{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5qncdsnf/", "data": {"id": "5qncdsnf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5qncdsnf/", "kind": "article", "headword": "நுரையீரல், இதய நாட்பட்ட நோய்", "romanization": "nuraiyīral, itaya nāṭpaṭṭa nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:02.483583+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "நுரையீரல் இயக்கச் சீர் குலைவால் இதயத்தின் வல வெண்டிரிக்கிள் தாக்கமுற்று, அதனைப் பெருக்கமடையச் செய்வதன் மூலம், இந்நோய் நிலை (Chronic corpulinonale) உண்டாகிறது.", "body_ta": "நுரையீரல் இயக்கச் சீர் குலைவால் இதயத்தின் வல வெண்டிரிக்கிள் தாக்கமுற்று, அதனைப் பெருக்கமடையச் செய்வதன் மூலம், இந்நோய் நிலை (Chronic corpulinonale) உண்டாகிறது. இதில், இரு நுரையீரல்களும் பெருமளவு பாதிக்கப் பட்டிருக்கும்.\n\nஇந்த நோய்க்கு முன்னோடியாக நுரையீரல் தமனியின் குருதி அழுத்தம் மிகுந்திருக்கும். இதனைச் சீராக்கா விட்டால், வல வெண்டிரிக்கிள் மிகை வளர்ச்சியும், செயலிழப்பும் ஏற்படும். வல வெண்டிரிக்கிளின் மிகை வளர்ச்சி காரணமாக, இட வெண்டிரிக்கிளின் செயல் திறன் பாதிப்பதில்லை. ஆனால், நுரையீரல் தமனிக் குருதி அழுத்தம் அளவுக்கு மிகையாகி விடலாம். ஆக்சிஜன் குறை நிலை (hypoxia) இருந்தால், வெண்டிரிக்கிளின் செயல் திறன் பாதிக்கப் படும்.\n\nநோய்ப் பிரிவும் அதற்குரிய மருத்துவ முறைகளும். உடற் கூற்று இயல் படி, நுரையீரல் குருதிக் குழாய்ச் சுவர்களின் எதிர்ப்புத் திறன் (resistance) அதிகரித்தல்.\n\nசிறிய நுரையீரல் குருதிக் குழாய்களில் அடைப்பு. இந்நோயில், சிறிய நுரையீரல் தமனிகளில் பரவலாக அடைப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், பல குருதிக் குழாய்த் தடுக்கையே ஆகும். பல குருதிக் கட்டிகள் (thrombi), தாமாகவே உண்டாகும் நுரையீரல் குருதி மிகு அழுத்தம் முதலியன பிற காரணங்கள் ஆகும்.\n\nநுரையீரல் குருதி மிகு அழுத்தம் உருவான பிறகு, நுரையீரல் நோயை நலமாக்கல் எளிதன்று. ஏனெனில், நுரையீரலில் பல சிறு குருதிக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு சீராக்கக் கூடியதன்று. தொடர்ந்து, ஆக்சிஜன் தருவதே தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ முறையாகும்.\n\nபரவலாக, நுரையீரல் குற்றிடை (interstitial) அல்லது நார் நிலை (fibrosis) மற்றும் குறு மணிக் கட்டி (granuloma), நோய் வகையில் காச நோய்த் தோற்றம் (sarcoidosis) மற்றும் குறிப்பான காரணமற்ற குறு மணிக் கட்டி, நுரையீரல் இணைப்புத் திசு கடினமாதல்(Scleroderma), பல வகைப் பட்ட நுரையீரல் குற்றிடை அல்லது மூச்சுச் சிற்றறைகளின் சுவர்களின் நார் நிலை, கல் நார் நுரையீரல் அழற்சி (asbestosis) ஆகியவை அடங்கும். இந்நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருவது மிகவும் பயனளிக்கும். நுரையீரல் நோய்த் தொற்று இருந்தால், அதற்கும் மருத்துவம் அளிக்க வேண்டும். ஸ்டீராய்டுகளும் இதற்கு உதவும்.\n\nகுருதிக் குழாய் இயக்க அதிகரிப்பால், நுரையீரல் குருதிக் குழாய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கலாம். குருதிக் குழாய் இயக்க அதிகரிப்புக்கு முக்கிய காரணம், மூச்சுச் சிற்றறையின் அருகிலுள்ள சிறிய குருதிக் குழாய்கள் சுருங்கி விடும். குருதியில் அமிலத் தன்மை (acidosis) இருந்தால், குருதிக் குழாயில் ஏற்படும் விளைவுகள் மேலும் கூடுதலாக இருக்கும். இந்நோயாளிகளிடம் சுவாசம் அல்லது மார்பு இயக்கு தசைகளைக் கட்டுப்படுத்தும் முறையில் தவறு இருக்கலாம்.\n\nஇந்நோய்க்கான மருத்துவத்தில் சுவாச நோய்த் தொற்றை நலமாக்கலும், மூச்சுக் குழாய் விரிவு நிலையைச் சரி செய்தலும், குறிப்பிடத் தக்கவை. நீண்ட நேரத்திற்கு ஆக்சிஜன் செலுத்துவதன் மூலம், நுரையீரல் குருதிக் குழாய் மிகை அழுத்தத்தைச் சீராக்கலாம். இந்நோயின் மருத்துவம் நுரையீரல் சீர் குலைவை எந்த அளவிற்கு நலமாக்க முடியும் என்பதைப் பொறுத்து உள்ளது. பொதுவாக, இந்நோயாளிகளின் உடல் நிலை முன்னேற்றம் நிறைவளிக்காது. மூச்சுக் குழல் விரிவாக்கிகளும், நுண்ணுயிர் எதிர் மருந்துகளும் ஸ்டீராய்டுகளும் இதற்கு உறு துணையாகும். —சி. ஆதித்தன் துணை நூல். Maxwell M. Wintrobe (Ed.) et.al., Harrisons Text book of Internal Medicine, Seventeenth Edition, McGraw-Hill Kogakusha, Ltd., Tokyo, 1974."}}