{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dm8n4nxp/", "data": {"id": "dm8n4nxp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dm8n4nxp/", "kind": "article", "headword": "அலைக் கோட்பாடு", "romanization": "alaik kōṭpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.771831+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அலைக் கோட்பாடு என்பது மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறியக் கி.பி.", "body_ta": "அலைக் கோட்பாடு என்பது மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறியக் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் புத்திலக்கணத்தார் (Neogrammarians) கண்டு கூறிய பல்வேறு கோட்பாடுகளுள் ஒன்று. கி.பி. 1872-ஆம் ஆண்டு இந்தோ–ஐரோப்பிய மொழிகளின் மரபுவழித் தொடர்புகளையும், ஒற்றுமை–வேற்றுமைகளையும் விளக்கப் போந்த சோன்சு சுமித்து (Johannes Schmidt) என்பவரே முதன் முதலில் இக்கோட்பாட்டினைக் கொண்டுவந்தார்.\n\nஅமைதியான நீரில் ஒரு மையத்தினின்றும் தோன்றுகிற வட்டவடிவமான அலைகள் அம்மையத்தினின்றும் விலகிச் செல்லச்செல்ல மெலிதாகி இறுதியில் மறைந்துவிடும். அந்நீரில் வேறொரு மையத்தினின்றும் வருகின்ற அலைகளுடன் சந்திக்கிறபொழுது அவை தடைப்படுவதையும் காணலாம். இதுபோன்று ஒரு செழுமை வாய்ந்த மொழியின் தாக்கம், நீரில் உண்டாகும் அலைகளைப் போன்று பரந்து செல்லும் பான்மையது. இந்நிலையில் மற்றொரு மொழியின் தாக்கமும் நீரலை போன்று பரவி வருங்கால், இரு தாக்கங்களும் ஓரிடத்தில் சந்திக்கும் நிலையில், காலப் போக்கில் ஒரு புதிய மொழிப்பண்பு தோன்றுதற்குக் காரணமாக அமைந்துவிடும். இச்சூழ்நிலை, உறவுடைய மொழிகளுக்கிடையேயும் உறவற்ற மொழிகளுக்கிடையேயும் ஏற்படும். அப்பொழுது பல்வேறு மொழி மாற்றங்கள் (Linguistic Innovations) உண்டாகும். இம்மாற்றங்களை அலைக் கோட்பாடு (Wave Theory) மட்டுமே விளக்க வல்லது எனக் கருதினர்.\n\nஏனெனில், இக்கோட்பாட்டிற்கு முன்னர்த் தோன்றிய காலக்கிரமக் கிளைக் கோட்பாடு (Fumily Tree Theory) காலக்கிரமத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் தொல்மொழி (Proto Language) பிரிந்த நிலையை மட்டுமே விளக்கி நின்றது. மொழித் தொடர்பால் (Language Contact) அவ்வப்பொழுது ஏற்படும் மொழி மாற்றங்களை இக்கோட்பாடு காட்டாதாகையாலேயே அலைக்கோட்பாடு தோன்றிற்று. எடுத்துக்காட்டாகக் காலக் கிரமத்தில் ஏற்பட்ட மொழி மாற்றங்களின் அடிப்படையில், திராவிட மொழிகள் தென் திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காலக்கிரமக் கிளை வரைபடம் (Family Tree Diagram) மூலம் விளக்குவர். ஆனால், இம்மொழிகள், அவை பேசப்படுகிற இட அடிப்படையில் பிற மொழிகளுடன் (உறவு மொழிகள், உறவற்ற மொழிகள்) மொழித் தொடர்பு ஏற்படுத்துவதன் காரணமாகப் பல்லேறு மொழிமாற்றங்கள், காலக்கிரமம் வரையறுக்க முடியாதபடி ஏற்படுகின்றன. இத்தகைய மாற்றங்களை அலைக் கோட்பாட்டின் மூலம் விளக்கலாம்.\n\nஓரிடத்தில் தோன்றுகிற புதிய அரசியல் சூழ்நிலை (காலனி ஆதிக்கம் போன்று), மக்களின் இடப் பெயர்ச்சி (Migration) போன்றவற்றால் மொழிக் கலப்பு ஏற்படும்பொழுது, முன்பு இருக்கும் மொழியின் மேல் புதிதாக வரும் மொழியின் தாக்கம் ஏற்படின் அல்லது முன்பு இருக்கும் மொழியின் தாக்கம் புதிய மொழியின் மேல் ஏற்படின், இருக்கும் மொழி, வரும் மொழி இரண்டிலுமே மொழி மாற்றங்கள் ஏற்படும். இது புதியதொரு மொழிப்பண்பு உருவாதற் பொருட்டு முதலில் மொழிப்பிளவு (Divergence) ஏற்பட்டுக் காலப்போக்கில் புதியதொரு மொழியே உருவாகிவிடும். தமிழ் மலையாளமாக மாறிய செய்தியினை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். மேலும், தமிழ் போன்ற பல்வேறு கிளைமொழிகளைத் (Dialects) தன்னத்தே கொண்ட ஒரு மொழியில். அதன் பொதுக் கிளைமொழி (Common Dialect) ஒன்று, தன் செல்வாக்கைப் பிற கிளைமொழிகளில் பரப்புமேயானால், கிளைமொழிகளில் சமநிலை (Dialect Levelling) ஏற்படும். இத்தகைய மாற்றங்களையெல்லாம் அலைக்கோட்பாடே விளக்கி நிற்கும்.ஆர்.பா."}}