{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/byruavu2/", "data": {"id": "byruavu2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/byruavu2/", "kind": "article", "headword": "சூலுறுதல்", "romanization": "cūluṟutal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:59.565345+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஒரு விந்தணுவும், ஒரு முட்டையும் செல்லாக ஒருங்கிணைவதே குலுறுதல் (fertilisation) ஆகும்.", "body_ta": "ஒரு விந்தணுவும், ஒரு முட்டையும் செல்லாக ஒருங்கிணைவதே குலுறுதல் (fertilisation) ஆகும். இதிலிருந்து, ஒரு புதிய உயிரினம் உருவாகிறது. முட்டையும், விந்தணுவும் முதிர்ச்சியடைவது ஒரு சிக்கலான நிகழ்வாகும். இப்போது, இரண்டு செல்களின் உட்கருவிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியாகும். சூலுற்றபின் உருவாகும் ஒரு புதிய செல்லின் உட்கருவில், குரோமோசோம்கள் முழுமையாக உள்ளன. விந்தணுத் தோற்றம். ஆண் பால் சுரப்பிகளின் வளைந்து, நெளிந்த விந்தணு நாளங்களில் விந்தணுக்கள் தோன்றுகின்றன. விந்தணுவிற்கு ஒரு தலை, கழுத்து, நீண்ட மெல்லிய வால் ஆகியவை உண்டு. சைட்டோபிளாசத்தின் ஒரு மெல்லிய அடுக்கால் சூழப்பட்ட விந்தின் உட்கருவே, அதன் தலையாகும். சைட்டோபிளாசமே கழுத்தாகவும், வாலாகவும் வளர்கிறது.\n\nஒரு விந்தணுவின் அசையும் தன்மை வாலின் அசைவுகளைப் பொறுத்துள்ளது. புராஸ்டேட் நீர்மத்துடனும், விந்தணுக் குமிழ்களின் சுரப்புடனும் கலந்த பின்னர், விந்தணுவிற்கு நகரும் ஆற்றல் கிடைக்கிறது. விந்தணு, புராஸ்டேட், விந்துக் குமிழ்களின் சுரப்பு ஆகியவற்றின் கலவையே விந்து நீர் ஆகும்.\n\nபுணர்ச்சியின் போது, 5—8 மி.லி. விந்து, யோனியினுள் உந்திச் செலுத்தப்படுகிறது. இதில் 200—500 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுகின்றன. சூல் பையின் கழுத்துத் துருத்திக் கொண்டிருக்கும் பின் புற வளைவில் விந்து தேங்கிக் கிடக்கிறது. பின் புற வளைவில் தேங்கியுள்ள விந்தில், உட்கழுத்துக் கால்வாய் அமுங்கிக் கிடக்கிறது. சூலடைவதற்கான சூழ்நிலை இதன் மூலம் கிடைக்கிறது.\n\nபுணர் கிளர்ச்சியில் சூல் பைத் தசைகள் சுருங்குவதால், கழுத்தின் புறத் துளை சிறிதே திறக்கிறது. புணர்ச்சியின் போது, பின் புற வளைவில் செலுத்தப் பட்ட விந்து கருப்பைக் கழுத்தின் சிலேட்டுமப் பகுதி துருத்திக் கொண்டுள்ளது. புணர்ச்சியின் பின்னர், விந்தணுவுடன் சிலேட்டுமப் பகுதி, சூல் பைக் கழுத்தினுள் இழுக்கப் படுகிறது. எனினும், விந்தணு சூல் பையினுள் ஊடுருவிச் செல்வதற்கான முக்கிய நிலை, விந்தணுவின் நகரும் தன்மையேயாகும். யோனி நீர்மம் அமில நிலையில் உள்ளது. விந்தணு உட்செல்லும் சூல் பையின் கழுத்து கார நிலையில் உள்ளது. இது சூலடைவதற்கு ஏற்ப உள்ளது. சூல் பைக் கருவகக் குழல்களின் காரண நிலை, விந்தணுவின் நகரும் ஆற்றலையும், சூலுறும் சில நாள் சுளுக்குப் பேணுகிறது.\n\nஒரு நிமிடத்திற்கு 3—3.5 மி.மி. வேகத்தில் விந்தணு உட்செல்கிறது. 60—90 நிமிடங்களில் விந்தணுக்கள் சூல் பைக் குழிவினுள் காணப்படுகின்றன. இரண்டு—மூன்று மணி நேரங்களில் கருவகக் குழல்களை அடைந்து, முட்டையைச் சந்திக்கின்றன.\n\nமுட்டை தானாக நகர முடியாது. முதிர்ந்த குமிழ்ப் பை வெடித்தவுடன், ஆர வட்டம் கொண்ட மகுடத்துடன் கூடிய முட்டை, வெளிப்படும் நீர்மத்தால் வயிற்றறையினுள் தள்ளப்பட்ட பின்னர்க் கருவகக் குழலை அடைகிறது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இழைகளின் அசைவாலும், குழலின் இயக்கத்தாலும் உண்டாகும் நீர்ம ஓட்டத்தில் முட்டை சிக்குண்டு, அடித் தளத்திலிருந்து, கருவகக் குழலின் சூல் பை ஓரத்தை அடைகிறது. முட்டை வெளிப்படும் போது, நிகழும் வயிற்றுத் தசைகளின் அமுக்க ஆற்றலால், முட்டை, குழல் நோக்கித் தள்ளப்படுகிறது. பல மில்லியன் விந்தணுக்கள், குழலின் உட்பகுதிக்குச் சென்று முட்டையைச் சந்திக்கின்றன. முட்டை- யின் பரப்பில் உள்ள ஒரு கழலையை ஊடுருவிச் சில விந்தணுக்கள் முட்டையை அடைகின்றன.\n\nஒளி ஊடுருவு படலத்தைச் சில ஊடுருவிச் சென்று, முட்டையின் புரோடோபிளாசத்தை அடைகின்றன. விந்தணுவால் உற்பத்தி செய்யப்படும் நொதியின் மூலம் ஊடுருவிச் செல்கின்றன. இந்த நொதி, முட்டையின் ஒளி புகு படலத்தையும், டரிப்சின் நொதியையும் கரைக்கும். பிற விந்தணுக்கள் அழிந்து, சிதைந்து, குழல் சிலேட்டுமத்தில் உறிஞ்சப் படுகின்றன. முட்டையை அடையும் ஒரு சில விந்தணுக்களில் ஒன்றே ஒன்றுதான் முட்டையைக் கருவுறச் செய்கிறது. அதன் உட்கரு, முட்டையின் உட்கருவை நோக்கிச் சென்று இரண்டறக் கலக்கிறது.\n\nசூலுற்ற முட்டையின் பகுப்பும், சூல் பையினுள் செல்லுதலும். சூலுற்ற முட்டையில் முனைப்பான ஆக்கச் சிதை மாற்றம் நிகழ்கிறது. உட்கருக்களின் இணைப்புடன் பகுப்பு நிகழ்வும் தொடங்குகிறது. கேரியோகைனடிக் பகுப்பு மூலம், இரண்டு குழந்தைச் செல்கள் (blastomers) தோன்றுகின்றன. இவை மீண்டும் பகுப்படைகின்றன. இச்செல்களின் விரைவான பகுப்பால், செல் திரள் தோன்றுகிறது. இது முசுக்கட்டை போன்ற தோற்றமளிக்கின்றது.\n\nகருவுற்றதைத் தொடர்ந்து, 8—10 நாளில் பகுப்படையும் முட்டை, குழல் வழியாகச் சென்று, சூல் பைக் குழிவை அடைகிறது. குழல் தசையின் லய இயக்கத்தால், முட்டை கடத்தப்படுகிறது. இழையின் அதிர்வுகள் சிறப்பு வாய்ந்தவையல்ல.\n\nநிலை பெறல். பகுப்பைத் தொடர்ந்து, சூலுற்ற முட்டையில், பண்பு சார்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. சூல் குழலின் உள்ளே இருக்கும் போது, கருவுற்ற முட்டை, அதன் ஒளி புகு உறையிலிருந்து பிரிக்கப்படுகிறது. முட்டை, சூல் பையினுள் நுழைந்தவுடன், செல் திரளின் வெளி அடுக்கு வளப்ப மூலத் திசுவாகக் (traphoblastic tissue) கருவகத் தசையின் (endometrium) மேலார்ந்த அடுக்கில் முட்டை அமைந்தவுடன் (பொதுவாக, குழல்களின் மட்டத்தில் முன் புற அல்லது பின் புறச் சுவரில்) அதன் வளப்ப மூலத் திசு புறத் தோல் சிலேட்டுமம், சுரப்பிகள், அடுக்குச் செல்கள், சூல் பைச் சிலேட்டும நாளங்கள் ஆகியவற்றைக் கரைத்து விடும். கருவகத் தசையின் பணி சார்ந்த அடுக்கில் படிப்படியாகப் பொதிந்து விடுகிறது. சிலேட்டுமத்தில் முழுமையாக முட்டை பதிந்தவுடன், உள் நுழைந்த இடம் மூடப் படுகிறது. இத்துடன் நிலை பெறும் நிகழ்வு முடிகிறது. இப்போது கருவகத் தசை கருவுக்குத் தேவையான ஊட்டப் பொருள்களைச் சுரக்கிறது.\n\nவளப்ப மூலத்தால் சூல் பைச் சிலேட்டுமம் கரைக்கப் பட்டவுடன், நிலை பெற்ற முட்டையைச் சுற்றியுள்ள திசுக்கள் சிதைவடைந்து, கருவுக்கு ஊட்டம் அளிக்கின்றன. புரதம், மாவுப் பொருள். கொழுப்பு, வைட்டமின், உப்பு மற்றும் கருவின் ஊட்டத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான பல பொருள்கள் காணப்படுகின்றன.\n\nகருப் படலங்களின் வளர்ச்சி. நிலை பெற்றவுடன், முட்டை விரைவாக வளருகிறது. வளப்ப மூலத்தின் மேல், புடைப்பு உறிஞ்சிகள் உண்டாகின்றன. இந்நிலையில் அவற்றிற்குக் குருதி நாளங்கள் இல்லை. அவை, முதிர்ச்சியடையா விரலிகளாகும். விரலிகளுக்கும் கருவகத் தசைக்கும் இடையேயான திசுக்கள் சிதைவடைகின்றன; தாய்ப் பகுதிக் குருதி வரத் தொடங்கும். விரலிக்கும், கருவகத் தசைக்கும் இடையேயுள்ள இடம் விரலியிடை இடம் எனப்படும். இது முட்டையை முழுமையாகச் சூழ்ந்துள்ளது. பின்பு, விரலியிடை இடம் சூல் ஒட்டுப் பகுதியில் மட்டும் காணப்படும். இது இரண்டாந்தர விரலியிடை இடம் எனப்படுகிறது.\n\nவளப்ப மூலத்துடன் கருவின் உட்செல்களும் வளர்ச்சியடைகின்றன. முட்டை, குழலினுள் இருக்கும் போது, உட்செல் வளர்ச்சி தொடங்குகிறது. உட்செல் நடுவே நீர்மம் நிறைந்த குழிவுகள் தோன்றுகின்றன. பின்னர், அவை ஒருங்கிணைந்து எக்சோசீலோமாகும். முட்டை, பிளாஸ்டோசிஸ்டாக மாறுகிறது. பிளாஸ்டோசிஸ்ட் குழிவைச் சுற்றியுள்ள செல்கள், மீசோபிளாஸ்டாக மாறுகின்றன.\n\nபிளாஸ்டோசிஸ்டின் ஒரு பகுதியில் செல்கள் திரள்கின்றன. இந்தத் திரட்சியில், எக்டோபிளாஸ்ட், எண்டோபிளாஸ்ட் எனப்படும் இரண்டு நுண் கணுக்கள் தோன்றுகின்றன. இந்த நுண் கணுக்களின் நடுவே குழிவுகள் விரைவில் தோன்றுகின்றன. எக்டோபிளாஸ்ட், எக்டோபிளாஸ்ட் குமிழாகவும், எண்டோபிளாஸ்ட், எண்டோபிளாஸ்ட் குமிழாகவும் மாறுகின்றன. எக்டோபிளாஸ்ட் குமிழ், ஒரு காம்பு மூலம், வளப்ப மூலத்துடன் இணைக்கப் படுகிறது. இது பனிக் குட நீர்மம் கொண்ட குழிவாக மாறுகிறது. எண்டோபிளாஸ்ட் குமிழ், மைய இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பின்னர், அது. கரு இழைப் பையாக மாறுகிறது. பனிக் குடத்திற்கும், கரு இழைப் பைக்கும் இடையே அமைந்துள்ள எக்டோபிளாஸ்ட், எண்டோபிளாஸ்ட் செல்கள் கருவாக மாறுகின்றன.\n\nஎக்சோசீலோம் குழிவின் அளவு பெரிதாகிறது. மீசென்சைம் செல்கள், கோரியான், அம்னியான் ஆகியன கரு இழைப் பையை நோக்கித் தள்ளப் படுகின்றன. இதன் இடையே கரு காணப்படுகிறது. குமிழ்களின் சுவர்களும், கோரியானும் இரண்டு மடிப்புக் கொண்டுள்ளன. கருவில், வெளி உறை (ectoderm), நடு உறை (mesoderm), உள் உறை (endoterm) என்னும் மூன்று அடுக்குகள் காணப் படுகின்றன. இவ்வடுக்குகளிலிருந்து, கருவின் அனைத்துத் திசுக்களும்,உறுப்புகளும் உண்டாகின்றன. பையினுள், ஒரு தெளிந்த நீர்மம் தேக்கமடைவதால், பனிக் குடம் விரைவாக அளவில் பெரிதாகிறது. அப்போது, அதன் சுவர் விரலிப் படலப் பக்கமாகச் சென்று, அத்துடன் ஒட்டிக் கொள்கிறது. பிளாஸ்டோசிஸ்ட் குழிவு மறைந்து விடுகிறது. பனிக் குடத்துக்கும் கரு இழைப்பைக்கும் இடையே இருந்த கரு, பனிக் குட குழியினுள் துளைத்துச் சென்று, படிப் படியாக முழுமையாகப் பொதிந்து விடுகிறது. இக்குழிவு, பெரிதானவுடன் கரு இழைப்பை குறைந்து சிதைந்து விடுகிறது.\n\nபடலங்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து, கருவின் பின் குடலிலிருந்து அலண்டாய்ஸ் உருவாகிறது. காம்பு வழியாக அலண்டாய்ஸ், விரலிப் படலத்திற்குச் செல்கிறது. இந்தக் காம்பு, பனிக் குட குமிழை வளப்ப மூலத்துடன் இணைக்கிறது. கரு உடலிலிருந்து விரலிக் கோரியான் வரையிலான பாதையிலுள்ள நாளங்களின் மீது அலண்டாய்ஸ் காணப்படுகிறது. கோரியான் வரையிலான பாதையிலுள்ள ஒவ்வொரு விரலிக்குள்ளும் கரு நாளங்கள் வளர்கின்றன. இந்தக் கட்டத்தில் கருவின் அலண்டாய்ஸ் குருதிச் சுழற்சி தொடங்குகிறது.\n\nகரு வளர்ச்சியின் தொடக்கக் கட்டங்கள் முடிவு பெற்றவுடன், கருவைச் சுற்றிப் பனிக் குட நீர்மம் காணப்படுகிறது. உதிரும் படலம், கோரியான், பனிக் குடம் என்ற மூன்று படலங்களும் கருவைச் சுற்றிக் காணப்படுகின்றன. உதிரும் படலம் தாயிடமிருந்து பெறப் படுகிறது. கோரியானும், பனிக் குடமும், கருவைச் சார்ந்தவையாகும்.\n\nசூலின் போது மாறுதலடையும் கருவகத் தசையின் பணி சார்ந்த படலமே உதிரும் படலமாகும். குழந்தை பிறந்த பின்னர், சூல் ஒட்டுடனும், பிற படலங்களுடனும் உதிரும் படலம் சூல் பையிலிருந்து வெளியேற்றப்படுகிறது. அதனால்தான், அது உதிரும் படலம் எனப்படுகிறது. நிலை பெறும் போது, சூல் பையின் சிலேட்டுமம், சுரப்புக் கட்டத்தில் இருக்கிறது. சுரப்பிகள், சுரப்புகளால் நிறைந்துள்ளன; உட்பிழம்புச் செல்கள் உருண்டையாகிக் கிளைக்கோஜனைக் கொண்டுள்ளன. கருவகத் தசையின் பணி சார்ந்த அடுக்கு, பஞ்சு அடுக்காகவும், நெருக்கமான அடுக்காகவும் மாறுகிறது. பஞ்சு அடுக்கில் சுரப்பிகளே காணப்படுகின்றன. கடின அடுக்கில் வட்டமான உட்பிழம்புச் செல்கள் காணப் படுகின்றன. இவற்றிற்கிடையே, சுரப்பிகளின் கழிவாய் நாளங்கள் செல்கின்றன. சூல், நிலை பெற்றவுடன் கருவகத் தசை பருமனடைகிறது; பின்னர், உப்புசமடைகிறது. சுரப்பிகளில் நீர்மங்கள் காணப்படுகின்றன; உட்பிழம்புச் செல்கள் பெரிதாகின்றன; அவற்றிலுள்ள கிளைக்கோஜனின் அளவு அதிகரிக்கிறது. இம்மாறுபட்ட உட்பிழம்புச் செல்கள் சூலின் உதிரும் செல்கள் எனப்படுகின்றன.\n\nநெருக்கமான அடுக்கில் பொதிந்துள்ள கரு, உதிரும் படலத்தால் சூழப்பட்டுள்ளது. உதிரும். படலம், கருவின் எந்தப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது என்பதைப் பொறுத்து, அதைக் கீழ்க் காணுமாறு பிரிக்கின்றனர். அவை, கருப்பைக் குழிவின் பக்கமாக உள்ள கருவின் மேலுள்ள உதிர் படல் உறை, கருப்பைச் சுவருக்கும் கருவுக்கும் இடையேயுள்ள அடிப்படை உதிர் உறைப் படலம், கரு இருக்கும் இடத்தைத் தவிர ஏனைய பகுதியில் உள்ள வெளிப்புற உதிர் படலம் ஆகியன.\n\nகரு முதிர்ச்சியடையும் போது, உறை மற்றும் வெளிப்புற உதிர் படலம் இழுக்கப்பட்டு, மெல்லியதாகி ஒன்றையொன்று ஒட்டியுள்ளன. 4 மாத வயதுடைய மனிதக் கரு, சூல் பை முழுதும் அடைந்துள்ளது. உதிர் படலத்தின் இரு பகுதிகள் ஒன்றாகி, மிகவும் மெல்லியதாகின்றன. அப்போது, அடிப்படை உதிர் படலம் பருமனடைந்து, அதில் பல குருதி நாளங்கள் காணப்படுகின்றன. சிலேட்டுமப் படலத்தின் இப்பகுதி தாயின் சூல் ஒட்டாக மாறுகிறது.\n\nவளப்ப மூலத்திலிருந்தும், மீசோபிளாஸ்டிலிருந்தும் கோரியான் உருவாகிறது. முதல் தர விரலிகளில் குருதி நாளங்கள் காணப்படுவதில்லை. ஆனால், சூலின் முதல் மாத இறுதியில் அலண்டாய்சிலிருந்து, குருதி நாளங்கள் வருகின்றன. முதலில் விரலிகள். சுருவின் முழுப் பரப்பையும் மூடுகின்றன. சூலின் இரண்டாம் மாதத்தில் உறை உதிர் படலத்தின் அருகேயுள்ள கோரியான் பகுதி விரலிகள் சூம்புகின்றன. 3 ஆம் மாதக் கருவில் கோரியானின் இப்பகுதியிலிருந்து விரலிகள் மறைந்து, அது மிகவும் மழமழப்படைகிறது.\n\nபனிக் குடம். பனிக் குட நீர்மத்தால் சூழப் பட்ட கருவைக் கொண்ட படலப் பையே பனிக் குடம் எனப்படுகிறது. கோரியாலை ஒட்டியே பனிக் குடமும் இருக்கிறது. சூல் ஓட்டின் உட்பரப்பை ஒட்டி அமைந்து, கொப்பூழ்க் குமிழுக்குச் சென்று, அதை மூடுகிறது. கொப்பூழ்ப் பகுதி கருவின் வெளி உறைகளுடன் ஒட்டியுள்ளது. அம்னியான் ஒரு மெல்லிய படலமாகும். மீசென்கைமாவால் உருவான இணைப்புத் திசுச் செல்களும் புறத் தோலும் இதில் காணப்படுகின்றன.\n\nகருவுக்கு மிக மிக அருகில் உள்ள மிகவும் உள்ளேயுள்ள படலமான பனிக் குடத்தை அடுத்துக் கோரியானும், இறுதியாக உதிர் படலமும் காணப் படுகின்றன.\n\nபனிக் குட நீர்மம். பனிக் குடக் குழிவில் நீர்மம் காணப்படுகிறது. சூலின் இறுதியில், இதன் அளவு 1–1.5 லிட்டராகும். பனிக் குடப் புறத் தோலிலிருந்து சுரப்பு மூலம் இந்நீர்மம் உருவாகிறது. தாயின் குருதி நாளங்களிலிருந்து கசியும் குருதியிலிருந்தும், கருவின் நீரகங்கள் பணியாற்றுவதன் விளைவாலும், இந்நீர்மத்தின் ஒரு பகுதி உண்டாகிறது. இந்நீர்மத்தில், புறத் தோல் உதிர்ந்த பகுதிகளும், தோலின் சீபச் சுரப்பிகளின் விளைபொருள்களும், கரு உடலின் நுண்ணிய மயிரும் காணப்படுகின்றன. பனிக் குட நீர்மத்தில் புரதம், உப்பு, யூரியா, கொழுப்பு, சர்க்கரை, ஹார்மோன்கள், நுண் பொருள்கள் முதலியன காணப்படுகின்றன.\n\nகரு வளரவும், கருப்பையில் அதன் அசைவு நிகழவும் ஏற்ற சூழ்நிலையைப் பனிக் குட நீர்மம் உண்டாக்குகிறது. இந்நீர்மம் மிகவும் குறைவாக உள்ளமையால், கருவிற்குப் பிறவி ஊனங்கள் உண்டாகின்றன. கருவின் ஆக்கச் சிதை மாற்றத்தில் பனிக் குட நீர்மம் பங்கு கொள்கிறது. மென்மையான கருவை ஒவ்வாமையிலிருந்து காக்கிறது. கரு உடலுக்கும், கருப் பைச் சுவருக்கும் இடையே, கொப்பூழ்க் கொடி சிக்கி நசுங்கி விடுவதைப் பனிக் குட நீர்மம் தடை செய்கிறது. கருப் படலத்தில் காணப்படும் பனிக் குட நீர்மம், கருப் பைக் கழுத்துத் துளை இயல்பாக விரிவடைவதை ஊக்குவிக்கிறது. —மு.கி. ராஜாசுப்பிரமணியம் நூலோதி. H.G.Dixon. Obstetrics and Gynaecology, John Wright and Sons, Bristol, 1980."}}