிசையைச் சார்ந்த, பின்னி பீடியா துணை வரிசையில் உள்ள போசிடே குடும்பத்தில் அமைந்த நீர் வாழ் பாலூட்டியாகும். போசிடுகள் (phocids) உண்மையான சீல்கள்; ஒட்டாரிடே குடும்பத்தைச் சேர்ந்த மென்மயிர்த் தோல் சீல்களையும், கடற்சிங்கங்களையும் உள்ளடக்கிய புறச் செவி மடல் கொண்ட சீல்களும் இவற்றில் அடங்கும்.\n\nசீல்களின் உடல், வெடி கண்ணி(torpedo) வடிவம் கொண்டது. கால்கள் குட்டையானவை; முன் கால்களின் விரல்கள் இணைந்து, ஒரு துடுப்புப் போன்று காணப்படும்; ஒவ்வொரு விரலும் நுனியில் கூருகிர் கொண்டிருக்கும். பின் கால் விரல்களை ஒரு விரலிடைச் சவ்வு இணைத்திருக்கும். நீந்தும் போது, துடுப்புப் போன்ற பின் கால்கள் பக்க வாட்டில் மாறி, மாறி விரைவாகத் தள்ளப்படுவதால், உடல் முன்- னேறுகிறது. தரையில் முன் கால்களின் உதவியால், கடினத்துடன் நகர்கிறது. புறச் செவிகள் இல்லாமலிருப்பதும், தரையில் தனக்கே உரிய பாங்கில் நடப்பதும், நீரில் நீந்துகின்ற முறையும், கடல் பசுக்களிடமிருந்து சீல்களைப் பெரிதும் வேறுபடுத்துகின்றன.\n\nஏறத் தாழ 18 வகையான சீல்கள் உள்ளன. வெப்பக் கடல்களை விடத் தட்பக் கடல்களிலும், துருவக் கடல்களிலும் சீல்கள் மிகுதியாக உள்ளன. சீல்களின் வடிவம் பல்வேறு வகைப்படும். தென் சைபீரியாவிலுள்ள பைகால் ஏரியில் உள்ள சிறிய நன்னீர்ச் சீல்தான் அனைத்துச் சீல்களிலும் 3 அடி நீளமுடைய சிறிய சீலாகும். துணை அண்டார்க்டிக்காப் பகுதிகளில் உள்ள கடல் யானை அல்லது யானைச் சீல் அனைத்துச் சீல்களிலும் பெரியது; இதன் ஆண் 4-5 மீ. வரை வளரும் <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> அனைத்துச் சீல்களும், இனப் பெருக்கக் காலத்தில் மட்டும் கூட்டமாக வாழ்பவை. சில வகைச் சீல்கள் பெரும் மந்தைகளாகக் கடற்கரையில் கூடும் அல்லது கடற்பனிக் கட்டிப் பாளங்களில் மிதக்கும். பெண் சீல்களின் வாழ்விடங்களை, யானைச் சீல்கள், பழுப்புச் சீல்கள் ஆகியவற்றின் ஆண்கள் கவர்ந்து கொள்ளும்; அக்காலங்களில், அவை ஆண் சீல்களைத் தம் எல்லைக்குள் வர விடாமல் விரட்டியடிக்கும்.\n\nபொதுவாக, ஒரு பெண் சீல் ஒவ்வொரு முறையும் ஒரு குட்டி ஈனும்; அது அக்குட்டிக்குச் சில காலம் வரை பால் ஊட்டும். குட்டி, 50% கொழுப்பைக் கொண்டு, தாய்ப்பாலின் ஊட்டச் சத்தால் விரைவில் பெருகும். தாய், பால் கொடுக்கும் காலங்களில், தரையில் வந்து தங்கும்; புதிதாகப் பிறந்த குட்டிகள் மென்மையான, பட்டுப் போன்ற மயிர்த் தோலைக் கொண்டிருக்கும்; பால் மறக்கும் காலத்தில், அத்தோல் உதிர, புதிய மயிர் உண்டாகும். துறைமுகச் சீல் கடற்சிறுத்தை அல்லது சிறுத்தைச் சீல் போன்ற சீல்களில் முதல் முடியுதிர்ப்பு, பிறப்பதற்கு முன்பே, முழுமையாகவோ, அரை குறையாகவோ நிகழ்ந்து விடும். பிறக்கும் போது, காணக் கூடிய மென் மயிர்த் தோல் பெரும்பாலும் வெண்மையாக இருக்கும்; சில சமயங்களில் யானைச் சீலில் காணப்படுவது போன்று கருமையாக இருக்கும்.\n\nகுட்டி ஈன்ற பின்பு, மீண்டும் பெண் சீல்கள் சினையுறும். கருக் காலம் 11 மாதங்களோ, அதற்குச் சற்று மிகுதியாகவோ இருக்கும். சில இனங்களில் தொடக்கக் காலத்தில் தட்ப வெப்ப நிலைக்கேற்ப, ௧ரு வளர்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுப் பின்னர், சில திங்கள் கழித்துத் தொடரக் கூடும். இதனால், கருவைக் கருப் பையில் பதிய வைக்கும் காலம் தாமதப்படும். எனவே, உண்மையான கருக் கொண்டிருக்கும் காலம் ஏறத் தாழ ஏழு மாதங்களே இருக்கலாம்.\n\nசீல்கள் 30-40 ஆண்டுகள் வாழும். ஆனால், ஆர்க்டிக் பகுதியிலுள்ள ஆதியாழ்ச் சீல், அன்டார்க்டிக் பகுதியிலுள்ள வெட்டெல் சீல், நண்டு தின்னிச் சீல் போன்றவை கடற்பரப்பில் வாழ்கின்றன. அவை கடலிலுள்ள பனிக் கட்டிப் பாளங்களில் மிதப்பதற்காக மட்டுமே நீரை விட்டு வெளியேறுகின்றன. கரை வாழ் சீல்கள் ஏறக் குறைய நிலையாக இருப்பவை; ஆனால், கடல் நீர்ப் பரப்பில் வாழ்பவை, சீரான நீண்ட பயணங்களை மேற்கொள்ளும்.\n\nசீல்கள் பல் வேறு வகையான ஒலிகளை எழுப்பும் திறன் கொண்டனவ. அவ்வொலிகள் குட்டிகளில் புலம்பல் மிகுந்த கத்தலாகவோ, உறுமலாகவோ, குரைத்தலாகவோ, யானைச் சீலின் புயல் போன்ற முழக்கமாகவோ இருக்கும். சீல்கள் மீன்களையே மிகுதியாக உண்ணுகின்றன; சில சிற்றினங்கள் கணவாய்களையும், ஏனைய மெல்லுடலிகளையும் உண்ணும்; சில சீல்கள் கடின ஓட்டுடலிகளை உணவாகக் கொள்ளும். நண்டு தின்னிச் சீல்கள், தங்கள் பக்கப் பற்களில் உள்ள ரம்பம் போன்ற பற் குவடுகளாலான சல்லடை போன்ற அமைப்பின் மூலம் கடல் நீரைச் சலித்து, அதில் அடங்கியுள்ள கடின ஓட்டுடல் மிதவை உயிரிகளை உணவாகக் கொள்கின்றன. சிறுத்தைச் சீல்கள், பெரும்பாலும் பெங்குவின், இதர கடற்பறவைகளை உண்ணுகின்றன. சீல்கள் தம் தோலுக்குக் கீழே தடித்த கொழுப்பு அடுக்கைக் (blubber) கொண்டுள்ளன. கூட்டமாக வாழும் சில வகைச் சீல்களை, கொழுப்பு நெய் எடுப்பதற்காக மிகுதியாகக் கொல்கின்றனர். அவற்றின் தோல்கள், சில சமயங்களில் பதப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப் படுகின்றன. புதியதாகப் பிறந்த சீல்களின் மென் மயிர்த் தோல்கள், தோல் வணிகத்தில் விலை மிகுந்தவை —கு. வரதராசன்\n\nசீலக்காந்த்\n\nஇது ஓர் அரிய மீன் இனம். கிரேட்டேசியக் காலத்திற்குப் பிறகு, அதாவது கடந்த 70 மில்லியன் ஆண்டு- களாகவே சீலக்காந்த் (coelaconth) மீனினம் காணப்படவில்லை. கிரேட்டேசியக் காலத்திற்குப் பின்னர், இவற்றின் புதை படிவங்கள் கிடைக்கப் பெறவில்லை; எனவே, இந்த இனம் அழிந்து விட்டது என்று உறுதியாக நம்பப்பட்டது. ஆனால், இருபதாம் நூற்றாண்டில் லாட்டிமீரியா என்ற சீலக்காந்த் மீன் தற்செயலாகக் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த மீனைத் தற்போது உயிர் வாழும் புதை படிவம் என்கின்றனர்.\n\nகிரேட்டேசியக் காலத்தில், மேக்ரோபோமா என்ற சீலக்காந்த் மீனினம் வாழ்ந்து வந்தது. இது 60 செ.மீ. நீளம் உடையது. இம்மீன் இனம், கதுப்புத் துடுப்புடைய (crossopterygian) மீனினத்திலிருந்து, படிமலர்ச்சி மூலம் ஒரு கிளையாக வந்ததாகும். கிரேட்டேசியக் காலத்திற்குப் பிறகு, 1938ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாட்டிமீரியா சாலும்னே (latimeria cholumnae) என்ற சீலக்காந்த் மீன் முதன் முதலாகத் தென்ஆஃப்ரிக்காவிலும், கிழக்கு லண்டன் பகுதியிலும், ஜே. எல்.பி. ஸ்மித் என்பாரால் கண்டு பிடிக்கப்பட்ட.து. இம்மீன் கடலில் 150-400மீ. வரை உள்ள ஆழப் பகுதியில் பிடிக்கப்பட்டது. மீண்டும் 1952ஆம் ஆண்டு இரண்டாம் சீலக்காந்த் மீன் மடகாஸ்கர் அருகிலுள்ள கோமோரோ தீவுகளின் கடலில் கண்டு பிடிக்கப்பட்டது.\n\nஇதன் பின், ஜே. மில்லட் என்பார்தம் முயற்சியால், மேலும் 12 சீலக்காந்த் மீன்கள் கண்டு பிடிக்கப் பட்டன. இவற்றின் உள்ளுறுப்புகளை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். சீலக்காந்த் மீன்கள் மிகவும் பெரியவை. ஏறத் தாழ 80 கி.கி. எடையுடையவை. இவை மங்கலான நீல நிறமும், உடல் முழுதும் கனமான காஸ்மாய்டு (cosmoid) செதில்களும் கொண்டவை.\n\nஉணவுக் குழலின் கீழ்ப் பகுதியில் காற்றுப் பை (air bladder) அல்லது நீந்தும்பை உள்ளது. காற்றுப் பை உணவுக் குழலுடன் ஒரு துளையால் இணைக்கப்பட்டுள்ளது. இது பின்னோக்கிச் சென்று முதுகுப் புறத்திலுள்ள வயிற்றுக் குழி முழுமையும் அடைகிறது.\n\nகாற்றுப் பையின் குழி மிகவும் சிறியது. இதில் 95% கொழுப்புக் காணப்படுகிறது. காற்றுப் பை இருந்தும், மூச்சு விடுதல் செவுள்கள் மூலமாகவே நடைபெறுகிறது. சீலக்காந்த்தின் இதயம்,, ஏனைய மீன்களின் இதயத்தை விட, மிகவும் எளிய அமைப்பைக் கொண்டது. இதயக் கீழறைகளுக்குப் பின் புறம் குடாச்சிரை மேலறை காணப்படுகிறது. ஏனைய முதுகெலும்பிகளைப் போலல்லாமல், சீலக்காந்த்தின் சிறுநீரகங்கள் வயிற்றுப் புறத்தில் அமைந்துள்ளன. வயிறு, பை போன்ற அமைப்பைக் கொண்டது; சிறு குடல், சிக்கலான சுருள் தடுக்கிதழ் (valve) அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் முதுகெலும்பில் மையப் பகுதி (centrum) இல்லையென்றாலும், முதுகு நாண் உறுதியானது. இதன் மார்புத் துடுப்புகள், 180° திரும்பக் கூடியவை. இதன் மூக்கில் மைய நீட்சி உறுப்பு (rostral organ) என்ற ஒரு பகுதி காணப்படுகிறது. இது நுகர்ச்சி உறுப்புடன் தொடர்பற்று இருக்கிறது. மண்டை ஓடு இரு பகுதிகளாகக் காணப்படுகிறது. முதுகு நாண், முன்னோக்கிச் சென்று, மண்டை ஓட்டின் பின்புறத்தில் கீழ்ப் புறமாகச் சென்று, மண்டை ஓட்டின் மேற்பகுதியையும், கீழ்ப் பகுதியையும் இணைக்கிறது. —துரை. கருப்பையா நூலோதி. Alfred Sherwood Romer, Vertebrate Palaeontology, Third Edition, University of Chicago, Chicago, 1966.\n\nசீலா மீன்\n\nகுருத்தெலும்புடைய கடல் வாழ் சீலா மீன்கள், ஸ்கோம்பிரிடே (Scombridae) குடும்பத்தைச் சார்ந்த சைபியம் காமர்சோனி (Cybium commersonii) மீன்களாகும். இம்மீன்கள், செங்கடலிலும், ஆஃப்ரிக்காவின் கிழக்குக் கடற்கரைகளிலும், இந்தியாவிலிருந்து மலேயாக் கடற் பகுதிகளுக்கு அப்பாலும், வங்காள விரிகுடாவிலும், நான்கு அடி நீளத்திற்கு மேல் வளரக் கூடியவை. இவை செலாச்ச வரிசையில், செலாச்சிடே துணை வரிசையில், ஸ்கோம்பிரிடே குடும்பத்தில், சைபியம் பேரினத்தில் அடங்கும்.\n\nபொதுப் பண்புகள். சீலா மீன்கள் ஏழு செவுள் தகடுகளைக் கொண்டுள்ளன. இவற்றைப் போலிச் செவுள்களுடையவை Davidson’s Principles and Practise of Medicine, Fourteenth Edition, ELBS, London, 1985.\n\nசீழ் இரத்தம்\n\nநோயூக்கும் குருதித் துகள்கள், குருதி ஓட்டத்தில் காணப்படும் போது, அந்நிலையைச் சீழ் இரத்தம் (pyaemia) என்பர், அத்துகள்களில் நுண்ணுயிரிகள், தூசி, குருதிக் கட்டி ஆகியவை காணப்படுகின்றன.\n\nசீழ் இரத்த நிலையில் குளிர் காய்ச்சலும், விட்டு விட்டு வரக் கூடிய காய்ச்சலும், உடலில் சீழ்க் கட்டிகளும் காணப்படும். எப்பகுதியிலும் சீழ்க் கட்டிகள் காணப்படலாம். எப்போதாவது, மூட்டுகளும் பாதிக்கப்பட்டு, நலிவடைகின்றன. இதயத்திலோ, மூளையிலோ சீழ்க் கட்டிகள் தோன்றினால், மரணம் ஏற்படக் கூடும்.\n\nகுருதித் துகள்கள் மீண்டும், மீண்டும் குருதி ஓட்டத்தை அடையாதவாறு, தடுப்பு முறைகளைக் கையாளுவதே மருத்துவ முறையாகும். வெளிப்புற உட்கபாலச் சிரைப் புழைகளிலிருந்து, குருதித் துகள்கள் வெளிப்பட்டால், உட்புறக் கழுத்துச் சிரையைத் துண்டித்துத் தையல் போடுவது நலம். பொதுப்படையான நுண்ணுயிர் எதிர் மருந்தும் அளிக்க வேண்டும். —மு. கி, பழநியப்பன்\n\nசீழ் எதிரிகள்\n\nஇவை நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடுப்பவை. நோய்கள் பரவுவதற்கு நுண்ணுயிரிகளே பெரிதும் காரணமாகின்றன. சீழ் எதிரிகள், பெரும்பாலும் மனிதன் மற்றும் விலங்கினங்களில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கப் பயன்படுகின்றன. மாறாக, நுண்ணுயிர்க் கொல்லிகள் (disinfectants) பெரும்பாலும், உயிரிலாப் பொருள்களில் (எ-டு: அறுவை செய்யப் பயன்படும் கருவிகள்) உள்ள நுண்ணுயிரிகளையே கொல்லப் பயன்படுகின்றன. ஆயினும், நடை முறையில் இவை இரண்டுமே ஓரே பொருளைக் கொண்டவையாகக் கருதப்படும். நுண்ணுயிர் கொல்லிகளைக் குறைந்த அடர்த்தியில் பயன் படுத்தும் போது, அவை சீழ் எதிரிகளாகப் பயனாகின்றன,\n\nசீழ் எதிரிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. எகிப்தியர்கள் பண்டைக் காலத்தில், சீழ் எதிரிகளைப் பயன்படுத்தி, இறந்தவர்களின் உடலைப் பாதுகாத்து வந்துள்ளனர். செம்மெல் வெய்ஸ் எனும் மருத்துவப் பேராசிரியர் வியன்னாவில் உள்ள மகப் பேறு மருத்துவமனையில், பிணங்களை அறுவை செய்யும் இடத்திலிருந்து வரும் மாணவர்களை, அவர்களின் கைகளைக் குளோரினேற்றமடைந்த சுண்ணாம்பு நீரில் கழுவிய பின்பே, மகப் பேறு மருத்துவ மனைக்குள் வர வேண்டும் என ஆணையிட்டார்; சுண்ணாம்பு நீரில் கழுவிய பிறகே, மருத்துவ மனையில் ஏற்படும் நோய்த் தொற்றுகளின் விகிதத்தை 10%இலிருந்து 1% ஆகக் குறைத்துக் காட்டினார். லிஸ்டர் என்பார் 1867 ஆம் ஆண்டு சீழ் எதிர் அறுவை மருத்துவத்தை (aseptic surgery) அறிமுகப்படுத்தியதன் மூலம், அறுவை முறைகள் வெற்றிகரமாக நடைபெற வழி வகுத்தார். சீழ் எதிரிகளின் வகைகளும், அவை பயன்படுத்தப்படும் முறைகளும் 1. இயற்கைச் சீழ் எதிரி. சூரிய ஒளி, காற்று. 2. இயற்பியல் சீழ் எதிரி. கொதிக்க வைத்தல், எரித்தல், நீராவி, அயனிக் கதிர் வீச்சு. 3. வேதிச் சீழ் எதிரி. அ. அமிலம்: அசெட்டிக் அமிலம், பென்சோயிக் அமிலம், போரிக் அமிலம். ஆ. ஆல்கஹால்: எத்தில் ஆல்கஹால், ஐசோப்புரோப்பைல் ஆல்கஹால். இ. ஆல்டிஹைடு; ஃபார்மால்டிஹைடு. ஈ. குளோர்ஹெக்சிடின். உ. ஹாலோஜன், ஹாலோஜன் சேர்மங்கள்: குளோரின், குளோரோஃபோர், அயோடின், அயோடின் சேர்மங்கள். ஊ. கன உலோகம்; பாதரசச் சேர்மம், வெள்ளிச் சேர்மம், துத்தநாகச் சேர்மம். எ. நைட்ரோஃபுரான். ஏ. சாயம்:; ஜென்சியன் வயலட், அக்ரிடின் சாயம். ஐ. ஆக்சிஜனேற்ற காரணி: ஹைட்ரஜன் பெராக்சைடு. ஓ. ஃபீனால்கள்: ஃபீனால், குளோரோசைலினால், ரெசால்கள். சூரிய ஒளி: சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்கள் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்லுகின்றன. காற்று. உலரச் செய்வதன் மூலம் பாக்டீரியாக்களை அழிக்கிறது. கொதிக்க வைத்தல். பொருள்களை 30 நிமிடம் கொதிக்க வைப்பதன் மூலம் பாக்டீரியாக்களை நன்கு அழிக்க முடியும். எரித்தல். காயங்களுக்குக் கட்டுப் போட்ட துணிகள் முதலியவற்றை எரிப்பதன் மூலம் பாக்டீரியாக்களை அழிக்க முடியும். நீராவி. பொருள்களை நீராவி எந்திரத்துள் (autoclave) வைத்து 100°C வெப்ப நிலையில், 5 நிமிடம் கொதிக்க வைப்பதன் மூலம், எல்லா நுண்ணுயிரிகளையும் கொல்ல முடியும். அயனியாக்கக் கதிர் வீச்சு. அறுவை மருத்துவக் கருவிகள் அயனியாக்கக் கதிர் வீச்சு முறையில் நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படும்.\n\nஅசெட்டிக் அமிலம். இது 1% கரைசலில் தீப் புண்களில் பயன்படுகிறது. இது டோமோனஸ் எனும் பாக்டீரியாவை எதிர்க்க வல்லது.\n\nபென்சோயிக் அமிலம். இது உணவுப் பொருள்களைக் கெடாமல் காக்கும் பொருளாகப் (preservative) பயன்படுகிறது. இதற்கு நச்சுத் தன்மை குறைவு; சுவையற்றது; எனவே, இது உணவுப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது. இது 0.1% அடர்த்தியில் பாக்டீரியாக்கள், காளான்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.\n\nபோரிக் அமிலம். இது பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது, காயங்களுக்காகத் தோலில் இதைத் தடவும் போது, உள்ளுறிஞ்சப்பட்டு நச்சுத் தன்மையை ஏற்படுத்தக் கூடும்; எனவே, சீழ் எதிரியாக இதைப் பயன்படுத்தக் கூடாது.\n\nஎத்தில் ஆல்கஹால். இது 70% அடர்த்தியில் சிறந்த பாக்டீரியா கொல்லியாக இயங்குகிறது. இது பாக்டீரியாக்களின் புரதங்களை வீழ்படிவு அடையச் செய்வதாகக் கருதப்படுகிறது. அறுவை மருத்துவம் செய்யும் முன்னும், ஊசி செலுத்தும் முன்னும், தோலைத் தூய்மைப்படுத்த, பரவலாகப் பயன்படுகிறது.\n\nஐசோபுரோப்பைல் ஆல்கஹால். இது 50% அடர்த்தியில், எத்தில் ஆல்கஹாலுக்கு இணையான சீழ் எதிரியாக உள்ளது.\n\nஃபார்மால்டிஹைடு. இது 2-8% அடர்த்தியில் அறுவை மருத்துவக் கருவிகளையும், கையுறைகளையும் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது. நுண்ணுயிரிகளால் ஏற்படும் சிதைவிலிருந்து பிணங்களையும், பிரித்தெடுக்கப்பட்ட உறுப்புகளையும் பாதுகாத்து வைக்கப் பயன்படுகிறது.\n\nகுளோர்ஹெக்சிடின். அறுவை மருத்துவத்துக்கு முன், மருத்துவர்கள் கைகளைக் கழுவவும், நோயாளிகளின் தோலைத் தூய்மைப்படுத்தவும் 4% அடர்த்தியில் இது பயன்படுகிறது. பிறந்த குழந்தைகளைக் குளிப்பாட்டும் போதும் பயன்படுகிறது.\n\nகுளோரின். இது தனிம நிலையிலும் நீராற்பகுப்புக்கு உட்படும் போதும், ஹைப்போகுளோரஸ் அமிலத்தை வெளியிடுவதன் மூலம், சீழ் எதிரியாக இயங்குகிறது. இது வளிம நிலையில் இருப்பதால், தற்போது பெரும்பாலும் குளோரின் சேர்மங்களே பயன்படுகின்றன.\n\nகுளோரினேற்றமடைந்த சுண்ணாம்பு. இது பெரும்பாலும், குடி நீரைத் தூய்மைப் படுத்தப் பயன்படுகிறது. இது உறுத்தும் தன்மை வாய்ந்ததாகையால், உடலில் இதைப் பயன்படுத்த முடியாது. ஓர் ஆண்டிற்கு மேல் இதை வைத்திருந்தால், இதன் வீரியம் குறையத் தொடங்கும்; ஆயிரம் காலன் நீரைத் தூய்மை செய்ய ஓர் அவுன்ஸ் தேவைப்படுகிறது. இது குளோரினை வெளியிடுவதன் மூலம், பாக்டீரியா கொல்லியாகச் செயல்படுகிறது.\n\nஅயோடின். இது விலை குறைவான—நச்சுக் குறைவான ஆனால், ஆற்றல் வாய்ந்த சீழ் எதிரி ஆகும். அயோடின் ஆல்கஹால் கரைசல் 2% அயோடினைக் கொண்டது; இது அறுவை மருத்துவத்துக்கு முன் தோலைத் தூய்மைப்படுத்த உதவுகிறது; இது சிலரிடத்தில் தோல் எரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.\n\nபோவிடோன் அயோடின். இது பாலிவினைல் பைராலிடோன், அயோடின் ஆகியவற்றின் கூட்டு ஆகும். இது அயோடினை நாட்பட வெளியிடுகிறது. அயோடின் ஆல்கஹால் கரைசல்களை விட, இது தோல் எரிச்சலைக் குறைவாக ஏற்படுத்துகிறது.\n\nபாதரசச் சேர்மம். இது மெர்குரிக் குளோரைடு, மெர்க்குரோகுரோம் ஆகும்.\n\nமெர்க்குரிக் குளோரைடு. இது பாக்டீரியாக்களின் சல்ஃபைட்ரில் தொகுதியுடன் இணைவதன் மூலம் இயங்குகிறது. இது தோலில் உள்ள நுண்ணுயிரிகளை எதிர்க்கிறது.\n\nமெர்க்குரோகுரோம். இது பாதரசத்தின் கரிம வழி வந்த மருந்தாகும். இதுவும் தோலில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கப் பயன்படுகிறது. இது வலிமை குறைவான நுண்ணுயிரி எதிர் இயக்கம் கொண்டது என்பதால், இது இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவது விரும்பத்தக்கது அன்று.\n\nவெள்ளிச் சேர்மங்கள். வெள்ளி நைட்ரேட் 1% கரைசல், பிறந்த குழந்தைகளின் இமை இணைப் படல அழற்சியில் (conjuctivities) சொட்டு மருந்தாகப் பயன்பட்டு வந்தது.\n\nவெள்ளி சல்ஃபாடயசின். இது தீப்புண்களில் தடவும் களிம்பு மருந்தாகப் பயனளிக்கிறது.\n\nதுத்தநாக உப்புகள். துத்தநாக ஆக்சைடு, பல்வேறு தோல் நோய்களில் தடவும் மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.\n\nநைட்ரோ..பியூரான்கள். நைட்ரோஃபுரசோன், தீப்புண்களில் தடவும் மருந்தாகச் சிறந்த பயனளிக்கிறது,\n\nஜென்சியன் வயலெட். இது பாக்டீரியாக்களையும், காளான்களையும் எதிர்க்கிறது. இது 10% ஆல்கஹாலில் 1% கரைசலாகத் தோலில் தடவப்படுகிறது. இது பயன் மிக்க மலிவான மருந்தாகும்; ஆனால், அழுகிய கரிம திசுக்களால் இது செயலிழக்கப்படுகிறது.\n\nஅக்ரிடின் சாயங்கள். அக்ரிஃபிளேவின், புரோஃப்ளேவின் ஆகியவை ஜெனிசியன் வயலெட்டை விடத் திறன் வாய்ந்தவை.\n\nஹைட்ரஜன் பெராக்சைடு. சீழ்க்கட்டிகளில் 3-6% கரைசலாக இதை ஊற்றும் போது, பிறப்பு (nascent) ஆக்சிஜனை இது வெளியிடுகிறது. இவ்வாறு வெளியிடப்படும் ஆக்சிஜன் குமிழ்கள், கரிமப் பொருள்களையும், சீழையும் வெளியேற்ற உதவுகின்றன.\n\nஃபீனால் (கார்பாலிக் அமிலம்). இது அரிக்கும் தன்மை வாய்ந்தது. இது 1:70 என்ற நீர்த்த அளவில் 10 நிமிடங்களில் பாக்டீரியாக்களைக் கொல்கிறது. காயம், புண்களில் தடவும் போது, இது உள்ளுறிஞ்சப் பட்டு, நச்சை ஏற்படுத்தக் கூடும்; எனவே, உடலில் சீழ் எதிரியாகப் பயன்படுத்த இது ஏற்ற மருந்து அன்று.\n\nகுளோரோசைலினால். இது 5% கரைசலில் திறன் வாய்ந்த சீழ் எதிரியாகப் பயன்படுகிறது. டெட்டால் எனும் வணிகப் பெயரில் இது விற்கப்படுகிறது.\n\nகிரசால். இது ஃபீனாலை விட நச்சுக் குறைவான, ஆனால், திறன் வாய்ந்த சீழ் எதிரியாகும், எத்திலீன் டை ஆக்சைடு வளிமமும், காமாக் கதிர் வீச்சும் தொற்று நீக்கியாக உள்ளன.\n\nநடைமுறையில் உள்ள சில சீழெதிர் முறைகள்\n\nமலம், சிறுநீர். இவற்றில் நுண்ணுயிரிகளை நீக்க இவை ஒரு பாத்திரத்தில் சேகரிக்கப்பட வேண்டும். பின், இவற்றிற்குச் சம அளவு குளோரினேற்றமடைந்த சுண்ணாம்பைப் பாத்திரத்தில் இட்டு, இரண்டு மணி நேரம் வைத்திருந்தால், இவற்றிலுள்ள நுண்ணுயிரிகள் அழிந்து விடும்.\n\nஅறைகள். அறைகளின் சுவர்களையும் தரைகளையும் சோப்பு நீரில் கழுவி விட வேண்டும். ஃபீனால் 5% கரைசல் அல்லது 10% ஃபார்மால்டிஹைடு கரைசலைக் கொண்டு, தரைகளையும் சுவர்களையும் துடைக்க வேண்டும். பார்மால்டிஹைடைக் கொதிக்க வைத்து, அதன் நீராவியை 6 மணி நேரம் அறையில் இருக்குமாறு செய்வதன் மூலமும், அறைகளைச் சீழ் எதிர் நுண்ணுயிரிகளிலிருந்து காக்கலாம்.\n\nதொற்று நோயாளியின் உடைகள். இவற்றில் நோயாளி மலம் கழித்திருந்தால், இவற்றை 2.5% கிரசால் கரைசலில் 12 மணி நேரம் நனைய வைத்து, பின் துவைக்க வேண்டும்.\n\nபிணங்கள். பிணங்களைச் சீழ் எதிரிகளிலிருந்து பாதுகாக்க, இவற்றை 40% ஃபார்மால்டிஹைடு கரைசலில் நனைத்து வைக்க வேண்டும்.\n\nஅறுவை மருத்துவக் கருவிகள். இவற்றை ஃபினால் கரைசலில் நனைத்து எடுப்பதன் மூலம், இவற்றிலுள்ள நுண்ணுயிரிகளை அழிக்கலாம். —மு. துளசிமணி நூலோதி. F.S.K. Harar, Essentials of Pharmaco-therapeutics, S. Chand & Company, Ltd., New Delhi, 1985.\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு மேலே முடிவுற்றது. கீழே புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->\n\nசீழ்க் கட்டி\n\nஉடலின் எப்பகுதியிலும் சீழ் சேர்ந்து உருவாவது சீழ்க் கட்டி எனப்படும். பொதுவாக, தோல், நுரையீரல், மூளை, சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றில் இது தோன்றும். வலிமையான உறுத்திகள் (strong irritants) குறிப்பிட்ட பகுதியில் இருப்பதே சீழ்க் கட்டிகள் தோன்றுவதற்குக் காரணமாகும். சான்றாக, ஸ்டெஃபைலோகாக்கஸ் என்ற பாக்டீரியா தோலில் உள்ள மயிர் இடுக்கு வழியே, ஊடுருவிக் கொப்புளத்தை உருவாக்குதல்.\n\nஒரு குறிப்பிட்ட இடத்தில், நோய்த் தொற்று (infection) உருவாகும் போது, அவ்விடம் நோக்கிப் பெருமளவில் நியூட்ரோஃபிலிக் வெள்ளணுக்கள் கூடுகின்றன. இவை செரிக்கும் புரத நொதிகளை (proteases) வெளியிடுவதால், அவ்விடத்தில் உள்ள திசுக்கள் அழிந்து, கூழ்ம நிலையை (semilucid) அடையும்; இதையே சீழ் என்பர்.\n\nசீழ்க் கட்டி என்பது உடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உருவாகும் சீழ் மற்றும் அந்தச் சீழைச் சுற்றி ஏற்படும் அழற்சித் திசு ஆகியவற்றின் கூட்டாகும். திசு—உறுத்தி இருக்கும் வரை, திசு அழிவு ஏற்படுவதுடன் வெள்ளணுக்களையும் அவ்விடத்திற்கு ஈர்க்கும். பிறகு, மேலும் புரதச் சிதைவு ஏற்பட்டுச் சீழ் மிகும் போது, அவ்விடத்தில் அழுத்தம் மிகுதியாகிறது. இதனால், சுற்றுப்புறத் திசுக்களிலிருந்து சீழ்க் கட்டிக்குப் பெருமளவில் நீர் ஈர்க்கப்பட, அதிலுள்ள சீழ் குறை எதிர்ப்புள்ள இடம் நோக்கிப் பாயத் தொடங்கும். இறுதியாகச் சீழ் வெளிப்புறம் நோக்கி வரத் தொடங்கும். தானாகவே சீழ் திசுக்களினூடே புகுந்து, வெளி நோக்கி வரும் போது, பெருமளவில் திசு அழிவு ஏற்படும். திசு அழிவைக் குறைப்பதற்காக, பெரும்பாலும் சீழ்க் கட்டியைக் கீறி, சீழ் எளிதில் வெளியேற வழி செய்யப்படுகிறது. சீழ் உருவாகும் போது, திசு அழிவு பழைய நிலையை அடைய இயலாது. இருப்பினும், அந்தப் புண் ஆறி வடுவாகத் தோன்றும்.\n\nசில சமயங்களில், சீழ் வெளியேறத் தொடங்குவதற்கு முன்னர், சீழ்க் கட்டி உண்டாகக் காரணமான திசு உறுத்தியை இயற்கையான எதிர்ப்புகள் அழித்து விடுகின்றன . இந்நிலையில் அவ்விடத்தில் உருவான குறை அளவான சீழ் உடலிலேயே உள் உறிஞ்சப்படுகிறது. ஆனால், சீழ் மிகுதியாக இருக்கும் போது, ஒரு நீர்மப் பையாக (cyst) உருவெடுத்துத் தங்கி விடும் அல்லது சீழ் மேலும் வற்றி நாரியல் திசுக்கள் சூழ்ந்த கட்டியாக விளங்கும். துளைத்துச் செல்லும் காயங்கள், அண்மைத் தொற்று, நிண நீர், குருதி ஆகியவற்றால் சீழ் உருவாவதற்குக் காரணமான நுண்ணுயிரிகள், சீழ் உருவாகும் இடத்தை அடையலாம். நோய்க் குறிகள். சீழ்க் கட்டியின் பரிமாணம், பாக்டீரியாவின் வீரியம், கட்டியினுள் காணப்படும் அழுத்தம் இவற்றைப் பொறுத்து, நோயாளி குத்தல் வலியை உணர்வார். காய்ச்சல், நடுக்கம் போன்றவையும் காணப்படும். கட்டி உள்ள இடத்தில், வெப்பம், சிவப்பு நிறம், தொட்டால் வலியுணர்ச்சி, வீக்கம், செயலிழப்புப் போன்றவையும் காணப்படும்.\n\nதடுப்பு. சில சமயங்களில் சீழ்க் கட்டி உருவாவதை நுண்ணுயிர் எதிர் மருந்துகளைக் (எ-டு: டெட்ராசைக்ளின்) கொண்டும், பாதிக்கப்பட்ட இடத்தை மேல் தூக்கிய நிலையில் இருத்தியும், போதிய அளவு ஓய்வு கொடுத்தும் தடுக்க முடியும்.\n\nமருத்துவம். சீழ் இருப்பதைக் கண்ட உடனே, அந்தக் கட்டி கீறப்பட்டு, சீழ் வெளியேற்றப்பட வேண்டும். பாக்டீரியாவைக் கண்டு, அதற்கேற்ற எதிர் மருந்து தர வேண்டும். —கு. சிவஞானம் நூலோதி. J.E. Anderson, Pathology, Eighth Edition, The C.V. Mosby Co., St. Louis, 1985.\n\nசீழ்க் கருப்பை\n\nகால்நடைகளுக்குக் கருப்பையில் ஏற்படும் பல நோய்களில் சீழ்க் கருப்பையும் ஒன்றாகும். இந்நோய் மாடு, குதிரை, நாய், பூனை போன்றவற்றில் காணப்படும். இந்நோயால் தாக்கப்படும் கால்நடைகள் சரியாகத் தீவனம் உட்கொள்ளாமலும், மெலிந்து கருத்தரிக்க இயலாமலும் இருக்கும்.\n\nமாடுகளின் சீழ்க் கருப்பை. மாடுகளில் இரண்டு காலக் கட்டங்களில் சீழ்க் கருப்பை ஏற்பட வாய்ப்புள்ளது. கன்று ஈன்றவுடன், சில நாள் வரை கருப்பையின் வாய் திறந்தேயிருக்கும். கருப்பையில் இருக்கும் நீர்மமும், தட்ப வெப்ப நிலையும் நோய் நுண்ணுயிரியின் வளர்ச்சிக்குத் தகுந்தவாறு இருக்கும். கருப்பையின் வாய் திறந்தே இருப்பதால், எளிதில் நுண்ணுயிரிகள் கருப்பையைச் சென்றடைய இந்நோய் உண்டாகும். பிற நேரங்களில் கருப்பையின் வாய் மூடியே இருப்பதால், இந்நோய் தடுக்கப்படுகிறது.\n\nகன்று ஈன்றவுடன் சீழ்க் கருப்பை நோய் ஏற்படப் பல காரணங்கள் உண்டு. இயல்பான முறையில் கன்று ஈன்று, தக்க முறைகளைப் பேணி வளர்க்கப் பட்ட மாடுகளில் இந்நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு. கன்று ஈனும் காலத்தில், தகுதியற்ற நாட்டு மருத்துவரை அனுமதிக்கக் கூடாது. நாட்டு மருத்துவர் ஏற்ற முறைகளைக் கடைப்பிடிக்காமையாலும், தூய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்காமையாலும் சீழ்க் கருப்பை உண்டாகிறது, இதனால், கருப்பை, ஈன்ற பின் சுருங்கிப் பழைய நிலையை அடைய, மிகவும் தாமதம் ஏற்படுகிறது. கன்று ஈன்ற மாடுகளின் சினை உறுப்புகளிலிருந்து, குருதி தோய்ந்த சளி போன்ற பொருள் வெளி வரும். ஆனால், இந்நோயால் தாக்கப்பட்ட மாடுகளிலிருந்து சீழ் அல்லது சீழ் கலந்த நீர்மம் கெடு நாற்றத்துடன் வெளியே வரும்.\n\nமேற்சொன்ன நோயைக் கவனித்து, தகுந்த மருத்துவம் கொடுக்கா விட்டால், நாளடைவில் கருப்பையின் வாய் மூடிக் கொள்ளும். சீழ், கருப்பையின் உள்ளேயே தேங்கி விடும். இதனால், கருப்பை விரிவடைந்து பெரியதாகி விடும். ஏறக் குறைய 1200-1800 மி.லி. சீழ் கருப்பையில் தேங்கியிருக்கும்.\n\nஒரு சில நேரங்களில், கன்று ஈன்று 60-90 நாளுக்குப் பிறகோ, சினை ஊசி போட்ட பின்போ, சீழ்க் கருப்பை உண்டாக வாய்ப்பு உள்ளது. சினைக் காலத்தில், சுற்றுப்புறச் சூழ்நிலை நன்கு அமையாமையாலும், நோய் கண்ட காளைகளை இயற்கை முறை இனப் பெருக்கத்திற்குப் பயன்படுத்துவதாலும், செயற்கை முறையில் இனப் பெருக்கம் செய்யும் போது, தூய்மையான முறைகளைப் பின்பற்றாமையாலும், தூய்மையற்ற விந்து நீர்மத்தைச் செயற்கை முறையில் பயன்படுத்துவதாலும், இந்நோய் ஏற்படுகிறது, இந்நோயின் அறிகுறி உடனேயோ, சினைக்கு வரும் போதோ காணப்படும். சில மாடுகளில் நோயின் தீவிரம் மிகுதியாக இருக்கும். இதனால் கருப்பையில் சீழ் மிகுதியாகத் தேங்கி விடும்.\n\nசீழ்க் கருப்பை பொதுவாக மாடுகளில் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது. கார்னி பாக்டீரியம் (Corny bacterium), புரூசெல்லா (Brucella), டிரைகோமோனட்ஸ் (Trichomanads) என்னும் நுண்ணுயிரிகள் கருப்பையைத் தாக்கி, இந்நோயை ஏற்படுத்தும். ஒரு சில மாடுகளில் கருச் சிதைவு ஏற்படுவதன் விளைவாகவும், சீழ்க் கருப்பை நோய் உண்டாகிறது. சில சமயங்களில் மாடுகளில் கருவகக் கட்டி (Uterine cyst) தோன்றி, நீர் கோத்துப் பின்பு, சீழ்க் கருப்பையாக மாறி விடும்.\n\nநோய் அறிகுறிகள். மாடு படுத்திருக்கும் போதும், சிறுநீர் வெளிப்படும் போதும் சீழ் வடியும். சோர்ந்து காணப்படும்; தீவனம் தின்னாது; பால் குறைந்து போகும்; காய்ச்சல் மிகுந்திருக்கும்; மாடு சினைக்கு வாராது.\n\nநாய், பூனைகளில் சீழ்க் கருப்பை. குட்டி ஈன்ற பின்போ, சினைக் காலத்திலோ, நோய் நுண்ணுயிரிகள் கருப்பையில் புகுவதாலும், கருவகக் கட்டிகள் ஏற்பட்டு, அதன் விளைவாகப் புரோஜெஸ்டிரோன் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்களின் மாறுபடும் அளவுகளாலும், சீழ்க் கருப்பை உண்டாகிறது. நாய், பூனை ஆகியன மிகவும் சோர்ந்து காணப்படும். அடிக்கடி சீழ் சினை உறுப்புகளிலிருந்து வெளி வரும். மேலும், சிறுநீரகக் கோளாறு அல்லது குருதிச் சோகை ஏற்படும். ஒரு சில சமயங்களில் வாந்தி எடுக்கும். காய்ச்சல் மிகும். வெளிப்புறச் சினை உறுப்புகள் சிவந்து காணப்படும். இந்நோயுற்ற நாய், பூனைகளில் குருதி ஆய்வு செய்தால், அதில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 50,000 வரையிலிருக்கும். மேலும் குருதியில் யூரியா நைட்ரஜன் (Blood Urea Nitroge.:-BUN) மிகுந்திருக்கும். இந்நோயால் நாய், பூனைகள் இறக்கவும் நேரிடும்.\n\nமருத்துவம். மேற்சொன்ன அறிகுறிகள் கால்நடைகளில் காணப்பட்டால், உடனே கால்நடை மருத்துவரிடமோ, கால்நடை ஈனியல் துறை வல்லுநரிடமோ கொண்டு செல்ல வேண்டும். காலந் தாழ்த்தாது மருத்துவம் செய்தாலன்றி, மீண்டும் கருத்தரிக்க வாய்ப்பிருக்காது. மருத்துவம் பெற்ற கால்நடைகள் விரைவிலேயே சினை பிடிக்க வாய்ப்புண்டு. மருத்துவமாக இந்நாள் வரை ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் பயன் படுத்தப்பட்டது. தற்போது புராஸ்டோகிளான்டின் என்னும் ஹார்மோனைப் பயன்படுத்துகின்றனர். இம்மருந்து, முன்னதைவிடச் சிறப்பாகக் கருதப் படுகிறது. இவ்வகையான மருந்துகள் கருப்பையின் வாயை நன்றாகத் திறந்தும், கருப்பையின் தசைகளைச் சுருக்கியும், தேங்கியிருக்கும் சீழ்க் குருதி, கெடு நாற்றமுடைய நீர்மம் இவற்றை வெளியே தள்ளி விடும்.\n\nமருத்துவத்திற்குப் பின், மூன்று சினைத் தருணங்களில் ஓய்வு கொடுத்து, அதன் பின் சினை ஊசி போடுவது சிறந்தது. பொதுவாக நாய்களிலும், பூனை இனங்களிலும் இந்நோயால் கருப்பை மிகுதியாகப் பாதிக்கப்படுவதால், கருப்பை மற்றும் கருவகங்களையும் அறுவை மூலம் அகற்றி விடலாம். இவ்வறுவைக்குப் பின்பு, அவை இனப் பெருக்கம் செய்ய முடியா, —கே. ஆர். கிருஷ்ணன் —து, கதிரேசன்\n\nசீழ் சேர் பளிங்குப் படலப் புண்\n\nகண்ணின் முன் அறையில் சீழ் தேங்கி இருப்பதையே, சீழ் சேர் பளிங்குப் படலப் புண் (hypopyon ulcer) என்கின்றனர். கிரேக்க மொழியில் hypo என்றால், கீழே என்றும், pyon என்றால் சீழ் என்றும் பொருள். பளிங்குப் படலக் கோளாறுடன், தளத்தில் சீழும் காணப்படுகிறது. இது பளிங்குப் படலத்தில் பரவி ஆழமாகச் செல்கிறது. அதன் விளிம்பு பிறை வடிவில் இருக்கிறது. புண்ணைச் சுற்றியுள்ள பளிங்குப் படலம் கலங்கியும், வீங்கியும் காணப்படும். முன் கண் அறைத் தளத்தில் சீழ் தேங்குகிறது. கரு விழிப் படலத்தின் நிறம் பெருமளவில் மாறி விடுகிறது. கண் பாவைக்கும், முன் வில்லையின் முன் புற உறைக்கும் இடையே ஒட்டுப் பொருள்கள் உண்டாவதால், கண் பாவையின் அமைப்புத் தாறுமாறாகிறது.\n\nஇவை அனைத்தும், கண் கோளத்தின் நீர்மச் சுழற்சியைப் பாதிக்கலாம். நீர்ம வெளிப்பாடு உருக் குலைகிறது. இதனால், உட் கண் அழுத்தம் அதிகரித்து, இரண்டாம் நிலைக் கிளாக்கோமா உண்டாகிறது. பெரும்பாலான நோயாளிகளில் வீங்கிய இமைகள், கண்ணீர்ச் சொரிவு, ஒளிக் கூச்சம், குறைந்த பார்வைக் கூர்மை ஆகியவை உண்டாகின்றன. தொடக்கத்திலேயே உரிய மருத்துவம் அளிக்கப்பட்டால், பளிங்குப் படலப் புண் சீரடைகிறது. புண்ணுள்ள இடத்தில், பல்வேறு வகையான கலங்கல்கள் காணப்படுகின்றன. புண் பரவி, ஆழமாக ஊடுருவினால், ஒளி புகாத் தன்மை (leucoma) உண்டாகிறது. இது கண்ணின் உள் உறைக்குள்ளும் பரவி, கண் நசிந்து பாழடைகிறது.\n\nமருத்துவமாக நுண்ணுயிர் எதிர் மருந்துகள், கரைசல்கள் ஆகியன சொட்டுகளாக இடப்படுகின்றன. நுண்ணுயிர்க் களிம்புகளும், (5% குளோரம்ஃபெனிகால், சிந்தோமைசீன்,, 1% டெர்ராமைசின், 1% மோனோமைசீன்) கண் இமையின் பின்புறமாக நாளும் 4-5 முறை போடப்படும். இதனால், சீரடையாது, உட் கண் அழுத்தம் அதிகரித்தால், அறுவை பரிந்துரைக்கப் படுகிறது. —மு.ப. கிருஷ்ணன்\n\nசீழ் நீரிழிவு\n\nசிறுநீர் வெள்ளணுக்கள் மிகுதியாகக் காணப்படும் நிலைக்கு, சீழ் நீரிழிவு என்று பெயர், சிறுநீரில் உள்ள வெள்ளணுக்களின் எண்ணிக்கையை அளவிடுவதன் மூலம், ஒருவருக்குச் சீழ் நீரிழிவு உள்ளதா எனத் தீர்மானிக்க முடியும். இயல்பான மனிதர்களில் ஒரு மணி நேரத்தில் 4,00,000 வெள்ளணுக்கள் சிறுநீரில் வெளியேறுகின்றன. இந்த அளவுக்கு மேல், வெள்ளணுக்கள் வெளியேறினால், இதைச் சீழ் நீரிழிவு எனலாம். சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 50 மி.லி. சிறுநீர் சுரக்கிறது. இதன் அடிப்படையில் கணக்கிடும் போது, 1 மி.லி. சிறுநீரில் 8000 வெள்ளணுக்கள் வெளியேறுகின்றன. எனவே சிறுநீரை, நுண்ணோக்கியின் உயர் திறன் புலத்தில் (higher power field) வைத்துப் பார்க்கும் போது, ஐந்து வெள்ளணுக்களுக்கு மேல் காணப் பட்டால், சீழ் நீரிழிவு இருப்பதாகக் கருதப் படும்.\n\nசிறுநீரின் அமில—காரத் தன்மையும், சிறுநீரில் உள்ள வெள்ளணுக்களைப் பாதிக்கக் கூடும். சிறுநீர், அமிலத் தன்மை கொண்டிருக்கும் போது, வெள்ளணுக்கள் உயிருடன் இருப்பதற்கு மிகுந்த வாய்ப்புண்டு. சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் அழற்சியின் விளைவாகவே சீழ் நீரிழிவு தோன்றுகிறது. சிறுநீரில் பாக்டீரியா நோய்த் தொற்று (urinary tract infection), சிறுநீர்க் கற்கள் (urinary stones), சிறுநீர்ப் பாதையில் சீழ்க் கட்டி என்பன சிறுநீர்ப் பாதையில் அழற்சி ஏற்பட முக்கிய காரணங்களாகும், இவற்றுள், பாக்டீரிய நோய்த் தொற்றே பெரும்பாலும் சீழ் நீரிழிவுக்குக் காரணமாகிறது. —கு. சிவஞானம்\n\nசீழ்ப் பிரத்தம்\n\nகுருதியில் சுழலும் நுண்ணுயிர்கள் விளைவிக்கும் நோய் சீழ்ப் பிரத்தம் (septicaemia) எனப்படும். இது விரைந்து கொல்லும் நோயாகும். நோய்க் குறி இன்றி, குருதி ஓட்டத்தில் நுண்ணுயிரி காணப்படும் நிலையை நுண்ணுயிரி நிலை (bacteraemia) என்றும், கடும் நோய்க் குறிகளுடன் தோன்றும் நிலையைச் சீழ்ப் பிரத்தம் என்றும் பிரித்தறியலாம். மனிதன் அறிந்த நுண்ணுயிரிகள் யாவும் இந்நோய் உண்டாக்கும் தன்மை உடையவை எனினும், அவற்றுள் சில மிகு அளவில் இத்துன்பத்தை உண்டாக்குகின்றன.\n\nகுடியிருப்புகளில் ஏற்படுபவை, மருத்துவ மனைகளில் ஏற்படுபவை எனச் சீழ்ப் பிரத்தம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அரிதாகக் காணக் கூடிய ஆந்த்ராக்ஸ், பிளேக், டாலருமியா போன்றவற்றின் கடும் நுண்ணுயிரிகளே உடல் நலமுள்ள மனிதர்களிடம் இதை ஏற்படுத்துகின்றன. வயது முதிர்ந்தோர், நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக அயர்வு போன்ற நோயுடையோர் பெருமளவில் துன்புறுகின்றனர். புத்திளம் குழந்தைகளும் இந்நோயால் தாக்கப்படுகின்றனர். இக்குழந்தைகள் மரண நிலையில் இருப்பினும், அதற்கான அறிகுறிகள் எதுவும் எளிதில் வெளிப்படுவதில்லை, இந்நிலையில் பட்டறிவு மிக்க செவிலியரின் பணி மிகவும் தேவைப்படுகிறது. தீக்காயமுற்றோர் இதனால் மரணமடையலாம். உடலைப் பாதுகாக்கும் தோல் தீய்ந்து, உள்ளுறுப்புகளில் நுண்ணுயிர்கள் மிகுவதாலும், சீழ்ப் பிரத்தம் உண்டாகிறது.\n\nகருச்சிதைவிற்குப் பின்னரும், பேறு காலங்களிலும் பெண்கள் இதனால் இறக்கும் வாய்ப்பு மிகுதி. நீயூட்ரோஃபில் வெள்ளணுக்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்குக் கீழ் குறையும் போது, இதனால் தாக்கப் படுவர். புற்று நோய்களுக்குரிய மருந்துகள் உடலின் காப்பியல் திறனைக் குறைப்பதால், எளிதில் சீழ்ப் பிரத்த நிலை ஏற்படுகிறது. மருந்துகளாலோ, பிற காரணங்களாலோ தடுப்பாற்றல் திறன் குறையும் போது, இந்நோய் எளிதாகப் பரவுகிறது. சீழ்க் கட்டி, புண்கள் போன்றவை மலிந்து, உடலின் ஓர் உறுப்பிலிருந்து நுண்ணுயிரிகள், குருதி ஓட்டத்தில் கலந்து குருதி நச்சுக் கலவியை உண்டாக்குகின்றன. இது இரண்டாம் நிலைச் சீழ்ப் பிரத்தம் எனப்படும், இத்தகைய முன் தொற்று இல்லா நிலை, முதல் நிலைச் சீழ்ப் பிரத்தம் எனப்படும்.\n\nஸ்டஃபைலோகாக்கஸ் ஆரியஸ், ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் நிமோனியா, ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் பையோஜீன்ஸ், டைஃபாயிடு அல்லாத சால் மெனெல்லா நுண்ணுயிரி, ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் ஃபிகாலிஸ், நிசேரியா மெனின்ஜைட்டிஸ், லிஸ்ட்டீரியாமோனோ சைட்டோஜீன்ஸ், எஷ்செரிச்சியா கோலை, சூடோமோனாஸ், நைசீரியா கோனோரியா (N. gonorea) என்பவை முதல் நிலைச் சீழ்ப் பிரத்தம் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் ஆகும்.\n\nகுழந்தைகளுக்கும், பெரியோருக்கும், முதல் நிலைத் தொற்றுக்கான நுண்ணுயிரிகள் வேறுபடுகின்றன. புத்திளம் குழந்தைகளில் கிராம் நெகட்டிவ் நோய் நுண்ணுயிரிகளும், ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் குரூப் Bஉம் முதலிடம் பெறுகின்றன. . சால்மென்னல்லா மெனிங்கோகாக்கஸ் நுண்ணுயிரிகள் குழந்தைகளில் தொற்று நோய்களை உருவாக்குகின்றன. குழவிகளுக்கு நிமோகாக்கஸ், ஹீமோஃபிலஸ், இன்ஃபுளூயன்சா ஆகியவை மிகுதியாகக் காணப்படுகின்றன.\n\nஇரண்டாம் நிலைத் தொற்றுகளில், சில உறுப்புகளில் குறிப்பிட்ட சில நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன.\n\nவயது முதிர்ந்தோரில் பித்தப்பை அழற்சி (cholycystitis), குடல்வால் அழற்சி (appendicitis) நோய்க் குறிகளின்றி விரைவில் சீழ்ப் பிரத்தம் உண்டாக்குகிறது. தீக்காயம் உள்ளோரில் முதல் சில நாள் கிராம் பாசிட்டிவ் காக்கஸ் குடியேறுகிறது. இரண்டாம் வாரத்தில், கிராம் நெகட்டிவ் கோலை பரவும், பின்னர், மூன்று, நான்காம் வாரங்களில், ஈஸ்ட் அல்லது காண்டிடா (candida) தொற்றுகிறது. சிரை வழி நீர்மங்கள் வழியாக நுண்ணுயிரிகள் உட்செல்லக் கூடும். சான்றாக, குளூக்கோஸ் நீர்மத்தின் என்ட்ரோபாக்ட்டர் செரட்யாவும் அடர் உணவு நீர்மத்தின் ஈஸ்ட்டும் பல்கி உட்செல்லலாம்.\n\nமருத்துவ மனைகளில் ஏற்படும் சீழ்ப் பிரத்தத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இவற்றில் காணப்படும் நுண்ணுயிரிகள் பெரும்பாலான நுண்ணுயிர் எதிர் மருந்துகளுக்கு உட்படும் தன்மையிழந்தவையாக உள்ளமையால், இவற்றை அழிப்பது கடினம். தீவிர மருத்துவப் பகுதிகளில் அனுமதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு நீர்மங்களைச் செலுத்தவும், உடல் நீர்மங்களை வடிக்கவும், குழாய்கள் உடலில் செருகப் பட்டிருப்பது வழக்கம். செயற்கை மூச்சுக் குழல், குருதிக் குழாய்கள் ஆகியவற்றில் பல்வேறு கருவிகள் இணைக்கப் பட்டிருக்கும். இவற்றின் மூலம் நுண்ணுயிரிகள் உடலில் ஊடுருவுகின்றன . அறுவை செய்யும் போது, நுண்ணுயிரிகள் பரவும் வாய்ப்பு மிகுதி. குடல் இணைப்புக் கசியும் பகுதி, சிறுநீரகம் மாற்றப்பட்ட பகுதி, யோனியில் தையலிடப்பட்ட பகுதி போன்றவை பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.\n\nமூளை அறுவை மருத்துவம் செய்யும் போது, ஸ்டெஃபலோகாக்கஸ் எளிதில் பரவுகிறது. மாற்று உறுப்புகள் பொருத்தும் போது, அவை திசு மறுப்பால் (tissue rejection) அழியாமல் இருக்க, ஸ்டீராய்டு, சைக்லோஸ்ஃபாரின் போன்ற மருந்துகள் அளிக்கப் படுகின்றன. அந்நேரங்களில் இயல்பாகக் காணும் தீவிரமற்ற நுண்ணுயிரிகள் மிகுந்து, உயிருக்குத் தீமை செய்யும். சீழ்ப் பிரத்த நிலையை நோயுறுதி செய்தல் எளிதன்று. பெரும்பாலான நேரங்களில், அபாயகரமான நோய் உள்ளவர்களில் இது சிக்கலாகத் தோன்றுகிறது, விரைவில் உயரும் குளிர் காய்ச்சல், தலைவலி ஆகியவை ஏற்படுகின்றன. சில மணி நேரங்களில், நோயாளியின் நிலை மிக மோசமாகி, சோம்பல், வலிமையின்மை, நினைவிழப்பு போன்ற குறிகள் தோன்றுகின்றன. மூச்சு விடும் வீதம் உயர்கிறது. இதனால் குருதி pH உயர்கிறது. சில வேளைகளில், இதுவே தொடக்க அறிகுறியாகிறது.\n\nநுண்ணுயிரிகள் பெருமளவில் குருதி ஓட்டத்தில் கலக்கும் போது, தந்துகிகளிலிருந்து நீர்மம் கசிந்து குருதி அழுத்தம் குறைகிறது. தொடக்கத்தில், இதயம் செலுத்தும் குருதி அளவு கூடினாலும், முடிவில் மிகக் குறைகிறது. நுண்ணிய அழுத்தம் மிகுதியாகிறது. ஆக்சிஜன் குறை நிலை, குருதியின் pH குறைதல் இரண்டும் இதயத்தைத் தாக்கி இதய அயர்வை ஏற்படுத்துகின்றன. தட்டணுக்கள் புறக் குருதி ஓட்டத்தில் குறைந்து, குருதிக் கசிவை உண்டாக்குகின்றன. பொதுவாக, குருதி வெள்ளணுக்களின் எண்ணிக்கை உயருகிறது, அரிதாக எண்ணிக்கை குறைந்தால், சீழ்ப் பிரத்த நிலை தீவிரமடைந்துள்ளது என அறியலாம். குருதி ஓட்டம் குறைவதால், மஞ்சள் காமாலை, சிறுநீரின் அளவு குறைதல் போன்ற விளைவுகளும் ஏற்படுகின்றன.\n\nஉயிரைக் காக்க விரைவில் செயல்பட வேண்டியிருப்பதால், ஆய்வுகளுக்கு நேரத்தை வீணாக்காமல், முப்பது நிமிடங்களில் கிடைக்கும் நோய் விவரங்களுடன், தீவிர உடல் ஆய்வின் துணை கொண்டு, முடிவிற்கு வருதல் வேண்டும். மறு தொற்றுகளை அறியச் சிறுநீர், மூளை நீர், கோழை, சீழ் போன்ற உடல் நீர்மங்களை ஊடகங்களில் வளர்ப்பதும், கிராம் சாயமிட்டு (gram stain) நுண்ணுயிரிகளை இனங் காணுவதும் தேவையாகின்றன.\n\nநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகத் தீவிர மருத்துவம் அளித்தல் வேண்டும். குருதிச் சுழற்சி அயர்வு (circulatory failure) ஏற்படும் போது, அதை உடனே சமன் செய்யாவிடில், மூளை, சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து உயிருக்கு ஊறு விளையும். சிரை வழி நீர்மமளித்து நாளங்களின் நீர்மக் குறைபாட்டை ஈடு செய்தல் வேண்டும். ஸ்டீராய்டு மருந்துகள் இடையூற்றுக் காலத்தைக் (Stress period) கடக்கப் பெரிதும் உதவுகின்றன.\n\n0.15 சோடியம் குளோரைடு கரைசல் 1 லி. முதல் ஒரு மணி நேரத்தில் விரைவில் செலுத்திக் குருதி அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தில், மேலும், நீர்மம் அளிக்க வேண்டும். குருதி அழுத்தம், மூச்சு விடும் வீதம், நாடித் துடிப்பு ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். மேற்கூறியவற்றில் முன்னேற்றமடைந்து, மணிக்கு 75 மி.லி. சிறுநீர் சுரக்குமானால், நீர்மச் சொட்டு வீதத்தைக் குறைக்கலாம், நீர்மம் தேவைக்கதிகமாக இருந்தால், தோன்றும் அறிகுறிகளைக் கவனித்தல் வேண்டும். நோயாளியின் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பின், சில வேளைகளில் குருதி செலுத்த வேண்டும். நாளங்களில் நீர்மத்தை இருத்தி வைப்பதற்குப் பிளாஸ்மா அல்லது அல்புமின் கரைசலைச் சிரை வழி அளிக்கலாம். அவ்வப்போது ஆக்சிஜன் செறிவு, கார்பன் டை ஆக்சைடு அளவு, pH,சோடியம், பொட்டாசியம் அயனிகளின் செறிவை ஆய்ந்து, அதைச் சமன் செய்தல் வேண்டும், மூச்சு விடுதல் நிறைவாக இல்லையெனில், செயற்கை நுரையீரலுடன் இணைக்க வேண்டும்.\n\nநீர்மங்கள், ஸ்டீராய்டுகள், நுண்ணுயிர் எதிர் மருந்துகள் அளித்தும் குருதி அழுத்தத்தில் முன்னேற்றம் அடையாவிடில், டோப்பமின் மருந்தை 5 மைக்ரோ கிராம்/கிலோ[நிமிடம் என்ற அளவில் சிரை வழியாக அளிக்கலாம். இதனால் இதயம் குருதி செலுத்தும் வீதம், குருதி அழுத்தம் இரண்டிலும் முன்னேற்றம் உண்டாகும். மூளை, சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளின் ஊடுருவும் தந்துகிகளை விரிவடையச் செய்வதால், அவற்றின் பணிகளில் முன்னேற்றம் காணப்படும். நுண்ணுயிர்கள் மிகுந்த பகுதிகளை அகற்றாவிடின், நோயாளியின் நிலையில் மாற்றம் ஏற்படுவதில்லை. நுண்ணுயிர்த் தாக்குதலுக்குள்ளான சிரை, சீழ்க் கட்டி போன்றவற்றை உடனடியாகக் கீறி அகற்ற வேண்டும். பொதுவாகப் பித்தப் பை, மூச்சுச் சிற்றறை, நுரையீரல், கூபகத் தொற்றுகள், நுண்ணுயிர் எதிர் மருந்துக்குக் கட்டுப்படுகின்றன. மருத்துவ மனைகளில் தீவிர மருத்துவம் பெறும் நோயாளிகளில் முன்னேற்றம் காணாவிடில், உடலில் இணைக்கப்பட்ட குழாய்களையும், கருவிகளையும் எடுத்து, வேறு இடங்களில் மாற்றி அமைத்தல் வேண்டும். இது சிரைகள் மூலம் படரும் கருவித் தொற்றுகளைக் குறைக்கும்.\n\nநுண்ணுயிர் எதிர் மருந்துகள் உயிர் காக்கும் பணியைச் செய்கின்றன. தகுந்த மருந்தைத் தேர்வு செய்தல் வேண்டும். நுண்ணுயிர் வளர்ப்பு முடிவுகள் கிடைக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. எந்த மருந்தைத் தேர்வு செய்தாலும், அதைத் தேவையான அளவு தயக்கமின்றிச் சிரை வழிச் செலுத்த வேண்டும். சிறுநீர், கோழை போன்ற நீர்மங்களில் காணும் நுண்ணுயிரிகளே நோயாளிகளுக்குச் சீழ்ப் பிரத்தத்தை ஏற்படுத்துகின்றன. வெள்ளையணுக்கள் குறைந்துள்ள நோயாளிகளுக்குக் குடல் நுண்ணுயிரிகளை அழிக்கும் மருந்துகள் தேவை. நோய் நுண்ணுயிரிகளை ஊகிக்க முடியவில்லையெனில், பெனிசிலின் தொகுப்பு மருந்துகளையும், அமினோ கிளைக்கோசைடு மருந்துகளையும் இணைத்து அளிக்கலாம். பொதுவாகப் பல நுண்ணுயிரிகள் ஒரு சில மருந்துகளுக்கு முழுமையாக இல்லாவிடினும், ஓரளவுக்குக் கட்டுப்படுவதால், அம்மருந்துகளை விரைவில், தயக்கமின்றி அளிக்க வேண்டும். கூபகத் தொற்றுள்ள (pelvic infection) பெண்களில் படர்ந்த நாள உறைவு (disseminated intravascular coagulation) காணப்படின், ஹெப்பாரின் மிகத் தேவையாகிறது,\n\nசீழ்ப் பிரத்தத்தில் வயது, தொற்றுக்கான நுண்ணுயிரிகளைப் பொறுத்து நலம் உண்டாகலாம். வயது முதிர்ந்தோர், பொது உடல் நலம் குன்றியோர், ஆட்டோமோனாஸ் ஏரோஜினோசா தொற்றுகள் போன்றவற்றில் நோயாளிகள் இறக்கிறார்கள். பொதுவாகக் கிராம் பாசிட்டிவ் காக்கஸ் தொற்றுகளில் மருத்துவம் மிகு பயனளிக்கிறது. சில நோயாளிகளில் மீள முடியாத தீமை ஏற்படின், எவ்வித மருந்தும் பயனளிப்பதில்லை. பொதுவாக, இதய நுரையீரல் இறப்பு ஏற்படுகிறது. —ஞா, ராஜராஜேஸ்வரி நூலோதி. Behrman and vaugam, Nelson Text Book af Pediatrics, Twelfth Edition, Igakushion, W.B. Saunders Co., Philadelphia, 1983; D.J. Weatherall, et. al., Oxford Text Book of Medicine, First Edition, Oxford University Press, London, 1984.\n\nசீழுடைக் கண் அழற்சி\n\nஇமை இணைச் சவ்வின் அழற்சியில் நீர்மமோ, சளி கலந்த சீழோ காணப்படும். ஸ்டெஃபைலோகாக்கஸ் ஆரியல், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், நிமோனியா, ஹிமோலிடிகஸ், காக்-வீக் பெசில்லஸ், மோராக்கஸ் ஆக்சென்பீல்டு பெசில்லஸ், சூடோமோனாஸ் போன்ற பல நுண்ணுயிரிகள் இதற்குக் காரணமாகலாம்.\n\nகண்ணையோ, இமையையோ அழுத்தினால், கரடு முரடான உணர்வு உண்டாகும். கண்கள் வெப்பமாகவும், கனமாகவும் இருக்கும். கட்டியான நீர்மச் சொரிவுடன், இமைகள் ஒட்டிக் கொண்டாலும் பார்வை பாதிக்கப்படுவதில்லை. இமை இணைச் சவ்வின் குருதி நாளங்கள் புடைத்துள்ளமையால், கண் சிவந்து காணப்படும். நிணச் செல்களும், மேக்ரோஃபேஜுகளும் தேங்குவதால், வீக்கமேற்பட்டு, குருதி நாளங்கள் தள்ளப்படுகின்றன. கண்ணின் காம்புகள் மிகை வளர்ச்சியடைகின்றன. குமிழ்கள் போன்ற மறு வினை இமை இணைச் சவ்வில் ஏற்பட்டால், வைரஸ் காரணமாக இருக்கலாம். வைரஸ்களின் பாதிப்பின் போது, காதுக்கு முன்னால் கட்டிகள் தோன்றுகின்றன. இமை இணைச் சவ்வழற்சி, இரண்டு கண்களையும் பாதிக்கிறது. வெட்டை நோயின் போது, ஒரு கண் மட்டும் பாதிக்கப்படலாம்.\n\nமருத்துவம். தூய நீரால், கண்ணை நன்கு கழுவ வேண்டும். உரிய நுண்ணுயிர் எதிர் மருந்துக் களிம்புகளும், சொட்டு மருந்துகளும் பயன்படுகின்றன. கண் நீர்மத்திலிருந்து, நுண்ணுயிர்களைத் தனிமைப்படுத்தி, வளர் ஊடகத்தில் வளரச் செய்து, பயன் தரும் மருந்தை அறிந்து ஆவன செய்ய வேண்டும். இதற்குக் குளோரெம்ஃபீனிகாலும், ஜெண்டாமைசீனும் பயனளிக்கின்றன. களிம்புகளை இரவில் பயன்படுத்தினால், காலையில் சீரான நிலை இருக்கும். கண்ணுக்குக் கட்டுப்போடக் கூடாது. கறுப்புக் சண்ணாடிகள் அணிவது நல்லது. —மு. ப, கிருஷ்ணன் நூலோதி. P. V. Curran, The Eye and its Disorders, Second Edition, Blackwell Scientific Publication, Oxford, 1984.\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. அடுத்த பக்கத்தில் புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ----> சீனக் கடல்\n\nஆசியாவின் கிழக்கு தென் கிழக்குப் பகுதியின் பெரும் நிலப் பரப்பையொட்டி அமைந்துள்ள மேற்குப் பசிஃபிக் பெருங்கடலின் பகுதியில், தென் சீனக் கடல், கிழக்குச் சீனக் கடல் என இரு பகுதிகள் உள்ளன. இவை இரண்டும் தைவானுக்கும், சீனக் குடியரசு நாட்டிற்கும் இடையிலுள்ள ஆழங்குறைந்த ஃபார்மோசா நீர்ச் சந்தியால் இணைக்கப்பட்டுள்ளன.\n\nதென் சீனக் கடலின் மேற்கே, ஆசியாவின் பெரும் நிலப் பரப்பும், தெற்கே தாய்லாந்து வளைகுடாவின் கிழக்கெல்லையும், மலேயா முந்நீரகத்தின் கிழக்குக் கடற்கரையும் அமைந்துள்ளன. சுமத்ராவிற்கும், போர்னியோவிற்கும் இடையிலுள்ள கடல் தரை தெற்கெல்லையாக உயர்ந்துள்ளது. தைவானின் வட முனையிலிருந்து, சீனாவின் ஃபயூகியன் மாநிலம் வரை உள்ள பகுதி வடக்கெல்லையாக அமைந்துள்ளது.\n\nமேற்குப் பசிஃபிக்கின் பெருங்கடலான இது 2,197,300 ச. கி. மீ. பரப்பும், 1140 மீ. சராசரி ஆழமும் கொண்டது. இக்கடலின் கிழக்குப் பகுதியில் ஆழமான செவ்விணைவக உருவமுடைய வட்டத் தட்டு நிலமும், தட்டின் உட்பகுதியில் தெற்கு தென் மேற்கே ஆழமற்ற நீரடி மணல் திட்டுகளும் அமைந்துள்ளன. சீனக் கடல் தட்டு எனப்படும் ஆழ்பகுதி 5015 மீ. ஆழம் கொண்டது.\n\nபெரும் நிலப் பரப்பிற்கும், தட்டின் வடமேற்குப் பகுதிக்கும், இடையில் ஆழம் குறைந்த மணல் தட்டு 240 கி.மீ. உள்ளது. இதில் டோன்கின் வளைகுடாவும், ஃபார்மோசா நீர்ச் சந்தியும் அடங்கும். இம்மணல் தட்டு, தெற்கு வியட்நாமுக்குத் தெற்கே குறுகி, உலகிலேயே மிகப் பெரிய மணல் தட்டான சுந்திரா தட்டுடன் இணைகிறது. போர்னியோ, சுமத்ரா, மலேசியா ஆயெவற்றுக்கு இடையிலுள்ள பகுதியும், தென் சீனக் கடலின் தென் பகுதியும் இதில் அடங்கும்.\n\nஇக்கடலில் மெகாவ் அருகில் கலக்கும் சிசியாங், வியட்நாமில் கலக்கும் ரெட், மெகாங் ஆகிய பெரிய நதிகள் குறிப்பிடத் தக்கவை. இப்பகுதியில் எப்போதும் வெப்ப நிலை மிகுதியாகவே இருக்கும். ஆண்டுக்கு 2000 மி.மீ. மழை பெய்கிறது. அடிக்கடி கடும் புயல் ஏற்படும். கடற்பரப்பு நீரோட்டம், தென் சீனக் கடல் நீர் அண்மையிலுள்ள நீர்ப் பரப்பு ஆகியவற்றில் பருவக் காற்றால் பரிமாற்றம் ஏற்படுகிறது.\n\nதென் சீனக் கடலிலிருந்து வட கிழக்கே பரவியுள்ள கிழக்குச் சீனக் கடல், மேற்கே ஆசிய நிலப் பரப்பு, கிழக்கே ருயூகியூ தீவுத் தொடர், தென் கொரியாவையடுத்த செஜு-டு தீவு ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. செஜு--டு தீவிலிருந்து சீனாவுக்குக் கிழக்கு மேற்காக ஒரு கற்பனைக் கோடிட்டால் அது தெற்கே, தென் சீனக் கடலையும், வடக்கே, மஞ்சள் கடலையும் பிரிக்கும், கிழக்குச் சீனக் கடல் ஏறத் தாழ 4,50,000 ச.கி.மீ. பரப்பளவும் சராசரி 300 மீ, ஆழமும் கொண்டது. ருயூகியூ தீவுத் தொடர்களையடுத்த ஓக்கினாவா ஆழ் பள்ளம் 2800 மீ. உடையது. இக்கடலின் மேற்குக் கரை, தென் சீனக் கடலிலிருந்து மஞ்சள் கடல் வரை பரவியுள்ளது.\n\nஇரு கடல்களிலும் பற்பல மீனினங்கள் காணப் படுகின்றன. சூறை, மேக்கரல், குரோக்கர், அன்கோவி போன்ற பல வகை மீனினங்கள் குறிப்பிடத் தக்கவை. தென் கிழக்கு ஆசியக் கடலோரம் வசிக்கும் மக்களுக்குத் தேவையான புரதச் சத்தில் 50% தென் சீனக் கடலிலிருந்து கிடைக்கிறது இரு கடல்களும் வணிகக் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. தென் சீனக் கடலும், மலாக்கா நீர்ச் சந்தியும், பசிஃபிக் பெருங்கடலுக்கும், இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துத் தடமாக உள்ளன. தென் சீனக் கடலிலிருந்து ஜப்பான், வடக்குப் பசிஃபிக் துறைமுகங்களுக்குச் செல்லும் நீர்த் தடமாகக் கிழக்குச் சீனக் கடல் விளங்குகிறது. —கு. அருணாசலம் —ம. அ. மோகன்\n\nசீனக் களிமண்\n\nஇது கயோலினைட் (Al₂O₃. 2SiO₂.2H₂O) என்ற தூய களிமண் தாதுவாகும். கயோலின் என்ற பெயருள்ள வட சீனாவின் ஒரு மலையில் இக்களிமண் மிகவும் தூய நிலையில் கிடைப்பதால், சீனக் களிமண்ணிற்குக் (porcelain) கயோலினைட் (kaolinite) எனப் பெயரிடப்பட்டது. கயோலினைட் புவியின் அடியிலுள்ள பாறைகளிலிருந்து மிகு வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் உருவான ஃபெல்ஸ்பார் அல்லது அலுமினோசிலிக்கேட் தாதுக்களாக வேதிச் சிதைவு அடைவதால், உண்டாகிறது.\n\nஇக்களிமண் முழுமையான கயோலினைட் ஆகாத நிலையில் (கயோலினைட் உருவாக்கத்தில்) இருப்பதால், நிலப் பொதியியல் வல்லுநர்களால் இது மிகவும் இள நிலையிலுள்ள களிமண்ணாகக் கருதப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டு வரை இது மேலை நாடுகளால் கண்டு பிடிக்கப்படவில்லை. இவ்வகைக் களிமண், பிற களிமண்களைப் போல் சுடப் பட்டவுடன், இறுக்கம் அடைகிறது. இது மிகவும் தூய நிலையில் இருப்பதாலும், எந்தவிதமான வண்ணம் கொடுக்கும் ஆக்சைடுகள் இல்லாமை- யாலும், ஏனைய களிமண்களிலிருந்து வேறுபட்டுள்ளது. எனவே, சீனக் களிமண், பீங்கான் வெண்பாண்டங்கள் செய்யப் பயன்படுகிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சீனக் களிமண் செக்கோஸ்லோவியாவிலும், செல்லிட்ஜ், ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஃபிரான்ஸ், ஜார்ஜியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது. இவற்றில், ஐரோப்பிய நாடுகளில் கிடைக்கும் வகை, மிகுந்த குழைவியல்பு உடையதாகவும், தூய்மையற்றதாகவும் உள்ளது. மேலும் சீனா, இந்தியா, வட ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளிலும் இது கிடைக்கிறது. காரன்வால் பகுதியில் கிடைக்கும் இக்களிமண் நல்ல வெண்மையாகவும் இரும்பு டைட்டேனியம் ஆக்சைடு போன்றவற்றின் கலப்புக் குறைவாகவும் காணப்படுகிறது.\n\nசீனக் களிமண்ணைத் தோண்டியெடுத்துத் தூய்மைப் படுத்தும் முறை, அது கிடைக்கும் இடத்தையும், பொதிந்து கிடக்கும் ஆழத்தையும் பொறுத்து மாறுபடும். காரன்வால் பகுதியில் தோண்டியெடுக்கப் பட்ட களிமண், நீர்த் தாரையால் முதலில் கழுவப் படுகிறது. நீர் கலக்கப்பட்ட சீனக் களிமண் சேறு, புவியிலுள்ள பெரிய பள்ளங்களில் தேக்கி வைக்கப்படுகிறது. இத்தேக்கத்தில் அனைத்து வகைக் குறு நொய்த் தாதுக்களும் தங்கி விடுகின்றன. இவை அவ்வப்போது வெளியேற்றப் படுகின்றன. பிறகு, சேறு மைய விலக்க எக்கி (centrifugal pump) மூலம் மேலே கொண்டு வரப்பட்டுத் தூய்மைப் படுத்தப் படுகிறது. பின்பு, பெரிய நீளமான கால்வாய் மூலம் அனுப்பப் படுவதால், குறு மணல்,அபிரகம், தாதுப் பொருள் ஆகியன கீழே படியுமாறு செய்யப் படுகின்றன. பின்னர், இச்சேறு மைய நீக்கிகள் நீர்மச் சுழற்சிப் பிரிப்பான் (cyclone separator) மூலம் தூய்மையாக்கப்பட்டு, பெரிய பெரிய படிவிப்பு அறைகளில் தேக்கி வைக்கப் படுகின்றன. இந்நிலையில், மிகையான நீர் உறிஞ்சப் பட்டு, வெளியேற்றப்படுகிறது. இதில் 2% திண்மப் பொருள்களே இருக்கும். இது வடிக்கப்பட்டு, எந்திரம் மூலம் பிழியப்பட்டு, உலர்த்தப்படும் போது, 99.5% சீனக் களிமண் கிட்டும்.\n\nசீனக் களிமண் சூடு படுத்தப் படுவதால், மூலக் கூறுகள் 420°C அடையும் போது, அதிலுள்ள நீர் வெளியேறத் தொடங்கும். 550°C அடையும் போது, முழுதும் வெளியேறி மெட்டா கயோலின் என்ற படிகமற்ற பொருளாக மாறும். இவ்வினை வெப்பம் கொள்வினை (endothermic) ஆகும். பிறகு, வெப்பம் உமிழ் வினைகள், 950°—1100°Cஇல் நடைபெறுகின்றன. முதலில் மெட்டா கயோலின் உடைந்து, கிரிஸ்டோபலைட், முல்லைட் போன்ற சிலிக்கேட் படிவங்களாக மாறி, ஒரே திண்ம நிலைமையாகிக் கெட்டிப்படும்.\n\nசீனக் களிமண்ணால், பீங்கான், எலும்புச் சைனா (bone china), மட்பாண்டம் போன்ற பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. சீனக் களிமண்ணை ஃபெல்ஸ்பர், ஃப்ளிண்ட் (flint) போன்ற பொருள்களுடன் சேர்த்து 1450-1500°C வரை சுட்டுப் பீங்கான் பொருள்கள் தயாரிக்கலாம். 50% எலும்பு, 25% கல், 25% சீனக் களிமண் ஆகியவற்றின் கலவை 1260°C வெப்ப நிலையில் சுடப்பட்டு, எலும்புச் சைனா தயாரிக்கப் படுகிறது. —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. E.M. Lea, The Chemistry of Cement and Concrete, Edward Arnold Publishers, London, 1956.\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. அடுத்த பக்கத்தில் புதிய தலைப்பு ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->"}}