{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cvy7ejsm/", "data": {"id": "cvy7ejsm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cvy7ejsm/", "kind": "article", "headword": "பக்கிக் குருவி", "romanization": "pakkik kuruvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.541371+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது இரவுக் குருவி என்றும் கூறப் படும்.", "body_ta": "இது இரவுக் குருவி என்றும் கூறப் படும். இது இரவு நேரங்களில், கால்நடைகளைச் சுற்றி, அவற்றில் உள்ள பூச்சிகளையும், ஆடுகளின் பாலையும் உறிஞ்சி வாழ்வதால், இதற்கு இரவுக் குருவி அல்லது பக்கிக் குருவி எனப் பெயர் வந்தது. இதன் மென்மையான இறகுகளும், ஆந்தை போன்ற குறிகளும், இக்குருவி மறைந்து வாழ உதவுகின்றன. அகலமான குறுகிய அலகுகள், பூச்சிகளைப் பிடித்துத் தின்னப் பயன் படுகின்றன. மென்மையான நீண்ட இறகுகள் வளையும் தன்மையுடையனவாகவும், ஓசைப் படாமல், பறப்பதற்கு ஏற்றவையாகவும் அமைந்துள்ளன.\n\nபக்கிக் குருவி 20–41 செ.மீ. நீளமாகவும், மென்மையான முனைகளை உடைய அலகுகளையும், குட்டையான கால்களையும் பெற்றுள்ளது. இதன் விரல்கள் நீளமாகவும், சீப்புப் போன்றும் காணப் படுவதால், இறகுகளைத் தூய்மைப் படுத்தவும், கோதவும் பயன் படுகின்றன. நான்காம் விரலில் பொதுவாகக் காணப் படும் 5 விரல் எலும்புகளுக்குப் பதிலாக தனித் தனி எலும்பினால் ஆன (Phalanges) 4 விரல் எலும்புகள் மட்டுமே காணப் படும். இது மரங்களில் அமர்வதற்கு வசதியாக உள்ளது.\n\nபக்கிக் குருவி இரவு நேரங்களில் சுறுசுறுப்பாகவும், பகலில் சோம்பியும் காணப் படும். ஆண் குருவி இனப் பெருக்கக் காலங்களில், இனிமையாகக் குரல் எழுப்பும். மேலும், ஆண் பறவையின் இறக்கைகளில் காணப் படும் வெள்ளைக் குறிகள், புணர்வதற்குத் தூண்டுகோலாகும். இப்பறவை முட்டைகளைத் தரைகளின் சிறு பள்ளங்களில் இடுகிறது. கூடு கட்டும் பழக்கம் இதற்கு இல்லை. முட்டைகளையும், குஞ்சுகளையும் இரு பால் பறவைகளும் மாறி, மாறிப் பாதுகாக்கின்றன.\n\nபக்கிக் குருவி மலைப் பாங்கான பகுதிகளிலும், ஊசியிலைக் காட்டுப் பகுதிகளிலும். மிகுந்து காணப் படும். ஏனைய இடங்களில் பரவலாகக் காணப் படும். தட்ப வெப்ப நிலைகளின் மாறுதலால், கடந்த 50 ஆண்டுகளில் இக்குருவி அருகி விட்டது. வலசை செல்லும் தன்மையுடைய இக்குருவி ஆப்பிரிக்காவிற்கு இடம் பெயர்கிறது. நார்வே, பின்லாந்து, ரஷ்யா, ஸ்வீடன் போன்ற நாடுகளுக்குப் பெரும்பாலும் செல்கிறது.\n\nஇனப் பெருக்கத்திற்கு முன்பு நடைபெறும் விளையாட்டுகளில், பக்கிக் குருவி மேம்பட்டுக் காணப் படுகிறது. இனப் பெருக்கம் இரவு நேரங்களில் நடைபெறுகிறது. அடை காக்கும் காலம், பெரும்பாலும், 16–21 நாள்கள் ஆகும். இளம் குஞ்சுகள், கீழ் நோக்கிக் குனிந்த வண்ணம் காணப் படும். இது, தொடக்கத்தில் தாயின் இறகுகளில் மறைந்து காணப் படும். மிகையாக உணவு உட்கொள்வதால், 15 நாள்கள் வரை 6 குஞ்சுகள் தாயுடன் சேர்ந்து வாழ்கின்றன.\n\nபகலில் சுறுசுறுப்பின்றிக் காணப் படும் இக்குருவியின் உடல் வெப்பம் 35–39°C ஆகும். ஆனால், இரவு நேர வெப்ப நிலை பகலை விட மிகுந்து காணப் படும். இப்பறவை, இரவு நேரம் முழுவதும் நிற்காமல் பறக்கும் தன்மை உடையது. சில குருவிகள், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே சுறுசுறுப்பாக இருப்பதுண்டு. ஆனால், இடம் பெயரும் போது, கால நேரம் பார்ப்பது இல்லை. சில சமயங்களில், இடம் பெயர்ந்த சோர்வினால், உணவு உண்ணாமல் இருக்கும் குருவிகளும் உண்டு. இதில் 17 பேரினங்களும், 69 இனங்களும் காணப் படுகின்றன. ஆந்தையை ஒத்த சில பக்கிக் குருவிகள், ஆஸ்திரேலியா, நிகினியா, மடகாஸ்கர் போன்ற பகுதிகளில் காணப் படுகின்றன. —அ. சிவானந்தம்"}}