{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dyceesbv/", "data": {"id": "dyceesbv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dyceesbv/", "kind": "article", "headword": "உண்மைக் கூலி", "romanization": "uṇmaik kūli", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.245524+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது தொழிலாளர் வருவாயின் வாங்கும் திறனைக் குறிக்கும்.", "body_ta": "இது தொழிலாளர் வருவாயின் வாங்கும் திறனைக் குறிக்கும். உழைப்பிற்கு அளிக்கப்படும் விலை கூலி, பிற காரணிகளின் விலை உறுதி செய்யப்படுவது போன்று கூலியும் உழைப்பாளரின் தேவை அளிப்பைச் சார்ந்து வரையறுக்கப்படும். எனினும், உழைப்பின் தனிச் சிறப்பியல்புகளினால், முற்றிலுமாய் அங்காடி சார்ந்த கட்டுப்பாடுகளுக்குட்படாமல் தொழிலாளரின் பிழைப்பிற்குரிய இன்றியமையாமையைப் பொறுத்து, உண்மைக் கூலியில் (Real Wages) ஏற்றத்தாழ்வுகள் நிகழும். உண்மைக்கூலிக் கருத்துருவை (Concept) முதன் முதலில் அறிஞர் இரிக்கார்டோ (Ricardo) பகுத்தாய்ந்தார்.\n\nதொழிலாளரின் அளிப்பு மிகையாக இருந்தால் உழைப்பின் அங்காடி விலை (Market Price of Labour) குறைவாக இருக்கும்; அளிப்புக் குறைவாக இருந்தால் உழைப்பின் அங்காடி விலை உயர்வாக இருக்கும். உண்மைக் கூலி தொழிலாளரின் வாழ்க்கைக்குத் தேவையான பணிகள், பொருள்கள் ஆகியவற்றின் விலையைச் சார்ந்திருக்கும். இவ்வுண்மைக் கூலியை ஒட்டியதாக உழைப்பின் அங்காடி விலையில் மாற்றங்கள் நிகழும். உணவு, உறைவிடம் போன்ற இன்றியமையாப் பண்டங்களின் விலை உயர்ந்தால் பணக் கூலியில் (Money Wages) உயர்வு ஏற்பட்டு உண்மைக் கூலியும் உயரும். இப்பண்டங்களின் விலை உயர்வுக்குகந்த வகையில் பணக்கூலி உயராவிட்டால் உண்மைக் கூலி கீழிறங்கும்.\n\nநுகர்பொருள்களின் விலைக் குறியீட்டை (Price Index) அடிப்படையாகக் கொண்டு பணக்கூலியுடன் அதனை ஒப்பிட்டு உண்மைக்கூலி கணக்கீடு செய்யப்படுகிறது. எல்லாக் காலங்களிலும் பணக்கூலியும் உண்மைக் கூலியும் ஒரே வீதத்தில் மாற்றங்களுக்குட்படுவதில்லை. பணவாட்ட நிலையில் (Recession) பணக்கூலி நுகர்பொருள் விலைக் குறியீட்டை விடக் (Price Index) குறைந்த வேகத்தில் கீழிறங்கும். இத்தகைய சூழ்நிலையில் உண்மைக் கூலி உயரும்.\n\nபணக்கூலி குறைவதால், பணவாட்ட நிலையில் ஏற்படும் வணிகப் பொருளியல் சிக்கல்கள் தன்னியல்பாகவே சீரடையும் எனத் தொன்மைப் பொருளியல் கோட்பாட்டினர் கருதினர். இக்கருத்தின் குறைகளை சே.எம். கீன்சு (J.M. Keynes) தன்னுடைய வேலை, வட்டி, பணம் ஆகியவற்றின் பொதுக் கோட்பாடு (General Theory of Employment Interest and Money) என்னும் நூலில் தெளிவாக விளக்கியுள்ளார். கீன்சின் கருத்துப்படி, உண்மைக்கூலி உயருமானால் பணக்கூலி கீழிறங்குவதால் விளையும் நன்மைகளைப் பெற இயலாது; செலவுகள் குறையா; ஆனால் நுகர் பொருள்களின் தேவை குறைந்து வணிகப் பின்னிறக்க நிலை (Business Recession) மேலும் தீவிரமடையும்.\n\nபொருளாதாரத்தில் ஏற்படும் பல மாற்றங்கள், வணிகச் சுழற்சி ஆகியவற்றின் அடிப்படையில் பணக் கூலியில் மாற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டேயிருப்பினும், உண்மைக் கூலியின் மாற்றங்கள் குறைந்த வேக வீதத்தில் (Slow Rate) நிகழ்ந்து, நீண்டகாலத்தில் உணரப்படும் என்பது பன்னாட்டு விலைக் குறியீட்டு அட்டவணைப் புள்ளி விவர ஆய்வு முடிவுகளிலிருந்து அறியப்படுகிறது."}}