{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dxqcnjkh/", "data": {"id": "dxqcnjkh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dxqcnjkh/", "kind": "article", "headword": "சுருள் நூல்", "romanization": "curuḷ nūl", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.069231+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நீள் வளையங்களை உள்ளடக்கிய நூல், சுருள் நூல் (curled yarn) எனப்படுகிறது.", "body_ta": "நீள் வளையங்களை உள்ளடக்கிய நூல், சுருள் நூல் (curled yarn) எனப்படுகிறது. போகிள் (boucle) நூல், நீள் வளைய (loop) நூல் என்று இந்நூல் வகைக் குறிப்பிடப்படும், புது நய வகை நூல்களுள் (novelty yarns), இந்நூல் மென் பரப்பு மிக்கதாகும். பல்புரி நூல்களை ஒன்றோடொன்று முறுக்குகையில், ஒரு பல்புரி நூலை இறுக்கி, முறுக்காமல் தளர விட்டு விட்டால் (slack), அந்நூல் அதன் மீதே சுற்றிக் கொண்டு நீள் வளையங்களை உருவாக்குகிறது. உருளைகளின் சுற்றுதல் விரைவைப் பொறுத்து நீள் வளையத்தின் அளவு அமையும். இந்நூல்கள்,. பின்னல் வகைத் துணிகளுக்கு ஏற்றவையாகும். நீள் வளைய அடுக்குகளை உருவாக்கி, விலங்கின மயிர்க் குஞ்சத் துணிகளைப் (furs) போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம். காராகுல் என்னும் மென் மயிர்த் துணியைப் போன்ற இத்துணிகள் துண்டு இணைப்புகளுக்கும் (trimmings), நயமிகு ஆடைகளுக்கும் பயன்படுகின்றன.\n\nநீட்சியுறும் நூல்களைச் (stretch yarns) சுருள் நூல்களாகத் தயாரிக்கலாம். வெப்பத்தால் இளக வல்ல நூல்களைச் சூட்டில் இளக்கி, சற்றே அழுத்தத்தில் கூரான கத்தி முனையின் மீது செலுத்தினால், நூலின் ஒரு புறம் (நீள வாக்கில்) தட்டையாகி விடும். இந்நூலால் தயாரிக்கப்படும் துணிக்கு, துணியைச் சீர் செய்தலின் போது நூலின் மீட்சிப் பண்பு மாற்றப்படுகிறது. நூலில் ஆங்காங்கே சிறு பகுதிகளில், சுருள்களும், திருக்கமும் (torque) காணப்படுகின்றன. இவை தாறுமாறாக அமைந்துள்ளமையால், திருகு விசைக்குட்படுவதில்லை.\n\nஅகிலான் என்னும் வணிகப் பெயர் கொண்ட நூல், இவ்வகைக்கு எடுத்துக் காட்டாகும். இவ்விழையை அதன் இயல்பான நீளத்தைப் போல், மூன்று மடங்கு நீட்ட இயலும். இழு விசையை விடுவித்தவுடன் தொடக்க நீளத்திற்குத் துல்லியமாகத் திரும்புகிறது. ஆனால், இம்மீட்சி ரப்பரைப் போலல்லாமல், மெல்ல நிகழ்கிறது. மென்மையான, இம்மீட்சி துணிக்குத் திரிபைத் தோற்றுவிப்பதில்லை.\n\nசுருள் நூல்களால் தயாரிக்கப்படும் உடைகள் பரந்த வரம்பு கொண்டவை. ஆண், பெண், சிறார் என யாவருக்கும் பொதுவான பின்னல் துணி வகைகள் (knitted fabrics), மகளிர் உள்ளாடை (lingerie) ரவிக்கை, மென் மயிர்க் குஞ்சத் துணிகள் ஆகியன. —மே.ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P Corbman, Textiles-Fibre to Fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985."}}