{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/buj33q5c/", "data": {"id": "buj33q5c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/buj33q5c/", "kind": "article", "headword": "நெகிழிக் கட்டமைப்பு", "romanization": "nekiḻik kaṭṭamaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.864947+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பல்லுறுப்பு ரெசின்களை வார்ப்புத் தூளாக மாற்றிய நிலையில், நெகிழி வடிவமைப்புகளாக உருப் பெறச் செய்யும் முறை இதில் அடங்கும்.", "body_ta": "பல்லுறுப்பு ரெசின்களை வார்ப்புத் தூளாக மாற்றிய நிலையில், நெகிழி வடிவமைப்புகளாக உருப் பெறச் செய்யும் முறை இதில் அடங்கும்.\n\nபல்லுறுப்பு, ரெசின்களைத் தக்க வேதிப் பொருள்களுடன் கலந்து, வார்ப்புத் தூளாக (moulding powder) மாற்றிய பின்பு, இறுதிக் கட்டமாக நெகிழி அமைப்புகளாக வடிவமைத்தலுக்குப் பல வழி முறைகள் கண்டறியப் பட்டுள்ளன. அவை: பீச்சி வார்த்தல் (injection moulding), அழுத்தி வார்த்தல் (compression moulding), பிழிந்து வார்த்தல் (extrusion), தகடாக்குதல் (lamination), ஊதி வார்த்தல் (blow moulding), அழுத்தி மெருகேற்றல் (calendering), மாற்ற வார்த்தல் (transfer moulding) என்பன அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளன.\n\nபீச்சி வார்த்தல். வெப்பத்தால் இளக வல்ல நெகிழி களுக்கு ஏற்ற வார்ப்பு முறைகளுள் முதன்மையானது இது. இவ்வழி முறையில் (படம் 1) ரவை அல்லது தூள் வடிவிலான ரெசினைச் சூடாக்கப் படும் உருளையொன்றின் ஒரு முனையிலிட்டு, மற்றொரு முனையில் அமைக்கப்பட்ட சிறு துளை வழியே பீச்சி, வார்ப்பு அச்சின் கொள்ளிடத்தை நிரப்புதல் அடிப்படை இயக்கமாகும்.\n\nஇன்றைய நெகிழி உலகில் வெப்பத்தால் இறுக வல்ல வகையையும், இவ்வழி முறை மூலம் வார்ப்பதற்கு வசதி உள்ளது. இளக வல்ல நெகிழிகளுக்கும், இறுக வல்ல நெகிழிகளுக்கும் வேறுபாடு உள்ளது. வெப்பமூட்டும் உருளையின் வழியே வார்ப்புத் தூளைச் செலுத்துவதற்கு 10000 முதல் 25000 Ib /in² அழுத்தம் தேவை. உருளையின் வெப்ப நிலை வரம்பு பொதுவாக 95–315°C வரையானாலும், வெப்பத்தால் இளக வல்ல நெகிழிகளுக்கு 175–315°C வரம்பும், வெப்பத்தால் இறுக வல்ல நெகிழிகளுக்கு 175°C க்குக் குறைவாகவும் நிலை நிறுத்தப் படும். இவ்வழி முறைகளில் கட்டுப் படுத்தப்பட வேண்டிய துணை அலகுகளாக வார்ப்புத் தூளின் வெப்ப நிலை, வார்ப்பின் வெப்ப நிலை, பீச்சு அழுத்தம், வார்ப்பு அச்சுக் குழி நிரப்பும் வேகம், பீச்சப் படும்போது, ரெசினின் பாகு தன்மை, ஒவ்வொரு முறையும் புகுத்தப் படும் பொருளின் அளவு, ஒவ்வொரு வார்ப்புக்கும் தேவைப் படும் காலம் ஆகியவை விளங்குகின்றன. பீச்சி வார்த்தல் முறையில் உந்து தண்டு, எதிரீட்டுத் திருகு என இரு உத்திகள் கையாளப் படுகின்றன. திருகின் ஆழம், தூள் புகுத்தப் படும் இடத்திலிருந்து பீச்சும் நுண் துளை வரை சிறிது சிறிதாக மாறிக் கொண்டே வரும். இத்திருகு மென்மையூட்டும் அமைப்பாகவும், பீச்சும் அமைப்பாகவும் ஒருங்கே செயல் படுகிறது. பெய் குடுவையிலிருந்து (hopper) நுண் துளை வரை இடு பகுதி (feed zone) என முப்பிரிவுகள் உண்டு. பின்னோக்கி பாய்வைத் தவிர்க்கும் தடுக்கிதழ் (Value) வாயிலாக, உருகிய ரெசின் நுண் துளையை அடைகிறது. நுண் துளைக்குப் பின்னால் உள்ள பகுதி நிரம்பியவுடன் விளையும் அழுத்தம், சுழலும் திருகைப் பின்னோக்கித் தள்ளுகிறது. ஒரு குறிப்பிட்ட நிலையில் திருகு மீண்டும் முன்னோக்கித் தள்ளப் படுகிறது. இம்முன்னோக்கி விசையின் தாக்கத்தினால் மூடப் பட்ட வார்ப்பச்சுக் குழி நிரப்பப் படுகிறது. வார்ப்பு அச்சு திறந்திருக்கையில், பீச்சு துளை வழியாகக் கசிவைத் தடுப்பதற்கான ஒரு தடுக்கிதழ் அமைக்கப் பட்டுள்ளது. ரெசின் பொருள் திருகின் உராய்வினாலும், வெளியிலிருந்து செலுத்தப் படும் வெப்பத்தினாலும் உருக்கப் படுகிறது. பீச்சுகையில் அழுத்தம் உயர் நிலையில் இருப்பதால், வார்ப்புத் தூள் பிதுங்கி வெளி வராமல் தடுக்கும் பொருட்டுப் போதுமான அளவு பிடிப்பு விசையும் கூடுதலாகத் தேவைப் படும். எந்திர வகை, நீரியல் வகை, இரண்டும் இணைந்த வகை என மூவகைப் பிடிப்பு அமைப்புகள் உள்ளன, வார்ப்புத் தகட்டில் இடம் பெறும் குழிகளின் பெரும் எண்ணிக்கை பின் வரும் காரணிகளைப் பொறுத்தது. அவை எந்திரம் ஒரு முறையில் உட்செலுத்த வல்ல ரெசினின் அளவு (shot capcity), எந்திரத்தின் பிடிப்பியின் திறன், எந்திரத்தின் நெகிழ்வு ஏற்றும் தன்மை, வழி முறையின் மொத்த செலவு என்பன. பொதுவாக, எந்திரத்தின் ரெசின் உட்செலுத்து அளவில், மூன்றில் இரண்டு பங்குக்கு மேற்படாமல் புகுத்துவது நன்மை பயக்கும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> Q_1 = \\frac{\\frac{2}{3}\\cdot S - W_r}{W_p}\n\nஇங்கு Q₁ = வார்ப்புத் தகட்டில் குழிகளின் எண்ணிக்கை S = எந்திரத்தின் பிசின் செலுத்தும் அளவு Wr = வார்ப்பு நுழைவு (Sprue), ஓடு பாதை (runner) ஆகியவற்றின் நிறை Wp = வார்க்கப் பட்ட பொருளின் நிறை\n\nநவீன பீச்சி வார்த்தல் எந்திரங்கள் கணிப்பிகளையும், மனித எந்திரங்களையும் கொண்டு இயக்கப் படுகின்றன. வார்ப்பச்சு நீரோட்டத்தால் குளிர்விக்கப் படுகிறது. வார்க்கப்பட்ட பொருளை அமைப்பிலிருந்து விடுவிப்பதற்கு, வெளித் தள்ளும் ஊசிகள் (ejector pins) பயன் படுகின்றன.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->\n\nபீச்சி வார்த்தல் முறையின் கூடுதல் நன்மை. இரு முறையில் உயர் வகை அமைப்புகளை விரைவாக உருவாக்கலாம். பிற வழி முறைகளுடன் ஒப்பிடுகையில், தொழிலாளர் செலவு குறைவு. வார்க்கப்படும் பொருளின் புறப் பரப்பு செம்மையாக இருக்கும். தானியங்கு அமைப்பாக மாற்றுதல் எளிது. மேலும், சிக்கலான வடிவமைப்புகளையும் இதில் உருவாக்கலாம்.\n\nகுறைபாடுகள். எந்திரம் விலையுயர்ந்ததாகையால், நிறைந்த எண்ணிக்கையில் பொருள்களைத் தயாரித்தலே சிறந்தது. தரமான பொருளைத் தயாரிப்பதற்கு வழி முறையை மிகக் கவனமாகச் செயல்படுத்த வேண்டும்.\n\nஅட்டவணை\n\nஅமுக்கி வார்த்தல். பொதுவாக வெப்பத்தால் இறுக வல்ல நெகிழிகள் இச்செயல் முறையின் மூலம் தயாரிக்கப் படுகின்றன. குறிப்பாகஃபீனால் ஃபார்மால்டிஹைடு, யூரியா–ஃபார்மால்டிஹைடு, மெலமின்–ஃபார்மால்டிஹைடு ஆகியன இவ்வகை வார்ப்புக்கு உட்படுத்தப் படுகின்றன. இவ்வார்ப்பு அச்சு துருத்தும் பகுதி மேல் பாதியாகவும் <!---- Words repeated ---> குழிப்பகுதி கீழ்ப் பாதியாகவும் அமைக்கப் பட்டுள்ளன. குழியில் ரெசினை நிரப்பி, துருத்தும் மேல் பகுதியை அதன் மீது பொருத்தி, அழுத்த வேண்டும். வார்ப்பு அச்சைச் சற்றே சூடு படுத்தினால், வார்ப்பு உருவாதல் எளிதாகும். உருகிய ரெசின் வார்ப்பின் குழிவான பகுதிகள் யாவற்றிலும் நிரம்புகிறது. ஓரிரு நிமிடங்களுக்கு சூடு படுத்திக் குறுக்குப் பிணைப்புகள் உருவாதலை முழுமையாக்க வேண்டும். பின்பு, வார்க்கப் பட்ட பொருள் வார்ப்பச்சிலிருந்து புறந்தள்ளப் படுகிறது. பிதுங்கி உறைந்த பகுதிகளைப் (flash) பின்பு வெட்டி, அகற்றி விடலாம்.\n\nவார்ப்புக் குழியின் ஆழம் வார்ப்புத் தூளின் அடர்த்தியைப் பொறுத்ததாகும். குறை அடர்த்தித் தூளுக்கும், மிகை அடர்த்தித் தூளுக்கும், வெவ்வேறு அமைப்புகளைப் பயன் படுத்த வேண்டும். செலவினம் மிகுந்த மாற்றங்களைப் புகுத்தாமல், ஒரே வகை அமைப்பை இரு வேறு துகள் வகைகளுக்குப் பயன் படுத்த வேண்டுமாயின், வார்க்கப் படும் அடிப்படைப் பொருள்களின் பாய்ம இயல்புகளை நன்கு அறிய வேண்டும்.\n\nதெறிப்பு (பிதுக்கம்) முறை (Flash), தெறிப்பு அற்ற முறை (Positive), பகுதித் தெறிப்பு (Semi Positive) முறை (படம். 3) என அமுக்க வார்ப்பு முறை மூன்று வகைப் படும்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> தெறிப்பு முறையில் வார்ப்புக் குழியில் நிரம்பியது போக மிகையளவு ரெசின் அழுத்தும் தண்டுக்கும், குழிக்கும் இடையே அமுக்கப் பட்டு, பிதுங்கி வெளியேறுகிறது. வார்க்கப்பட்ட பொருளை வெளியே எடுத்த பின்பு, பிதுக்கப் பட்ட பகுதியை வெட்டி அகற்றி விடலாம்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> தெறிப்பு அற்ற முறையில் மிகையளவு ரெசின் ஒரு வடிகால் குழியில் ஒதுக்கப் படுகிறது. துணியினால் நிரப்பப் பட்ட, தாக்கு வலிமை தாங்க வல்ல, இறுக வல்ல நெகிழி அமைப்புக்களுக்கு இவ்வழி முறை ஏற்றதாகும். இவ்வகை அமுக்க வார்ப்பு அச்சில் குழியை நிரப்புவதற்குத் தேவையான துகளைத் துல்லியமாக எடையிட்டு நிரப்ப வேண்டும்.\n\nபகுதித் தெறிப்பு முறையில் வார்ப்புத் தூளை ஓரளவு அமுக்கும் போது, தூளின் ஒரு பகுதி பக்கவாட்டுச் சந்துகளில் புகுந்து விடுகிறது. மேலும் முழுமையாக அமுக்கும் போது, வார்ப்பு அச்சினுள் அகப்பட்டுள்ள தூள் வடிவமைப்பைப் பெறும். இதில் மேல் நோக்கிய தெறிப்புத் தோன்றுவதால், எளிதில் அகற்ற இயலும்.\n\nஅமுக்க வார்த்தலின் கூடுதல் நன்மை. மெல்லிய (<.15 செ.மீ.) அமைப்புகளை மடிப்பும் (Warpage), பரிமாணத் தடுமாற்றமும் இன்றித் தயாரிக்க இயலும்; நுழை வாயில் தழும்புகள் தோன்றுவதில்லையாதலால், சிறு அமைப்புகள் தயாரிப்புக்கு இம்முறை ஏற்றதாகிறது; சுருக்கம் குறைவாகவும் சீர்மையாகவும் உள்ளது. 1.5 கி.கி. நிறைக்கு மேற்பட்ட பொருள்களின் தயாரிப்புக்கு இம்முறை சிக்கனமானது; சிக்கலான வடிவமைப்புக் கொண்ட பொருள்கள் எளிதாகக் தயாரிக்கப் படுகின்றன; உயர் தாக்கு வலிமை கொண்ட பொருள்களைத் தயாரித்தல் எளிது; வடிவமைத்தலும், கட்டுமானம் செய்தலும் எளிதாகையால், முதற் கட்டச் செலவினம் குறைவாகும்; இழை வலிவூக்கப் பட்ட வார்ப்புகளில் தாக்கு வலிமை பெருமளவில் பெறப் படுகிறது. பிற மூடிய வார்ப்பு வகை அமைப்புகளில் வலிவாக்கப் பயன் படும் இழைகள் உடையக் கூடும். அவ்வாய்ப்பு இம்முறையில் குறைவாகும்.\n\nவார்ப்பு வாயில் (sprues), எச்சம் ஓடு பாதை (runners) ஆகியன இல்லாமையால், வார்ப்புத் தூள் இழப்பு மிகவும் குறைவு; பீச்சி வார்த்தல், மாற்றி வார்த்தல் போன்ற அமைப்புகளுக்குத் தேவைப் படுவது போல், உயர்ந்த அளவு பிடிப்பு அழுத்தம் தேவைப் படுவதில்லை. எனவே, ஒரு குறிப்பிட்ட அழுத்தத்திற்கு, நிறைந்த எண்ணிக்கையில் அமைப்புகளைத் தயாரிக்கலாம். வார்ப்புக் குழிகளின் அரிப்பு நிகழ்வு குறைவாதலால், வார்ப்புப் பராமரிப்பு வேலையும் குறைவாகும்.\n\nகுறைபாடுகள். வார்ப்புத் தூளின் மீது, வார்ப்பின் மேல் பகுதி அமுக்கப் படுகையில், செருகும் பகுதிகள் சிதைவடையக் கூடும்; மாற்ற வார்ப்பு, பீச்சி வார்த்தல் முறைகளைப் போலன்றி, இவ்வழி முறையில் கனமான வார்ப்படங்கள் பதப்படுத்தலுக்கு நீண்ட நேரம் ஆகும். ஒவ்வொரு குழியும் தனித் தனியே நிரப்பப்படுவதால், இவ்வழிமுறைகளுக்குச் செயல் நேரம் கூடுதலாகத் தேவைப் படுகிறது. பிற முறைகளைப் போலல்லாமல், இம்முறையில் தெறிப்பு அகற்றம் நீண்ட நேரம் பிடிக்கும் கட்டமாகிறது.\n\nமாற்றி வார்த்தல். ஃபீனாலிக், மெலமின், பாலியூரிதேன் போன்ற இறுக வல்ல நெகிழிகளுக்கு இவ்வழிமுறை சிறந்ததென அறியப் பட்டுள்ளது (படம் 4). அமுக்க வார்த்தலுக்கும், இம்முறைக்கும் இடைப் பட்ட முதன்மையான வேறுபாடு வார்ப்பு அச்சுக் குழிகளில் வார்ப்புத் தூளை நிரப்பும் உத்தியைப் பொறுத்தது. இம்முறையில் வார்ப்பு அச்சுக் குழிகளுக்கு வெளியே உள்ள ஒரு சிறு அறையில் வார்ப்புத் தூள் நிரப்பப் பட்டு, அமுக்கும் போது, குழிகளில் நிரப்பப் படுகிறது. குழிகளில் அடை பட்டிருக்கும் காற்று, தக்க இடங்களில் அமைக்கப் பட்டுள்ள துளைகளின் வழியாக வெளியேற்றப் பட வேண்டும். வார்ப்புத் தூளின் தன்மையையும், வார்க்கப் படும் அமைப்பின் குறுக்களவையும் பொறுத்து, பல்லுறுப்பாக்கலுக்கும், பதப்படுத்துதலுக்கும் தேவைப் படும் காலம், வெப்ப நிலை, அழுத்தம் ஆகியன அமைகின்றன. அமுக்கி வார்த்தலைப் போலன்றி, இம் முறையில் தெறிப்பு கூடுதலாக இல்லை. ஒரே அமைப்பைப் பல எண்ணிக்கையில் தயாரிக்கலாம். அமுக்கி வார்த்தலில் தயாரிக்க இயலாத, சிக்கலான வடிவமைப்புக் கொண்ட சிறு உறுப்புகளை இவ்வழி முறையில் தயாரிக்கலாம்.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->\n\nபிழிந்து வார்த்தல். நெகிழிப் பொருள்களைத் தொடர்ச்சியாகவும், நீளமாகவும் உருவாக்கும் முறை, 'நெகிழிக்கான அடிப்படை ரெசினைச் சூடாக்கியோ, தக்க கரைப்பானில் கரைத்தோ, மென்மையூட்டி, மென்மையான பிசினைத் தேவைப்படும் அமைப்பின் வடிவத்தில் அமைந்த துளையச்சு வழியே அழுத்தத்தில் செலுத்துதல் இம்முறையின் அடிப்படை இயக்கமாகும் (படம் 5). பிழிந்து இழுக்கப் பட்ட நெகிழி, ஒரு குளிர்விக்கும் ஊடகத்தின் வழியே இட்டுச் செல்லப் படுகிறது. வெப்பமும், இடு பொருள் நிறையும் துல்லியமாக இருத்தல் தேவையாகும். பெய் குடுவையில் இடப் படும் தூள், எந்திரத்தினூடே சென்று, அச்சுத் துளை வழியே வெளியே இழுக்கப் படுகிறது. உருளை வடிவினாலான எந்திரத்தில் ஒரு நீள் திருகு சுழன்று கொண்டிருக்கும். சுழலும் திருகு, தூளை ஒரு முனையிலிருந்து, மற்றொன்று எடுத்துச் செல்வதுடன், திருகுக்கும், உருளையின் உட்சுவருக்கும் இடைவெளி குன்றியிருப்பதால், உராய்வு மூலம் தூளை உருக்கவும் செய்கிறது. மின் தடை வழிச் சூடேற்றுதலும் நிகழ்த்தப் படுகிறது. அச்சுத் துளையின் வடிவமைப்பைப் பொறுத்துத் தண்டு, குழாய், பட்டை, படலம் ஆகியவற்றைச் சமச் சீர்மையான குறுக்களவிலும், தடிமனிலும் தயாரிக்கலாம். பிற நெகிழிக் கட்டமைப்பு முறைகளில் தயாரிக்க முடியாதவையும், செலவினம் மிகுந்து என ஒதுக்கப் பட்ட வடிவமைப்புக்களையும் இம்முறையில் தயாரிக்க இயலும். புதிய பிழிந்து வார்த்தல் உத்திகளால் 150 செ.மீ. குறுக்களவு கொண்ட வடிகால் குழாய்கள் தயாரித்தல் தற்போது எளிதாகி விட்டது.\n\nதகடாக்கல். காகிதம், துணி, கண்ணாடி, கித்தான், மெலிந்த மரப்பலகை ஆகிய ஏதேனும் ஒன்றை, வெப்பத்தால் இறுகும் நெகிழியொன்றின் கரைசலில் புகுத்தினால், பற்றுப் பொருளின் இரு புறமும் நெகிழி ரெசின் ஒட்டும் (படம் 6). இவ்வாறு, ரெசின் பூசப்பட்ட தகடுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, இவ்வடுக்கின் மீது அழுத்தத்தைச் செலுத்தினால், தகடுகளுக்கு இடையே குறுக்குப் பிணைப்புகள் தோன்றி, இவ்வடுக்கு முழுவதும் ஒரே தகடாக மாற்றமடைகிறது. புறப் பரப்பில் தூய ரெசினாலான ஒரு மெல்லிய அடுக்கு இடம் பெறுவதால், இத்தகடுகள் வழவழப்பான கண் கவர் தோற்றம் பெறுகின்றன. ரெசின் ஒளி புக விடும் பண்பு கொண்டதாக இருப்பின், அடித் தளம் கண்ணுக்குப் புலப் படும்.\n\nதகடு வகை நெகிழிகள் ஏடுகளாகவும், தண்டுகளாகவும், குழாய்களாகவும் (படம் 7) தயாரிக்கப் படுகின்றன. சரியான குறுக்களவு கொண்ட ஓர் அடித் தண்டின் மீது, தயாரிக்கப் பட்ட தகட்டைச் சுற்றி, பதப் படுத்திய பின்பு, அடித் தண்டை அகற்றினால், குழாய் கிடைக்கும். தடித்த தகடுகளால் உருவாக்கப் படும் பற்சக்கரங்கள் உலோகப் பற்சக்கரங்களுக்கு இணையான திறன் கொண்டிருக்கும்.\n\nதட்டையாக இல்லாமல், எளிய, வளைவான அமைப்புகளைக் கொண்டிருக்கும் படகுகள், பேருந்துகள், சரக்கு ஊர்திகள் பாதுகாப்புக் கவசங்கள் ஆகியன குறைந்த அழுத்தத்திலும், குறைந்த வெப்ப நிலைகளிலும் தயாரிக்கப் படுகின்றன. உலோகம், கடினமான மரம், துகள் பலகை ஆகிய ஏதேனும் ஒன்றினாலான வார்ப்பு அச்சின் மீது, அடுக்கடுக்காக ரெசினில் முக்கப் பட்ட மெல்லிய கண்ணாடித் துணியைப் போர்த்தித் தேவையான தடிமனுக்குக் கொணர வேண்டும். தகடாக்கப் பட்ட நெகிழியமைந்த வார்ப்பு அச்சு ஒரு பைக்குள் இடப் பட்டு, பையிலிருந்து காற்று வெளியேற்றப்cபடுகிறது. வெளிக் காற்றழுத்தம் தகட்டை வார்ப்பின் மீது அமிழ்த்துகிறது. அறை வெப்ப நிலையிலோ, சற்றே உயர் வெப்ப நிலையிலோ பதப் படக் கூடிய நெகிழிகளாக இருப்பின், வெற்றிட அமைப்பு தேவையிராது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->\n\nவெற்றிட வழி ஆக்கல் (Vacuum torming or thermoforming) வடிவமைக்கப் பட்ட வார்ப்பு அச்சின் மீது நெகிழித் தகடு வைக்கப்பட்டு, வார்ப்புக்கும், தகடுக்கும் இடையில் வெற்றிடம் உருவாக்கப் படுகிறது. இதன் விளைவாக, நெகிழி அற்ற அமைப்பு அடைகிறது. நெகிழியை மென்மையாக்கும் பொருட்டுச் சூடு படுத்தப் படுகிறது. அமைப்பின் வடிவம் உருப் பெற்ற பின், அச்சு குளிர்விக்கப் பட்டு வெற்றிடம் விடுவிக்கப் படுகிறது. ஒரு முறை முழுமையாக நிகழ்த்துவதற்குச் சில மணித் துளிகளே ஆகுமாதலால், இவ்வழிமுறை பெரிதும் பரிந்துரைக்கப் படுகிறது.\n\nஊதி வார்த்தல். பழங்காலத்தில் கண்ணாடியாலான பொருள்கள் தயாரிக்க இவ்வழி முறை பயனாகிறது. உள்ளீடற்ற பொருள்களான புட்டி, கலன் ஆகியவற்றை உருவாக்க, இது சிறந்த முறையாகும். நெகிழியினாலான தண்டு வார்ப்பு அச்சில் புகுத்தப் பட்டு, அச்சு மூடப் படுகிறது. பொருளினூடே காற்றை அழுத்தத்தில் செலுத்தினால், மென்மையான திண்மமான நெகிழி வார்ப்புச் சுவர்களின் மீது படிகிறது. வார்ப்பு அச்சை விலக்கிப் பிரித்தால், உருப் பெற்ற பொருள் வெளிப் படுகிறது.\n\nவார்ப்பு அச்சில் புகுத்தப் படும் பகுதி உருகிய நெகிழித் தண்டு (Parison) பிழிந்து வார்த்தல் முறையில் தயாரிக்கப் படுகிறது. வார்ப்பு அச்சு வெப்பக் கடத்துத் திறன் மிகுந்த, வெப்பத்தால் பதப்படுத்தப் பட்ட அலுமினியத்தால் செய்யப்பட்டிருக்கும். வடிவமைப்பில் எளிதாகவும், உருவில் பெரிதாகவும் உள்ள மோதல் தடுப்புத் தண்டு (bumper beam), தானுந்தி வளிமத் தொட்டி ஆகியவற்றைத் தயாரிப்பதற்கு இது ஏற்ற முறையாகும். பிழிந்து வார்த்தல் முறை மூலம் தயாரிப்பதை விட. இம்முறை மூலமாகப் பெரிய வடிவமைப்புகளை உருவாக்கலாம். ஊதி வார்த்தலுக்கு மூன்று அடிப்படை உத்திகள் உள்ளன. அவை பரிமாற்ற திருகி (reciprocating screw), மொங்கான் சேர்ப்பி (ram accumulator), சேர்ப்பு முனை (accumulator head) என்பன. தொடர்ச்சியான பிழிந்து வார்த்தலில் தயாரிப்பதை விடவும், பெரிய, கனமான பொருள்களை இவ்வுத்திகளால் தயாரிக்கலாம். 90 செ.மீ. அங்குல அகலமும், 240 செ.மீ. நீளமும் கொண்ட உறுப்புகளைத் தயாரிக்க இவ்வழி முறையில் தற்போது வசதி உள்ளது. ப,ட,U,S, போன்ற வடிவங்களை இதில் வார்க்க இயலும்.\n\nஅழுத்தி மெருகேற்றல். தொடர்ச்சியான இச்செயல் முறையில் சுழலும் உருளைகள் இரண்டுக்குமிடையே மென்மையாக்கப் பட்ட ரெசினைப் புகுத்தி, அழுத்தும் போது, சீர்மையான தடிமன் கொண்ட ஏடாக (தகடாக) வெளி வருகிறது. ஒருங்கிணைந்து உருளும் இச்சக்கரங்களுக்கிடையே உருகிய ரெசின் ஈர்க்கப்பட்டு, அணைக்கப் படுகிறது. மிகக் குறைந்த பிழை வரம்பு கொண்ட சீர்மையான தடிமன் கொண்ட ஏடுகளை விரைவாகத் தயாரிப்பதற்கு இம்முறை சிறந்ததாகும். 2 மீ. அகலம் வரை கொண்ட இளக வல்ல நெகிழி ஏடுகளை, நிமிடத்திற்கு 100 மீ. என்னும் விரைவில், இம்முறையால் தயாரிக்க இயலும். மறு புறத்தில், 0.05மி. மீட்டருக்கும் குறைவான தடிமனில் ஏடுகளைத் தயாரிக்கவும் இயலும். இம்முறையில் கட்டுப் படுத்த வேண்டிய அலகுகள், உருளையின் விட்டம், உருளையின் சுற்று வேகம், உருளைகளுக்கு இடைப்பட்ட தொலைவு, ஏடு இழுக்கப் படும் வேகம் ஆகியனவாகும்.\n\nசுழற்றி வார்த்தல் (rotomolulding). மடிப்பும், உள்ளீடுமற்ற எவ்வமைப்பையும், இச்செயல் முறையால் தயாரிக்கலாம். ஊதி வார்த்தல் முறை மூலம் தயாரிக்க இயலாத முழுமையாக மூடப் பட்ட வடிவங்களைக் கூட இம்முறை மூலம் தயாரிக்கலாம். ரெசினை, வார்ப்பு அச்சினுள் புகுத்தி, மூடப்பட்ட வார்ப்பு அச்சை ஓர் அடுப்பிலிட்டுச் சுழற்ற வேண்டும். ஒன்றுக்கொன்று செங்குத்தான இரண்டு அச்சுத் திசைகளில் சுழற்றினால், தூள் நன்கு நெகிழ்ந்து, சிட்டம் கட்டிப் பிறிதோர் அறையில் குளிர்விக்கப் படுகிறது. குளிர்விக்கப் படும் போதே, சுழற்சி தொடர்ந்து நிகழ்த்தப் படுகிறது. இவ்வழி முறைகளுக்கு அழுத்தம் மிகக் குறைவாகவே தேவைப் படுகிறது. உருவாகும் அமைப்பு சமச் சீர்மை பொருந்தியதாகவும், தகைவு எச்சம் அற்றதாகவும் உள்ளது. சுழற்சி வார்ப்புக்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. எனவே, இதில் பயன் படுத்தப் படும் ரெசின்கள் வெப்பம் தாங்க வல்லதாக இருத்தல் தேவை. நைட்ரஜனை உட்செலுத்திக் காற்றை வெளியேற்றுவதால், இந்நிலையிறக்கம் தவிர்க்கப் படுகிறது.\n\nகால் பந்து, மிதவை, தொட்டி, கலன் பெட்ரோல் தொட்டி ஆகியன இச்செயல் முறையால் தயாரிக்கப் படுகின்றன. இந்தியாவில், இம்முறை மூலம் மிகப் பெரிய அளவில் தயாரிக்கப் படும் அமைப்பு மேல் நிலை நீர்த தொட்டியாகும். பிற வார்ப்பு அச்சுகளும் விலை குறைவானவை, விரைவாகச் செயல்படாமை ஒன்றே இவ்வமைப்பின் குறையாகும். வார்ப்பில் உள்ளகம், வெளியுறை ஆகியவற்றை இரு கட்ட வார்த்தலில் உருவாக்கலாம். ரெசினைத் திறன் மிக்க முறையில் சூடு படுத்துதலும், சுழற்சியினால் சமச் சீராகச் சிதறச் செய்தலும்இவ்வழி முறையின் சிறப்பியல்புகளாகும்.\n\nநெகிழி வடிவமைப்பில் கவனிக்க வேண்டியவை. நெகிழி உலோகங்களுக்கு நேரடிப் பதிலீட்டுப் பொருள்கள் இல்லையாததால், வார்ப்புக்கான பொருள் தேர்ந்தெடுத்தலும், வடிவமைப்பு அடிப்படைகளும் இத்துறையில் பெரிதும் மாறுபட்டுள்ளன. ஒன்றிப் போன நிறம், வேதி அரிமான எதிர்ப்பு, எடையற்ற தன்மை, வெப்ப மற்றும் மின் காப்பீட்டுப் பண்பு ஆகியன நெகிழியின் கூடுதல் நன்மைகளாகும். பாய்மத் தன்மை, பகுதிப் பாய்மத் தன்மை கொண்ட பொருளை வார்ப்பு அச்சின் குழிகளில் நிரப்பி, குறித்த வடிவத்தில் திண்மமாக்குகையில், சில அடிப்படைச் சிக்கல்கள் எழுகின்றன. முதலில் ரெசினைத் தக்க அளவில் புகுத்திக் குழி நிறையச் செய்தல் வேண்டும். இரண்டாவதாக, ரெசினில் அடை பட்டிருக்கும் காற்றை அகற்ற வேண்டும். மூன்றாவதாகக் திண்மமாக உறைகையில், பொருளில் தோன்றும் சுருக்கத்தைத் துல்லியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். இறுதியாக, வார்ப்பு உறைந்த பின்பு, அச்சிலிருந்து எளிதில் வெளியேற்றப் பட வேண்டும். உருவாக்கப்படும் அமைப்பு, அதன் பணித் தேவையை நிறைவு செய்வதாக அமைதல் வேண்டும். இழு வலிமை, தாக்கு வலிமை, பரிமாண நிலைப்புத் தன்மை, நிறம் ஆகியன வரையறுக்கப் பட வேண்டும். வார்ப்பு அச்சின் தளத்தின் இரு மருங்கிலும், சற்றே சாய்வான தளமாக அமைத்து, வார்ப்பை அச்சிலிருந்து விடுவிப்பதற்கு வசதி தேவை. வார்ப்பு அச்சில் (undercuts) இயன்ற வரை, குழிகளைத் தவிர்க்கப் பட வேண்டும். இவ்வகை வார்ப்பை அகற்றுவதற்கு வார்ப்பின் இரு பாதிகளையும், விலக்கும் திசைக்குச் செங்குத்தான திசையில் அசையக் கூடிய பகுதிகளை உருவாக்க வேண்டும்.\n\nவார்ப்பின் அனைத்துப் பகுதிகளையும், சமச் சீர்மையுடன் ரெசின் பாய்வை அறுதியிடவும், அமைப்பின் மூலைகளில் உட்தகைவுச் செறிவுகளைத் தவிர்க்கவும், போதுமான எண்ணிக்கையில் செருகித் தடுப்புகளை (fillets) அமைக்க வேண்டும். இதனால், மெல்லிய, நெளிவான, அழகிய உறுப்புகளைத் தயாரித்தல் எளிதாகும். வெளியில் தெரியும் விளிம்புகளை மழுங்கச் செய்தல் பயன் தரும். 0.26–0.38 மி.மீ. ஆரம் கொண்ட மழுங்கிய விளிம்புகளைப் பயன்படுத்தினால், வார்ப்பின் பக்க முனைகள் பெயர்ந்து விழுதலைத் தவிர்க்க இயலும். மின்னமைப்புகளுக்கான நெகிழி வார்ப்புகளில், கூரான முனை மூலை, விளிம்பு ஆகியன மின்னழுத்தச் சரிவுகளைக் கூடுதலாக்கும் தன்மை படைத்தவை. தடித்த மூலைகளையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், வளிமங்கள் இப்பகுதிகளில் சேகரிக்கப் படலாம். பதப் படுத்துதலும் சரி வர நிகழாது போகலாம்.\n\nசிறும (தகுந்த) பரிமாண நிலைப்பு (±0.08 மி.மீ) அச்சுப் பிரிப்புக் கோட்டிற்கு இணையான திசையில் அறுதி செய்யப் படல் வேண்டும். இதற்குச் செங்குத்துத் திசையில் பரிமாண நிலைப்பை 0.26 மி.மீ. வரை விட வேண்டும். நிரப்பி பயன் படுத்தப் படுகையில், நெகிழியின் புறப் பரப்பில் ஒரு மெல்லிய தூய ரெசின் படலம் பளபளப்புடன் அமைந்திருக்கும். விடு படும் வரம்புகள் (எல்லைக் கோடுகள்) கூரிய முனைகளில் இடம் பெறுமாறு அமைத்தால், நிரப்பி துருத்திக் கொண்டிருப்பது வெளித் தெரியாது. நெகிழி குறைந்த மீட்சிக் குணகம் கொண்டவையாதலால், பெரிய, தட்டையான உறுப்புகள் விறைப்புக் குறைந்தனவாகவுள்ளன. தேவைப் படும் அளவுக்கு விறைப்புத் தன்மையைக் கூட்டுவதற்கு மேடுகளை அமைக்கலாம் . (ribbing), புள்ளி தெளித்த அல்லது யாப்பமைந்த புறப் பரப்புகளில் கீறல்கள் வெளியே தெரியாமல் இருப்பதுடன், கண் கவர் தோற்றத்தையும் அளிக்கின்றன. வார்ப்பு அச்சுகளில் உள்ள ஊசி அமுக்க வார்த்தல் அமைப்பில், அச்சை மூடும் போது வளைகிறது. இதன் நீளம் விட்டத்தின் இரு மடங்குக்கு மேற்படாமல், இருத்தல் வேண்டும். எனினும், மாற்றி வார்த்தலில் இந்த விகிதம் 5 வரை இருக்கலாம்.\n\nவார்ப்புக்குப் பின்பு, மறையிடப் பட வேண்டிய துளைகள் இருப்பின், வார்ப்பினைத் தயாரிக்கும் போதே, துளையிட வேண்டும். இதனால், துளையின் வெளி விளிம்பில் ரெசின் பெயர்தல் தவிர்க்கப் படுகிறது. மறையிடப் பட்ட துளையின் விட்டம் 6.35 மி.மீட்டருக்குக் குறைவாயின், வார்த்தலுக்குப் பின்பு, மறை கடைதல் பயன் தரும். துளையின் விட்டம் 6.35 மி.மீட்டருக்கு மேற்படின், மறையை வார்ப்பிலேயே உருவாக்குதல் அல்லது செருகு அமைப்புப் புகுத்துதல் பயன் தரும். வார்ப்பு அச்சிலேயே மறை கடையப் படுவதால், வார்க்கப்படும் அமைப்பைத் திருகி வெளியே எடுப்பதற்கு வசதியாக, வார்ப்பின் பகுதி அகற்றப் படக் கூடியதாக இருக்க வேண்டும். —மே. ரா. பாலசுப்பிரமணியம் துணை நூல். Benjamin W. Niebel, Alan B. Draper, Richard A. Wysk, Modern Manufacturing Process Engineering, McGraw–Hill Book Company, New york, 1989; William F. Smith, Principles of Materials Science Engineering, McGraw–Hill Book Company New York, 1896; E. Paul Degarmo, J. Temple Black, Ronald A. Kohser <!---- See the book first page at https://i.ibb.co/0RkgKdkD/Delete.jpg, the book at https://dcetind.weebly.com/uploads/9/1/6/3/9163431/solutions_manual_-_materials___processing_in_manufacturing__demargo_.pdf---->, Materials and Processes in Manufacturing, Sixth Edition, Macmillan Publishing Co, Newyork, 1984; V.R. Gowariker, et.al., Polymer Science, Wiley Eastern, New Delhi, 1986."}}