{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/5djmmmu9/", "data": {"id": "5djmmmu9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/5djmmmu9/", "kind": "article", "headword": "உச்சச் சுமை விலை வரையறை", "romanization": "uccac cumai vilai varaiyaṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:48.956958+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "மிகுந்த சமுதாயப் பயன்பாடுள்ள பொருள்களை அரசு அல்லது பொதுத்துறை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றபோது அவற்றின் விலையை வரையறுப்பதில் பலகோட்பாடுகளைப் பின்பற்றுகின்றது.", "body_ta": "மிகுந்த சமுதாயப் பயன்பாடுள்ள பொருள்களை அரசு அல்லது பொதுத்துறை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றபோது அவற்றின் விலையை வரையறுப்பதில் பலகோட்பாடுகளைப் பின்பற்றுகின்றது. அவற்றுள் ஒன்று உச்சச் சுமைச் விலை வரையறை (Peak Load Pricing) ஆகும்.\n\nவிலைக் கொள்கை\n\nபொதுவாக, தனியாரோ பொதுத் துறையோ ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதற்கான விலையை வரையறுக்கிற பொழுது ஓர் அடிப்படை விதியினைப் பின்பற்றுவார்கள். ஒரு பொருளின் இறுதிநிலை வருவாயும் (Marginal Revenue) இறுதிநிலைச் செலவும் (Marginal Cost) சமமாக இருக்கும் வகையில் அதன் விலை வரையறுக்கப்பட வேண்டும் என்பதே அவ்விதி.\n\nஒரு பொருளின் விலைதான் அதனுடைய உற்பத்தியாளருக்குக் கிடைக்கிற சராசரி வருவாய். ஒரு பொருளின் இறுதிநிலை வருவாயை (அதாவது சராசரி வருவாய்) விடக் குறைவாக இறுதிநிலைச் செலவு இருந்தால், அந்தப் பொருளை மேலும் உற்பத்தி செய்வது ஆதாயமாக இருக்கும். மேன்மேலும் அந்தப் பொருளை உற்பத்தி செய்கின்றபொழுது அதனுடைய இறுதி நிலைச் செலவு கூடும். இறுதி நிலைச் செலவு விலைக்குச் சமமாக உயர்கிறவரை உற்பத்தி செய்வதும் விற்பனை செய்வதும் ஆதாயமாக இருக்கும். இந்தப் பொது விதியை அரசுத் துறையும் பின்பற்றுகிறது.\n\nதனிச் சூழ்நிலை\n\nபொதுவாக, தனியார் பயன்படுத்துகிற பொருள்களை உற்பத்தி செய்வதிலோ விற்பனை செய்வதிலோ அரசு கவனம் செலுத்துவதில்லை. ஆனால், சில குறிப்பிடத்தக்க சூழலில் அரசு தனியாருக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்கிறது. அவற்றில் சில சிக்கல்கள் எழுகின்றன.\n\nஅரசு மட்டுமே ஒரு பொருளை உற்பத்தி செய்து, விற்பனை செய்தால் அது ஒரு முற்றுரிமை (Monopoly) நிறுவனமாகச் செயற்படும். அதனால், ஏற்படும் ஆதாயம் பொதுத்துறைக்குச் செல்லும். அரசு முற்றுரிமை ஆதாயம் பெற விரும்பாவிட்டால், விலைகளைக் குறைத்து விற்பனை செய்ய இயலும். இதனால், பொருள்கள் மிகுதியாக விற்பனையாகும். நிறைவுப் போட்டியில் இருப்பது போன்று விலை குறைவானதாக இருக்கும். நிறைவுப் போட்டியில் ஏற்படக்கூடிய நன்மைகள் எல்லாம் கிடைக்கும். ஆனால், அரசு மக்களின் நலம் கெடுக்கும் மது, சிகரெட்டுப் போன்றவற்றின் விலையை மிகவும் உயர்த்தி நுதர்வைக் குறைக்க முயலலாம். சில நாடுகளில் புகையிலை விற்பனையை அரசு மேற்கொண்டுள்ளது. பெரும்பாலான நாடுகளில் மக்கள் நலனைக் கெடுக்கும் மதுவின் விற்பனையை அரசு ஏற்று நடத்துகிறது.\n\nபொருள்களின் அளிப்புப் பற்றாக்குறையாக இருந்தால், குறைந்த விலையில் அவை ஏழை எளியவர்களுக்குக் கிடைக்கத்தக்க பங்கீட்டு முறையை (Rationing) அரசு பின்பற்றலாம். வேறுபடுத்தப் பெற்ற விலைகளில் ஒரே பொருளை விற்பனை செய்வது உண்டு. இத்தகைய தனிப்பட்ட சூழ்நிலைகளில் பொதுத் துறையில் விலை வரையறை செய்வதும் பொருளியலில் முடிவு காண வேண்டிய சிக்கலாகிறது.\n\nபொதுப் பயன்பாடுடைய ஒரு பொருளுக்குரிய தேவை சீராக இல்லாமல் அடிக்கடி மாறுகிற பொழுது, அதன் விலையை வரையறுப்பதில் பல காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுப் பயன்பாடுடைய மின்சாரத்தின் விலை வரையறையை எடுத்துக் கொண்டால், மின்சாரத்தின் தேவை தொழில்கள் மிகுந்த பகுதியில் பகலில் மிகவும் அதிகமாக இருக்கும். ஆனால், இரவில் சில குறிப்பிட்ட காலத்தில் மின்சாரத்தின் தேவை குறைவாக இருக்கும். இத்தகைய நிலையில் மின்சாரத்தின் விலையை உறுதி செய்ய அதன் தேவையைக் கால அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, உச்சத் தேவைக் காலம் (Peak–Period). மற்றொன்று, குறைவான தேவைக் காலம் (Off–Peak Period).\n\nமின்சார உற்பத்தியின் விற்பனை நிறுவனம் அதனுடைய இறுதிநிலைச் செலவின் அடிப்படையில் எந்த நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்தினாலும் ஒரே விலையை வரையறுப்பதாகக் கொண்டால், இவ் எடுகோளின் (Assumptions) அடிப்படையில் உச்சத் தேவைக் காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதனுடைய அளிப்பை விட மிகையாக இருக்கும். ஆனால், குறைந்த தேவைக் காலத்தில் மின்சாரத்தின் அளிப்பு அதனுடைய தேவையை விட மிகுதியாக இருக்கும். இந்தச் சூழ்நிலையில் மிகுதியாகத் தேவை இருக்கும் பகற் பொழுதில் மின்சாரத்தின் அளிப்பை நெறிப்படுத்துவது தேவையாகிறது. யாருக்கு மின்சாரம் மிகவும் அதிகப் பயன்பாடுடையதாக இருக்குமோ அவர்களுக்கு மின்சாரம் கிடைக்கும் வகையில் விலையை வரையறுக்க வேண்டும்.\n\nஉச்ச அளவில் தேவை இருக்கும் காலத்தில் மின்சாரத்தின் ஓர் அலகுக்கு அதிக விலையும், குறைந்த அளவு தேவை இருக்கும் காலத்தில் குறைவான விலையும் வரையறுக்க வேண்டும். அப்பொழுது உச்ச அளவு தேவைக் காலத்தில் விலை மிகுதியாக இருப்பதால் மக்கள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவார்கள். மிகவும் தேவையானவர்கள் மட்டும் அதிக விலை கொடுத்து மின்சாரத்தைப் பயன்படுத்த முன்வருவார்கள். மற்றவர்கள் தங்கள் தேவையைக் குறைவான விலையுள்ள காலத்திற்கு மாற்றிக் கொள்வார்கள்.\n\nகுறைவாகத் தேவையுள்ள காலத்தில் வரையறுக்கிற விலை இறுதி நிலைச் செலவுக்குச் சமமாக இருப்பதாகக் கொண்டால், மிகுதியான தேவை உள்ள காலத்தில் அளிப்பை ஒட்டி விலையை அதிகமாக வரையறுக்கலாம். இதனால், தேவையை ஓரளவு மாற்றியமைப்பதோடு கூட, அந்த நிறுவனத்தின் ஆதாயம் மிகுதிப்படுவதையும் காணலாம். உச்சச் சுமை விலை வரையறுக்கப்படும் முறையை ஒரு வரைபடத்தின் மூலம் விளக்கலாம்.\n\nவரைபடத்தில் படுக்கை அச்சுக் கோட்டில் (OX) மின்சாரத்தின் அளிப்பு அலகுகளும், செங்குத்துக் கோட்டில் (OY) மின்சாரத்தின் ஓரலகு விலையும் குறிக்கப்பட்டுள்ளன. OC என்பது மின்சாரம் பயன்படுத்தக் கிடைக்கிற அளவைக் குறிக்கிறது. Dp Dp வளைகோடு உச்ச தேவைக் காலத் தேவையைக் (Peak-Period Demand) குறிக்கிறது. Do Do வளைகோடு குறைவான தேவைக் காலத் தேவையைக் (off-Peak Period Demand) காட்டுகிறது. AB இறுதி நிலை உற்பத்திச் செலவுக் கோடாகும். இருக்கிற மின்சார அளிப்பு வரை உற்பத்திச் செலவு மாறாமலிருக்கும் என்பது எடுகோள். அதற்குமேல் அளிப்பைக் கூட்ட இயலாது. அளிப்பு நெகிழ்வற்று (Inelastic Supply) இருக்கும் நிலையை BE கோடு காட்டுகிறது.\n\nதேவை குறைவாக இருக்கும் கால விலை ஓர் அலகிற்கு OA ஆக இருக்கும். இந்த விலையில் OF அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துவார்கள். தேவை மிகுதியாக இருக்கும் காலத்தில் மின்சாரத்தின் ஓரலகு விலையை Opp ஆக வரையறுப்பார்கள். அதாவது, FC அளவு மின்சாரத்தை உயர்ந்த அளவு விலையில் விற்பனை செய்வார்கள்.\n\nசிறப்பியல்புகள்\n\nபொதுத் துறையின் விலை வரையறையில் உச்சச் சுமை விலை வரையறைக் கருத்துச் சிறப்பிடம் பெறுகிறது. விலை வேறுபாட்டின் (Differential Pricing) முக்கியத்துவத்தை இக்கருத்து வலியுறுத்துகிறது. அரசு அளிக்கிற ஒரே பொருளுக்கு அல்லது பணிக்கு இரு வேறுபட்ட விலை அல்லது கட்டணம் வாங்குவது பழக்கத்தில் இருக்கிறது. அதன் அடிப்படையை விளக்க இக்கருத்துத் துணை செய்கிறது. எடுத்துக்காட்டாக, அஞ்சலட்டைக் கட்டணத்தில் இருக்கும் வேறுபாட்டைக் கூறலாம். இந்தியாவில் கையால் எழுதுகிற அஞ்சலட்டைக்கு 15 காசு அஞ்சல் தலையும் அச்சிட்ட அஞ்சலட்டைக்கு 40 காசு அஞ்சல் தலையும் ஒட்ட வேண்டியதிருக்கிறது. ஓர் அஞ்சலட்டையின் அடக்கச் செலவு 15 காசுக்கு மேல் வருகிறது. அஞ்சலட்டைகளைக் குறைவான கட்டணம் காரணமாக மிகுதியான மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆதலால், அஞ்சலட்டையை ஒரே காசுக் கட்டணத்தில் வெளியிடுவது அஞ்சல் துறைக்கு இழப்பாக இருக்கும்.\n\nஅஞ்சலட்டைகளைப் பயன்படுத்துபவர்களை அஞ்சல் துறை இருவகைகளாகப் பகுக்கிறது. ஒரு பிரிவினர் ஏழை–எளிய நடுத்தர மக்கள். இவர்கள் கையினால் கடிதம் எழுதுபவர்கள். இரண்டாம் பிரிவினர் வணிகக் கடிதங்கள் எழுதுபவர்கள். இவர்கள் அஞ்சலட்டைகளைப் பொதுவாக அச்சிட்டு மிகுதியான அளவில் பயன்படுத்துபவர்கள். அஞ்சல் கட்டணம் உயர்வாக இருந்தாலும் இவர்கள் அஞ்சலட்டைகளைப் பயன்படுத்துவார்கள். ஆதலால், இவர்களிடம் உயர்ந்த கட்டணமும் பொதுமக்களிடம் குறைந்த கட்டணமும் வாங்குவதால், அஞ்சலட்டை வெளியிடுவதில் ஏற்படும் இழப்பை ஓரளவு ஈடுகட்ட முடிகிறது. இதில் சமுதாய அறக் கருத்தும் அடங்குகிறது.\n\nபொதுப் பயன்பாடுடைய பொருள் பற்றாக்குறையாக இருக்கிறபொழுது யாருக்கு அந்தப் பொருளை அளிப்பதென்ற சிக்கல் எழுகிறது. அரசு கட்டுப்பாட்டு விலையில் ஏழை எளியவர்களுக்கு அப்பொருள் ஓரளவுக்கேனும் கிடைக்கச் செய்துவிட்டு, மீதியை வெளி அங்காடியில் தேவையை ஒட்டி அதிக விலைக்கு விற்கச் செய்கிறது. இதன் மூலம் பொதுப் பகிர்வின் நோக்கம் (Public Distribution Objective) ஓரளவு நிறைவேறக் காணலாம்.\n\nபொதுத்துறை விரைந்து வளரும் இக்காலத்தில் உச்சச் சுமை விலை வரையறைக் கருத்துச் செல்வாக்குப் பெற்று வருகிறது. மா.பா.கு.\n\nதுணை நூல்கள்\n\nRichard, A., Musgrave and Peggy B. Musgrave, Public Finance in Theory and Practice, Mc Graw–Hill International Book Company, New Delhi, 1983.\n\nBaumol, William, J. and Wallace Oates, Economics - Environmental Policy and the Quality of Life, Englewood Ciffs, N.J., Prentice-Hall, 1979."}}