{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cxprm9u8/", "data": {"id": "cxprm9u8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cxprm9u8/", "kind": "article", "headword": "அவுசுபெல் கல்விக் கோட்பாடு", "romanization": "avucupel kalvik kōṭpāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:40.008753+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அவுசுபெல் (David Ausubel) என்பவர் கல்வி உளவியலறிஞர் ஆவார்.", "body_ta": "அவுசுபெல் (David Ausubel) என்பவர் கல்வி உளவியலறிஞர் ஆவார். சொல்வழிக் கற்றல் (Verbal Learning) முறை, செயல்வழிக் கற்றல் (Discovery Learning) முறையைப் போன்றே வலிமையுடையது என்பார் இவர். சொல்வழிக் கற்றல் முறைதான், எளிதாகக் கற்கவும் பாடக் கருத்துகளை அறியவும் தெளியவும் அவற்றை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளவும் துணையாக நிற்கும் என்பது இவரது கருத்து. முறையான அறிவினை மாணவர்க்கு வழங்குவதே கல்வி கற்பித்தலின் முதன்மையான குறிக்கோள். ஆனால், செயல்வழிக் கற்றல் முறை இக்குறிக்கோளை எளிதில் அடைய உதவுவதில்லை என்பது இவர் கூறும் குற்றச்சாட்டு.\n\nஎந்தப் பாடத்தையும் எந்த வகுப்பில் பயிலும் குழந்தைக்கும் எளிதில் கற்பிக்க இயலும் என்பது புரூனர் (Brooner) என்பாரின் கருத்து. இக்கருத்தை அவுசுபெல் ஏற்கத் தயங்குவார். ஏனெனில், ஒரு ‘பெரிய கருத்தை’ மழலையர் பள்ளியிற் பயிலும் குழந்தையும், பன்னிரண்டாவது வகுப்பிற் பயிலும் மாணவரும் ஒரே தன்மையில் புரிந்து கொள்கிறார்களா என்பது அவுசுபெல் எழுப்பும் கேள்வி, நான்காம் வகுப்பில் பயிலும் மாணவர்களின் சிந்தனைத் திறன்களுக்கு ஏற்ற வகையில் கணிதத்தில் கணக் கொள்கையைச் (Set Theory) சீர்படுத்திப் பயிற்றுவித்தால், அவர்களால் எளிதில் கற்க இயலும் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதே, அவ்வாறு ஏற்கும் பொழுது பொதுவாகப் பல கருத்துகளைக் கற்றுத் தெரிந்து கொள்ள ஒரு குறிப்பிட்ட அளவில் அனுபவம், அறிவு முதிர்ச்சி, பாட அளவு ஆகியன இன்றியமையாதவை என்ற கருத்தினையும் தள்ளிவிட இயலாது. அதாவது, ஒரு குறிப்பிட்ட அளவில் நுட்பச் சிந்தனைகள் இல்லையென்றால், ஒரு குழந்தைக்குச் சில கருத்துகளை எளிதில் கற்பித்தல் இயலாது. மழலையர், தொடக்கப் பள்ளிக் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியரை விட அனுபவம், அறிவு முதிர்ச்சி, பாட அறிவு ஆகியவற்றில் இயஸ்பாகவே மிக வேறுபட்டு நிற்கின்றனர்.\n\nஅவுசுபெல் முன்னமைப்பு (Advance Organizer) என்ற கருத்தை விளக்குகிறார். இந்த உத்தியின்படி, முற்றிலும் புதிய ஒரு பாடத்தை மாணவர்கள் கற்பதற்கு முன், அவர்களுக்கு அப்பாடத்தின் சுருக்கத்தை அமைத்துத் தருதல் வேண்டும். அவுசுபெல், பிட்சரால்டு (Fitzgerald) ஆகிய இருவரும் 1961–இல் இணைந்து நடத்திய ஆய்வில், “பாட முன்னமைப்பினைக் கற்பித்த பின்பு அதற்குரிய பாடத்தை விரிவாகக் கற்பித்தால், மாணவர்களின் கற்றல் திறனும். அவற்றை நினைவில் வைத்தல் திறனும் அதிகரிக்கின்றன” என்பது காணப்பட்டது. புதிய கருத்துகளைக் கற்பதிலும், புதிய சிக்கலுக்குத் தீர்வு காண்பதிலும் ‘பாட முன்னமைப்பு’ இன்றியமையாதது. கற்பித்தலில் பாட முன்னமைப்பைப் பயன்படுத்துதல் பழைய கற்றல் முறைக்குத் தலைகீழானது என்பார் அவுசுபெல். ஏனெனில், பழைய கற்பித்தல் முறையில் ‘பாட சுருக்கம்’ பாட இறுதியில் வரும்; அவுசுபெல் கூறும் கற்றல் முறையிலோ ‘பாடச் சுருக்கம்’ என்பது பாடம் பயிலும் முன்பே போதிக்கப்படும். இம்முறையினால், அடிப்படைக் கருத்துகளைக் குறைவாகக் கற்ற மாணவர்கள், ஆசிரியர்களிடம் புதிய கருத்துகளைக் கற்றுத் தெளிகின்றனர். ஒரு கருத்தின் அடிப்படைக் கூறுகளையே கற்றுத் தெளியாத நிலையில், மாணவர்களால் அக்கருத்தின் நுட்பமான கூறுகளைத் திறம்படக் கற்றுவிட முடியாது என்பது இவரது கருத்து. மாணவர் பின்னர்க் கற்க இருக்கிற அனைத்துக் கருத்துக்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் பாட முன் சுருக்கம் அமைய வேண்டும் என்பார் இவர்.கே.ஆர்.சி.\n\nதுணை நூல்கள்\n\nAusubel, David P., “Journal of Educational Psychology”, “Use of Advance Organizers in the Learning and Retention of Meaningful Verbal Material”. 51, 1960.\n\nAnderson, R.C., and David P. Ausubel., (eds.), “Readings in Psychology of Cognition”, Holt, Rinehart & Winston, Inc., New York, 1962.\n\nAusubel, David P., “Psychology of Meaningful Verbal Learning: An Introduction to School-Learning”, Grune & Straton, Inc., New York, 1963.\n\nEducational Psychology: “A Congnitive View” Holt, Rinehart & Winston, Inc., New York, 1968.\n\nBruner, Jerome S., “Toward a Theory of Instruction” Harvard University Press, Masachusetts., 1966."}}