{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5dnh7n7m/", "data": {"id": "5dnh7n7m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5dnh7n7m/", "kind": "article", "headword": "இனோனு, இசுமத்து", "romanization": "iṉōṉu, icumattu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:47.764455+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பார் துருக்கிக் குடியரசின் இராணுவ அலுவலர்; அரசியல் வித்தகர்.", "body_ta": "என்பார் துருக்கிக் குடியரசின் இராணுவ அலுவலர்; அரசியல் வித்தகர். இவர் கி.பி. 1884–ஆம் ஆண்டு இசுமீர் என்றம் ஊரில் பிறந்தார். துருக்கியை முடியாட்சிக் கொடுமைகளிலிருந்து விடுவித்துக் குடியரசாக்கிய முசுதாபா கெமால் ஆடாடர்க்கு என்பாரின் உறுதுணைவராக விளங்கினார். முசுதாபா கெமால் பாட்சா குடியரசுத் தலைவராக இருந்து மறைந்ததும், துருக்கிக் குடியரசின் தலைவராக இனோனு இசுமத்து (Inonu, Ismet) பதவி வகித்தார். தொடக்கத்தில் 1939 முதல் 1946 வரை ஒரு கட்சி ஆட்சியை விரும்பிய இனோனு, பிற்காலத்தில் மக்களாட்சி முறையைத் தீவிரமாக ஆதரிக்கும் அரசியல் வல்லுநரானார்.\n\nஇசுமத்து இனோனுவின் தந்தையார் முதன்மையான வழக்கறிஞர். கல்வியை முடித்ததும் இனோனு உதுமானியப் படையில் சேர்ந்தார். படையில் பல பதவிகளைப் பெற்று உயர்ந்த இவர் முதல் உலகப் போரின்போது சிரியாவில் நாலாம் அணியின் தலைவராக முன்னின்று நடத்தினார் (1916). உதுமானியத் துருக்கர்கள் சரணடைந்த போது (1918) இசுத்தான்புல்லில் போர்த்துறையின் துணைச் செயலராக பதவி வகித்தார். பின்னர், இவர் முசுதாபா கெமாலின் விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். அனடோலியாவைக் கைப்பற்றியிருந்த நேசப்படைகளை எதிர்க்க இவ்வியக்கம் அப்போது பாடுபட்டது. இறுதியாகக் கூட்டப்பெற்ற உதுமானியா நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இவர் 1920–ஆம் ஆண்டில் எடிரின் (Edirne) தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரேக்கர்கள் மேற்கு அனடோலியாவைக் கைப்பற்றிக்கொண்ட பின்னர், தேசிய இராணுவத்தின் படைத்தலைவராக அமர்த்தப்பட்ட இனோனு இரு போர்களில் கிரேக்கப்படைகளை விரட்டியடித்தார். இப்போர் நடைபெற்ற இடம் இனோனு எனப்பட்டது. இவர் பெற்ற வெற்றியின் நினைவாகவே இவர் தம்மை இனோனு இசுமத்து எனக் கூறிக் கொண்டார்.\n\nஅங்காராவில் அமைக்கப்பெற்ற தேசியப் பெருமன்றத்தின் (Grand National Assembly) ஆட்சியின் போது இவர் வெளியுறவு அமைச்சராக 1922–ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டார். சுவிட்சர்லாந்தில் இலௌசான் (Loussanne) என்னுமிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துருக்கியின் பேராளராக இவர் பொறுப்பேற்றார். அம்மாநாட்டில் இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சராயிருந்த கர்சன் பிரபுவை (Lord Curzon) இவர் எதிர்த்தார். முசுதாபா கெமாலின் முழு ஆதரவையும் பெற்ற இவர், இலௌசான் உடன்படிக்கையில் துருக்கி நாடு கோரிய அனைத்தையும் பெற்றார். துருக்கி குடியரசு நாடாக 1923–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29–ஆம் நாள் அறிவிக்கப்பட்டபோது, இனோனு தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். அப்பொறுப்பினை இவர் 1937–ஆம் ஆண்டு வரை வகித்தார்.\n\nமுசுதாபா கெமால் ஆடாடர்க்கு 1938–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10–ஆம் நாள் காலமானபோது, இவர் துருக்கியின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், குடியரசு மக்கள் கட்சியின் தலைவராகவும் ஆனார். இவர் 1946–இல் மக்களாட்சிக் கட்சியை உருவாக்கி ஊக்கம் கொடுத்தார். குடியரசு மக்கள் கட்சியை 1950–ஆம் ஆண்டுத் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி தோற்கடித்தது. செலால் பேயர் (Celal Bayar) என்பார் குடியரசுத் தலைவராகவே, இனோனு எதிர்க்கட்சித் தலைவரானார் (1950–60).\n\nஇராணுவப் புரட்சி 1960–இல் மூண்டபோது மக்களாட்சிக் கட்சியின் அரசு தூக்கியெறியப்பட்டது. இனோனு மூன்று கூட்டாட்சி அரசுகளை 1961க்கும் 1965க்கும் இடைப்பட்ட காலத்தில் அமைத்தார். ஆனால் 1965–ஆம் ஆண்டிலும் 1969–ஆம் ஆண்டிலும் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் இவருடைய கட்சி படுதோல்வியடைந்தது. இக்காலகட்டத்தில் கெமால் பாட்சாவின் ஆதரவாளர்களும் சமதருமக் கட்சியினரும் குடியரசு மக்கள் கட்சியின் உறுப்பினர்களாயிருந்து கொண்டே இனோனுவைக் குறை கூறிக் கண்டித்தனர். கூட்டாட்சிக் கட்சிகளுடன் இவர் செய்துகொண்ட கொள்கையில்லாக் கொள்கைகளை அவர்கள் எதிர்த்தார்கள். இதனால் கட்சியில் பிளவேற்பட்டது. இவரை எதிர்த்தவர்கள் 1967–இல் நம்பிக்கைக் கட்சியை (Reliance Party) உருவாக்கிக்கொண்டனர். இனோனு 1972–ஆம் ஆண்டில் குடியரசு மக்கள் கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். புளன்ட் ஈசுவிட்டு (Bulent Ecevit) என்பார் அக்கட்சியின் தலைவரானார். இசுமத் இனோனு 1973–ஆம் ஆண்டு திசம்பர் 25–ஆம் நாள் அங்காராவில் காலமானார்."}}