{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/6p6dpf3k/", "data": {"id": "6p6dpf3k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/6p6dpf3k/", "kind": "article", "headword": "அகச்சந்தி", "romanization": "akaccanti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.697029+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அகச்சந்தி என்பது சொற் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தை விளக்கப் பயன்படுத்தும் குறியீட்டுப் பெயர்களுள் ஒன்றாகும்.", "body_ta": "அகச்சந்தி என்பது சொற் புணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தை விளக்கப் பயன்படுத்தும் குறியீட்டுப் பெயர்களுள் ஒன்றாகும். சொல் என்பது வடிவமும் (ஒலி அல்லது எழுத்து) பொருளும் உடையது. பொதுவாக ஒரு சொல் எல்லா இடத்திலும் ஒரே வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. மரம் என்ற சொல் மரங்கள், மர நிழல், மரப் பெட்டி என்ற தொடர்களில் முறையே மரங், மர, மரப் என்ற வடிவங்களில் வந்துள்ளது. இப்படிப் பல சொற்களில் வரும் வடிவ மாற்றத்தைப் பொதுமைப்படுத்தி விளக்குவதையே இலக்கண நூலார் புணரியல் அல்லது சந்தி என்று குறிப்பிடுகின்றனர். இலக்கண ஆசிரியர்கள், சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது ஏற்படும் மாற்றத்தைப் புணர்ச்சி விகாரம் என்று குறிப்பிடுகிறார்கள். புணர்ச்சியில் எந்த வித மாற்றமும் ஏற்படாவிட்டால் அது இயல்பு புணர்ச்சி என்றும், மாற்றம் ஏற்பட்டால் விகாரப் புணர்ச்சி என்றும் பெயர் பெறும்.\n\nபுணர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தைப் பலவிதமாகப் பாகுபடுத்தி விளக்கலாம். அவற்றுள் ஒன்றே அகச் சந்தி, புறச் சந்தி என்ற பாகுபாடு. அகச் சந்தி என்பது ஒரு சொல்லுக்குள் நடைபெறும் மாற்றத்தையும் (கல் + இல் = கல்லில், மரம் + கள் = மரங்கள்), புறச்சந்தி என்பது இரண்டு சொற்கள், அதாவது இரண்டு பகுபதமோ, இரண்டு பகாப்பதமோ சேரும்போது ஏற்படும் மாற்றத்தையும் (மரம் + பெட்டி = மரப்பெட்டி, மரம் + நிழல் = மரநிழல்) விளக்குவதாகும்.\n\nபெயர்ச் சொல்லோடு வேற்றுமை உருபுகளும், திணை, பால் காட்டும் விகுதிகளும் சேரும்போது ஏற்படும் மாற்றங்களும், வினைச் சொல்லோடு கால விகுதி, வினையெச்ச விகுதி, திணை, பால் விகுதி போன்றவை இணையும்போது ஏற்படும் மாற்றங்களும் அகச் சத்தி ஆகும். அகச் சந்திக்கு ‘உள்நிலை விகாரம்’ (Internal Sandhi) என்ற பெயரும் உண்டு.\n\nஅகச் சந்தி சொல்லியலுக்கு அல்லது உருபனியலுக்கு (Morphology) உரியது. தனிச் சொல்லாகப் பயன்படும் சொற்களின் அமைப்பைப் பகுதி, விகுதி என்று பிரித்து விளக்கும்போது, அவை ஒன்றோடு ஒன்று சேரும் நிலையில் ஏற்படும் மாற்றங்களே, அகச் சந்தி ஆகும்.\n\nதமிழ் இலக்கணத்தில் பெயர்ச் சொல்லில் ஏற்படும் அகச் சந்தி விகாரங்கள் உருபியல் அல்லது உருபு புணரியல் என்ற தலைப்பில் விளக்கப்பட்டுள்ளன; ஆனால், வினைச் சொல்லில் நடைபெறும் அகச் சந்தி தமிழ் இலக்கண நூல்களில் நுட்பமாக விளக்கப்படவில்லை. செ.வை.ச."}}