{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e4tn2nyn/", "data": {"id": "e4tn2nyn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e4tn2nyn/", "kind": "article", "headword": "செவியின் குருதி நாள அமைப்பு", "romanization": "ceviyiṉ kuruti nāḷa amaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:01.280667+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உட்செவியின் குருதி நாளங்களுக்கு ஏற்படும் குறை பாடுகளால் தோன்றும் செவிட்டுத் தன்மையும், சமன்பாட்டுச் சீரழிவும், உட்செவியின் குருதி நாளக் கேடுகளாகும்.", "body_ta": "உட்செவியின் குருதி நாளங்களுக்கு ஏற்படும் குறை பாடுகளால் தோன்றும் செவிட்டுத் தன்மையும், சமன்பாட்டுச் சீரழிவும், உட்செவியின் குருதி நாளக் கேடுகளாகும்.\n\nஉட்செவித் தமனிகள். உட்செவிக்கான குருதி பெரும்பாலும், வணரியத் தமனி (labyrinthine artery) வழியாக வழங்கப் படுகிறது. மோனத் தமனியின் (basilar artery) கிளையாகவோ, முன் கீழ்ச் சிறு மூளைத் தமனியின் கிளையாகவோ வரும் வணரியத் தமனி, உட்செவிப் புழையுள் (internal aconotic meatus) நுழைந்து, உட்செவியின் உறுப்புகளை அடைகிறது.\n\nஉட்செவியினுள் வணரியத் தமனி இரண்டாகப் பிரியும். இவ்விரு கிளைகளுள் ஒன்றான முன் இடைகழித் தமனி (anterior vestibular artery), இடைகழிக் கருவியின் பகுதியான யூட்ரிகிள் முழுமைக்கும், மற்றொரு பகுதியாக அரை வட்டக் குழல்களின் சில உறுப்புகளுக்கும் குருதியைக் கொண்டு செல்கிறது. இடைகழி நரம்பும், இத்தமனி மூலமே குருதியைப் பெறுகிறது. வணரியத் தமனியின் மற்றுமொரு கிளை, பொதுச் சுருள் வளைத் தமனியாகும். இது சுருள் வளையின் நடுகத்தை (modiolus of cochlea) அடைந்து, இரு கிளைகளாகப் பிரியும். இடைகழிச் சுருள் வளைத் தமனி சுருள் நடுகத் தமனி என்னும் இரு கிளைகளுள், முன்னது இடைகழியை நோக்கியும், எஞ்சியது கருள் வளையைச் சார்ந்தும் ஓடும்.\n\nஇடைகழிச் சுருள் வளைத் தமனி மீண்டும் இடைகழிக் கிளை, சுருள்வளைக் கிளை எனப் பிரியும். இடைகழிக் கிளை, அரை வட்டக் குழல்களின் எஞ்சிய பகுதிகள். சுருள் வளையின் அடிப் பகுதி ஆகியவற்றுக்குக் குருதியளிக்கும், சுருள் வளைக் கிளை, சுருள் வளை அடிச் சுற்றின் எஞ்சிய பகுதிக்குக் குருதியளிக்கும்.\n\nசுருள் நடுகத் தமனி, நடுகத்தைச் சார்ந்து, அதன் வளைவு, நெளிவுகளில் தொடர்ந்தோடிச் சுருள் வளை நுனியை அடையும். அடிச் சுற்றைத் தவிர, எஞ்சிய சுருள் வளைச் சுற்றுகள், இத்தமனி மூலமே குருதி பெறுகின்றன. நடுகத்தில் இத்தமனி சுற்றிச் செல்கையில், புறப்படும் ஆரக் குறுந்தமனிகள் தந்துகிகளாகப் பிரிகின்றன. சுருள் வளையின் வெளிச் சுவரில் ஆரக் குறுந் தமனிகளை ஒன்றோடொன்றாகப் பல வளைவுக் கிளைகள் இணைக்கின்றன. இவ்வளைவுகளே குறுந் தமனிக் குடிலங்கள் (arteriolar arcades) ஆகும். ஆரக் குறுந் தமனிகளின் தந்துகிகள், குருதிப் பட்டையத்திற்கே (stria vascularis) சிறப்பாகக் குருதியைக் கொடுக்கின்றன.\n\nகுருதிப் பட்டையம் என்பது வெளிச் சுவரில் காணப்படும் ஒரு தந்துகி வலையப் பட்டையாகும். ஆரக் குறுந் தமனிகளோடு மட்டுமல்லாது, சிரை களோடும், குருதிப் பட்டையம் தொடர்பு கொண்டுள்ளது. மொத்தத்தில், ஆரக் குறுந் தமனிகளின் பல் வேறு கிளைகளின் வாயிலாக ஆக்சிஜனேற்ற குருதி வழங்கப் படுகிறது.\n\nஉட்செவியின் சிரைகள். தந்துகிகளிலிருந்து ஆக்சிஜன் அகற்றிய குருதியைத் தொகுத்துக் கிளம்பும் குறுஞ்சிரைகள் (venules) வெளிச் சுவரில் காணப் படுகின்றன. இடைகழிச் சவ்வின் தந்துகிகளினின்று இடைகழிச் சவ்வு நாளம் தோற்றுவிக்கப் படுகிறது. இவ்வாறே, தந்துகிகளிலிருந்து பறை விளிம்பு நாளம் {vessel of tympanic tip)உருவாகிறது. மோனச் சவ்வின் கீழ்ப் பரப்பில், தந்துகிகளின் சேர்க்கைக் காரணமாக மோனச் சவ்வு நாளம் தோன்றுகிறது.\n\nசுருள் வளையின் வெளிச் சுவரின் அனைத்துப் பகுதிகளிலும் ஆக்சிஜன் அகற்றிய குருதியோடும் தொகுப்புக் குறுஞ்சிரைகள் உண்டு. மேற்கூறிய நாளங்கள் யாவற்றையும், பல குறுக்கு நாளங்கள் இணைக்கின்றன.\n\nஅரை வட்டக் குழல்கள், சுருள் வளை அடிச் சுற்று ஆகியவற்றிலிருந்து உருவாகும் குறுஞ்சிரைகள் ஒன்று கூடி, இடைகழிச் சுருள் வளைச் சிரையாக உருவாகி, பொது நடுகச் சிரையோடு இணையும். இவ்வாறு உருவாக்கப்படுவதே சுருள் வளைச் சிரையாகும். இடைகழியின் பிற பகுதிகளிலுள்ள தந்துகிகளிலிருந்து இரு சிரைகள் தோன்றுகின்றன. முன் பகுதியினின்று வரும் வணரியச் சிரை உட் செவிப் புழையின் வழி வெளியேறுகிறது. பின் பகுதியினின்று வரும் இடைகழிச் சாலகச் சிரை வளைப் பரிகையை (sigmoid sinus) அடைகிறது.\n\nஇடைகழிக் கருவி உடலின் தோரணை மாற்றங்களைச் (postural changes) சீரமைக்கிறது; வெட்ட வெளியில் உடல் பகுதிகள் இயங்குகையில், சமன்பாட்டை நிர்வகிக்கிறது. ஆனால், இடைகழியின் குருதி நாளங்களைப் பற்றிய நுண்ணிய குறிப்புகள் இது வரை ஆய்வாளர்களுக்கும், மருத்துவர்களுக்கும் கிட்டவில்லை. எனவே, குருதி நாளக் கோளாறுகளால் இடைகழியில் ஏற்படும் நோய்களையும், கேடுகளையும் பற்றிய செய்திகள் சரியாகக் கணிக்கப் படவில்லை. சுருள் வளைக் குருதியோட்டத்தைப் பற்றிய குறிப்புகள் பெருமளவு அறியப் படுவதால், இவற்றின் நோயாக்கமும், தாக்கமும். மிகுதியும் ஆயப்பட்டுள்ளன.\n\nசுருள் வளைக் குருதி நாளங்களின் குறிப்புப் பண்புகள். சுருள் வளையின் குருதியோட்டம் சில சிறப்புகளைக் கொண்டது. சுருள் நடுகத் தமனியிலிருந்து புறப்படும் ஆரக் குறுந்தமனிகள், உடலின் பிற தமனிகளிலிருந்தும், செவியின் பிற தமனிகளிலிருந்தும் மாறுபட்டவை. இவற்றின் சுவர்களில் உள்ள வழுக்குந் தசை நார்கள் தட்டையானவை; பிற தமனிகளின் வழுக்குந் தசை நார்களோ உருண்டையானவை. பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி, இத்தட்டைத் தசை நார்கள் (flat muscle fibres) மிகக் குறைந்த அளவில், சுருங்கி விரியுந் தன்மையைப் பெற்றுள்ளன. எனவே, சுருள் வளைக் குருதியோட்டம், பெரும்பாலும் ஒரே முறையாக அமைகிறது.\n\nநடுகத் தமனி, அதன் கிளைகள் ஆகியவற்றின் சுவர்களிலும், துளைகள் மிகுதியாகக் காணப் படுகின்றன. இவை அகவண்ணீர் (endolymph), புறவண்ணீர் (perilymph) உருவாக்கத்தில், பெரும் பணியாற்றுகின்றன. வணரியத் தமனி ஒரு முடிந்த தமனி (end artery) ஆகும். எனவே, இதன் வெவ்வேறு கிளைகளும், தங்களுக்குள் இணைந்து பிரிவடையினும் வேறொரு தமனியின் கிளைகளோடு இணைவதில்லை. குறிப்பாகப் படல வணரியத்திற்குக் (membranous labyrinth) குருதி வழங்கும் வணரியத் தமனியின் கிளைகளுக்கும், இதைச் சுற்றியுள்ள பிற பகுதிகளின் தமனிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் ஏற்- படுவதில்லை. எனவே, வணரியத் தமனியில் அடைப்போ, தாக்கமோ ஏற்படும் போது, ஒத்திசைக் குருதியோட்டம் (colateral circulation) ஏதும் இல்லா நிலையில், சுருள் வளைக்கும், இடைகழிக்கும் குருதிப் பரிமாற்றம் தடைப் படுகிறது. இது உட்செவிக் கோளாறுகளை உண்டாக்கும். —சுதா சேஷய்யன்"}}