{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/8594reef/", "data": {"id": "8594reef", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8594reef/", "kind": "article", "headword": "அகசுடின், தூய", "romanization": "akacuṭiṉ, tūya", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.757987+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அகசுடின், தூய (கி.பி. 354-430)", "body_ta": "அகசுடின், தூய (கி.பி. 354-430)\n\nஎன்பவர் மேனாட்டுத் தத்துவ வரலாற்றில் குறிப்பிடத்தக்கவர். வட ஆப்பிரிக்காவிலுள்ள தகசுதே (Tagaste) என்னும் இடத்தில் தூய அகசுடின் (St. Augustin) பிறந்தார்; இளமையில் இலத்தீன் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டினார்; இவர் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைச் சார்ந்தவர்; சிறந்த எழுத்தாளர்; வளமான சிந்தனையாளர். ‘மூவொருமை’, ‘கடவுளின் நகரம்’ (Trinity, City of God) போன்ற நூல்களை இவர் எழுதியுள்ளார்.\n\nஅரிசுடாட்டில், பிளேட்டோ ஆகியோரின் கருத்துகளை இவர் கற்று, ஒப்பீடு செய்து, அவற்றுள் பிளேட்டோவின் கருத்துகளே மிகச் சிறந்தன என்று கூறினார். இவ்வாறு வெளியிட்ட கருத்துக்களும் கோட்பாடுகளும் அகசுடினியக் கொள்கை (Augustinism) எனப்படுகின்றன. இவர் கடவுள், ஆன்மா ஆகிய இரண்டையும் இரு துருவங்களாகக் கருதினார். திருச்சபை பற்றித் தமது நூல்களின் வாயிலாகவும் சொற்பொழிவுகள் வாயிலாகவும் வலியுறுத்தி வந்தார்.\n\nஇவ்வுலகத்தைப் படைத்த கடவுள், முழு முதற் பொருள் (Absolute Being) ஆவார். அவர் இவ்வுலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்; இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை; கடவுள் இல்லையெனில் இவ்வுலகம் இல்லை; கடவுள் எல்லா நிலைகளையும் கடந்து நிற்பவர்; எங்கும் நிறைந்தவர்; மாறாதவர்; அழிவில்லாதவர்; இவ்வுலகில் உள்ள பொருள்களில் கடவுளை விட உயர்ந்த பொருள் வேறு ஒன்றும் இல்லை; உலகில் மிகச் சிறிய செடி கொடிகள் தோன்றுவதற்கு விதை மூலகாரணமாக அமைவதுபோல், உலகம் படைக்கப்படுவதற்குக் கடவுள் மூலகாரணமாக விளங்குகிறார் என்று இவர் குறிப்பிட்டுள்ளார்.\n\nகத்தோலிக்கத் திருச்சபையின் குருமார்கள், தங்கள் வாழ்க்கையின் மூலமாகவும் போதனைகளின் மூலமாகவும் இறைவன் கருணையையும் செயல்களையும் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டுமென்றார்; அவ்வாறே தாம் வாழ்ந்தும் காட்டினார். மேலும் கடவுளை ஒளி வடிவத்தில் காணச் சமய ஆசிரியர்கள் ஒழுக்க நெறியுடன் விளங்க வேண்டும் என்றும் அவ்வொழுக்க நெறியின் வாயிலாகத்தான் கடவுள் அருளைப் பெற இயலும் என்றும், விவிலிய நெறிப்படி தாம் செய்கின்ற பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.\n\nஇவரது சமயக் கோட்பாடு செறிவினையும் பரந்த மனப்போக்கையும் உடையது. இவர் கூறிய கடவுளின் அருள் (Doctrine of Grace) என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடவுள் ஒளி வடிவிலும் அன்பு வடிவிலும் தோற்றம் அளிக்கிறார் என்ற கருத்தைக் கத்தோலிக்கரும் சீர்திருத்தவாதிகளும் (Protestants) ஒப்புக்கொண்டுள்ளனர். தூய அகசுடின் அறிவாராய்ச்சியியலைப் (Epistemology) பற்றித் தத்துவ வரலாற்றில் குறிப்பிடுகையில், நம்பிக்கையைப் பற்றியும் இதனுடன் எவ்வாறு அறிவாய்வு (Reasoning) இணைந்துள்ளது என்பதைப் பற்றியும் கூறுகிறார். அறிவாய்வின் மூலமாகப் புலனனுபவ அறிவு பிறக்கிறது என்றும், அறிவுக்கு அடிகோலுவது ஐயந்தான் என்றும் குறிப்பிடுகிறார்.\n\nஅகசுடின் அவர்களின் திருச்சபைப் போதனைகளுக்கு மேலை நாடுகளில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இவர் உளவியல் சார்ந்த இட-நேரக்(Space-time theory) கோட்பாட்டின் அமைப்புப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்."}}