{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8jpzcxse/", "data": {"id": "8jpzcxse", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8jpzcxse/", "kind": "article", "headword": "சிரை மண்டலம்", "romanization": "cirai maṇṭalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:54.775671+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "முதுகெலும்பிகளில் உடலின் பல பகுதிகளிலுமுள்ள தந்துகிகளிலிருந்து ஆக்சிஜன் குறைந்த குருதியை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் குழாய்களே சிரைகள் ஆகும்.", "body_ta": "முதுகெலும்பிகளில் உடலின் பல பகுதிகளிலுமுள்ள தந்துகிகளிலிருந்து ஆக்சிஜன் குறைந்த குருதியை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் குழாய்களே சிரைகள் ஆகும். தந்துகிகளிலிருந்து தோன்றும் சிரை நுண் கிளைகள் (venules) இணைந்து சிரைகளாகின்றன. சிரைகள், கருவின் நடு அடுக்குப் பொருளிலிருந்து (embryonic mesenchyme) தோன்றுகின்றன. கருவின் தொடக்க வளர்ச்சியின் போது, உணவுப் பொருள்கள் அடங்கிய நீர்மம் உடலில் ஓடத் தொடங்கியதும், நடுவடுக்குச் செல்கள் அந்த நீர்மக் கால்வாயைச் சுற்றி, ஒரு மெல்லிய தொடர்ச்சியான சுவரை உண்டாக்குவதன் மூலம் சிரைகளைத் தோற்றுவிக்கின்றன.\n\nசிரைகளின் சுவர்கள் மூன்று உறைகளைக் கொண்டுள்ளன. சிரையின் உட்குழிவை ஒட்டியுள்ள உறை உள்ளுறை (tunica intima), அதையடுத்து உள்ளது நடுவுறை (tunica media), எஞ்சியது வெளியுறை (tunica externa) என்று பெயர் பெறும். உள்ளுறை மூன்று அடுக்குகளால் ஆனது. உள்ளடுக்கு மெல்லிய, இலை வடிவக் குருதிக் குழல் உள்ளுறைச் செல்களாலும், நடு அடுக்கு மெல்லிய நார் போன்ற இணைத் திசுவாலும், வெளி அடுக்கு மீள் தன்மையுடைய திசுக்களாலும் ஆனவை. நடு உறை, வட்ட மற்றும் நீளத் தசைகளைக் கொண்டுள்ளது. வெளியுறை இணைத் திசுக்களால் ஆனது.\n\nதமனிகளின் சுவர்களும் இத்தகைய அமைப்புடையன என்றாலும், சிரைகளின் சுவர்கள் தமனிகளின் சுவர்களை விட மெல்லியனவாகவும், குறை அளவான தசைகள் மீள் தன்மையுடைய திசுக்களை உடையனவாகவும் உள்ளன. மேலும், சிரைகளின் உட்குழிவு, தமனிகளின் உட்குழிவை விடப் பெரியதாக உள்ளது. குருதி, தமனிகளில் உள்ளதை விடக் குறை அழுத்தமாகவும், மெதுவாகவும் சிரைகளில் ஓடுவதால், உறைந்து விடக் கூடும். இவ்வாறு உறைந்த குருதிக் கட்டிகள் குருதி ஓட்டத்தைத் தடை செய்தல், சிறு கட்டிகளாக உடைந்து நுரையீரலை அடைந்து சேதப்படுத்துதல், சிரைகளில் உள்ள தடுக்கிதழ்களைச் (valves) சேதப்படுத்துதல் போன்ற கேடுகளை விளைவிக்கின்றன.\n\nசிரைகளின் குருதி ஓட்டம், தடுக்கிதழ்கள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. தடுக்கிதழ்கள் குருதிக் குழாய் உள்ளுறை மற்றும் இணை திசுக்களாலான மடிப்புகளேயாகும். தடுக்கிதழ்களுக்குப் பின்னால் பை போன்ற குழிகள் உள்ளன. இதயத்தை நோக்கி குருதி ஓடாமல் பின்னோக்கி வரும் போது, இக்குழிகள் விரிவடைந்து தடுக்கிதழ்களை உட்குழிவில் தள்ளிக் குருதி பின்னோக்கி ஓடுவதைத் தடுக்கின்றன.\n\nதமனிகளைவிடச் சிரைகள் மிகவும் விரிவடையும் தன்மையுடையன என்றும், உடலின் 70% குருதி எப்போதும் சிரைகளிலே உள்ளது என்றும் அறியப் பட்டுள்ளது. மேலும், விரைந்து சுருங்குவதன் மூலம் குருதி அழுத்தத்தை நிலைப்படுத்துதல், தேவைப்படும் போது, குருதியை மையச் சுழற்சிக்கு மாற்றுதல் முதலிய பணிகளைச் சிரைகள் செய்கின்றன என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n\nசிரைகளின் சுருங்கி விரிவடையும் தன்மை, சிரைச் சுவர்களிலுள்ள தசை மற்றும் மீள் தன்மையுடைய திசுக்களால் இயலும். சிரைகளின் இத்தன்மை நரம்பு உணர்வுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது. சிரைகளில் பீட்டா உணர்வாங்கிகள் (beta receptors) மட்டுமே உள்ளமையால், பரிவு நரம்பு மண்டலத்தின் தூண்டுதலால் சிரைகள் சுருங்கும் தன்மையை மட்டும் உண்டாக்க முடியும்.\n\nசிரை மண்டலத்தின் ஒப்பு உறுப்பமைப்பியல். முதுகெலும்பிகளில் சிரை மண்டலம் என்பது அமைப்பில் சிக்கலுடையதாகவும், வேறுபாடுகள் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது. இருப்பினும், கரு வளர்ச்சியின் அடிப்படையில், சிரை மண்டலத்தைக் கருவின் குடற் கீழ்ச் சிரை மண்டலம் (sub intestinal system),பெரு வடிச்சிரை (cardinal vein), மேற்பெருஞ் சிரை (venacava), வயிற்றுச்சிரை நுரையீரல் சிரை என நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம்.\n\nகுடல் கீழ்ச் சிரை மண்டலம். இது வளர்ச்சியுற்ற உயிரிகளின் கல்லீரல் போர்ட்டல் மண்டலமாகமாறி, உணவுக் குழாயிலிருந்து கல்லீரலுக்குக் குருதியைக் கொண்டு வருகின்றது. அனைத்து முதுகெலும்பிகளிலும் இம்மண்டலம் காணப்படுகின்றது.\n\n<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> குடல் தந்துகிகளிலிருந்து குருதியைப் பெறும் போர்ட்டல் சிரைகள் கல்லீரலிலுள்ள பைக் குழிவுகளில் (sinusoids) தந்துகிகளாக முடிவடைகின்றன. குடலில் உட்கவரப்பட்ட உணவுப் பொருள்களைக் (கொழுப்புத் தவிர) குடல் தந்துகிகள் பெறுவதால், இப்பொருள்களைக் கல்லீரலில் சேமித்து வைக்கவும், தேவையான பொருள்களை வடிப்பதற்குரிய வாய்ப்- பும் கல்லீரல் போர்ட்டல் மண்டலத்தின் மூலம் இயலும். சிரைகளில் பொதுவாகக் காணப்படும் தடுக்கிதழ்கள் இம்மண்டலத்தில் இல்லை.\n\nகல்லீரலிலிருந்து குருதி கல்லீரல் சிரைகள் (hepatic veins) மூலம் இதயத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. பெரும்பான்மையான மீனினங்களில் ஒரு பெரிய கல்லீரல் சிரை இதயத்தில் நாளக்குடாவை வந்தடைகின்றது. நுரையீரல் மீன்கள் மற்றும் அனைத்து நாற்கால் விலங்குகளிலும் கல்லீரல் போர்ட்டல் மண்டலத்தின் ஒரு பகுதி பின் மேற் பெருஞ்சிரை உருவாதலுக்குப் பயன்படுவதால், இவ்வுயிரிகளில் கல்லீரல் சிரை என்பது கல்லீரலிலிருந்து பின் மேற்பெருஞ் சிரையின் முடிவில் சேரும் சிரையை மட்டும் குறிக்கும்.\n\nகார்டினல்கள் மற்றும் கேவல் சிரைகள். சிறப்படையா முதுகெலும்பிகளில் உடலின் வெளிச்சுவர்ப் பகுதியிலிருந்து குருதியை இதயத்திற்குக் கொண்டு செல்லும் பணியை உணவுக் குழலுக்கு மேலமைந்துள்ள பெருவடிச் சிரைகளும், உயர்வகை முதுகெலும்பிகளில் மேற்பெருஞ் சிரைகளும் செய்கின்றன.\n\nமுதுகெலும்பிகளின் கரு வளர்ச்சியின் போது, உடற்குழியின் மேல் புறமாகப் பக்கத்திற்கொன்றாக பெருவடிச் சிரைகள் தோன்றுகின்றன. பின் பெரு வடிச் சிரைகள் உடற்பகுதியில் முதுகுப் பெருந்தமனியின் இரு பக்கங்களிலும் உள்ளன. இரு முன் பெரு வடிச் சிரைகள் மூளைப் பெட்டகத்தின் இரு பக்கங்களிலும் தலைச் சிரைகளாகத் தொடங்கிக் கழுத்து வழியாக வந்து பின் கார்டினல்களுடன் இணைந்து, இரு பொதுப் பெரு வடிச் சிரைகள் மூலம் நாளக் குடாவை வந்தடைகின்றன. இவ்வமைப்பு வளர்ச்சியுற்ற குருத்தெலும்பு, மீன்களிலும் காணப்படுகின்றது.\n\nபாலூட்டிகளைத் தவிர, ஏனைய முதுகெலும்பிகளில் ஒவ்வொரு முன் கார்டினல் அல்லது முன் மேற்பெருஞ் சிரையின் முக்கிய கிளை, பக்கத் தலைச் சிரை (lateral head vein) ஆகும். பாலூட்டிகளில் ஒன்றோடொன்று தொடர்புடைய சிரை விரிவறைகள் (venous sinuses) மூளைக் குழியில் உள்ளன. பக்கத் தலைச் சிரை மறைந்து, தலையின் முன் பக்கத்திலிருந்து சிரைக் குருதி மூளைப் பெட்டகத்துள் எடுத்துச் செல்லப்பட்டு, மூளையிலிருந்து குருதியைப் பெறும் அகக் கழுத்துச் சிரைகளாக, இரு பக்கங்களிலும் பின் புறமாக வெளி வருகின்றன. தலையின் மேற்புறத்திலிருந்து குருதியைப் பெற்று வரும் இரு புறக் கழுத்துச் சிரைகளும், அந்தந்தப் பக்க அக கழுத்துச் சிரைகளுடன் இணைந்து, இரு பொதுக் கழுத்துச் சிரைகளாகின்றன. பொதுக் கழுத்துச் சிரைகள் மார்புத் துடுப்புகள் அல்லது முன் கால்களிலிருந்து குருதியைக் கொண்டு வரும் காரையெலும்புக் கீழ்ச் சிரைகளுடன் இணைந்து, முன் மேற்பெருஞ் சிரைகளாகி இதயத்தை அடையும்.\n\nமனிதன் உட்பட, பெரும்பான்மையான பாலூட்டிகளில், கரு வளர்ச்சியின் போது, இரு முன் பெரு வடிச் சிரைகளும் இதயத்திற்குச் சுற்று முன் இணைந்தவுடன் இடப் பொதுப் பெரு வடிச் சிரை மறைந்து விடுகின்றது. ஆகையால், இடக் கார்டினலிலிருந்தும் குருதி வலப் பெரு வடிச் சிரை மூலமாகவே இதயத்தை வந்தடைகின்றது. வளர்ச்சியுற்ற விலங்குகளில் ஒரே ஒரு முன் மேற்பெருஞ் சிரை மட்டும் உள்ளது.\n\nவட்ட வாயுடையவற்றில் (cyclostomes) பின் பெரு வடிச் சிரைகள் வால் சிரை, சிறுநீரகங்கள், இனவுறுப்புகள் ஆகியன முதுகுப் பக்கத் தசைகளிலிருந்து குருதியை பெற்று முன் புறமாக ஓடி வந்து பொதுப் பெரு வடிச் சிரைகளுடன் இணைகின்றன. குருத்தெலும்பு மீன்களில் முதன் முதலாகத் தோன்றும் சிறுநீரகப் போர்ட்டல் மண்டலம் ஊர்வன வரை காணப்படுகின்றது. இம்மண்டலத்தில், உடலின் பின் பகுதி மற்றும் வால் பகுதிகளிலிருந்து குருதி நேரடியாக இதயத்திற்கு எடுத்துச் செல்லப்படாமல், சிறு நீரகங்களிலுள்ள தந்துகிகளில் முடிவடைகின்றது. சிறு நீரகங்களிலிருந்து குருதி பின் கார்டினல் அல்லது பின் கேவல் சிரை மூலமாக இதயத்தை அடைகிறது. இம்மண்டலத்தால், குருதியினின்று வடித்த பொருள்களில் பயனுடையவற்றைச் சிறு நீரகம் மீண்டும் பயன்படுத்த முடிகின்றது.\n\nபறவை, பாலூட்டிகளில் கடைச் சிறுநீரகங்கள் (metanephros) உள்ளமையால், இவற்றிற்குச் சிறு நீரகப் போர்ட்டல் மண்டலம் தேவைப்படுவதில்லை. ஆகையால், சில வகை ஊர்வன தொடங்கி மறையத் தொடங்கும் சிறு நீரகப் போர்ட்டல் மண்டலம் பாலூட்டிகளில் அறவே மறைந்து விடுகிறது.\n\nநுரையீரல் மீன்கள் தொடங்கி, இன்னுமொரு குறிப்பிடத் தக்க முன்னேற்றமாகப் பின் மேற் பெருஞ் சிரை தோன்றுகிறது. கல்லீரல் சிரையின் ஒரு கிளை மேல் நோக்கி உடற்குழிக்கு மேல் வளர்ந்து வலப் பின் பெரு வடிச் சிரை பொதுப் பெரு வடிச் சிரையுடன் இணையு முன், அதனுடன் இணைந்து விடுகின்றது. இதனால், வலப்புறப் பின் பெரு வடிச் சிரையிலிருந்து குருதி குறுக்கு வழியில் இதயத்தை வந்தடைகின்றது. மேலும், சிறு நீரகங்களில் வந்தடையும் குருதிக் குழாய்கள் ஒன்றோடொன்று இணைவதால், இடப்புறக் குழியிலிருந்து குருதி வலப் புறக் குழாய்க்கு மாற்றப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது.\n\nதவளை மற்றும் உயர் வகை நாற்கால் விலங்குகளில் இரு பின் பெரு வடிச் சிரைகளும் உடலின் பின் பக்கத் தொடர்பை இழந்து காணப்படுகின்றன. இவற்றின் எச்சங்கள் உடற்சுவரிலிருந்து குருதியை வடிக்கும் சிரைகளாக உள்ளன. வால் பகுதியிலிருந்து வால் சிரைகள் மூலமாகவும், பின் கால்களிலிருந்து இலியாக் சிரைகள் மூலமாகவும், குருதி சிறுநீரகப் போர்ட்டல் சிரை அல்லது பின் கேவல் சிரையை வந்தடைகின்றது. வயிற்றுச் சிரைகள். குருத்தெலும்பு மீன்களில் இரு வயிற்றுச் சிரைகள் உடலின் கீழ்ப் பகுதித் தசைகளிலிருந்து குருதியைப் பெற்றுப் பொது கார்டினல்களுடன் இணைகின்றன. நுரையீரல் மீன்கள், இரு வாழ்விகள் மற்றும் ஊர்வனவற்றில் ஒரு நடு வயிற்றுச் சிரை உடலின் கீழ்ப் பகுதித் தசைகளிலிருந்து குருதியைப் பெற்றுக் கல்லீரலை வந்தடைந்து, கல்லீரல் போர்ட்டல் மண்டலத்தின் ஒரு பகுதியாகின்றது. கருச்சவ்விகளில் (amniotes) வயிற்றுச் சிரைகள் கருவில் மட்டும் காணப்படுகின்றது. ஊர்வன, பறவைகளில் நேர்குடல் பிதுங்கு பையிலிருந்து (allantois) ஆக்சிஜன் மிகுந்த குருதியை உடலுக்குக் கொண்டு வருகின்றது. கொப்பூழ்க் கொடி உள்ள பாலூட்டிகளில் கொப்பூழ்ச் சிரைகள் கருவிற்குத் தேவையான அனைத்து உணவுப் பொருள்களையும் கல்லீரலுக்குக் கொண்டு வருகின்றன.\n\nநுரையீரல் சிரைகள். நுரையீரல் மீன்கள் மற்றும் அனைத்து நாற்கால் விலங்குகளில் நுரையீரல் சிரைகள் ஆக்சிஜன் மிகுந்த குருதியை நுரையீரல்களிலிருந்து பிளவு படாத இதய மேலறையின் இடப்பகுதி அல்லது இதய இட மேலறைக்குக் கொண்டு வருகின்றன. —தியாகராஜன்"}}