{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/7mgdvtwj/", "data": {"id": "7mgdvtwj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7mgdvtwj/", "kind": "article", "headword": "உச்சி படைப்போர்", "romanization": "ucci paṭaippōr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.053886+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "உச்சி படைப்போர் என்பது ஓர் இசுலாமியத் தமிழ் இலக்கியம், இது படைப்போர் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்த ஐந்து படைப்போரின் இரண்டாம் பகுதியாக அமைந்துள்ளது.", "body_ta": "உச்சி படைப்போர்‌ என்பது ஓர் இசுலாமியத் தமிழ் இலக்கியம், இது படைப்போர் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்த ஐந்து படைப்போரின் இரண்டாம் பகுதியாக அமைந்துள்ளது. (காண்க: இபுனியன் படைப்போர்). அசன் அலிப் புலவரால் பாடப்பட்ட உச்சிப் படைப்போர் இபுனியன் படைப்போருக்கு அடுத்த நிலையில் இடம்பெற்றுள்ளது.\n\nஇரண்டாம் கலீபாவான அலி (ரலி)க்கும் முசுலிம் அல்லாதார் கூட்டத்தாரின் தலைவரான இபுனியனுக்கும் நடைபெற்ற முதல் போரில் இபுனியன் தோல்வியடைந்து, அலி அவர்களால் கொல்லப்பட்டான். இச்செய்தியைக் கேள்வியுற்ற மன்னன் இந்திராயன் பெருங்கோபங்கொண்டு போருக்கு ஆயத்தமாகிறான். இந்நிலையில் இந்திராயன் தன் மகள் பனிமதியை மணமுடித்துக் கொடுப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த கொலுமண்டபத்தில் காத்திருந்த பல மன்னர்களை நோக்கி, அலியின் தலையைக் கொய்து கொண்டு வருகிற அரசனுக்குத் தன் மகள் பனிமதியை மண முடித்துக் கொடுப்பதாக அறிவிக்கிறான். அதனைக் கேட்டு உச்சி என்பவன் அலியின் தலையைக் கொண்டு வருவதாகக் கூறிப் போருக்குப் புறப்படுகிறான்.\n\nஇந்நிகழ்ச்சியுடன் தொடங்கும் உச்சி படைப்போர் அலி தலைமையில் வரும் முசுலிம்கள் கூட்டத்தாருக்கும் உச்சி தலைமையில் வரும் முசுலிம்கள் அல்லாதார்க் கூட்டத்தாருக்கும் இடையே நடைபெறும் போரை விரிவாக விவரிக்கிறது. உச்சி படைப்போரை அசன் அலிப்புலவர் 392 கண்ணிகளில் படைத்துள்ளார். இதன் பல கண்ணிகளில் அலியின் ‘துல்துல்’ என்னும் குதிரையின் ஆற்றலை ஆசிரியர் விரிவாகவும் சுவைபடவும் எடுத்துரைத்துள்ளார். அலியின் திறமை வாய்ந்த போருக்கு ஈடு கொடுக்க முடியாத உச்சி இறுதியில் பின்வாங்கி ஓடி மாண்டுவிட, இச்செய்தியைப் போரிலிருந்து உயிர்பிழைத்து ஓடியோர் மன்னன் இந்திராயனிடத்து எடுத்துக் கூறுவதுடன் உச்சி படைப்போர் முடிவுறுகிறது. உச்சி படைப்போரில் போர்க்களக் காட்சிகளை ஆசிரியர் திறம்பட வருணித்துள்ளார். இந்நூலில் அரபுச் சொற் கலப்பு மிகமிகக் குறைவு. ஐந்து படைப்போரில் உச்சி படைப்போரை அடுத்து வடோச்சி படைப்போர் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.சி.ந."}}