{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9g54bu3e/", "data": {"id": "9g54bu3e", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9g54bu3e/", "kind": "article", "headword": "அகிச்சத்திரா", "romanization": "akiccattirā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.339069+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம், மகாபாரத காலத்திலிருந்தே இந்நகர் இருந்ததாகக் கருதுவர்.", "body_ta": "உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள பரேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம், மகாபாரத காலத்திலிருந்தே இந்நகர் இருந்ததாகக் கருதுவர். தாலமி இதனை அதிசத்ரா (Adisadra) என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கு வருகை புரிந்த யுவான் சுவாங் என்னும் சீன நாட்டுப் பயணி இங்குப் பல பெளத்த மடாலயங்கள் இருந்ததாகத் தம் குறிப்புகளில் எழுதியுள்ளார், இந்நகர மக்கள் கல்வி கற்பதிலும் விடாமுயற்சியிலும் பெயர் பெற்றவர்கள் என்றும், உணவுப் பொருள்களை விளைவித்தும் காடுகளை வளர்த்தும் வந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் தட்பவெப்ப நிலை வாழ்வதற்கேற்றதாக இருந்தது என்றும் அவர் கூறுகிறார். சமணர்கள் இந்நகரைச் சம்கயவதி எனக் குறித்தனர். பார்சுவநாதர் இவ்விடத்திற்கு வந்ததாகவும் தெரிகிறது. முகலாயர்களின் காலத்தில் இந்நகர் தனது மதிப்பினை இழந்தது. இங்கு அழிந்த நிலையில் காணப்பட்ட கோட்டைகளையும் பிற அழிவுச் சின்னங்களையும் பார்வையிட்ட ஆட்சன் (Hodgson) என்ற தொல்லியல் அறிஞர் இவ்வூரின் பழைமையை வெளிப்படுத்தினார். பின்னர் அலெக்சாந்தர் கன்னிங்காம் இங்கு அகழாய்வினை மேற்கொண்டார். இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை இவ்விடத்தில் 1940-44 வரை இராவ்பகதூர் கே.என். தீக்சித், ஏ. கோசு (A. Ghosh) ஆகியோர் தலைமையில் அகழாய்வினை மேற்கொண்டது.\n\nஅகிச்சத்திரா - அழிவுச்சின்னம்\n\nஇவ்வூரில் கி.மு. 300 முதல் கி.பி. 1100 வரை நிலவிய நாகரிகப் பண்பாட்டுக் கூறுகள் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இப்பண்பாட்டுக் கூறுகள் ஒன்பது காலப் பிரிவுகளாகப் (Periods) பிரிக்கப்பட்டன. அகழாய்வில் வண்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள், வடக்கத்திய பளபளப்பான கருப்பு மட்பாண்டங்கள் (N.B.P. Ware) போன்றவை கிடைத்தன. பாஞ்சால அரசர்கள் பயன்படுத்திய நாணயங்கள், குசானர் நாணயங்கள், அச்சு என்ற எழுத்து பொறிக்கப்பட்ட நாணயம் ஆகியவை கிடைத்தன. இவற்றுள் அச்சு என்ற எழுத்து பொறிக்கப்பட்ட நாணயம் அச்சுதர் என்ற அரசரின் நாணயமாக இருக்கலாம் என்று தொல்லியல் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அச்சுதர் என்னும் அரசனை, சமுத்திரகுப்தர் தோற்கடித்ததாக அலகாபாத் கற்றூண் குறிப்பிட்டுள்ளது. ஆதிவராகன், விக்கிரகன் என்னும் பெயர் கொண்ட 9, 10–ஆம் நூற்றாண்டு நாணயங்களும் இங்குக் கிடைத்துள்ளன. மேலும் கோயில்களின் அழிவுச் சின்னங்கள், சுடுமண் பொம்மைகள் போன்றவை அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. சுடுமண் பொம்மைகளில் சுங்கர் காலத்தைச்\n\nசார்ந்த மிதுனா சுடுமண் உருவம் மிக்க அழகு வாய்ந்தது."}}