{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bpxvu536/", "data": {"id": "bpxvu536", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bpxvu536/", "kind": "article", "headword": "பட்டை உண்ணி", "romanization": "paṭṭai uṇṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:05.158010+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இது கிழக்கு, மைய, தென் ஆஃப்ரிக்காவில் பெருமளவில் காணப் படுகிறது.", "body_ta": "இது கிழக்கு, மைய, தென் ஆஃப்ரிக்காவில் பெருமளவில் காணப் படுகிறது. உருண்டை வடிவ உடலுடனும், குமிழ்க் கழலைகள் கொண்ட கால்களுடனும் காணப் படும். இது கடின உண்ணி, மெல்லிய உண்ணி என இரண்டு வகைப் படும்.\n\nகடினமான உண்ணி, ஆர்னிதோடோரஸ் மென பேட்டா வகையைச் சார்ந்தது. இதற்குக் கண்கள் இல்லை. பெண் வகை 12–114 மி.மீ. நீளமும், ஆண் வகை 8–7 மி.மீ. நீளமும் பெற்றிருக்கும். மண் குடிசையிலும், பாய் வேயப்பட்ட கூரையிலும், தரை இடுக்கிலும் இது காணப் படுகிறது. இரவில் மனிதரைக் கடித்துக் குருதியை உறிஞ்சும் போது, குருதி உறை எதிர்ப் பொருளையும், வலி நீக்கிப் பொருளையும் உட்செலுத்துகிறது. மனிதன், கோழிக் குஞ்சு, பன்றி ஆகியவற்றில் மூவகை உண்ணிகள் வாழ்கின்றன. விட்டு விட்டு வரும் காய்ச்சலைக் கடத்தும் நுன்மக் கடத்தியாக விளங்குகிறது. (பொரிலியாட்டனி). பைரத்ரம் போன்ற மருந்து, பட்டை உண்ணியைத் தாக்குகிறது. ரெபிகெயலஸ் என்பது மெல்லிய பட்டை உண்ணி வகையைச் சார்ந்தது. இது முட்டை, முட்டைப் புழு, கூட்டுப் புழு, முதிர் உண்ணி என்னும் நான்கு நிலைகள் கொண்டுள்ளது. இந்த உண்ணி மனிதனைக் கடிக்கும் போது, மனிதனுக்கு வலிமையிழப்பும், அதன் விளைவாக நுண்ணுயிர்ப் பாதிப்பும் உண்டாகின்றன. இந்நோய் முற்றும் போது, நினைவிழப்பு, மூச்சு மண்டலச் செயலிழப்பு, மரணம் ஆகியவை ஏற்படுகின்றன.\n\nஇவ்வகை உண்ணி நாய்களையும் தாக்குகிறது. வட, தென் அமெரிக்காவில், இவ்வுண்ணியால் தாக்குண்டோர்களில் பாறை மலைப் புள்ளிக் காய்ச்சலையும், மார்செயில் காய்ச்சலையும் உண்டாக்கும். தென் ஆஃப்ரிக்கா உண்ணி, கடிப்புக் காய்ச்சலையும், இந்திய உண்ணி, டைப்பஸ் காய்ச்சலையும் உண்டாக்குகின்றன. கர்நாடக மாநிலத்தில், கீயாசனூர் என்னும் காட்டில், இந்நோய் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட தால், இது கீயாசனூர் காட்டு நோய் (Kyasruru forest disease) எனப் படுகிறது.\n\nஹீமோபைசாலிஸ் ஸ்பினிகேரா என்னும் வகை, கியாசனூர் காட்டு நோயைத் தோற்றுவிக்கிறது. ஹையலோம்மா, டெர்மசென்டர் வகை, மிகு நுண்ணுயிர்கள் குருதிப் பெருக்குக் காய்ச்சலை (viral haemorrhagic fever) உண்டாக்கும். இது நுண்மக் கடத்தியாகச் செயல் படுகிறது.\n\nஉண்ணிச் செயலிழப்பு நோயில், உண்ணி கடித்த பின், மனித உடலுக்குள் செல்லும் நரம்பு நச்சு விரைவாகப் பெருக்கமடையும் தளர்ந்த செயலிழப்பு நோயை உண்டாக்குகிறது. நோய்க் குறியியலின் தன்மை தெளிவாகத் தெரியவில்லை. தசை இழையிலும், நரம்புத் தசைச் சந்திப்புகளிலும், நைவுகள் தோன்றிச் செயலிழப்பு உண்டாகிறது. இந்த உண்ணிச் செயலிழப்பு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென் ஆஃபிக்கா ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. ஆண் குழந்தைகளை விடப் பெண் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப் படுகின்றனர். பெண்களின் நீண்ட சடை முடிகளில், உண்ணி ஒளிந்து இருக்க இயலும் என்பது இதற்குக் காரணமாகலாம்.\n\nஉண்ணி கடித்த 5–6 நாள்களில் மனிதனின் கால் கைகள் மரத்துப் போகின்றன. கை, கால், சுருக்கு தசை ஆகியவை செயலிழக்கின்றன. அனிச்சைச் செயல் குறைந்து, தோல் பொரிப்பு தோன்றுகிறது. இந்நோயை இளம் பிள்ளை வாத நோயிலிருந்து பிரித்தறிய வேண்டும். நோயின் போது மூச்சு மண்டலப் பாதிப்பால் மரணம் ஏற்படுகிறது. நோய் தோன்றிய 48 மணி நேரத்தில், உண்ணியை அகற்றி விட்டால், நோய்த் தாக்கத்திலிருந்து விடுபடலாம். —மு.கி. பழனியப்பன் துணை நூல். D.B. Jelliffe and J.Stanfield, Diseases of Children in the Subtropics and Tropics, Third Edition, ELBS and Edward Arnold Publishers Ltd, London, 1981."}}