{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7t8mzxsv/", "data": {"id": "7t8mzxsv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7t8mzxsv/", "kind": "article", "headword": "இளையபெருமாள், மா", "romanization": "iḷaiyaperumāḷ, mā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:46.380666+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இவர் 1924–ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 29–ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடியில் மாணிக்கவாசகம்பிள்ளை, மாரியம்மாள் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.", "body_ta": "இவர் 1924–ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள் 29–ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தாழக்குடியில் மாணிக்கவாசகம்பிள்ளை, மாரியம்மாள் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவர் சே. இ. பா. உயர்நிலைப் பள்ளியிலும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கற்று பி.ஏ. (ஆனர்சு) பட்டம் பெற்றார். கேரளப் பல்கலைக் கழகத்தில் இவர் டாக்டர் பட்டத்தையும் பெற்றார். கேரளப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் 1954–இல் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்து, படிப்படியாகப் பதவி உயர்வு பெற்றுப் பேராசிரியராகி, 1984–இல் ஓய்வு பெற்றார்.\n\nஇவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பல ஆய்வு நூல்களை இயற்றியுள்ளார். தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம், நேமிநாதம் ஆகியவற்றைத் தமிழிலிருந்து மலையாள மொழியிலும், லீலாதிலகம், கேரள பாணினீயம், குண்டர்ட்டின் மலையாள மொழி, நாராயண குரு அடிகளாரின் தேவாரப் பாடல்கள், வள்ளத்தோள் படைப்புகள் ஆகியவற்றை மலையாளத்திலிருந்து தமிழிலும் மொழி பெயர்த்துள்ளார்.\n\nபாரதீய ஞானபீட விருதுத் தேர்வுக்குழு, தென்னாட்டுப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழு, தமிழ்நாடு அரசுத் தேர்வுக் குழு, திராவிட மொழியியல் கழகம், இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் போன்றவற்றிஸ் இவர் உறுப்பினராக இருந்தார். அ.அ."}}