{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9dmx97cw/", "data": {"id": "9dmx97cw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9dmx97cw/", "kind": "article", "headword": "இலபாயர் முறை", "romanization": "ilapāyar muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.062352+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "குழந்தை பிறக்கும் பொழுது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையின் அனுபவத்தைப் பெறுகின்றது.", "body_ta": "குழந்தை பிறக்கும் பொழுது முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையின் அனுபவத்தைப் பெறுகின்றது. இந்த அனுபவம் இளங்குழவிக்குப் பிறப்புக்கால உளத்தாக்குதலாக (Birth Trauma) அமைந்துவிட வாய்ப்புகள் மிகுதியாக இருக்கின்றன. இத்தகைய உளத்தாக்குதல்களிலிருந்தும் குறுகிய காலத்தில் ஏற்படும் சூழ்நிலை மாற்றத்தினால் இளங்குழவிக்கு ஏற்படக் கூடிய உடல் ஊறுகளிலிருந்தும் அதனைக் காப்பாற்றுவதற்கு இலபாயர் என்பவர் 1975–ஆம் ஆண்டு ஒரு பேறுகால முறையைக் கையாண்டார். இது இலபாயர் முறை (Leboyer Method) எனப்படுகிறது. இதனை இலபாயர் ‘வன்முறையற்ற பிறப்பு’ (Birth Without Violence) என்று கூறிப்பிட்டார்.\n\nபிறக்கும் பொழுது இளங்குழவி தன் தாயின் வயிற்றினுள் கருப்பையில் உள்ள தட்ப வெப்ப நிலை- யிலிருந்து திடீரென்று வெளியில் முற்றிலும் மாறுபட்ட தட்பவெப்ப நிலைக்கு வருகிறது. இந்த மாறுதல் இளங்குழவிக்குப் பெரும் அதிர்ச்சியாகும் பிறக்குமுன் குழந்தை தன்னுடைய மூச்சுக் குழாய் சுவாசப்பைகளின் உதவியுடன் மூச்சுவிடாமல் இதயத் துடிப்புடன் மட்டும் இருக்கிறது. பிறந்தவுடன் சுவாசப் பை மூலம் அது மூச்சு விடத் தொடங்குகிறது. பிறக்குமுன், அதுகருப்பையின் நீரில் மிதக்கிறது. பிறந்தவுடன் உலர்ந்த இடத்தில் வாழத் தொடங்குகிறது. பிறக்குமுன் அது வெளிச்சத்தைத் தன் கண்களால் பார்த்தது இல்லை. பிறந்தவுடன் வெளிச்சம் அதன் கண்களின்மேல் விழுகிறது. மூடிக்கொண்டிருந்தாலும் அதன் கண்கள் ஒளிக்குக் கூசுகின்றன. இரத்த ஓட்டமும் கழிவு நீக்கமும் தாயின் வயிற்றுடன் ஒட்டிய குருதிக் குழாய் (Placenta) மூலம் நிகழ்ந்து வந்தது. இப்பொழுது அந்தக் குருதிக் குழாய் திடீரென்று துண்டிக்கப்பட்டு விடுகிறது. குழந்தை எல்லாத் தொடர்புகளும் அற்ற ஒரு புத்தம் புதிய சூழ்நிலைக்கு வந்து விடுகிறது. இந்த நிலைக்குத் தன்னை அது ஆயத்தப்படுத்திக் கொள்ளச் சில நாள்கள் ஆகின்றன.\n\nகுழந்தையின் பிறப்புக் காலம் அதற்குத் துன்பம் தரும் அனுபவமாக இராமல் மெல்லமெல்ல மாற்றங்களை அடையும் இனிய அனுபவமாக இருக்க வேண்டும் என்று இலபாயர் கூறினார். அதற்கான வழிமுறைகளை அவர் கூறினார். தாம் எழுதிய ‘வன்முறையற்ற பிறப்பு’ என்னும் நூலில் இலயாயர் இக்கருத்துகளை விரிவாக எழுதியுள்ளார். குழந்தையின் தொப்புள் கொடியை (Umbilical Chord) மருத்துவர்கள் விரைவில் வெட்டிவிடுகின்றனர் என்றும் இச்செயல் குழந்தைக்கும் அதன் தாய்க்கும் இடையே உள்ள உடல் தொடர்பை அறுத்துவிடுவதோடு குழந்தை தனியே மூச்சுவிடும் நிலைக்கும் விரைவாகத் தள்ளப்படுகிறது என்றும் இவர் கூறினார்.\n\nகுழந்தை வெளிவந்த பிறகு சில நிமிட நேரத்திற்குப் பின்னர்த் தொப்புள் கொடியை வெட்டுதல் நல்லது. அதற்குப் பின்னர் அந்தக் குழந்தையை ஓரிரு நிமிடங்கள் தாயின் வயிற்றின் மீது குப்புறப்படுக்க வைக்க வேண்டும். அதன்பிறகு குழந்தையை அதன் தாய் தன் கையினால் மெல்ல வருடிக் கொடுக்க வேண்டும். பின்னர்க் கருப்பை நீரின் (Amniotic Fluid) வெப்பநிலையில் அமைக்கப்பட்ட நீரில் சிறிது நேரம் குழந்தையை அது நீரினுள் மூழ்கிவிடாத வகையில் வைக்கவேண்டும்.\n\nபிறப்புக் காலத்தில் மருத்துவர்களும் பிறப்பைக் கவனிக்கும் மற்றவர்களும் காட்டும் விரைவும் குழந்தையின் பிறப்புக்கால உளத்தாக்குதலுக்குக் (Birth Trauma) காரணமாகின்றன என்று இலபாயர் கூறுகிறார்.\n\nஇலபாயர் 1918–ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பாரிசுப் பல்கலைக்கழகத்தில் (University of Paris) பட்டம் பெற்றார். 1954–ஆம் ஆண்டு அப்பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறைக்குத் தலைவரானார். இவர் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகளின் பிறப்புக் கால மருத்துவப் பணியைச் செய்துள்ளார். தம்முடைய அனுபவங்களின் அடிப்படையில் இவர் ‘வன்முறையற்ற பிறப்பு’ என்னும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் தம் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.\n\nதுணை நூல்\n\nLeboyer, F., Birth Without Violence, Alfred A. Knopf, New York, 1975."}}