{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e6tjyfvb/", "data": {"id": "e6tjyfvb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e6tjyfvb/", "kind": "article", "headword": "அவத் பிகாரி", "romanization": "avat pikāri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.836718+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "புரட்சித் தியாகிகளுள் ஒருவர்.", "body_ta": "புரட்சித் தியாகிகளுள் ஒருவர். கி.பி. 1889–ஆம் ஆண்டு தில்லியில் பிறந்தார். தலைசிறந்த புரட்சிவாதி, உத்தரப்பிரதேசத்திலும் பஞ்சாபிலும் புரட்சி நடவடிக்கைகளை அமைத்தவர் இவர். இராசு பிகாரிபோசின் துணைவர்களுள் ஒருவரான அவத் பிகாரி, (Avadh Behari) 1912–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 23–ஆம் நாள் ஆங்கில அரசாங்கத்தின் இந்திய அரசப் பிரதிநிதியான ஆர்டிஞ்சு பிரபு (Lord Hardinge) வைக்கொல்ல நடைபெற்ற சதியில் பங்கு பெற்றவர். இதைத் தில்லிச் சதி வழக்கு எனக் கூறுவர். ஆர்டிஞ்சு பிரபு தில்லிச் சாந்தினிச் சதுக்கத்தில் அரசு மரியாதைகளுடன் ஊர்வலமாகச் செல்லும்போது அவரைக் கொல்லச் சதி நடந்தது. 1913–ஆம் ஆண்டு மே மாதம் 17–ஆம் நாள் நடைபெற்ற இலாகூர்ச் சதிவழக்கிலும் இவருக்குத் தொடர்பிருந்தது. 1914–ஆம் ஆண்டு பிப்பிரவரியில் இவர் கைது செய்யப்பெற்று, அமிர்சந்து, பால்மோகானந்து, வசந்த குமார் பிசுவாசு என்னும் மூன்று துணைவர்களுடன் விசாரிக்கப் பெற்றார். மரண தண்டனை விதிக்கப்பெற்று 1915–ஆம் ஆண்டு மே மாதம் 11–ஆம் நாள் அம்பாலா மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்."}}