{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dcun6754/", "data": {"id": "dcun6754", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dcun6754/", "kind": "article", "headword": "உத்தேசங்கூறல்", "romanization": "uttēcaṅkūṟal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.890321+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உத்தேசங்கூறல் என்பது நியாய நூற் குறியீட்டுச் சொல்.", "body_ta": "உத்தேசங்கூறல் என்பது நியாய நூற் குறியீட்டுச் சொல். ஒரு பொருனை விளக்கும் பொழுது உத்தேசம், இலக்கணம், பரீட்சை என்னும் மூன்று வகையில் விளக்கப்படும் என்பது நியாய நூல் முறை.\n\nஉத்தேசம் கூறல் என்பது எடுத்துக் கொண்ட பொருளை முதலில் பெயரளவாகச் சுட்டுதல். எடுத்துக் காட்டாகத் தொல்காப்பியம்,\n\n:‘சொல்லெனப் படுப பெயரே வினையென்று :ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே’ எனவும்,\n\n:‘இடைச்சொற் கிளவியும், உரிச்சொற் கிளவியும் :அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப’\n\nஎனவும் கூறுகிறது. இவற்றில் சொற்கள் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும் என்று அவை பெயரளவிலே சுட்டப்பட்டன. இவ்வாறு கூறுதலே உத்தேசம் கூறுதலாகும்.\n\nஇவற்றிற்குப் பிறகு தொல்காப்பியம் பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் என்பவற்றில் முதற்கண் கூறிய நால்வகைச் சொற்களுக்கும் உரிய இலக்கணங்களை விரிக்கிறது. அவையெல்லாம் இலக்கணங் கூறலாம்.\n\n‘கூறப்பட்ட இலக்கணங்கள் அவ்வப் பொருளில் பொருந்தியுள்ளனவா என ஆராய்தல் பரீட்சையாகும். தொல்காப்பிய நூல் இதனைச் செய்யவில்லை. ஆயினும் இதனை அந்நூலின் உரைகள் நன்கு ஆய்வு செய்துள்ளமை காணலாம். அவ்வாறு செய்தலே பரீட்சித்தலாகும். ::‘ஆதிஉத் தேசத் தானும் ::::இலக்கண பரீட்சை யானும்’\n\nஎன்கிறது திருவிளையாடற் புராணம் (தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் – 54). சி.அ."}}