{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c8dxh6us/", "data": {"id": "c8dxh6us", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c8dxh6us/", "kind": "article", "headword": "உடைய நங்கை", "romanization": "uṭaiya naṅkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.077496+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆழ்வார்களுள் ஒருவராகிய நம்மாழ்வாருக்குத் தாயார்.", "body_ta": "ஆழ்வார்களுள் ஒருவராகிய நம்மாழ்வாருக்குத் தாயார். இவர் திருவண்பரிசாரம் என்னும் ஊரில் வாழ்ந்த திருவாழ்மார்பர் என்பவருக்கு மகளாகப் பிறந்தார். ஆழ்வார் திருநகரி எனப் பெயரிய திருக்குருகூரில் பொற்காரியார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் காரியார் என்ற பெயர் கொண்டு விளங்கும் தம் மகனுக்கு உடைய நங்கையாரை மணம் செய்விக்க விரும்பி, உறவினரோடு திருவண்பரிசாரத்திலுள்ள திருவாழ்மார்பரின் இல்லத்திற்குச் சென்று மணம் பேசினார். உடைய நங்கைக்கும் காரியாருக்கும் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் சிலநாள் திருவண்பரிசாரத்தில் இருந்தபின்னர்த் திருக்குருகூர் வந்தடைந்தனர். காரியாரும் உடையநங்கையும் தமக்கு ஒரு மகனை அளிக்கவேண்டும் என்று குருகூர்ப் பெருமானை வேண்டிக் கொள்ள, அவரும் ‘நாமேவந்து பிறக்கிறோம்’ என்று அருள் செய்தார். அவ்வாறு, பெருமான் அருளால் உடையநங்கைக்கும் காரியார்க்கும் தோன்றியவரே பிற்காலத்தில் நம்மாழ்வார் என்று சிறப்புற்று விளங்கியவர் ஆவார்."}}