{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d3h9um2u/", "data": {"id": "d3h9um2u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d3h9um2u/", "kind": "article", "headword": "சிறு கோள்கள", "romanization": "ciṟu kōḷkaḷa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:55.970441+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "", "body_ta": "அண்ட வெளியில் சூரியனை வலம் வரும் செவ்வாய், வியாழன் என்ற கோள்களின் இயங்கு பாதைகளின் இடைவெளியில், பல்லாயிரக்கணக்கான சிறு சிறு விண் பொருள்கள் ஏனைய கோள்களைப் போலவே, சூரியனை (குவி) மையங்கொண்டு பெரும் நீள் வட்டப் பாதைகளில் காலம் தவறாமல் வலம் வந்து கொண்டே இருக்கின்றன, இவையே, சிறு கோள்கள்(asteroids) எனப்படும்; ஆஸ்டிராயிட் என்று சொல்வதை விட, இவற்றைப் பிளானடாயிட் (planetoid) என்று கூறுவதே பொருத்தமாகும். ஏனெனில், இவை சிறு கோள்களே தவிர, சிறு விண்மீன்கள் அல்ல.\n\nகெப்ளர் என்னும் வானியலார் வகுத்த விதிகளின் அடிப்படையில், சூரியன் (குவி) மையங்கொண்டு ஒன்பது பெருங்கோள்கள் நீள் வட்டப் பாதைகளில் இயங்கி வருவது விலக்கப்படும். அண்மை—சேய்மை வரிசையில் இவை (சூரியன் மையம்) புதன், சுக்கிரன், புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்பனவாம். இவை, தத்தம் நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வரும் போது, சூரியனிடமிருந்து சராசரி தொலைவு வானியல் கணிப்பு முறைப்படி 0.387; 0.723; 1:1.524:5.203;9.589; 19.191; 30.058;39.518 எனக் கணிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் இடத்திலுள்ள ‘1’ என்பது, சூரியனிடமிருந்து மூன்றாமிடத்தில் வலம் வரும் புவிக்குரிய தொலைவாகும். இந்த ‘1’ என்பது புவிக்கும், சூரியனுக்கும் உள்ள சராசரி தொலைவு 149.5 X 10⁴ கி.மீ; இது வானியல் தொலைவுகளை அளப்பதற்குப் பயன்படும் ஓர் அலகு ஆகும்.\n\n19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜே.ஈ. போட் என்பார் இத்தொலைவுகள், செயல் முறையில் பின் வரும் வரிசையில் அமைந்துள்ளன என்று ஒரு நடைமுறை (empirical) விதி கண்டார். இது வானியல் கணித முறையில் நிறுவப்பட்டதன்று; வெறும் பட்டறிவு முறையேயாம், இவ்விதிப்படி சூரியன்—கோள் தொலைவு 0.4;0.7;1:1.6;2.8;5.2;10;19,6; 38.8; 77.2… எனவாகும். வானியல் முறைப்படி கணிக்கப்பட்ட தொலைவுகளும் போட் வகுத்த நடைமுறை விதிப்படி உள்ள தொலைவுகளும் 2. 8ஐத் தவிர, ஏனையவை ஏறக்குறைய ஒத்துள்ளமையைக் காணலாம்.\n\nகோள்களின் இயக்க விதிகளைக் கெப்ளர் நிறுவிய போது வியாழனுக்கும், செவ்வாய்க்கும் இடையே, ஒரு கோள் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும் எனக் கூறினார். போட் என்பாரும், தன் வரிசையில் விட்டுப் போன 2.8 என்ற இடத்தில் மற்றொரு கோள் இருந்தே ஆக வேண்டுமென ஊகமாகக் கூறினார்.\n\nசெவ்வாயின் இயங்கு பாதைக்கும், வியாழனின் இயங்கு பாதைக்கும் இடைப்பட்ட பெரு வளையம் 544 X 10⁸ கி.மீ. அகலம். இப்பெரும் இடைவெளி வெற்றிடமாக இருக்க முடியாது. இக்கொள்கையைக் கெப்ளரும் வற்புறுத்தினார்; போட் என்பாரும் மேற்கொண்டார்.\n\nஇப்புதிரை விடுவிப்பதற்கு முனைந்த போட் இருபத்து நான்கு வானியல் அறிஞர் உதவியை நாடினார். அவர்களுள் ஒருவர் பியாசி என்னும் இத்தாலிய வானியலறிஞர் ஆவார். இவர் தற்செயலாகத் தொலைக் காட்சியில் ஒரு புதிய விண்பொருளைக் கண்டார். அது வானில் தொடர்ச்சியாக இடம் மாறுவதைக் கண்டு, போட் தேடிக் கொண்டிருக்கும் விண்பொருள் என்று அதனை ஐயுற்று அவருக்கு இச்செய்தியை அறிவித்தார். ஆனால், இரண்டு நாளுக்குப் பின்னர், அவ்விண்பொருள் பியாசியின் காட்சியை விட்டு அகன்று விட்டது.\n\nபிரடிரிக் காஸ் என்பார் தாம் சிறப்பாகக் கண்டு பிடித்து வைத்திருந்த மீசிறு இருபடித் தேற்றம் (theorem on the method of least squares) என்ற கொள்கையைப் பயன்படுத்தி, காட்சிக்குத் தோன்றி மறைந்து போன விண்பொருளைக் கன்னி இராசியில் (Virgo) இடங்குறித்து நிறுவினார். கன்னி இராசியில் கி.பி. 1801, டிசம்பர் 31ஆம் நாள் இரவு வான்ஷாக் என்பார் இவ்விண்பொருளைக் கண்டார்; மறு நாள் ஆல்பர்ஸ் என்பவரும் அதைக் கண்டு உறுதிப்படுத்தினார். இந்த விண்பொருளே சீரிஸ் என்னும் முதல் சிறு கோள் ஆகும். இது 2.8—க்குரிய இடத்தை நிரப்பிக் காட்சியளித்த முதற் சிறு கோள்.\n\nகெப்ளர் ஊகித்து உறுதி செய்த விண் பொருளும், போட் நடைமுறைப்படி தேடிய விண் பொருளும், செவ்வாய்—வியாழன் இடைப்பட்ட பெருவெளியை முதன்முதலாக நிரப்பிக் காட்சியளித்த விண்பொருளும், சீரீஸ் என்னும் சிறு கோளேயாகும். ஆனால், பிற கோள்களோடு ஒப்பிடும் போது, இது மிக மிகச் சிறிய கோள். சிறுகோளின் தோற்றம், அமைப்பு முதலியன பற்றிக் கூர்ந்து சிந்தனை செய்து கொண்டிருந்த போது, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று சிறு கோள்கள் கண்டறியப்பட்டன. அவை:\n\nஇந்நான்கு சிறு கோள்களும் கெப்ளர் விதிகளின்படி சூரியனை (குவி) மையங்கொண்டு நீள் வட்டப் பாதைகளில் இயங்கி வருகின்றன. ஆனால், ஏறக் குறைய 38 ஆண்டுகளுக்குப் பின்பே 1845இல் ஐந்தாம் சிறு கோள் கண்டு பிடிக்கப்பட்டது.\n\nபின்பு, அறிவியல் உலகில் புகைப்படப் புரட்சி ஏற்பட்டது. உல்ஃப் என்பார் இப்புகைப்பட முறையை வானியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் முன்னோடியாக அமைந்தார். இப்புகைப்பட முறை. சிறு கோள்கள் காணும் முயற்சியில் மிகப் பெரும் வெற்றியைத் தந்தது. கி.பி 1891 வரை 322 சிறு கோள்களும், 1939 வரை 2800 சிறு கோள்களும், இன்று வரை இருபது ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கோடிக் கணக்கான சிறு கோள்கள் செவ்வாய்—வியாழன் பெரு வெளியில் இருக்கக் கூடும். 700 கி.மீ. விட்டமுள்ள சீரீஸ் போன்றுள்ள சிறு கோள் முதலாக ஒரு பட்டாணிக் கடலை அளவுள்ள சிறு கோள் வரை கோடிக் கணக்கான விண் பொருள்கள் சூரிய மண்டலத்தில் சுழன்று வரக் கூடும்.\n\nஇவ்விதமாகச் சிறுகோள்கள் காணும் பணி, ஏறக் குறைய 1898 ஆண்டு வரை முனைப்பாக நடந்தது. ஆனால் 1898 க்குப் பிறகு ஒரு தேக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், சிறு கோள் ஆய்வில் பெருந்திருப்பம் ஒன்று எதிர்பாராத வகையில் ஏற்பட்டது. 1898இல் விட் என்ற வானியலார் மிகப் புகழ் பெற்ற ஈராஸ் (eros) என்னும் சிறு கோளைக் கண்டு பிடித்தார் (பட்டியல் எண் 433). இதன் விட்டம் 27 கி.மீ. ஆனால், இக்கோளின் தாறுமாறான இயக்கம் மீண்டும் சிறு கோள் தேடலில் புத்துணர்ச்சி ஊட்டியது. இக்கோளை இது வரை யாரும் கண்டதில்லை; இதன் சுழல் வேகம் எதிர்பாராத அளவு உயர்வாக இருக்கிறது; எதிர்பாராத அளவு புவிக்கு மிக, மிக அண்மையில் வருகிறது. சூரியனைச் சுற்றி வர 643 நாள் மட்டுமே ஆகிறது; செவ்வாய் கூட 687 நாள் எடுத்துக் கொள்கிறது. இது சூரியனை நோக்கியே தன் இயங்கு பாதையை மாற்றிக் கொள்ள முயன்றது. புதன் சுக்கிரனை விட, இக்கோள் புவிக்கு அண்மையில் 24 ×10⁵ கி.மீ. நெருக்கமாக வருவதே இதற்குரிய காரணம் ஆகும்.\n\nஈராஸ் என்ற சிறு கோளின் விந்தைப் பண்புகள், வானியலறிஞர்களுக்குப் புதிராகவும், வியப்பாகவும் இருக்கின்றன. தொடர்ந்து, வேறு சில கோள்கள் மேலும் புவிக்கு அருகில் வந்து, வானியலறிஞர்களை மேலும் வியப்புக்குள்ளாக்கின.\n\nஅனைத்துச் சிறு கோள்களையும் இது வரை கண்டு ஆய்ந்த வகையில், அவை பற்றிய சிறப்பான செய்திகள் எதுவுமில்லை, அவையனைத்தும் உருண்டையானவை என்றும் கருத முடியாது. பல்வகை வடிவத்தில், நீளமாகவும், கரடுமுரடான மலைகளாகவும் உள்ளன. அச்சிறு கோள்களின் பாதைகளும், செவ்வாய்—வியாழன் இடைவெளியில் மட்டுமே அமைந்துள்ளனவென்றும் கூற முடியாது. சில சிறு கோள்கள், பிற கோள்களின் பாதைகளையும் குறுக்கிட்டுச் செல்கின்றன. ஆனால், இப்பாதைகளில் பல ஒரே தளத்தில் அமையவில்லையாதலின், ஒன்றையொன்று மோதிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகும்.\n\nஇச்சிறுகோள்கள் எவ்வாறு தோன்றி உருவாகி இயங்கி வருகின்றன. நெறி பிறழாமல், ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடந்து கொள்கின்றன என்பன பற்றி வானியலறிஞர்கள் பற்பல கருத்துகளையும், தத்தம் ஊகங்களையும் சொல்லிக் கொண்டே வருகின்றனர். அவற்றுள் சில வருமாறு:\n\nசெவ்வாய்—வியாழன் இடைவெளியில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கோள் இருந்திருக்கக் கூடும் அல்லது உருவாகியிருக்கலாம். ஆனால், அவற்றின் தனித் தனி ஆற்றலாலோ, கூட்டு ஆற்றலாலோ, சிதறடிக்கப்பட்டுப் பல சிறு கோள்களாகவும் அவை உருப் பெற்றிருக்கலாம். இது அண்ட கோளத்தில் நேரக் கூடிய கருச் சிதைவின் விளைவாக ஏற்பட்டிருக்கக் கூடும்.\n\nசெவ்வாய் அல்லது வியாழனின் துணைக் கோள்களில் (satellites) ஒன்றோ, சிலவோ தாய்க்கோளின் ஈர்ப்பு ஆற்றலால் சிதறுண்டு சூரியனைச் சுற்றி வரலாம். அகன்ற வெளி உருவான காலத்தில் இச்சிறு கோள்கள் ஒன்று சேர்ந்து, ஒரு பெருங்கோளாக மாறச் செய்த முயற்சியில் தோல்வியுற்ற போது, சிறு கோள்களாகவே நின்று போயிருக்கலாம். விரைவில் சந்திரன் மேலோ, செவ்வாயின் பரப்பிலோ மனிதன் வானியல் ஆராய்ச்சி நிலையம் ஏற்படுத்த முடியுமானால், இச்சிறு கோள்கள் பற்றிய பல புதுச் செய்திகள் கிடைக்கக் கூடும்.\n\nசிறு கோள்கள், இவ்வளவு அண்மையில் உள்ள போது, மோதல்களும், விபத்துகளும் நேரக் கூடும். பல இயங்கு பாதைகள் வெவ்வேறு தளங்களில் அமைந்துள்ளமையால், இம்மோதல்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் மிகச் சிலவேயாகும். மேலும், பல்வகைப் பட்ட ஈர்ப்பு ஆற்றல்களின் காரணமாக, இயங்கு வழிகளிலேயே பெரும் பிறழ்ச்சிகளும் ஏற்படக் கூடும். சில சிறுகோள்கள் திசை மாறிப் போய்ச் சிதைந்து, மறைந்தும் போய் விடலாம். —தி.கோவிந்தராசன்"}}