{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/am6g84t5/", "data": {"id": "am6g84t5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/am6g84t5/", "kind": "article", "headword": "அசோகர்", "romanization": "acōkar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:32.300595+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தலைசிறந்த மௌரியப் பேரரசர்.", "body_ta": "தலைசிறந்த மௌரியப் பேரரசர். இவர் தம் தந்தை பிந்துசாரர் இறந்தபின் கி.மு. 273-இல் பட்டத்திற்கு வந்தார்.\n\nமுதலில் உச்சயினியிலும் பின்னர்த் தட்சசீலேத்திலும் அரசப் பிரதிநிதியாக இருந்து, தம் தந்தை இறந்ததும் தம் மூத்த சகோதரர் சுசீமாவைப் போரில் வென்று அரியணை ஏறினார். இரு சகோதரரிடையே நடைபெற்ற போட்டியின் காரணமாக அரியணை ஏறிய நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே, அசோகரின் முடிசூட்டுவிழா நடைபெற்றது.\n\nஅசோகர் தம் குறிக்கோள்களையும் சாதனைகளையும் கல்வெட்டுகளில் பொறித்து வைத்துள்ளார். அவற்றுள் சில முக்கியமான கல்வெட்டுகள்:\n\n: பாறைகளில் பொறிக்கப்பெற்ற 14 பெரிய கல்வெட்டுகள்.\n\n: பாறைகளில் பொறிக்கப்பெற்ற சிறிய கல்வெட்டுகள்.\n\n: கல் தூண்களில் பொறிக்கப்பெற்ற 7 கல்வெட்டுகள்.\n\nஇக்கல்வெட்டுகள் பிராகிருதம், கிரேக்கம், அராமிக் மொழிகளில் காணப்பட்டாலும் பெரும்பாலானவை பிராகிருத மொழியிலேயே இருக்கின்றன.\n\nஇக்கல்வெட்டுகளில் மசுதி என்ற இடத்தில் உள்ள கல்வெட்டைத் தவிர, மற்றக் கல்வெட்டுகளில் அசோகர் தேவானாம்பிய அல்லது பியதசி என்றே குறிக்கப்பட்டுள்ளார். இவை முறையே தேவர்களால் விரும்பப்பட்டவன், கண்ணுக்கு இனியவன் என்ற பொருளைத் தருகின்றன. அசோகர் அரியணை ஏறியபோது வடமேற்கில் ஆப்தானித்தானத்தில் இருந்து தெற்கில் மைசூர் வரை மௌரியப் பேரரசு பரவி இருந்தது. முடிசூட்டு விழா நடந்தபின் தம் ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டில், அசோகர், கலிங்க நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, போரில் வென்று, அந்நாட்டை மௌரியப் பேரரசுடன் சேர்த்தார். அப்போரில் பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் உயிரிழந்தும் அடிபட்டும் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர். ஆயிரக்கணக்கான போர்வீரர்கள் கொல்லப்பட்டதால் பலர் தங்கள் சுற்றத்தினரை இழந்து, வாழ் வகையின்றித் தவித்தனர். இக்கொடுமையைக் கண்ணுற்ற அசோகரின் உள்ளம் உருகியது. இனி அத்தகைய போர் புரிவதில்லை என்ற முடிவை அன்று முதல் மேற்கொண்டார். அதன் பின் அகிம்சையைப் போற்றிய பௌத்த மதத்தைத் தழுவி, பௌத்த சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டார்.\n\nஅசோகர் பேரரசு\n\nமேலும், அக்கால முதல் உல்லாசப் பயணங்களை விடுத்தார். பௌத்த மதத்தைச் சார்ந்த புனிதஇடங்களுக்குச் சென்றும், தம் பேரரசு முழுவதும் சுற்றி வந்தும் தம்மக்களைக் கண்டு, அவர்கள் அறவழியில் நடக்கச் செய்வதையே தம் கடமையாகக் கொண்டார். அதற்காகக் கல்வெட்டுகளை மக்கள் அன்றாடம் கூடும் இடங்களில் பொறிக்கச் செய்தார். அக்கல் வெட்டுகளில் மாணவர்கள் ஆசிரியருக்கு அடங்கி மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும் என்றும், துறவிகள், அந்தணர்கள், சிரமணர்கள் ஆகியோரை மதித்து நடக்க வேண்டும் என்றும், சுற்றத்தார், ஊனமுற்றோர், நண்பர் ஆகியோருக்கு அவர்கள் வேண்டிய பொருளைக் கொடுத்து உதவ வேண்டும் என்றும், மக்கள் நல்வழியில் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மற்ற சமயத்தவரை மதித்து நடக்க வேண்டும் என்றும், அவர்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.\n\nமக்கள் நல்வழியிலே நடந்து நற்கதி அடைய வேண்டும் என்று எண்ணிய அசோகர், தாமே அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முற்பட்டார். அரச மரபிலே வந்த அவர் விலங்குகளை வேட்டையாடுவதை நிறுத்தினார். அரண்மனையிலே அரச குடும்பத்தினரின் உணவிற்காகக் கொல்லப்பட்ட விலங்குகள், பறவைகள் முதலியவற்றின் எண்ணிக்கையைப் பெரிதும் குறைத்தார். ஆனால், இறைச்சி உணவை அறவே நீக்கும்படி மக்களை அவர் கட்டாயப்படுத்தியதாகத் தெரியவில்லை.\n\nமற்றவர்களை அன்புடன் நடத்த வேண்டும் என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதில் நாட்டம் கொண்ட அவர், மௌரியப் பேரரசின் எல்லைப் புறத்திலே வாழ்ந்த மக்களை வென்று, அவர்களை அடக்காமல், அவர்கள் பிழை செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்ததோடு, தாம் அவர்கள் நாட்டைக் கவர்ந்து கொள்ளக் கூடும் என்ற எண்ணமே அவர்களுக்கு எழாதவாறும் நடந்துகொண்டார்.\n\nஅகிம்சையைக் கடைப்பிடித்த அசோகர் சாலைகளின் இரு மருங்கிலும் ஆலமரங்களை வளர்த்து நிழல் தரச் செய்தார். பயணிகள் தங்குவதற்குச் சத்திரங்களையும் ஆங்காங்கே அமைத்துக் கொடுத்தார், மக்களுக்கும் விலங்குகளுக்கும் மருத்துவம் அளிப்பதற்கான வசதிகளையும் செய்து கொடுத்தார்.\n\nகிரீசு, எகிப்து, இலங்கை போன்ற நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பித் தாம் கடைப்பிடித்த அறங்களைப் பரப்பினார். மௌரியப் பேரரசில் வாழ்ந்த தம் குடிமக்கள் அறநெறியை அறிந்து கொள்ளவும் அவ்வழியிலே நடக்கவும், அவர்களுக்கு உதவ ‘தரும மகாமாத்திரர்’ என்ற அதிகாரிகளை நியமித்தார். மற்ற அதிகாரிகளும் ஐந்தாண்டிற்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து, மக்களிடையே அறநெறியைப் பரப்ப வழி செய்தார்.\n\nஅசோகர் தாம் புத்த மதத்தைத் தழுவினாலும், அந்தணர்க்கும், ஆசீவகர்க்கும், துறவியர்க்கும், ஆதரவு தந்தார். இவ்வாறு அவர் அக்காலத்திலேயே சமயப் பொறையைக் கடைப்பிடித்தார். மூன்றாம் பௌத்த மத மாநாடு அசோகரின் தலைநகரான பாடலிபுத்திரத்தில் அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகச் சிங்கள பௌத்த நூலான மகாவம்சம் கூறுகிறது.\n\nஎச்.ஜி.வெல்சு (H.G. Wells) என்ற வரலாற்றாசிரியர் அரசர்களிலேயே தலைசிறந்தவர் அசோகர் என்று கூறியுள்ளார். இந்தியாவிலேயே முதன் முதலில் கல்வெட்டுகளைப் பொறித்தவர் அசோகர் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. போரின் காரணமாகத் தாம் இழைத்த கொடுமைகளைக் கல்வெட்டுகளில் சுட்டிக்காட்டி, அந்தக் கொடுமைகளுக்காகத் தாம் மிகவும் வருந்தியதாக மக்களுக்குச் சொல்லி, போரில் மூலம் வரும் வெற்றியை வன்மையாகக் கண்டித்த ஒரே அரசர் அசோகரேயாவார்.\n\nதாம் புத்த சமயத்தைத் தழுவினாலும், மற்றவர்களை மதமாற்றம் செய்யவோ துன்புறுத்தவோ நினைக்கவில்லை. அகிம்சையைப் போற்ற வேண்டும். மக்களிடமும் விலங்குகளிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லித் தம் வாழ்க்கையிலேயே அவற்றைக் கடைப்பிடித்துக் காட்டிய ஒரே அரசரும் அசோகரே ஆவார்.சி.இ.இரா\n\nதுணை நூல்கள்\n\nMajumdar, R.C. (Ed), “The History and Culture of the Indian People”, Vol II. The Age of Imperial Unity, Bombay, 1980.\n\nMookerji. R.K., “Asoka (Gaekwad Lectures)”, London, 1928.\n\nMajumdar, R.C. & others “An Advanced History of India”, 4th Edition, Macmillan India Ltd, Delhi, 1982.\n\nSmith, V.A. “Asoka”, 3rd Ed., Oxford, 1920."}}