{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cq8y37sx/", "data": {"id": "cq8y37sx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cq8y37sx/", "kind": "article", "headword": "சுவடுகாண் பகுப்பு", "romanization": "cuvaṭukāṇ pakuppu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.188411+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிப் பொருளில் (sample) மிக மிகக் குறைந்த அளவில் காணப்படும் தனிமங்களை இனம் காண்பதும், அளவீடு செய்வதும் சுவடுகாண் பகுப்பு (trace analysis) எனப்படும்.", "body_ta": "அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிப் பொருளில் (sample) மிக மிகக் குறைந்த அளவில் காணப்படும் தனிமங்களை இனம் காண்பதும், அளவீடு செய்வதும் சுவடுகாண் பகுப்பு (trace analysis) எனப்படும்.\n\nஇது நுண்ணளவு பகுப்பிலிருந்து (micro analysis) வேறுபட்டதாகும். மிகக் குறைந்த அளவில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிப் பொருளில், மிக அதிக அளவில் காணப்படும் பொருள்களை அடையாளம் கண்டு பிடிப்பதும், அளவீடு செய்வதும், நுண்ணளவு பகுப்பு எனப்படும்.\n\nஇயற்கையில் கதிரியக்கமுள்ள ஐசோடோப்புகள், நிலையான ஐசோடோப்புகள் ஆகியவற்றின் அளவை மதிப்பீடு செய்ய முனையும் நிலையைச் சுவடுகாண் பகுப்பு எனலாம். குறை கடத்திகள் (semiconductors) தயாரிப்பின் போது, மிக மிகக் குறைந்த அளவு மாசு கலந்து விட்டாலும், குறை கடத்திகளின் பண்பு பெரிதும் மாறு பட்டு விடும். எனவே, குறை கடத்திகளின் தயாரிப்பில், சுவடுகாண் பகுப்பு மேற்கொள்ளல் மிகவும் இன்றியமையாதது.\n\nஅனைத்துப் பகுப்பு முறைகளிலும் பொதுவாக மூன்று நிலைகள் உண்டு, அவை: ஆய்விற்கான மாதிரிப் பொருளை வரைவு செய்தல் (sampling); அம்மாதிரிப் பொருளை இயற்பியல், வேதியியல் முறைகள் மூலம் சுவடுகாண் பகுப்பிற்குத் தயார் செய்தல் (pre treament); தகுந்த நுண்ணிய கருவிகள் மூலம் அளவிடல் ஆதியன. இம்மூன்று நிலைகளும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவை.\n\nசுவடுகாண் பகுப்பின் மூலம் அறிந்து கொள்ள விரும்பும் விவரம், தேவையான நுணுக்க அளவு, ஆய்வு பற்றிய பிற செய்திகளைப் பொறுத்து, தகுந்த கருவியையும், பகுப்பு முறைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். மேற்காணும் மூன்று பகுப்பாய்வு முறைகளில், எதற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டுமென்பதும், ஆய்வின் தன்மையைப் பொறுத்தே அமையும். சுவடுகாண் பகுப்பில் நிலையான ஐசோடோப்புகள், கதிரியக்க ஐசோடோப்புகள் ஆகிய இரு வகையுமே உதவுகின்றன. நிலையான ஐசோடோப்புகளை ஆய்வு செய்வதற்கு நிறை நிரல் வரைவி (mass spectrometer), நிற மாலை காட்டிகள் ஆகியன (spectroscops) உதவுகின்றன. கதிரியக்க ஐசோடோப்புகளை அளவிட, கெய்கர்—முல்லர் எண்ணி (Geiger - Muller counter) பயன்படுகிறது.\n\nபொதுவாக, அளவிடல் என்பது மாதிரிப் பொருளின் இயற்பியல் அல்லது வேதியியல் பண்புகளின் அடிப்படையில் செய்யப்படுகிறது. ஆய்வின் போது, நிகழும் ஆற்றல் மாறுபாடுகள் (energy transformations), மாதிரிப் பொருளின் நிறை அல்லது அடர்வோடு தொடர்புப் படுத்தப்படும். இவ்வாறு தொடர்பு படுத்துவதற்குச் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.\n\nமுன்கூட்டியே தெரிந்த அளவுகளில், மாதிரிப் பொருளில் கண்டு அளவிட வேண்டிய தனிமங்களை எடுத்து, அவற்றில் நிகழும் ஆற்றல் மாறுபாடுகளைப் பயன்படுத்த இருக்கும் கருவிகளால் அளந்து, அக்கருவிகளின் அளவுகோலைச் சரியாக அறுதியிட (calibration) வேண்டும்.\n\nஅட்டவணை\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> உணர்திறனும், கண்டுபிடிப்பு எல்லையும். சுவடு காண் பகுப்புச் செய்முறைகள், கருவிகள் ஆய்விற்குட்பட்ட தனிமத்தின் குறைந்த அளவு வேறுபாட்டைப் பிரித்துணர முடியுமென்பது, அச்செய்முறைக் கருவியின் உணர்திறன் (sensitivity) எனப்படும். எவ்வளவு குறைந்த அளவில் ஆய்விற்கான தனிமம் இருந்தால், பகுப்புச் செய்முறைகள், கருவிகள் அதைக் கண்டு பிடிக்க இயலும் என்பது கண்டுபிடிப்பு எல்லை (detection limit) எனப்படும் (அட்டவணை).\n\nதற்காலத்தில் 1/100000000 என்ற விகிதத்தில் உள்ள தனிமங்களைப் பகுத்து அறிய முடியும். தொடக்க காலத்தில், கொடுக்கப்பட்டுள்ள கரைசலில் குறிப்பிட்ட தனிமத்தின் மொத்த அடர்வைக் கண்டு பிடிப்பதோடு நின்று விட்ட சுவடுகாண் பகுப்பு தற்போது மாதிரிக் கரைசலின் ஓவ்வொரு பகுதியிலுமுள்ள அடர்வையும் (local concentration) பிரித்தறியக் கூடிய அளவிற்கு முன்னேறியுள்ளது.\n\nபல்வேறு பகுப்பாய்வுச் செய்முறைகள், கருவிகள் போன்றவற்றில், வெவ்வேறு அளவுகோல்கள் பயன்படுவதால், அவற்றைச் சரியான அடிப்படையில் ஒப்பீடு செய்ய இயலாது. எனினும், செய்ய இருக்கும் ஆய்வின் நோக்கம், தேவைக்கேற்ற உணர்திறன், கண்டுபிடிப்பு எல்லை உள்ள செய்முறைகளைப் பின்பற்றலாம்.\n\nசுவடுகாண் பகுப்பை, பயன்படுத்தப்படும் ஐசோடோப்புகளின் பங்கு பற்றிய அடிப்படையில், மூன்று பிரிவாகக் காணலாம். கிளர்வுகொள் பகுப்பு (activation analysis); சுவடு அறியும் ஐசோடோப்புகளின் உதவியோடு சுவடுகாண் பகுப்பு, ஐசோடோப் விளாவுதல் பகுப்பு (isotopic dilution analysis) ஆகியன அம்மூன்று பிரிவுகளாகும்.\n\nகிளர்வுகொள் பகுப்பு. இச்செய்முறை முதலில் ஹெவிசி, லெவி என்போரால் 1936இல் அறிமுகப் படுத்தப்பட்டது. ஆய்விற்கான தனிமத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான ஐசோடோப்புகள் மீது ஆற்றல் மிக்க நியூட்ரான்களை மோத வைக்க வேண்டும். அப்போது, நிலையான ஐசோடோப்புகள் கிளர்வு கொண்டு கதிரியக்கத் தனிமங்களாக மாறுபாடு அடைகின்றன. கதிரியக்கத் தனிமத்தின் அரை வாழ்வு, அதை அடையாளம் காண்பதற்கும், ஒப்பீடு மூலம் அளவிடுதற்கும் உதவுகிறது.\n\nஒரே ஒரு முடியில் உள்ள ஆர்செனிக் தனிமத்தைக் கிளர்வு கொள் பகுப்பு மூலம் ஆய்ந்து, அந்த முடிக்கு உரியவர் ஆர்செனிக் நஞ்சு காரணமாக இறந்தாரா, இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க இயலும். ஏறக் குறைய, அனைத்து நிலையான தனிமங்களையும், கிளர்வு கொள் முறையிலேயே கதிரியக்கத் தனிமங்களாக மாற்ற முடியும். எனவே இம்முறையின் பயன்கள் மிகுதி.\n\nசுவடு அறியும் ஐசோடோப்புகளின் உதவியோடு சுவடுகாண் பகுப்பு. ஒரு குறிப்பிட்ட அளவு கதிரியக்க ஐசோடோப், மாதிரிப் பொருளான நிலையான ஐசோடோப்புடன் சேர்க்கப்படும். இவ்விரண்டிற்கிடையே, வேதிப் பண்புகளில் வேறுபாடுகள் எதுவுமில்லாத காரணத்தால், இவற்றுக்கிடையே உள்ள விகிதம் அல்லது திட்டமான கதிரியக்க வேகம் (specific activity) மாறுவதில்லை. எனவே ஓரு குறிப்பிட்ட இடத்தில் கதிரியக்க ஐசோடோப்பின் அளவைக் கண்டு பிடித்து, அத்தனிமத்தின் மொத்த அளவைக் கணக்கிட்டு விடலாம்.\n\nகாரீய நைட்ரேட், பேரியம் சல்பேட் போன்ற அரிதிற் கரையும் பொருள்களின் கரை திறனை இம்முறையால் கண்டறியலாம். முதலில் மிகச் சிறிய அளவு கதிரியக்கப் பேரியத்தைக் குறிப்பிட்ட எடையுள்ள சாதாரண பேரியத்துடன் கலந்து, பேரியம் சல்ஃபேட்டாக மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு, பேரியம் சல்ஃபேட்டை நீரில் கரைத்து, அதன் தெவிட்டியக் கரைசலைக் (saturated solution) குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்த நீரைப் போக்கிப் பின்னர், அதன் கதிரியக்கத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். இதிலிருந்து எடுத்துக் கொண்ட .தெவிட்டிய கரைசலில் உள்ள பேரியம் சல்ஃபேட்டின் நிறையை அறியலாம்.\n\nஐசோடோப் விளாவுதல் பகுப்பு. ஒரு கதிரியக்க ஐசோடோப் முதலில், மாதிரிப் பொருளோடு சேர்க்கப் படும். பின்னர், அக்கலவையிலிருந்து குறிப்பிட்ட அளவு எடுக்கப்பட்டு, அதன் கதிரியக்க வேகம் அளக்கப்படும். இதிலிருந்து, மாதிரிப் பொருளின் மொத்த அளவைக் கணக்கிட முடியும். உடலில் உள்ள நீரின் அளவை இதன் மூலம் கண்டு பிடிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அளவு நீரில், குறிப்பிட்ட அளவு கதிரியக்க டியூட்டீரியம் (D₂) கலந்து உடலுக்குள் செலுத்த வேண்டும்.\n\nஉடல் முழுதும் சீராகக் கலப்பதற்கு நேரமளித்துப் பின்னர், உடலிலிருந்து நிணநீர் (serum) மாதிரி எடுத்துக் கதிரியக்க வேகத்தைக் கண்டு பிடிக்க வேண்டும். கதிரியக்க ஐசோடோப்பின் அடர்வு முதலில் செலுத்திய போது, இருந்ததில் ஆயிரத்தில் ஒரு பங்கே உள்ளது என்றால், உடலில் உள்ள மொத்த நீரின் அளவு, முதலில் உடலினுள் செலுத்திய அளவைப் போல ஆயிரம் மடங்காகும். அதே போல், சோடியம்—24ஐ உடலில் செலுத்திப் பரிமாற்றத்திற்கு உரிய சோடியம் உடலில் எவ்வளவு இருக்கிறது எனக் கண்டு பிடிக்கலாம்.\n\nசுவடுகாண் பகுப்பு முறைகள் அனைத்துமே எளிய அளவிடும் முறைகளிலிருந்து, முன்னேற்றமடைந்தவையே. தற்காலத்தில் சுவடுகாண் பகுப்பு ஆய்வு மருத்துவம், இயற்கையியல், தொழிற்கூடங்கள், ஆய்வகம் ஆகியவற்றில் பெரிதும் பயன்படுகின்றன. —வை. சிதம்பரநாதன் நூலோதி. Samuvel Glasstone, Text Book of Physical Chemistry, Second Edition, Macmillan India Ltd, Madras, 1986.\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->"}}