{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6uw7rcmq/", "data": {"id": "6uw7rcmq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6uw7rcmq/", "kind": "article", "headword": "உகந்த சமூக உற்பத்தி அளவு", "romanization": "ukanta camūka uṟpatti aḷavu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:48.857107+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஒரு நாட்டின் சமுதாய அமைப்பிற்குகந்த வகையில் உற்பத்தி முறையை அமைத்து, பொருளாதார நலனைப் பாதுகாப்பது உகந்த அளவு சமூக உற்பத்தி (Optimum Social Production) எனப்படும்.", "body_ta": "ஒரு நாட்டின் சமுதாய அமைப்பிற்குகந்த வகையில் உற்பத்தி முறையை அமைத்து, பொருளாதார நலனைப் பாதுகாப்பது உகந்த அளவு சமூக உற்பத்தி (Optimum Social Production) எனப்படும். நாட்டின் பொருள்கள், பணிகள் ஆகியவற்றின் சுழல் ஓட்டத்தை (Circular Flow) நிருவகிக்க எண்ணிக்கையிலடங்கா முடிவுகள் இயற்றப்பட வேண்டும். பண்டங்களும் பணிகளும் நாட்டின் உற்பத்தி, நுகர்வு ஆகிய பிரிவுகளுக்கிடையே மாற்றப்படுகின்றன. உற்பத்திக் காரணிகளுக்கு வழங்கப்படும் ஊதியம், உற்பத்தி செய்த பொருள்களின் விற்பனை மூலம் உற்பத்திப் பிரிவுகளில் செலவிடப்பட்டு அவற்றில் வருவாயாக அமைகிறது. இச்சுழல் ஓட்டம் நாட்டு மக்களுக்கு நன்மை பயப்பதாகவும் நாட்டு வருவாயைப் பெருக்குவதாகவும் வேலையின்மையைக் குறைப்பதாகவும் அமையவேண்டும். பொருள்களில் எவற்றை உற்பத்தி செய்யவேண்டும்? எம்முறையில் உற்பத்தி செய்ய வேண்டும்? எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும்? எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்? என்னும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு உகந்த அளவு சமூக உற்பத்தி வரையறுக்கப்படும். இக்கூறுகள் சமுதாயத்தைப் பற்றிய முழுமையான புள்ளி விவரங்களையும் அளிக்கும். இவ்வினாக்களுக்குரிய பதில்களும் அவை பெறப்படும் முறைகளும் சமுதாய அமைப்பிற்குத் தகுந்தபடி மாறுபடுகின்றன. முதலாளித்துவ நாட்டில் சுதந்திரம் நிலவுவதாலும் சமத்துவச் சமுதாயத்தில் அரசுக் கட்டுப்பாடு நிலவுவதாலும் இவற்றிற்கு முடிவு காணும் முறைகளில் வேறுபாடுகள் உள்ளன.\n\nஉகந்த அளவுச் சமூக உற்பத்தியை வரையறுக்கும் முன்னர், எந்தப் பொருள்கள் எம்முறையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்ய வேண்டும். முதலாளித்துவ நாட்டில் நுகர்வோருக்குச் சிறப்பிடம் அளிக்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் எந்தப் பொருள்களின் உற்பத்தியில் ஆதாயம் மிகையாகப் பெற இயலுமோ அவற்றை உற்பத்தி செய்வர். ஆதாய நோக்கின்படி தேவையும் விலையும் உயர்வாக உள்ள பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். அத்தகைய பொருள்கள் பெரும்பாலும் ஆடம்பரப் பொருள்களான தொலைக்காட்சிப் பெட்டி, இரண்டு சக்கர ஊர்திகள், குளிர் அறைப் பெட்டி போன்றவையாக இருக்கும். தேவை குறைவாக உள்ள பொருள்கள் பெரும்பாலும் இன்றியமையாப் பொருள்களான உணவு, உடை போன்றவையாக இருக்கும். ஆடம்பரப்பொருள்களைப் பேரளவில் உற்பத்தி செய்வது வாங்குத் திறனற்ற ஏழை மக்களை துன்பத்தில் ஆழ்த்தும், அத்தகைய உற்பத்தி உகந்த அளவினதாகக் கருதப்படமாட்டாது. எனவே, முதலாளித்துவ நாடுகளின் அங்காடித் தேவையை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. சமத்துவச்சமுதாய நோக்கத்தைப்போன்று மக்களின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டும்.\n\nஎம்முறையில் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டுமென்பதை முடிவு செய்வது சமுதாயத்தில் கிடைக்கக்கூடிய வளங்களைச் சார்ந்தது. பண்டங்களின் உற்பத்திக்குத் தேவையான நிலம், உழைப்பு, மூலதனம், அமைப்பு ஆகிய நான்கு உற்பத்தில் காரணிகளின் சேர்க்கை முறையே உற்பத்தி முறையாகும். அது உழைப்புச் செறிந்த (Labour Intensive) முறையாகவோ மூலதனம் செறிந்த முறையாகவோ இருக்கலாம். இவற்றில் உற்பத்திச் செலவு குறைவான முறையே தேர்ந்தெடுக்கப்படுகிறது. செறிந்த மூலதன முறையால் செலவு குறைவாக இருந்தாலும் அது வேலையின்மையைப் பெருக்குமானால் அம்முறையைப் பின்பற்றக் கூடாது.\n\nஎந்தப் பொருள்கள் எந்த முறையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை முடிவு செய்த பின்னர், எவ்வளவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்பதை வரையறுக்க வேண்டும். நாட்டின் உற்பத்தியைப் பொறுத்தே அந்நாட்டின் வருவாயும் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அமைகின்றன. நாட்டின் வருவாயைப் பெருக்குவதற்காக உற்பத்தியைப் பெருக்குவது பொருள் வளங்கள் அழியக் காரணமாகலாம். தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்காகப் பொருள்களின் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டால் பணவீக்கம் உருவாகலாம். எனவே, உற்பத்தியளவின் உகந்த அளவை வரையறுப்பது மிகவும் இன்றியமையாதது மட்டுமன்றி, அது பல காரணிகளைச் சார்ந்துள்ளதும் ஆகும்.\n\nஉகந்த அளவு உற்பத்தியை வரையறுக்கும் முறையைப் பேரட்டோ (Pareto), இலெர்னர் (Lerner) மற்றும் இலியோண்டிபு (Leontief) ஆகியோர் ஆராய்ந்துள்ளனர். இக்கருத்துக்கள் பொதுச் சமநிலையை (General Equilibrium) அடையத் துணை, செய்கின்றன. நுகர்வோரிடையே சிறந்த முறையில் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்பட இறுதிநிலைப் பதிலீட்டு வீதம் (Marginal Rate of Substitution) செயற்படவேண்டும். நுகர்வோர் சமநிலையில் உச்சநிலைப் பயன்பாட்டைப் பெற, நுகர்வோரின் இறுதி நிலைப் பதிலீட்டு வீதம் அப்பண்டங்களின் விலை வீதத்திற்குச் சமமாக இருக்கும். அங்காடி விலை வீதம் எல்லோருக்கும் ஒரே சீராக இருப்பதால் சமநிலையில் இறுதிநிலைப் பதிலீட்டு வீதம் சமமாக இருக்கும். இதே வகையில் தொழில்நுட்பத் திறன் உற்பத்தி முறையில் ஏற்பட, இறுதிநிலைத் தொழில் நுட்பப் பதிலீட்டு வீதம் சமமாக இருத்தல் வேண்டும். பொருளாதாரத் திறன் நிலவ நுகர்வோர் மிகுதியாக விரும்பும் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். இத்தகைய பொருள்களை உகந்த அளவில் உற்பத்தி செய்ய இரு பொருள்களுக்கிடையே சமுதாயத்தில் நிலவும் இறுதிநிலை மாற்று வீதம் குறிப்பிட்ட ஒருவரின் இறுதிதிலைப் பதிலீட்டு வீதத்திற்குச் சமமாக இருக்க வேண்டும். உற்பத்தி மாற்று வீதம் இறுதிநிலைச் சமுதாயச் செலவு வீதத்தைக் குறிப்பதாலும், விலை வீதம் இறுதிநிலைப் பதிலீட்டு வீதத்திற்குச் சமமாக இருப்பதாலும், சமநிலையில் உகந்த அளவு சமூக உற்பத்தியைப் பெற இறுதி நிலைச் சமுதாயச் செலவு வீதம் விலை வீதத்திற்குச் சமமாக இருக்கும். இக்கருத்தை வரைபடம் விளக்குகிறது.\n\nIC, IC என்பவை நுகர்வோரின் சமநோக்கு வளைகோடுகள், BA என்பது சமுதாயத்தின் உற்பத்தித்திறன் வளைகோடு. P என்ற புள்ளியைக் காட்டிலும் P என்ற புள்ளியில் பொருள்களின் சமுதாய உற்பத்தியும் நுகர்வோரின் பயன்பாடும் மிகையாக உள்ளன. இப்புள்ளியில் இரு வளைகோடுகளும் ஒன்றையொன்று தொட்டுச் செல்வதால் சமநோக்கு வளைகோட்டின் சரிவும் உற்பத்தித் திறன் வளைகோட்டின் சரிவும் சமமாக உள்ளன.\n\nபேராசிரியர் இலெர்னர் இதனைக் கருத்தில் கொண்டு இறுதிநிலைச் சமுதாய நன்மையும் இறுதி நிலைச் சமுதாயச் செலவும் சமமாக உள்ள உற்பத்தி அளவே உகந்த அளவு சமூக உற்பத்தியெனக் கூறுகிறார். இச்சமன்பாடு உகந்த முறை நுகர்வு மாற்றம், உற்பத்தி, பகிர்வு ஆகியவற்றின் மூலமாகப் பெறப்படுகிறது. எனவே, இறுதிநிலைச் சமுதாய நன்மை=இறுதிநிலை உற்பத்தியின் மதிப்பு=இறுதி நிலை வருவாய்=இறுதிநிலைச் செலவு=இறுதிநிலை உற்பத்திக் காரணியின் மதிப்பு=இறுதிநிலைச் சமுதாயச் செலவு (Marginal Social Benefit = VMP = MR = MC = VM Factor = Marginal Social Cost).\n\nபேரட்டோவின் கூற்றுப்படி உகந்த நிலையில் சமுதாயத்தில் உள்ள தனி ஒருவரின் பயன்பாடு உச்சநிலைக்குக் கொண்டுவரப்படும் நிலையில், மற்றொருவரின் பயன்பாட்டில் குறைவு ஏற்படக் கூடாது. உற்பத்தி திறனுடையதாக இருப்பதற்கு ஒரு பொருளின் உற்பத்தி அளவு உச்சமாக்கப்படும்பொழுது வேறு எந்தப் பொருளின் உற்பத்தி அளவிலும் குறைவு ஏற்படக் கூடாது. எனவே, பேரட்டோவின் உற்பத்தி உகந்த அளவாக இருக்க வேண்டுமெனில் சமூக உற்பத்தி திறனுடையதாக இருக்க வேண்டும். அதே நிலையில் சமூக உற்பத்தி திறனுடையதாக இருப்பது மட்டுமே பேரட்டோவின் உகந்த அளவைக் குறிப்பதில்லை; அதன் பயன்பாட்டளவும் பொருத்தமாயிருக்க வேண்டும்.\n\nஇலியோண்டிபு என்பவரின் கூற்றுப்படி சமநிலை உற்பத்தியளவு கொடுக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப முறையில் பண்டத்தின் இறுதித்தேவை மாறுவதற்குத் தகுந்தபடி வரையறுக்கப்படுகிறது. இதன்படி உற்பத்திப் பொருள்களின் இறுதித் தேவையையும் தொழிற்சாலைகளுக்கிடையே நிலவும் தேவையையும் நிறைவு செய்யக்கூடிய அளவே, உகந்த அளவு சமூக உற்பத்தியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இலியோண்டிபு கூறுவது போல எஃகுத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் எஃகு திரும்பவும் அதே ஆலையில் பயன்படும்; கனரக இயந்திரங்கள் செய்யவும் வேறு ஆலைகளுக்குத் தேவையான இயந்திரங்களை உற்பத்தி செய்யவும் பயன்படுகின்றது. மேலும், மிதிவண்டி, மேசை, நாற்காலி போன்ற இறுதித் தேவைப் பொருள்களை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதுபோலவே சிமிண்டு, நிலக்கரி போன்ற பல பொருள்களும் பயன்படுகின்- றன. இவற்றைப் பின்னணியாக வைத்துப் பொருள்களைத் தொழில் நிறுவனங்களுக்கிடையே மாற்றிக் கொள்ளும் அட்டவணையை (Transaction Table) உருவாக்கி, உற்பத்தித் தொடர்புகளைக் கொண்டு சமநிலைச் சமன்பாடுகள் மூலம் சமநிலை உற்பத்தி அளவிற்கு முடிவு காணப்படுகிறது.\n\nஇங்கு விளக்கப்பட்ட முறைகளில் இலியோண்டிபு முறையே இக்காலக் கணக்கீட்டு முறைகளைப் பயன்படுத்துகிறது. முடிவுகள் தொகுக்கக் கூடிய புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு பெறப்படுதலால் இம்முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. என்.மா.\n\nதுணை நூல்கள்\n\nBlaug, M., Economic Theory in Retrospect, Richard D. Irwin, Inc., Illinois, 1962.\n\nKovisto, W.A., Problems of Modern Economics, Chopman and Hall Limited, London, 1957.\n\nSeth, M.L., Principles of Economics, Educational Publishers, Agra, 1971."}}