{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cpjjn7bm/", "data": {"id": "cpjjn7bm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cpjjn7bm/", "kind": "article", "headword": "உண்ணா விரதம்", "romanization": "uṇṇā viratam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.215802+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மக்கள் தங்கள் மனத்திலுள்ள எண்ணங்கள் நிறைவேறவேண்டுமென்று உண்ணா நோன்பு (விரதம்) இருப்பது நீண்ட நாட்களாகப் பாரத நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு பழக்கமாகும்.", "body_ta": "மக்கள் தங்கள் மனத்திலுள்ள எண்ணங்கள் நிறைவேறவேண்டுமென்று உண்ணா நோன்பு (விரதம்) இருப்பது நீண்ட நாட்களாகப் பாரத நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு பழக்கமாகும். குழந்தை இல்லாதவர்கள் மகப்பேறு வேண்டியும், திருமணமாகாதவர்கள் நல்ல வாழ்க்கைத் துணையைப் பெற வேண்டியும், வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களிலிருந்து விடுபடும் பொருட்டும், மறுமையில் நல்லநிலை அடைய வேண்டியும் மக்கள் தங்களுடைய விருப்பமான தெய்வங்களை நினைத்து உண்ணா நோன்பு இருத்தல் பண்டைய பழக்கமாகும். பொதுவாக, ஆண்களை விடப் பெண்களே மிகுதியாக உண்ணா நோன்பு நோற்பர். ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனை வணங்கியும், திங்கட் கிழமைகளில் சந்திரனையும் சிவபெருமானையும் வணங்கியும், செவ்வாய்க் கிழமைகளில் அங்காரகனையும் முருகனையும் வணங்கியும், புதன் கிழமைகளில் புதனையும் கலை மகளையும் வணங்கியும், வியாழக் கிழமைகளில் குரு பகவானை வணங்கியும், வெள்ளிக் கிழமைகளில் திருமகளையும் பராசக்தியையும் வணங்கியும், சனிக் கிழமைகளில் திருமாலை வணங்கியும் உண்ணா நோன்பு நோற்றல் நீண்ட காலமாக இந்து மதத்தில் இருந்து வரும் வழக்கமாகும்.\n\nகிழமைகள் மட்டுமன்றி, ஒவ்வொரு தெய்வத்திற்கும் தொடர்புள்ள திதிகளிலேயும் உண்ணா நோன்பு நோற்றல் உண்டு, திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தொடர்பை வைத்துக் கணிக்கப்படும் காலப் பிரிவாகும். தம் முன்னோர்களை வணங்கி அமாவாசைத் திதியிலும், விநாயகரை வணங்கிச் சதுர்த்தியிலும், முருகனை வணங்கிச் சட்டியிலும், சக்தியை வணங்கி அட்டமியிலும், இராமனை வணங்கி நவமியிலும், திருமாலை வணங்கி ஏகாதசியிலும், சிவபெருமானை வணங்கித் திரயோதசியிலும், அம்மனை வணங்கிப் பௌர்ணமியிலும் உண்ணா நோன்பு நோற்றலும் நீண்ட காலமாகப் பழக்கத்தில் இருந்து வருகிறது. சிவபக்தர்கள் மகாசிவராத்திரியன்றும், வைணவ பக்தர்கள் வைகுண்ட ஏகாதசியன்றும் உண்ணா நோன்பு இருப்பது பலரும் அறிந்த ஒன்றாகும். இந்தத் திதிகளில் உண்ணா நோன்பு மேற்கொள்ளல் அறிவியல் முறையில் நோக்கினும், மனிதனுடைய ஆரோக்கியத்திற்கும் உடல் வலிவுக்கும் உகந்ததாகும். கிழமையும் திதிகளும் மட்டுமேயன்றி, சில விண்மீன் நாட்களிலும் உண்ணா நோன்பு நோற்றலும் உண்டு. அண்டத்தில் சூரியனுடைய பாதையில் (Solar Orb) இருக்கக் கூடிய விண்மீன்களை இருபத்தேழு வகைகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு விண்மீனினுடைய இடத்திற்கும் சந்திரன் வரும் நாள் அந்த விண்மீனின் நாளாகக் கருதப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, கார்த்திகை விண்மீன்களுடன் சந்திரன் சேரும் நாள் கார்த்திகை எனப்படுகிறது. இது போன்ற அவரவர்களுக்குப் பிடித்தமான விண்மீன் நாட்களிலும் உண்ணா நோன்பு நோற்பாரும் உண்டு.\n\nகிழமை, திதி, விண்மீன் நாள் மட்டுமன்றி மார்கழி மாதம் முழுவதும் ‘பாவை நோன்பு’ என்ற நோன்பு நோற்றலைச் சைவ சமயமும் வைணவ சமயமும் பெரிதும் வலியுறுத்துகின்றன. மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையும் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையும் பாவை நோன்பு நோற்கும் முறைகளையும், பாவை நோன்பு நோற்க வேண்டியதன் இன்றியமையாமையினையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் நன்கு விளக்குகின்றன. அறியாமையினால் ஏற்பட்ட பந்த பாசத்தினால் ஆன்மாக்கள் உலகியலில் சிக்கித் தவிக்கின்றன; அறியாமையில் மூழ்கித் துயில்கின்றன. இப்படித் துயிலும் ஆன்மாக்களைத் தட்டியெழுப்பி, அவற்றின் உண்மைத் தன்மையையும், இறைவனை விட்டுப் பிரிந்ததால் ஏற்பட்ட விளைவையும், இறைவனை அணுக வேண்டியதன் தேவையையும், பாவை நோன்பைக் கடைப்பிடித்து அவனை அணுகும் முறையையும் விளக்கும் நூல்களே திருவெம்பாவையும் திருப்பாவையும் ஆகும். இறைவன் உலகத்திற்கே தலைவன், அவனைச் சார்ந்து நிற்கும் ஆன்மாக்கள் அவன் முன்னால் தலைவிகள். இறைவனாகிய தலைவனை விட்டுப் பிரிந்த ஆன்மாவாகிய தலைவியானவள் பிரிவினால் ஏற்பட்ட துன்பத்தில் மூழ்கியிருக்கும் பொழுது, இறைவனை அடைந்த ஆன்மா மற்ற ஆன்மாக்களை ஆற்றுப்படுத்துவதே பாவை நூல்களின் உட்கருத்தாகும். நாயகனைப் பிரிந்து நிற்கும் நாயகி அவனை அடைய வேண்டி நோற்கும் நோன்பு பாவை நோன்பு ஆகும். இவை மட்டுமன்றி இந்து சமயப் பெண்கள் வரலட்சுமி நோன்பு, கேதார கௌரி நோன்பு, காரடையான் நோன்பு போன்ற நோன்புகளையும் நோற்கின்றனர். இதனால், வாழ்க்கையில் எல்லா வளங்களையும் பெறலாம் என்பது அவர்களுடைய நம்பிக்கை.\n\nஇசுலாமியர்கள் இரம்சான் மாதம் முழுவதும் பகல் நேரங்களில் உண்ணா நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர். உண்ணா நோன்பு நோற்கும்போது பகல் நேரங்களில் இசுலாமியர்கள் உமிழ்நீர் கூட விழுங்குதல்கூடாது. இசுலாமியர்களுக்கு இரம்சான் மாதத்தில் உண்ணா நோன்பிருத்தல் ஒரு சமயக் கடமையாகும். இந்த உண்ணா நோன்பு குர்ரானில் கூறப்படும் ஐவகைச் சமயக் கடமைகளுள் ஒன்றாகும். இரம்சான் உண்ணா நோன்பின் இறுதியில் மூன்றாம் நாள் நிலாவை இசுலாம் சமயத் தலைவர் பார்த்து அறிவித்தபின், அவர்கள் இரம்சான் பண்டிகையைக் கொண்டாடி உண்ணா நோன்பை முடிக்கின்றனர். பொதுவாக, கிறித்தவர்கள் உண்ணா நோன்பு முறையை ஏற்றுக் கெ௱ள்வதில்லை. எனினும், சில கிறித்தவர்கள் புனித வெள்ளிக்கிழமையன்று உண்ணா நோன்பைக் கடைப்பிடிப்பர்.\n\nசமயக் கண்ணோட்டத்தில் பார்க்காமல் அறிவியல் கண்ணோட்டத்தில் நோக்கினாலும் உண்ணா நோன்பு மேற்கொள்ளல் நன்மைபயக்க வல்லது. ஒரு சில நேரங்களில் உண்ணா நோன்பு சீரண மண்டலத்துக்கு ஓய்வையும் உடம்புக்குப் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. இல.மு."}}