{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bgenh9er/", "data": {"id": "bgenh9er", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bgenh9er/", "kind": "article", "headword": "அல் – மன்சூர்", "romanization": "al – maṉcūr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:39.188016+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இச்சொல் இறையருள் பெற்ற வெற்றியாளன் என்ற பொருளைக் குறிக்கும்.", "body_ta": "இச்சொல் இறையருள் பெற்ற வெற்றியாளன் என்ற பொருளைக் குறிக்கும். இதைச் சில முசுலிம் மன்னர்கள் பட்டப் பெயராகப் புனைந்து கொண்டனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் இருவர். ஒருவர் அபுசாபர் அப்துல்லா அல்–மன்சூர் (714-775) என்பவர். அவர் முகம்மது நபியின் மாமன் அப்பாசினுடைய குலத்தோன்றல்களான அப்பாசிய காலிபுகளில் இரண்டாம் மன்னர் ஆவார். கி.பி. 714–இல் ஓர் அடிமைப்பெண்ணின் மகனாகப் பிறந்தார் இவர். கி.பி. 754–இல் இவருடைய அண்ணன் அபுல் அப்பாசு அல்சபாவிற்குப் பின் அரியணை ஏறினார். இவர் தாம் அரியணை ஏறுவதை எதிர்த்த இவருடைய உறவினரும், சிரியாவின் ஆளுநருமான அப்துல்லாவைத் தோற்கடித்தார். குராசனில் இவரை எதிர்த்த அபு முசுலிம் கொலை செய்யப்பட்டார். இவருடைய மகனான அல்–மகதியைக் குராசனின் ஆளுநராக நியமித்தார். கி.பி. 762–763 இல் மெக்காவிலும் மெதீனாவிலும் ஏற்பட்ட கலகங்களை அல்மன்சூர் அடக்கினார். கி.பி. 762–இல் இவர் பாக்தாது நகரைக் கட்டத் தொடங்கி, கி.பி. 766–இல் முடித்தார்; கி.பி. 775 அக்டோபரில் மெக்காவுக்குப் புனிதயாத்திரை செல்லும் வழியில் பீர்மைமுன் என்ற இடத்தில் இறந்தார்.\n\nமுகம்மது இபின்–அபி–அமீர் அல்–மன்சூர் (கி.பி. 978–1002) என்பவர் இரண்டாமவர். இவர் இசுபெயினுக்கு வந்த அரேபியப் போர் வீரனின் மகனாவார். இரண்டாம் ஈசாம் என்ற சிறுவன் இசுபெயினில் மன்னராக இருந்தபோது, இவர் இரண்டாம் நிலைப் படைத் தலைவராக இருந்தார். இரண்டாம் ஈசாமின் அன்னை, இவருடைய காமக்கிழத்தி இருந்தாள் எனக் கூறப்படுகிறது. கி.பி. 978–இல் முதலமைச்சரை வெளியேற்றிவிட்டு, இவர் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்; படையைச் சீர்திருத்தி அமைத்து, வடஇசுபெயினில் இருந்த கிறித்தவ அரசுகளைத் தாக்கித் தோற்கடித்தார். கி.பி. 981–இல் அல்–மன்சூர்–பீ–அல்லா என்ற பட்டப்பெயரைப் புனைந்துகொண்டார். அதுமுதல் இவரே உண்மையான ஆட்சியாளராக விளங்கினார்; அரசாங்க நிருவாகத்தைச் சீர்திருத்தினார்; வட ஆப்பிரிக்காவில் இருந்த முகம்மதிய நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்கினார்; புலவர்களையும் கலைஞர்களையும் போற்றினார்; கி.பி. 994–இல் அல்மாலிக் அல்கரிம் என்ற பட்டப் பெயரைப் புனைந்து கொண்டார். கி.பி. 1002 ஆகசுட்டு 10 ஆம் நாள் மெதினாசீலி என்ற இடத்தில் இவர் காலமானார்.அ.இரா."}}