{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cq927gqf/", "data": {"id": "cq927gqf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cq927gqf/", "kind": "article", "headword": "இலெய்பாக்கு மாநாடு", "romanization": "ileypākku mānāṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:45.528491+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஐரோப்பாவில் நெப்போலியன் வீழ்ச்சிக்குப் பின்னர் முடியாட்சியையும் பிற்போக்குக் கொள்கைகளையும் வலியுறுத்தி நிலைநாட்ட நடைபெற்ற பல மாநாடுகளுள் இலெய்பாக்கு மாநாடும் (Laibach Congress) ஒன்று.", "body_ta": "ஐரோப்பாவில் நெப்போலியன் வீழ்ச்சிக்குப் பின்னர் முடியாட்சியையும் பிற்போக்குக் கொள்கைகளையும் வலியுறுத்தி நிலைநாட்ட நடைபெற்ற பல மாநாடுகளுள் இலெய்பாக்கு மாநாடும் (Laibach Congress) ஒன்று. திரோப்பா (Troppau) மாநாட்டின் தொடர்ச்சியே இலெய்பாக்கு மாநாடென்பர், திரோப்பா மாநாட்டிற்கும் இலெய்பாக்கு மாநாட்டிற்கும் இடைப்பட்ட மூன்று மாத இடைவெளியில் ஆசுத்திரியர்கள் 80,000 பேர் கொண்ட பெரும் படையைத் திரட்டி, அமைதி குலைந்திருந்த இத்தாலிய நாட்டுப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட முற்பட்டனர். உருசியர்களும் தம் படைகளை அனுப்பி முடியாட்சிக்கெதிராக நடைபெற்ற கலகங்களை முறியடிக்க முயன்றனர். இம்மாநாட்டில் உருசியா, ஆசுத்திரியா, பிரசியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் பிரிட்டனுக்குமிடையே ஏற்பட்ட பிளவு மேலும் விரிவடைந்தது. முற்போக்குக் கருத்துகளை வலியுறுத்தி ஆசுத்திரியாவின் கருத்துக்களை ஏற்க மறுத்த பிரிட்டன், இம்மாநாட்டு முடிவினை எதிர்த்துக் குரலெழுப்பியதுடன் மாநாட்டிலிருந்தே விலகிக் கொண்டது. இதனிடையில் கிரேக்கநாட்டில் ஏற்பட்ட கலகமும், இசுபெயின் நாட்டில் மோசமடைந்து வந்த சூழ்நிலையும், இத்தாலியைத் தவிர ஏனைய பகுதிகளில் இராணுவ நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்தன. மீண்டும் கி.பி. 1822-ஆம் ஆண்டில் வெரோனாவில் (Verona) பிறிதொரு மாநாட்டைக் கூட்டுவதென முடிவாயிற்று. இலெய்பாக்கு மாநாடு கி.பி. 1821–ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் கூடியது. இலெய்பாக்கு மாநாடு தன் முயற்சியில் வெற்றி பெறவில்லை. புனிதக் கூட்டுறவில் (Holy Alliance) இணைந்த நாடுகள் இம்மாநாட்டில் பிளவுண்டன என்பது குறிப்பிடத்தக்கது."}}