{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d6j2kyfr/", "data": {"id": "d6j2kyfr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d6j2kyfr/", "kind": "article", "headword": "இலவங்கந் தீவுகள்", "romanization": "ilavaṅkan tīvukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.123595+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலவங்கந் தீவுகள் என்பது இந்தோனேசியா நாட்டைச் சார்ந்த மொலுக்கசு தீவுக்கு இடப் பெற்றுள்ள வேறொரு பெயர், மொலுக்கசு (Moluecas) ஒரு தீவுக்கூட்டம்; இந்தோனேசியாவின் மாநிலங்களுள் ஒன்று.", "body_ta": "இலவங்கந் தீவுகள் என்பது இந்தோனேசியா நாட்டைச் சார்ந்த மொலுக்கசு தீவுக்கு இடப் பெற்றுள்ள வேறொரு பெயர், மொலுக்கசு (Moluecas) ஒரு தீவுக்கூட்டம்; இந்தோனேசியாவின் மாநிலங்களுள் ஒன்று. இதன் பரப்பு 83,675 ச.கி.மீ. ஆகும். இத்தீவுகள் கிழக்கு இந்தோனேசியாவில் செலிபீசுத் (Celebes) தீவுக்கும் நியூகினித் (New Guinea) தீவுக்கும் இடையில் அமைந்துள்ளன. இத்தீவுக் கூட்டம் எரிமலைத் தொடர்புடைய மலைப்பாங்கானதும், செழுமைமிக்கதும், ஈரக்கசிவான தட்பவெப்ப நிலையைக் கொண்டுள்ளதுமாக உள்ளது. இங்கேயே சாதிக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பொருள்கள் விளையத் தொடங்கின. இதனாலேயே இத்தீவுகளை இலவங்கத் தீவுகள் என்றனர். கொப்பரை, வனப்பொருள்கள் போன்றவை ஏனைய நறுமணப் பொருள்களாகும். இத்தீவுக்கூட்ட மக்களின் அடிப்படை உணவு சவ்வரிசி (Sago) ஆகும்.\n\nஇத்தீவுக்கூட்டத்தை கி.பி. 1511–12–ஆம் ஆண்டில் மெகல்லன் என்னும் ஐரோப்பிய மாலுமி முதலில் ஆய்வு செய்தார். பின்னர் இது போர்த்துகீசியரின் குடியேற்றப் பகுதியாயிற்று. தச்சுக்காரர்கள் இதனை கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் கைப்பற்றிக் கொண்டனர். இலவங்க வாணிகத்தின் முற்றுரிமையையும் அவர்களே பெற்றுக்கொண்டனர். ஆங்கிலேயர் இத்தீவுகளைக் கைப்பற்ற இருமுறை முயன்றும் பயனில்லை. தச்சுக்காரர்கள் இதனை கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலையாகக் கைக்கொண்டனர். இத்தீவுகளைச் சப்பானியர் இரண்டாம் உலகப் போரின்போது கைப்பற்றி, 1945–ஆம் ஆண்டுவரை சப்பானியப் பேரரசின் பகுதியாக்கியிருந்தனர். ஆனால், போருக்குப் பின்னர் இந்தோனேசியா 1945–ஆம் ஆண்டு ஆகசுட்டு 17–ஆம் நாள் சுதந்திரக் குடியரசானது. இக்காலத்தில் இதனை மலூக்கு (Maluku) என்னும் பெயரில் அழைக்கிறார்கள். இதன் மக்கள் தொகை 14,11,006 (1980)."}}