{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dsucujhy/", "data": {"id": "dsucujhy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dsucujhy/", "kind": "article", "headword": "இலிங்கோற்பவர்", "romanization": "iliṅkōṟpavar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.917299+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இருபத்தைந்து சிவமூர்த்தங்களுள் ஒருவராய்த் திகழ்பவர், சோழர்களால் கட்டப்பெற்ற சிவன் கோவில்களில் கருவறையினை அடுத்துள்ள உட்சுற்றில் மேற்குப் பக்கத்து அமைக்கப்பட்ட மாடத்தில் இவரது திருவடிவம் அமைக்கப்பட்டுள்ளது.", "body_ta": "இருபத்தைந்து சிவமூர்த்தங்களுள் ஒருவராய்த் திகழ்பவர், சோழர்களால் கட்டப்பெற்ற சிவன் கோவில்களில் கருவறையினை அடுத்துள்ள உட்சுற்றில் மேற்குப் பக்கத்து அமைக்கப்பட்ட மாடத்தில் இவரது திருவடிவம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்குப் பக்கத்தில் அமையும் இம்முறை முதலாம் இராசராசன் காலமுதல் மாறியும் வந்துள்ளது. கருவறையினை அடுத்துள்ள உட்சுற்றில் வலம் வரும்பொழுது இம்மூர்த்தியை வழிபடலாம். இவ்விலிங்கோற்பவரின் இருமருங்கிலும் நான்முகனையும் திருமாலையும் கூப்பிய கரங்களுடன் அமைத்திருப்பார்கள்.\n\nஇத்திருவடிவத்தைச் சிற்பிகள் பின்வருமாறு அமைப்பர். முதலில் இலிங்கத்தை உருவாக்கி அதை நான்கு பகுதிகளாகப் பிரித்து, மேலே ஒரு பகுதியும் கீழே ஒரு பகுதியும் நீக்கி, நடுவிலுள்ள இரு பகுதிகளையும் எடுத்துக் கொள்வார்கள். இலிங்கத்தின் முற்பக்கத்தில் இவ்விரு பங்குகள் உள்ளடங்கக் கூடியவாறு, அண்டவடிவினதாகக் கீறி வகுத்துக் கொள்வார்கள். இலிங்கத்தின் மேற்பக்கத்தினையும் கீழ் பக்கத்தினையும் பிறை போன்று வளைந்திருக்கச் செய்வார்கள். இதன் நடுவே சிவன் திருவுருவத்தை அமைப்பார்கள். இத்திருவுருவத்திற்கு நான்கு திருக்கரங்களை அமைப்பர். நெற்றியிலிருந்து முழந்தாள் வரையுமுள்ள பகுதி மட்டும் வெளியில் தெரியும்படி அமைத்து இருகரங்களில் மானும் மழுவும் இருகரங்களில் அபயவரதமும் அமைக்கப்படும்.\n\nஇலிங்கோற்பவர்\n\nகுண்டலம், ஆரம், கேயூரம், முத்து ஆகிய அணிகலன்களைத் திருவடிவத்தில் அமைப்பார்கள். அதன் வலப் பக்கத்தின்மேல் பறக்கும் நிலையில் அன்னத்தையும், இடப் பக்கத்தின் கீழே நிலத்துள் சாய்ந்த பாவனையில் பன்றியையும் சித்திரிப்பார்கள். அன்னத்திற்கு மேல் தாழை மடல் கீழே விழுதல் போல் அமைத்தலுமுண்டு. இத்திருவடியைக் குறித்த செய்திகள் ‘ஆயை சிற்ப இரகசியம்’, ‘சிவராத்திரி புராணம்’, ‘இலிங்கபுராணம்’, ‘கந்த புராணம்’, ‘அருணாசல, புராணம்’ ஆகிய நூல்களில் கூறப்பட்டுள்ளன.\n\nயார் பரம்பொருள் என்பது குறித்துத் திருமாலுக்கும் நான்முகனுக்கும் போட்டி நிகழ்ந்தது. சிவபெருமான் அவ்விருவருக்குமிடையே அக்கினித் தம்பமாய் மாறி அமர பக்கச் சதுர்த்தசியில் இலிங்கத்தின் தோன்றினார். இத்தம்பத்தின் அடியும் முடியும் அறித்தவரே பெரியவர் என்று வான் ஒலி (அசரீரி) கூறிற்று, பிரமன் அன்னவடிவு கொண்டு வானில் பறந்து சென்றார். திருமால் பன்றி உருவமெடுத்து நிலத்தை அகழ்ந்து பாதாளம் சென்றார். இருவராலும் அடி முடிகளைக் காண இயலவில்லை, இருவரும் வணங்கி வழிபட்டனர். இச்சிவபெருமான் திருவடிவே இலிங்கோற்பவ வடிவமாகும். இவ்விலிங்கோற்பவரை வழிபடுவோர் நல்லுடலையும் நல்லாயுளையும் பெறுவர் எனச் சிவாகம நூல்கள் கூறுகின்றன. சு.சு."}}