{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/c4f36hee/", "data": {"id": "c4f36hee", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c4f36hee/", "kind": "article", "headword": "இலக்குமணப்பிள்ளை, தி", "romanization": "ilakkumaṇappiḷḷai, ti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:43.649327+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஒரு சிறந்த இசைப் பேரறிஞர்.", "body_ta": "ஒரு சிறந்த இசைப் பேரறிஞர். தந்தை திரவியம் பிள்ளை; தாய் வள்ளியம்மை. இவர் 3.5.1864–இல் திருவிதாங்கூரில் பிறந்தார்.\n\nஇளங்கலைப் பட்டம் (பி.ஏ.) பெற்ற இவர் தொடக்கத்தில் பாப்புப்பிள்ளையிடமும் பின்னர் வேலுப்பிள்ளையிடமும் இசையை முறையாகக் கற்றார். ஐயா பாகவதரிடமும் சாத்து பாகவதரிடமும் வீணைப்பயிற்சி பெற்றார். இவர் தம் இசைப்பயிற்சிகளை முடித்துத் திருவனந்தபுரம் அரசின் பலதுறைகளில் பணிபுரிந்து படிப்படியாய் முன்னேறி இறுதியில் அரசுக் கருவூலப் பெரும் அலுவலர் ஆகி, இறைபற்றுடனும் நாட்டுப் பற்றுடனும் பணிபுரிந்து, பலரின் நன்மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தார்.\n\nஇசைப்பணிகள்\n\nஇசைக்கலையை வளர்க்கக் ‘கான சமரசம்’ என்னும் கழகத்தை அமைத்தார். அதில் நண்பர்கள் பலரும் இசையரங்குகள் நிகழ்த்த வாய்ப்புகள் அளித்தார்; இசை வல்லுநர்களை அழைத்துப் பாடுதற்கு ஏற்பாடுகள் செய்தார். திருவனந்தை அரசவை இசைவாணர்களைக் கொண்டு தம் நண்பர்களுக்கும் எளிய மாணவர்களுக்கும் இசை கற்பிக்க ஏற்பாடுகள் செய்தார். தம்முடைய தமிழ்க் கீர்த்தனைகளைப் பல மாணவர்களுக்குக் கற்றுத் தந்து எங்கும் பரப்பினார். அம்மாணவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் அரங்கநாத ஐயரும் தாணு சாத்திரியாரும் ஆவார்கள். தம்முடைய தமிழிசைப் பாடல்களைத் திருவனந்தபுரம் அரசவையில் அரசர் முன்னிலையில் அடிக்கடி பாடிக்காட்டி அரசவைப் புலவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். அரசவையில் சில சமயங்களில் இவர் பண்களின் நுணுக்கங்களை விளக்கிக் கூறுவதுண்டு. அரசு வேண்டுகோட்கிணங்கிப் பண்களின் இலக்கணக் குறிப்புகள், இசை வரலாற்றுக் குறிப்புகள் முதலியவற்றை எழுதி அரசுக்குக் கொடுத்தார்.\n\nஅண்ணாமலைச் செட்டியார் தமிழ்நாட்டில் தமிழிசையியக்கம் தொடங்கியபோது இவருடைய பாடல்கள் பெருஞ்செல்வாக்குப் பெற்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவர்க்கு இசைத்தமிழ்ச் செல்வர் என்ற பட்டமீந்தது. இவர் பாடல்கள் இசையரங்குகளில் பலர் பாடும் வண்ணம் சுரப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளன.\n\nமதுரையில் 1942–இல் கூடிய மாபெரும் முத்தமிழ் மாநாட்டின் இசைத்தமிழ்ப் பகுதிக்கு இவர் தலைமையேற்றார். இவர் நாஞ்சில் நாட்டில் தமிழ்ப் பள்ளிகள் பல திறக்க ஏற்பாடுகள் செய்தார். நண்பர்களுக்குத் தமிழ் ஆர்வமும் தமிழ்ப் பற்றும் ஊட்டுவதற்குத் ‘தமிழர் சங்கம்’ என்ற அமைப்பைச் சட்ட திட்டங்களுடன் உண்டாக்கினார்.\n\nதிருநெல்வேலியில் அறிவுநூற்புலவர் மாநாடு 1935–ஆம் ஆண்டு சிறப்புற நடைபெற்றது. இவர் அந்த மாநாட்டின் தலைவராக விளங்கி வழிகாட்டினார். இவர் தம் தலைமைப் பேருரையில், ‘தமிழ்ச் சொல்லாக்கக் கழகங்களை’ நாடு முழுவதும் ஆங்காங்கு ஏற்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தித் தமிழ்ச் சொல்லாக்க நெறிகளையும் முறைகளையும் விளக்கிக் கூறினார். கலைச் சொற்களால் தமிழ் வளம் பெருக்குதலின் இன்றியமையாமையை வற்புறுத்தினார். கலைச் சொல்லாக்கும் துறையில் இவர் பல ஆண்டுகள் ஆர்வமுடன் உழைத்தார்.\n\nஇவர் சத்தியவதி நாடகம், இலீலா நாடகம், இரவி வர்ம நாடகம், அருமையாள் நாடகம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஞானானந்தன் அடிமாலை, நினைவாட்சி, கீர்த்தனை நூல், ஆங்கிலக் கட்டுரைத் திரட்டு, தமிழ்க் கட்டுரைத் திரட்டு ஆகியவை இவர்தம் பிற நூல்களாகும். இவர் 1950–இல் காலமானார். வீ.பா.க.சு."}}