{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8c6gpvy4/", "data": {"id": "8c6gpvy4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8c6gpvy4/", "kind": "article", "headword": "அழகரை", "romanization": "aḻakarai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:40.161152+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அழகரை என்னும் சிற்றூர் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.", "body_ta": "அழகரை என்னும் சிற்றூர் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. திருச்சி சேலம் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் மணல்மேடு என்னும் கிராமம் உள்ளது. மணல்மேட்டிற்கு வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் அழகரை என்ற பழமையான ஊர் அமைந்துள்ளது. இச்சிற்றூருக்குத் தெற்கில் காவிரியாறு ஓடுகிறது. இவ்வூரில் உள்ள பெரிய கரை அழகிய கரையாக இருந்திருக்க வேண்டும். நீரலையைத் தடுத்து நிற்கும் கரையாக இவ்வூர் அமைந்திருந்ததால் இவ்வூரினுக்கு அழகரை என்னும் பெயர் ஏற்பட்டதென்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.\n\nஅழகரையில் உள்ள சிவன் கோயில் சோமசுந்தரர் ஆலயம் எனப்படும். இரண்டு தமிழ்க் கல்வெட்டுகளும் ஒரு கன்னடக் கல்வெட்டும் இக்கோயிலில் உள்ளன. தமிழ்க் கல்வெட்டுகளுள் ஒன்று, இராசாதிராசன் காலத்தையும் மற்றொன்று மூன்றாம் குலோத்துங்கன் காலத்தையும் சேர்ந்தனவாகும். கன்னடக் கல்வெட்டு சதாசிவராயர் என்ற விசயநகர மன்னன் காலத்தைச் சேர்ந்ததாகும்.\n\nஅழகரையில் உள்ள மாந்தோப்பிற்குள் ஒன்றும் ஊரின் மையப் பகுதியில் ஒன்றுமாக இரண்டு மணல் மேடுகள் உள்ளன. மையப் பகுதியில் அமைந்திருக்கும் மேடு உப்பிலியன் மேடு என்று வழங்கப்படுகிறது.\n\nசுடுமண் பொம்மைகள் இந்த மேட்டில் நூறு ஆண்டுகளுக்கு முன் வரையில் உப்பிலியர் என்ற சமூகத்தினர் வாழ்ந்தனர்.\n\nமேற்குறிப்பிட்ட மேடுகளிலும் அழகரையின் மற்றப் பகுதிகளின் மேற்பரப்பிலும் கருப்பு சிவப்பு ஓடுகள், காவி பூசப்பட்டு வண்ணம் தீட்டப்பட்ட ஓடுகள், சிவப்புச் பூச்சுள்ள ஓடுகள் போன்ற பழங்காலத்து மட்பாண்டத் துண்டுகள் மிகுதியாகக் கிடைக்கின்றன.\n\nசென்னைப் பல்கலைக் கழகத் தொல்லியல் துறையினர் 1964–இல் அழகரையில் அகழாய்வு மேற்கொண்டனர். இவ்வூரில் ஐந்து அகழாய்வுக் குழிகள் தோண்டப்பட்டன. அழகரை மூன்று வகையான கலைப் பண்பாட்டுக் கூறுகளைப் பெற்றிருந்தது என்பது அகழாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. முதல் பண்பாட்டுக் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு வரையிலும், இரண்டாம் பண்பாட்டுக் காலம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரையிலும், மூன்றாம் பண்பாட்டுக் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு வரையிலும் செல்வாக்குடன் இருந்துள்ளது.\n\nமுதல் பண்பாட்டுக் காலத்தில் கருப்பு–சிவப்பு மட்பாண்டங்கள், கருப்பு மட்பாண்டங்கள், காவிக் கலவை பூசப்பட்டு வண்ணந் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள், சங்கு வளையல்கள், சங்கு மணிகள், பசை மணிகள் போன்றவை கிடைத்துள்ளன. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட கீறல் குறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குறிகளுள் பல, இந்தியாவின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மட்பாண்டங்களில் தென்படாதவைகளாக உள்ளன.\n\nஇரண்டாவது பண்பாட்டுக் காலத்தில் பளபளப்பாக்கப்பட்ட சிவப்பு மட்பாண்டங்களும், முதலாம் பண்பாட்டுக் காலப் பிரிவில் கிடைத்த கருப்பு–சிவப்பு மட்பாண்டங்களில் சிலவும், கண்ணாடியாலும் சுடுமண்ணாலும் ஆக்கப்பட்ட அரும் பொருள்கள் பலவும் கிடைத்துள்ளன.\n\nமூன்றாம் பண்பாட்டுக் காலத்தில் நேர்த்தியாக வனையப்பட்டுச் சுடப்படாத சிவப்பு மட்பாண்டங்கள் பேரெண்ணிக்கையில் கிடைத்துள்ளன. இம்மட்பாண்டங்களுள் சிலவற்றில் தனித்தன்மை வாய்ந்த சிவப்புப் பூச்சுகள் பூசப்பட்டுள்ளன. இவையன்றிக் கண்ணாடி மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட அரும் பொருள்கள் பலவும் கிடைத்துள்ளன.அ.பொ."}}