{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9vd4rhms/", "data": {"id": "9vd4rhms", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9vd4rhms/", "kind": "article", "headword": "இளையபெருமாள் பிள்ளை, சொ", "romanization": "iḷaiyaperumāḷ piḷḷai, co", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:46.394590+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர்.", "body_ta": "கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுள் ஒருவர். இவர் பிறந்த ஊர் பாண்டி நாட்டிலுள்ள குறிச்சி என்பதாகும். சொக்கலிங்கம் பிள்ளைக்கு மகனாகத் தோன்றிய இவர், இளமையில் கல்வி பயிலத் தொடங்கி, குறுகிய காலத்தில் நூல் பல பயின்று புலமை மிக்குக் கலிபாடும் திறம் பெற்றுத் திகழ்ந்தார். இவருடைய ஆசிரியர்கள் திருநெல்வேலிக் குறிச்சிக் கந்தசாமி உபாத்தியாயரும் சாந்தப்பக் கவிராயரும் ஆவர் என்னும் செய்தியினை இவர் தாம் இயற்றிய நூலில் கூறியுள்ளார். இவரது புலமையறிந்த அறிஞர் சிலர் தமதூராகிய விட்டிலாபுரத்திற்குத் தல புராணம் முதலியன இயற்ற வேண்டுமென்று விரும்பிக் கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளினை ஏற்று, இவர் விட்டிலாபுரத் தல புராணம், விநாயகர் பதிகம், சுப்பிரமணியர் பதிகம், முத்துமாலையம்மன் பதிகம், அறுபத்து நாற்சீர் ஆசிரிய விருத்தம், முத்தரச குலநாதன் பதிகம் ஆகிய ஆறு நூல்களையும் இயற்றி, அவற்றைத் தக்கவர்கள் அவையில் அரங்கேற்றினார். விட்டிலாபுரம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் சாத்தூருக்குக் கிழக்கில் உள்ள ஊராகும். இவ்வூருக்கமைந்த தலபுராணம் விட்டிலாபுரத் தலபுராணமாகும். இது சிறப்புப்பாயிரம், நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், காவேரி நகரச் சருக்கம், தனவைசியர் குலச் சருக்கம், பாத தரிசனம் பெற்ற சருக்கம், மடக்கு மாணிக்கம் கோத்த சருக்கம், தனவைசியர் காவேரி நகரை விட்டு நீங்கிய சருக்கம், திருவவதாரச் சருக்கம், கலங்காத கண்ட பாண்டியனுக்குச் சரப்பளியளித்த சருக்கம், இராமசாமிப் பாண்டியனுக்கு நிரையளித்த சருக்கம், சங்கரவேலுப் பாண்டியனுக்கு மகளளித்த சருக்கம், சிவபூசைச் சருக்கம் எனப் பல சருக்கங்கள் கொண்டு அமைந்துள்ளது.\n\nமுந்நூற்றுத் தொண்ணூற்று நான்கு செய்யுட்களைக் கொண்ட இந்நூல் சொற்சுவை, பொருட் சுவைகளில் சிறப்புற்றுத் திகழ்கிறது. இதற்கு இந்நூலாசிரியரின் ஆசிரியர்களான சின்ன நட்டாத்தி சாந்தப்பக் கவிராயரும், குறிச்சிக் கந்தசாமி உபாத்தியாயரும் சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் பாடியுள்ளனர். இது கி.பி. 1898–ஆம் ஆண்டு மதுரைப் பாண்டியன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது."}}