{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dz6gvu5m/", "data": {"id": "dz6gvu5m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dz6gvu5m/", "kind": "article", "headword": "உத்தண்டன் கோவை", "romanization": "uttaṇṭaṉ kōvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.509295+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய கோவை நூல்களுள் ஒன்றாகும்.", "body_ta": "கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய கோவை நூல்களுள் ஒன்றாகும். இந்நூலாசிரியர் பெயர் அறியக்கூடவில்லை. தொண்டை மண்டலத்தே குமிழி நாட்டைச் சேர்ந்த ஆமூர்க் கோட்டத்திலுள்ள பாலாற்றின் கரையில், தைகை என்னும் குன்றினைச் சார்ந்துள்ள தையூவில் தோன்றிய உத்தண்டன் என்னும் வள்ளம் மீது பாடப்பட்டது இந்நூலாகும். தையூருக்கு இராசகேசரி நல்லூர் என்னும் வேறு பெயரும் உண்டு. தையூரில் தோன்றிய உத்தண்டன் மீது பாடப்பெற்றமையால் இந்நூல் ‘தையூர் உத்தண்டன் கோவை’ எனவும் வழங்கப்படும். உத்தண்டன் தந்தை பெயர் குன்றன் என்பதாகும். இவர் குன்றுடையான் எனவும் வழங்கப்படுவர். இவர் காராளர் மரபில் தோன்றியவர். இக்கோவை இன்னும் அச்சிடப்பெறவில்லை, சென்னை அரசின் தொன்னூல் நிலையத்தில் உள்ள கையேட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது. 400 பாடல்கள் கொண்ட இந்நுலில் 40 பாடல்கள் இல்லை என்று அக்குறிப்புக் கூறுகிறது. உத்தண்டன் அமைச்சன் என்றும் களத்துக் கதிபதி என்றும் கூறப்படுவதால், அவன் அக்காலத்திலாண்ட நாயக்க மன்னரிடம் படைத்தலைமை பூண்டு தொண்டாற்றியவனாக இருந்திருத்தல் கூடும் என்பது புலனாகிறது. ‘தமிழ்த் தொண்டு பட்டு ஏழ்மனைக்கே தலையுண்ட உத்தண்டன்’ எனப் பாராட்டப்படுவது கொண்டு இவன் தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றியமையினை அறியலாம். இவ் உத்தண்டனை ‘உத்தமர்கள் சூழ் மானவ உத்தண்டன்’ என்று தினகர வெண்பா குறிப்பிடுகிறது. இதனால் மானவ என்னும் ஊரும் உத்தண்டனுக்கு உரியது என்பது தெரிகிறது."}}